சமகாலத்தில் தமிழ்ச்சூழலில் மிக அதிகமாக விவாதிக்கப் படும் தலைப்பு இது. தமிழகத்தின் சட்டசபையில் ‘சனாதனத்தை அழிக்க வேண்டும்’ என்று ஒருவர் மிக வெளிப்படையாக பேசியதால், இந்தக் கேள்வி இப்போதைக்கு மிகுந்த கவனத்தை பெறுகிறது. இவ்வாறு பேசியவர் தன்னை ஒரு கிறுஸ்தவர் என்று பெருமையுடன் குறிப்பிட்டு விட்டு இவ்வாறு சொல்கிறார் என்பதும் முக்கியமாக குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்துக்கள் தங்கள் மதத்தை ‘சனாதனம்’ என்று அழைத்துக் கொள்கிறார்கள். இதை அழிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ‘சனாதனம்’ என்பது சாதீய அடுக்கைக் குறிக்கிறது என்கின்றனர். உண்மையில் ‘சனாதனம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?
அது சமஸ்கிருதச் சொல் என்பதால், அகராதிப் படி, சனாதனம் என்றால் ‘எப்போதைக்குமானது’, ‘eternal’ என்று பொருள். பாரத தேசத்தில் தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு மதத்தைக் இச்சொல் குறிக்கிறது. ‘மதம்’ என்றால் என்ன? சம்ஸ்க்ருதத்தில் மதம்(मथ) என்றால் ஒரு opinion அல்லது idea என்று பொருள். கடவுளைப் பற்றி இந்த தேசத்தில் தொன்று தொட்டு இருந்து வந்த ஒரு idea இது. அதனால் இதை பாரத தேசம் முன்வைக்கும் கடவுளைப் பற்றிய எப்போதைக்குமான ஒரு idea என்று பொதுவாக புரிந்து கொள்ளலாம். அதை அழிக்க முடியுமா? அழிக்க வேண்டுமா என்று பார்க்கலாம்.
சிந்து நதியின் இப்புறத்தில் இருந்த இடமான பாரதத்தில் இது வழங்கி வந்திருக்கிறது. அதனால் சிந்து-இந்து-ஹிந்து-ஹிந்தூயிசம் என்றும் இது அழைக்கப்பட்டிருக்கிறது. இன்றும் சில அரபியர்கள் தங்கள் மகள்களுக்கு ‘ஹிந்த்’ என்று பெயர் வைக்கிறார்கள். தமர்-ஹிந்த்(புளி)- என்பது இந்து தேசத்தில் கிடைக்கும் ஒரு விதமான ஈச்சை என்பதால் ‘புளி’க்கு அரபியர்கள் இட்ட பெயர் ‘Tamarind” என்பதால் ‘ஹிந்த்’ என்ற சொல்லின் தொன்மையான புழக்கத்தை அறியலாம்.
இந்த சனாதனம் அல்லது ஹிந்தூயிசம் முன்வைக்கும் ‘மதம்’- idea என்ன? நான்கு வேதங்கள் தொடங்கி, உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகிய அனைத்தும் லட்சக் கணக்கான வார்த்தைகளில் முன் வைப்பது இதையே-‘ஸர்வம் கலு இதம் ப்ரம்ஹ’ – இது சாந்தோக்ய உபனிஷத் வாக்கியம். ‘புல், பூண்டு முதல் மனிதர்கள் விலங்குகள் வரை, அனைத்தினுள்ளும் இருப்பது ‘பிரம்மம்” என்பதையே. ‘ப்ரஞ்கானம் பிரம்ஹ’, ‘அஹம் ப்ரம்மாஸ்மி’, ‘தத் த்வம் அஸி’, ‘அயமாத்மா ப்ரம்ஹ’ ஆகிய மகத்தான உபநிஷத் வாக்கியங்களைச் சொல்லாமல் எந்த ஹிந்து சடங்கும் தொடங்குவது இல்லை. இவற்றின் பொருள்-‘இங்குள்ள அனைத்தும் பிரம்மமே. நான் பிரம்மம். நீயும் அதுவே. ‘நான்’ என்ற கவனமே(ப்ரஞ்கானம்-consciousness) பிரம்மம்’. சிறு சிறு வித்தியாசங்களுடன், இச்சொற்களைப் பிரிப்பதால், இந்த idea அத்வைதம், விஸிஷ்டாத்வைதம், த்வைதம் என்று தத்துவத் தளத்தில் மூன்று தரிசனங்களாக உருக்கொள்கிறது.
