
ரம்யாவின் ‘நீலி’ இதழிலும், சுசித்ரா தொடங்கியிருக்கும் ‘சுரபி’ இதழிலும், ஆவநாழியிலும் என மூன்று இடங்களில் காலம் சென்ற மலையாள எழுத்தாளரான, ‘அஷிதா’வின் படைப்புகளின் மீது கவனம் விழுந்துள்ளது. மூன்று இதழ்களுமே, ‘february 2025’ ல் வெளியிடப்பட்டவை. முதல் முறை இவரை வாசிக்கிறேன். வலியை மிகவும் நுட்பமாக வாசகருக்குக் கடத்தும் எழுத்தாளராக இவர் என் மனதில் பதிகிறார்.
‘அம்மா என்னிடம் சொன்ன பொய்கள்’ கதையில் கதைசொல்லியை விட அவளின் அம்மாவிடம் தான் அதிகம் பரிதாபம் கொள்ளத் தோன்றுகிறது. இது மகளின் கதை என்பதை விட பொய் சொல்லும் அந்த அம்மாவின் கதை தான். தன்னை சந்தேகிக்கும் கணவன், தன்னிடமும் தன் மகளிடமும் வன்மத்தோடு நடந்து கொள்பவன், தன் உறவுக்காரி செல்லம்மாளிடம் உறவு கொண்டிருந்தவன், அவளின் இறப்புக்கு துக்க முகத்தோடு செல்ல வேண்டும் என நிர்ப்பந்திப்பவன், கை கால் விழுந்து பின் செத்தும் போனவன் என்று கணவனால் எல்லா வகையிலும் அழுத்தப் படும் அம்மா அவள். தனக்கு என்ன நடந்தாலும், பதிலுக்கு அன்பையும் பாசத்தையும் மட்டுமே தர வேண்டும் என சமூகத்தாலும் எல்லோராலும் நிர்ப்பந்திக்கப் படும் உறவு ‘அம்மா’ என்னும் உறவு. எல்லா வகையிலும் இந்த அழுத்தம் சுமக்கும் அம்மாக்கள் பாவம் தான்.
தன் சொந்த மகளின் மீதும் பொறாமை கொள்ளும் ஒரு சாதாரண பெண்ணாகி விட்டாள் இக்கதையின் அம்மா. அவளுக்கு, மகளும் கஷ்டப் படுகிறாள் என்று தெரிந்திருந்தால் ஒரு நிமிடம் ஜில்லென்றிருந்திருக்கும், பின் அவளும் கண்ணீர் விட்டிருக்கலாம். அந்த ஒரு நிமிட இன்பத்தை அம்மாவுக்கு தராமல் மகளும் ‘game’ ஆடுகிறாள். இரண்டு immature adults.
இங்கு நம்மை அறியாமலேயே ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. அப்பாவின் மற்றும் மகளின் கணவரின் துர்நடத்தை, ‘set property’ போல பின்னுக்கு சென்று விட்டது. விசாரணையே அதைப் பற்றித் தான் இருந்திருக்க வேண்டும். இரண்டு அயோக்கியர்களின் நடத்தையால், அம்மாவும் மகளும் ஆதி மிருகங்களைப் போல் ஒருவரை ஒருவர் குதறிக் கொள்கின்றனர். இன்னொன்று, கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்தால் தோற்றுப் போய் விட்டாள் என்று மறைமுக அழுத்தம் தரும் காலம் மற்றும் சூழல். குற்றவாளிகள் எங்கோ இருக்க, பொய் சொல்வதாக குற்றம் சுமக்கிறார்கள் அன்னையும் மகளும். இக்கதையின் ஆசிரியரின் நோக்கமும் இதைச் சொல்வதாகத் தான் இருந்திருக்க வேண்டும். அவர் நுட்பமாக வேறு விதத்தில் சொல்கிறார்.
