
மரணத்தின் நெடி
அடிக்கத் துவங்கி விட்டது
துக்கத்தில் தோய்ந்த இணையின் முகம்
என்ன என்கிறேன்
என் கண்களில் கண்ணீர்
என் மரணத்துக்கு நானே விடும் கண்ணீர்
கொஞ்சம் இனிக்கிறது
அவள் என்னோடு பேசி விடுவாள்
அவளை ஒருமுறை பார்த்து விடுவேன்
அவள் எனக்காக அழுவாளா
என் கண் பனிக்கிறது
கொஞ்சம் கசக்கிறதோ
அவன் நானின்றி என்ன செய்வான்
அவன் மேலான அறுதி வெற்றி என் மரணம்
மீண்டும் இனிக்கிறது
ஐயோ மரணிக்காமல் இருந்து விடுவேனோ
உலகை நோக்கி பழிப்பு காட்ட
மரணத்தில் அடைக்கலமாகிறேன்
இப்போது நன்றாகவே கசக்கிறது