ஆயினும், ஹிந்துக்கள், தங்கள் இயல்பான வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான கடவுள்களை உருவ வழிபாடு செய்கிறார்களே ஒழிய, பிரம்மம் என்னும் உருவமற்ற கடவுளை வணங்குவதில்லையே என்ற கேள்வி எழுகிறது. பகவத் கீதையில் அதற்கான விளக்கம் உள்ளது. ‘ உடல் கொண்டவர்களான மனிதர்கள் உருவமற்ற, குறைவேயற்ற பிரம்மத்தை வழிபடுவது கடினம் என்பதால், உங்களைப் போன்றே உருவம் கொண்டவர்களை வணங்குங்கள்’ என்கிறார் கிருஷ்ணர்-‘அவ்யக்தா ஹி கதிர் துக்கம் தேஹவத்பிர் இவாப்யதே’. கடினமான பாதையை விடுத்து சுலபமான பாதையை மேற்கொள்வதற்காகவே உருவ வழிபாடு செய்கின்றனர். அவரவரின் மன அமைப்பைப் பொறுத்து, உருவ வழிபாடு செய்யும் பக்தி மார்க்கமோ, பலனை எதிர் பார்க்காது செயலாற்றும் கர்ம மார்க்கமோ, தத்துவத்தை விசாரணை செய்யும் ஞான மார்க்கமோ, ஏதோ ஒன்றில் பயணித்து, பிரம்மத்தை அடைவதையே இலக்காக கொண்டுள்ள மதம் இந்து மதம். கடவுளரின் உருவங்கள், அவர்களின் ஆயுதங்கள், வாகனங்கள் ஆகிய அனைத்துமே உருவகங்களே என்பதும் அனைவரும் அறிந்ததே. உதாரணம்- நாராயணின் சுதர்ஸன சக்ரம்-நம் மனம், சங்கு-அஹங்காரம், கதை-புத்தி, வாள்-ஞானம், வில்-இந்திரியங்கள். Symbolic அர்த்தம் புரியவில்லை என்றால் கூட, மனம் உருகிய பக்தி மட்டுமே போதுமானது என்று தான் இந்து மதம் சொல்கிறது.
‘லோகோ பின்ன ருசி:’ என்கின்றனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு ருசி கொண்டவர்கள். அவரவருக்கு பிடித்தமான கடவுள் உருவத்தை வணங்குவதற்கான உரிமை இந்துக்களுக்கு உள்ளது. சைவம், வைஷ்ணவம், சாக்தம், சௌரம், காணபத்யம், கௌமாரம் ஆகிய ஆறு வழிகள் தோன்றியது அவ்வாறே. வேத கால கடவுள்களான, அக்னி, வருணன், இந்திரன் ஆகியவை சேர்ந்து பிரம்மம் ஆகி, பின் இப்போதிருக்கும் பெருந்தெய்வங்களும், சிறு தெய்வங்களுமாக ஆகியிருக்கின்றன. குறைந்த பட்சம் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, உபநிஷத்துக்களை எழுதிய ரிஷிகளுக்கு வேத கால கடவுள்களான அக்னி, வருணன், இந்திரன் ஆகியோர் பிரம்மத்தின் பல்வேறு வடிவங்கள் தானோ என்ற கேள்வி தோன்றியதால், இவ்வாறான synthesis நடந்திருக்கிறது. பிரம்மம் என்னும் கடவுளுக்கான தத்துவார்த்த கருத்துரு தோன்றி, குறைந்த பட்சம் 3000 ஆண்டுகள் ஆகி விட்டன. புராணக் காலங்களில் மும்மூர்த்திகள் என்னும் கருத்துரு நிலை கொண்டு விட்டது. வரலாற்று நோக்கில் 3000 ஆண்டுகள் பழமையானது என்கிறோமே தவிர, வேதமும், பிரம்மமும் அநாதியானது, யுகயுகங்களாக இருப்பது, முடிவற்றது என்றே இந்துக்கள் நம்புகின்றனர்.
