மேலே திறந்து கிடக்கிறது-ஜெ சிறுகதை-வாசிப்பனுபவம்

சிந்திக்கத் தெரிந்த எந்த மனிதனும் கேட்கக் கூடிய ஆறு கேள்விகள் என்று இந்திய ஞான மரபு சொல்வது:

1. ஜீவன் என்பவன் யார்? 2. இந்த பிரபஞ்சம் என்பது என்ன? 3. ஜீவனையும் பிரபஞ்சத்தையும் படைத்தது யார்? ஈஸ்வரன் தான் படைத்தார் என்றால், அந்த ஈஸ்வரன் யார்? 4. மனிதர்கள் ஏன் துன்பப் படுகிறார்கள்? 5. துன்பங்களில் இருந்து எப்படி மீட்பு கிடைக்கும்? 6. பந்தங்களில் இருந்து விடுதலைக்கு எப்படிச் செல்வது?

இந்த ஆறு கேள்விகளியும் கேட்டு அதன் முடிவாக அவனுக்குக் கிடைக்கும் விடையானது, சத்தியத்தின் ஒரு தரிசனம் என்பதால், ஒவ்வொரு சிந்தனைப் பாதையும் ஒரு தரிசனம் என அழைக்கப்படுகிறது. இந்திய மரபில் 6 நாஸ்திக தரிசனங்களும், 6 ஆஸ்திக தரிஸனங்களும் உள்ளன.

வேதம் அல்லது ஶ்ருதியை ஒரு பிரமாணமாகக் கொள்ளாத சார்வாகம், ஜைனம், பௌத்தம் (அதன் நான்கு பிரிவுகள்) நாஸ்திக தரிசனங்கள் எனப்படும். இவை ப்ரத்யக்‌ஷம்(கண்ணால் காண்பது) மற்றும் அனுமானம் ஆகியவற்றை மட்டுமே பிரமாணமாகக் கொள்ளும். வேதம் நாஸ்தி (ந+அஸ்தி) என நினைப்பதால் இவை நாஸ்திக மதங்கள்.

வேதம் அஸ்தி(இருக்கிறது) என நினைப்பவை ஆஸ்திக தரிசனங்கள். பிரத்யக்‌ஷம், அனுமானம் ஆகியவற்றோடு சேர்ந்து வேதத்தையும் பிரமாணமாகக் கொள்வதால், இவை ஆஸ்திக மதங்கள். சாங்க்யம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம் ஆகியவை வேதத்தை ஏற்றுக் கொண்டாலும், ‘ஈஸ்வரன்’ என ஒன்று இருப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் இவை நிரீஸ்வர மதங்கள் என அழைக்கப்படுகின்றன. யோகம், நியாயம், வேதாந்தம் ஆகிய மற்ற மூன்றும் ஈஸ்வரன் என்று ஒன்று இருப்பதை ஏற்றுக் கொள்கின்றன.

ஈஸ்வரன் அல்லது பிரம்மம் என்று எப்படி அழைத்தாலும், அதுவே இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கான நிமித்த காரணம் என்று இவை நம்புகின்றன. ஒரு பானை செய்யப்பட வேண்டும் என்றால், அது முதலில் யார் மனதிலாவது, ஒரு எண்ணமாக உருவாகியிருக்க வேண்டும் ; அந்த ஒருவர் ஈஸ்வரனே என இவை நம்புகின்றன. இந்திய தத்துவமும், ‘மேலே திறந்து கிடக்கிற்து’ என்னும் இக்கதையும் சந்திக்கும் புள்ளி இதுவே.

இக்கதையின் ஒரு திரி, இப்பிரபஞ்சத்தில் என்ன நடந்தாலும், ஞான விசாரணை அல்லது கேள்விகள் உட்பட அனைத்துமே முன்பே உள்ள ஒரு நோக்கத்தின் படியே நிகழ்கின்றன என்னும் கருத்தை முகாந்திரமாகக் கொள்கிறது.