இக்கதையோடு அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’-ஐ ஒப்பிடலாமா என்றால் கூடாது என்று தான் தோன்றுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டு கதைகளும், அம்மா மகள் உறவுச் சிக்கல் போலத் தான் தோன்றும். ஆனால் அம்பையின் கதை ஒரு நொடியில் ஏற்படும் விபத்து. அஷிதாவின் கதையில் நிகழ்வது அழுகல். மேலும் அம்பையின் கதையில் பெரிதும் பாதிக்கப்படுபவள் மகள் தான். இது மகளின் கதை. அநீதி இழைத்திருப்பவர் அம்மா. தன் அக்கா மகளின் நிறத்துக்காக வேண்டாமெனச் சொல்லி விட்டார்கள் என்னும் வயிற்றெரிச்சலில் அம்மா இவளை ‘பாரம்’ என்று சொல்லி, எப்போதைக்குமாக ‘தான் அழகி’ என்னும் இவளின் பிம்பத்தை கொலை செய்து விடுகிறாள். அம்பையின் கதை பேசுவது கலைந்த சிறுமியின் கனவைப் பற்றி. இறந்து போன அம்மாவின் பிம்பத்தைப் பற்றி. அஷிதாவுடையதோ சமூகத்தின் நோய் கூறைப் பற்றி. இங்கும் ஒரு ஆண் தானே மூல காரணம் என வாதிட்டால், இரண்டு குற்றங்களும் தீவிரத் தன்மையில் வெவ்வேறானவை. ஒன்று அநீதி, மற்றொன்று அந்த ஆணின் தேர்வு.
இரண்டாவது கதையான ‘உலகத்தில் சில இடைவெளிகள்’, பாதிக்கப்படும் அந்தக் குழந்தை ‘cope’ செய்து கொள்ளும் mechanism பற்றிப் பேசுகிறது. உளவியல் ரீதியான ஒரு கதை. மனதில் ஈரமற்று மற்றவர்களை வதைப்பவர்கள், எவ்வாறு அங்கனம் உருவாகிறார்கள் என்னும் கதை. ‘உலகம் பயங்கரமானது’ என்று சொல்லிக் கொண்டே உணவருந்தும் சிறுமியைப் பற்றியது. ‘நீயும் தற்கொலை செய்து கொள்’ எனச் சொல்லிவிட்டு, வீட்டுக்கு வந்து போண்டா சாப்பிட்டு தம்பியோடு விளையாடி, இரவு நன்றாக உறங்கி, பின் தன்னால் நடந்த ஜஸ்வீரின் தற்கொலை முயற்சியைப் பற்றி அறிந்ததும் கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி ‘உலகம் பயங்கரமானது’ என்று புன்னகையுடன் கடந்து செல்லும் ஒரு criminal-in the making பற்றிய கதை. அந்தச் சிறுமியின் வேல்யூ சிஸ்டம் முழுக்க தலைகீழாகி விட்டது. ஒரு விதத்தில் இந்தக் குழந்தை நம் பரிதாபத்திற்கு உரியவள்.
மூன்றாவது கதை ‘வார விடுமுறைகள்’, முகமூடிகளின் கதை. நுட்பமான ஒரு ஆடல்-கணவனுக்கும் நண்பனுக்கும் நடுவில், நண்பனுக்கும் மனைவிக்கும் நடுவில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில். இந்த ஆடலினால் யாருக்கும் எந்த பலனும் இல்லை, காயங்களைத் தவிர. மூவரும் தோற்றுப் போகும் ஒரு விளையாட்டு இது. மீண்டும் பரிதாபம் ஏற்படுத்தும் பாத்திரங்கள்.
இச்சிறு கதைகளில், நம்மை பரிதாபம் கொள்ள வைத்து சூழலின் இழி நிலையை காட்டி விடுகிறார். கொஞ்சமாகச் சொல்லி கதையை நம்மை உணர வைக்கிறார்.
வலி மிகுந்த வாழ்க்கை வாழ்ந்தவர் அஷிதா. ஒரு ‘catharsis process’ ஆக இவற்றை எழுதியிருக்க வேண்டும். சிலரின் வாழ்க்கை இப்படி கசப்புச் சுவையுடன் தான் அமைந்து விடுகிறது. ‘வாழ்தல் இனிது’ என்று எல்லோராலும் ஜொலிக்க முடியாதல்லவா? முக்கியமாக அழுகல் சமூகத்தில் வாழும் நல்லூழ் செய்யாத பெண்களால்.