இத்தகைய உயர்ந்த தத்துவப் பின்புலம் கொண்ட ‘சனாதனத்தை’, எந்த மதத்தையும் விட, நானும் நீயும் கடவுள் எனச் சொல்லும் உயர்ந்த பட்ச சமத்துவம் திகழும் மதத்தை அழிக்க வேண்டுமா?
எந்த மதத்திற்கும் தத்துவப் பின்புலம் உண்டு. அந்த தத்துவத்தை நிலை நிறுத்துவதற்கான விதிமுறைகள் உண்டு. இந்து மதத்தின் விதிமுறைகள் சாஸ்த்திரங்கள் எனப்படுகின்றன. ஷாஸ்த்ர- ஷாஸ் என்றால் விதிகள், த்ர-त्र என்னும் வேர்ச்சொல் to protect, to rule என்ற பொருளில் வருகிறது. மனிதர்களின் ஒரு குழுவை நெறிப்படுத்த உருவான நெறிகள் இவை. கால, தேச, வர்த்தமானங்களைப் பொருத்து அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்னும் விதி இருப்பதையும் வேதம் கற்றவர்கள் அனைவரும் அறிவர்.
நான் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்த போது, எனக்கொரு பணி அளிக்கப்பட்டது. என் வகுப்பில் இருக்கும் மாணவர்களை, ‘word smart’, ‘picture smart’, ‘kinesthetic’ என்று மூன்று பிரிவாக பிரிக்கச் சொன்னார்கள். நான் சொல்லித் தர வேண்டிய தலைப்பை words, pictures, hands-on activity என்று மூன்று வகைகளிலும் வழங்கச் சொன்னார்கள். மாணவர்களைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்ற கருத்து கொண்டிருந்த எனக்கு அது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஆயினும் இம்முறையில் பயிற்றுவித்ததில் மாணவர்கள் மிக நன்றாக பாடத்தைப் புரிந்து கொண்டார்கள். நம் விரல் ரேகை அளவே நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் ஆனவர்கள்.
இத்தனித்தன்மையை உபயோகித்துக் கொள்ள ‘வர்ணங்கள்’ என்ற பெயரில் மனிதர்களை சாஸ்த்திரங்கள் பிரித்தன. இதுவே ஹிந்தூயிசத்தின் மீது வைக்கப்படும் மிகப் பெரிய குற்றச்சாட்டு.
- நீந்தும் மீனை மரம் ஏறச் சொல்வதனால் பயனில்லை. அதனால் அவரவரின் இயற்கைக்கேற்ப பிரித்தது தவறில்லை. அடுக்கியதிலேயே சிக்கல் உள்ளது.
- வேத காலம், பேப்பரோ, டேப்புகளோ, ஏன் ஓலைச் சுவடிகள் கூட இல்லாத காலம். வேதங்களைப் பாதுகாக்க வேண்டும். நெருப்புப் பெட்டி இல்லாத காலம். அரணிக் கட்டையைக் கடைந்து, அல்லது சூரிய ஒளியை குவித்து, அக்னியை உருவாக்கினார்கள். அப்படி உருவான அக்னியை பாதுகாக்க வேண்டும். ”எரி’ வாங்கி வர அந்தணர் வீட்டுக்குச் சென்றேன்” என்ற குறிப்பு 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபந்தப் பாடலில் கூட உள்ளது. வேத கால கட்டத்தில் இவற்றைச் செய்யத் தனிப் பிரிவு உருவாக்கப் பட்டது. இவர்கள் கற்பது, கற்பிப்பது, தானம் பெறுவது, தானம் தருவது, யாகம் செய்வது, யாகம் செய்விப்பது ஆகிய ஆறு தொழில்களை மட்டுமே செய்ய வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப் பட்டது. இல்லையென்றால் வேதம் என்னும் பெரும் பொக்கிஷத்தை காலத்தில் நிலைக்கச் செய்ய முடியாது. இவர்கள் தனக்கென பொருள் சம்பாதிப்பது விலக்கப்பட்டது. இப்பொழுது கூட உபநயனம் ஆனவுடன், ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று யாசகம் கேட்பதற்கு பையன்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள். ‘அஹங்காரம்’ அற்றுப் போக வேண்டும்; இவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு சமூகத்தில் அனைவருக்கும் உள்ளது என்னும் அறிவுறுத்தல்; என்பவை இச்சடங்குகளின் உட்பொருள்.