//எல்லா கேள்விகளுக்கும் பின்னால் நோக்கம் உள்ளது. அந்நோக்கமே எது அறியப்படவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. எது ஏற்கப்படவேண்டும் என்று அல்ல. எது உண்மை, எது தர்க்கபூர்வமானது, எது பயனுள்ளது என்று அல்ல. எது அறியப்படவேண்டும் என்பதையே நோக்கம்தான் தீர்மானிக்கிறது.//

அதை நிரூபிக்கும் விதமாகவே இந்தக் கதையின் தருணங்களும் முடிவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தங்கள் கோளின் கட்டுப்பாட்டையும் மீறி ‘க’ பூமியில் இறங்கியதும், அவரின் கைரேகையை தம் மூதாதையின் கை ரேகை என நினைத்து, ‘மோரு’ என்ற சர்வாதிகாரி, தன் நகரை அக்கைரேகையை விரிவு படுத்தி அமைத்ததும், அது பின்னர் பச்சைப் போர்வையால் காணாமல் ஆனதும், சரியாக அந்த அயல்கோள் விண்கலன் வருவதற்கு முன்பாக காட்டுத்தீயால் அதன் மீது படர்ந்திருந்த காடு அழிக்கப்பட்டு, விண்வெளியிலிருந்தும் தெரியும் வண்ணம் அக்கைரேகை தெளிவானதும், அவ்விண்கலனின் அழிவு ஆயுதம் அக்கைரேகையால் இயக்கப்படுவது போல ‘க’வால் வடிவமைக்கப்பட்டிருந்ததும் என எல்லாம் தற்செயல் போல தெரிந்தாலும், முன்பே பல லட்சம் ஆண்டுகளை மனக்கண்ணால் பார்க்க முடிந்த ஒரு பெரும் இருப்பால் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன என இக்கதை சொல்லும்போது ஒரு பெரும் பிரமிப்பு ஏற்படத் தான் செய்கிறது.

உலகமெங்கும் விண்வெளியிலிருந்தும் தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் ‘patterns’; ‘மனிதர்கள் பூமியில் மற்ற உயிர்களோடு சேர்ந்து பரிணாம வளர்ச்சியில் உருவாகவில்லை-அயல் கோள்களிலிருந்து வந்தவர்கள்’, என்னும் கருதுகோள்; ‘அயல் கோள்களில் மிகவும் முன்னேறிய மனித இனம் வாழ்கிறது’, என்னும் கோட்பாடு; மற்றும் நடக்கும் அனைத்திற்கும் எவராலும் அறிய முடியாத நோக்கம் முன்பே இருக்கிறது என்னும் தரிசனம் என்று பல புரிகள் இணைந்து உருவான அழகான கதை இது. ‘நியாயம்’ சொல்லும் ‘காரியத்வாத்’ மற்றும், ‘வேதாந்தம்’ சொல்லும் ‘ஜன்மாத்யஸ்ய யத:’ ஆகிய சூத்ரங்களின் நடைமுறை விளக்கம் இக்கதை.

வல்லினத்திலேயே கடந்த ஜனவரி வந்த ‘தொலைவில் எங்கோ’ இதைப்போன்றே தத்துவதில் ஆழமாக காலூன்றிய கதை. ஆன்மாவுக்கும் சரீரத்திற்கும் இருக்கும் தொடர்பு, நாம ரூபம் மற்றும் காலம் பற்றிய ஆழ்ந்த விசாரணைகள் கொண்ட கதை. அக்கதையின் கடைசியில், இன்று இரவு வரை தானா இந்த உடல் என வருத்தம் கொள்வான் ஒரு அயல் கோள் வாசி, அடுத்த நொடியே ஒவ்வொரு நாளும் மாறாத ஒரே சரீரத்திலேயே அடைந்து கிடக்கும் மனிதனைக் கண்டு பரிதாபம் கொள்வான் மற்றொருவன். மாற்றம் ஒரே நேரத்தில் வரமாகவும் சாபமாகவும் ஆகும் தருணம். எவ்வளவு காலத்தில் எவ்வளவு மாற்றம் என்பதும் முக்கியமான கேள்வி அக்கதையில்.

முன்பு வந்த ‘சிஜ்ஜடம்’ சிறுகதை முழுக்க சாங்க்ய தரிசனத்தின் நடைமுறை விளக்கம். புருஷன், முக்குணங்களால் கட்டப்பட்டிருக்கும் உயிரற்ற பிரகிருதியை உயிர் கொள்ள வைக்கும் கடைசிக் காட்சி வரும் கதை. ‘ஏகம்’ சிறுகதை, விஸிஷ்டாத்வைதத்தில் ஆரம்பித்து அத்வைதத்தில் முடிவது. இவை நான்குமே தத்துவப் பின்புலத்தில், நல்ல வாசிப்பனுபவம் தரும் கதைகள்.