- Science/technology இல்லாத காலம். Condoms இல்லாத காலம். தொடர்ந்து பிள்ளைப்பேறுகளால் வீட்டிலேயே இருக்க வேண்டியிருந்த பெண்கள்; வீட்டு வேலைகளிலேயே ஈடுபடுத்தப் பட்டார்கள்; கல்வி, ஞானத் தேடல் ஆகியவை அவர்களுக்குக் கிடைக்க வில்லை. Technology இல்லாததால், வறுத்தும், அரைத்தும், பொடித்தும், சமைத்தும் என 24 மணிநேரமும் சமையற்கட்டிலேயே பெண்கள் இருந்தனர். இந்தியாவில் மட்டுமல்லாது, உலகெங்கிலும் அதுவே அவர்கள் நிலைமை. இந்தியாவிலாவது அவர்களின் கைப்புல் இல்லாமல் வைதிக காரியங்கள் நடக்க முடியாது.
- பக்கத்து கிராமத்தவர், இந்த கிராமத்தின் மேல் போர் தொடுத்துக் கொண்டிருந்த காலம்; அதனால் போரிடுவதற்கென்று தனிப்பிரிவு. தந்தை வழிச் சமூகம்; நிலவுடைமைச் சமூகம்; நிலத்தில் உடலால் உழைக்க ஆண் வாரிசுகள் வேண்டும்; இது போன்ற பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க, மக்களை govern செய்ய, அக்காலத்தவர் ஏற்படுத்திய விதிகளே சாஸ்த்திரங்கள்.
- சமகாலத்தில் இச்சிக்கல்களையெல்லாம் முழு முற்றாகக் கடந்தாகி விட்டது. வர்ணக் கலப்புகளால், வர்ண சங்குலமாகி வர்ணங்கள் பொருளிழந்து விட்டன. தவ வலிமை, ஆன்ம பலம், தியாகம், செய்யும் செயல்களில் நேர்த்தி போன்ற currency க்கள் வலுவிழந்து விட்டன. இப்போதைய currency, பொருள் சம்பாதிப்பது மட்டுமே. (இக்கேள்வியைக் கேட்டவரும் அவர் குடும்பத்தாரும் மக்களைக் காக்கும் உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு, தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குந்தித் தின்றாலும் அழியாதபடி 10 தலைமுறைகளுக்கான சொத்தை மக்கள் வரிப்பணத்திலிருந்து கையாடல் செய்திருக்கின்றனர், என்று மக்கள் நம்புவதால் தான் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர்).
- அதனால் வர்ண தர்மம் என்பதெல்லாம் இக்காலத்தில் அழிந்து விட்டது. அனைவரும் சொத்து சேகரிப்பிலேயே கவனம் செலுத்துவதால், அனைவரும் ‘வைஷ்ய’ வர்ணத்தவரே என்று சொல்வது மிகையாகாது. ஒரே வர்ணத்தில் ஏது அடுக்கு முறை?
- இந்தியர்களுக்கு இப்போதைய சாஸ்த்திரம், இந்திய அரசியலமைப்புச் சட்டம்-constitution தான். இதை மீறினால், illegal என்று வழக்குத் தொடுக்கப் பட்டு, நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டி வரும். சாஸ்த்திரங்களை மீறினால் நரகம் கிடைக்கும் என்பார்கள். இக்கால சாஸ்த்திரமான indian constitution-ஐ மீறினால், இவ்வுலகிலேயே தண்டனை கிடைத்து விடும்.
- கால தேச வர்த்தமானங்களுக்கு தக்கபடி சாஸ்த்திரங்கள் மாறலாம் என்பதே சனாதனத்தின் கொள்கை. ஒரு யுகத்திற்கு ஒரு சாஸ்த்திரம் என்பதே விதி. இப்போதைய யுகம் வேறு. பழைய மனு சாஸ்த்திரங்கள் தாமாகவே பொருளற்றவை ஆகி விட்டன. அதனால் அழிப்பதற்கு ஒன்றுமில்லை. அழிக்கவும் கூடாது. அவற்றை பழங்கால ஆவணங்களாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே.
- சாஸ்த்திரங்கள் பொருளற்றவை ஆகியிருக்கலாம். சனாதனத் தத்துவம் மனித அறிவு அடைந்த ஞானங்களிலேயே மிகவும் உயர்ந்த ஞானம். அதை அழிப்பது முட்டாள்தனம்.
- அதனால் சட்டசபையில் முன்வைக்கப்பட்ட வாதம் எந்தப் புரிதலும் இல்லாதவரால் மொழியப்பட்ட சிறுபிள்ளைத் தனமான வாதம்.
- அவர் சார்ந்த மதமான கிறுத்துவம்-அன்பு, மன்னிப்பு ஆகிய உயர் விழுமியங்களை போதித்தாலும், கிட்டத்தட்ட 1300 ஆண்டுகள், எல்லாப் புது தத்துவங்கள் மற்றும் அறிவியல் தேற்றங்களையும், anti-church/blasphemy என்ற பெயரில் எதிர்த்து, அதைச் சொன்ன தத்துவ வாதிகளின், அறிவியலாளர்களின் மேல் மரண தண்டனை, உயிரோடு எரிப்பது எனப் பல நினைத்துப் பார்க்க முடியாத வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்பது வரலாற்று உண்மை. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தான் அறிவியலையே ஒப்புக் கொள்ள ஆரம்பித்தனர். 2008 ல் தான் கடைசி blasphemy law கைவிடப்பட்டது. அதனால் அவர்களின் சாஸ்த்திரத்திலும் பிரச்சனை இருந்திருக்கிறது.
- மற்றொரு உலகளாவிய மதம் தங்கள் மத நம்பிக்கையை ஏற்காதவர்களைக் கொல்லலாம், கொன்றால் சொர்க்கம் கிடைக்கும் என்று போதனையே செய்கிறது.
சனாதனத்தை ஒழிக்க வேண்டுமா என்ற கேள்வியில், பிரம்மம் என்னும் தத்துவம் தரும் சமத்துவம், வேறு எந்த மதத்திலும் அளிக்கப் படவில்லை என்பதாலும், இதை விட அதிகமான சமத்துவத்தை சாதிக்கவே முடியாது என்பதாலும், மேலைத் தத்துவமும் கூட நீண்ட தேடலுக்குப் பிறகு, Eckhardt Tolle போன்ற ஆசிரியர்களின் மூலம் Universal consciousness என்று இவ்விடத்திற்கே வந்து சேர்ந்திருப்பதனாலும், இதை ஒழிக்கவும் வேண்டியதில்லை. ஒழிக்கவும் முடியாது.
சத்(நான் இருக்கிறேன்), சித்(நான் இருக்கிறேன் என்று அறிகிறேன்), ஆனந்தம்(அதனால் இனிமை அடைகிறேன்), இம்மூன்று பிரம்ம தத்துவ வரிகளின் மூலம் நிரந்தரமான ஆனந்தமும் , துக்கத்திலிருந்து விடுதலையும் (முக்தி) கிடைப்பதற்கு சனாதன தத்துவம் சாதனமாக இருக்கிறது. ஆன்மாவிற்கான (individual consciousness) விடுதலை ப்ரம்ம தத்துவத்தின்(universal consciousness) மூலம் என்றால், உடலுக்கான சமன்வயம், விடுதலையை சனாதன தத்துவத்தின் யோக முறை அளிக்கிறது. எல்லாவற்றிலும் சமத்துவமே யோகம் என்கிறது பகவத் கீதை(சமத்துவம் யோகம் உச்யதே). சம காலத்தில், ‘யோகம்’ மானுட துக்கத்தைக்(depression, anxiety) குறைக்க உலகெங்கிலும் உபயோகப் படுத்தப் படுகிறது. இந்து ஞான மரபின், ஆறு தரிசனங்களில் பிரம்ம தத்வம் என்னும் வேதாந்தம், யோகம் ஆகியவை இரு வழிகள் மட்டுமே. மற்றவையான சாங்க்யம், வைசேஷிகம், நியாயம், பூர்வ மீமாம்ஸம் ஆகியவை தத்தம் வழிகளில் மானுட துக்கத்துக்கான முக்தியை அளிக்கின்றன.
அதனால் சனாதனம் என்னும் ஞான பெட்டகத்தை ஒழிப்பது முட்டாள் தனமானது.
