அஷ்டபதி 22-கல்யாண அஷ்டபதி-ராதா வதன..(ஹரிம் ஏகரஸம்..)

ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன
ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப்ரவிவேச நிவேஸனம்

அவள்(ராதை) பயத்துடனும், ஆனந்தத்துடனும், கோவிந்தனை ஓரக் கண்ணால் பார்த்தபடி, தன் கொலுசுகளால் மனோகரமான ஒலியை எழுப்பிய படி அந்தக் குடிலுக்குள் நுழைந்தாள்.

ராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம்
ஜலநிதி மிவ விது மண்டல தர்ஸன தரளித துங்க தரங்கம்

ராதையின் முகத்தைக் கண்டதும், அவன் முகம் பல விதமான உணர்வுகளைக் காட்டியது, நிலவைக் கண்டதும் கடலில் உண்டாகும் பெரும் அலைகளைப் போல.

ஹரிம் ஏகரஸம் சிரம் அபிலஷித விலாஸம்
ஸா ததர்ஸ குரு ஹர்ஷ வஸம்வத வதனம் அனங்க விகாஸம்

உன்மத்தம் கொண்டவனாய், அவள் முகத்துக்குக் கட்டுப்பட்டவனாய், அவள் மீதான காதல் ஒன்றையே ஒரே ரஸமாய் கொண்டவனாய், நெடுங்காலம் அவளோடு மகிழ்ந்திருக்க விரும்புபவனாய், உடலற்றவன்(மன்மதன்) தன்னில் மலர்ந்தவனாய் இருந்த ஹரியை அவள் பார்த்தாள்.

ஹாரம் அமலதர தார முரஸி தததம் பரிலம்ப்ய விதூரம்
ஸ்புடதர பேன கதம்ப கரம்பிதம் இவ யமுனா ஜலபூரம்

அப்பழுக்கற்ற உயர்தர பதக்கம் வைத்த மிக நீண்ட முத்து ஹாரத்தை அவன் தன் மார்பில் அணிந்திருந்தான், ஸ்படிகம் போன்ற நுரைகள் நிரம்பிய யமுனையின் நீர் நிறைந்த உடலைப் போல..(ஹரிம் ஏகரஸம்..)

ஸ்யாமள ம்ருதுள களேபர மண்டலம் அதிகத கௌரது கூலம்
நீல நளின மிவ பீத பராக படலபர வலயித மூலம்

கருமையான பட்டு போன்ற தேகத்தைக் கொண்டிருப்பவன், அணிந்திருப்பதோ மஞ்சள் பட்டு; கரு நீலத் தாமரையின் தண்டைச் சுற்றி அமைந்திருக்கும் மஞ்சள் மகரந்தப் பொடிப் படலத்தைப் போல(ஹரிம் ஏகரஸம்..)

தரள த்ருகஞ்சல சலன மனோஹர வதன ஜனித ரதி ராகம்
ஸ்புட கமலோதர கேலித கஞ்ஜன யுகமிவ ஸரதி தடாகம்

ரதிக் கிரீடைக்குத் தயாராக இருக்கும் அவனுடைய அழகிய முகத்தை, அவள் கண்கள் ஓரப்பார்வை பார்த்தபடியும் அசைந்தபடியும் இருக்கின்றன, சரத் கால தடாகத்தில், அப்போது தான் முகிழ்த்த தாமரையின் மடியில் விளையாடும் இரு சிறு பறவைகளைப் போல(ஹரிம் ஏகரஸம்..)

வதன கமல பரிஸீலன மிளித மிஹிர ஸமகுண்டல ஸோபம்
ஸ்மித ருசி ருசிர ஸமுல்லஸிதாதர பல்லவ க்ருத ரதிலோபம்

சூரியனைப் போல பிரகாசிக்கும் அவன் இரண்டு குண்டலங்களும் அவன் உதடுகள் வரை ஆடியாடி அவன் முகம்(அவள் முகம் என்றும் கொள்ளலாம்) என்னும் தாமரையை பரிசீலிப்பவை போன்று உள்ளன; அழகிய புன்னகையை சூடி நிற்கும் இளந்தளிரைப் போன்ற அவன் அதரங்கள் ரதி கிரீடைக்காக உற்சாகம் கொண்டிருக்கின்றன.(ஹரிம் ஏகரஸம்..)

ஸஸி கிரணச் சுரிதோ தர ஜலதர ஸுந்தர குஸும ஸுகேஸம்
திமிரோதித விது மண்டல நிர்மல மலயஜ திலக நிவேஸம்

சந்திரனின் ஒளி ஊடுருவிய மேகக் கூட்டத்தைப் போல உள்ளது, மலர்கள் சூடிய அவன் கேசம்; இருண்ட வானில் உதித்த நிலவைப் போன்று உள்ளது அவன் நெற்றியில் அமைந்த அப்பழுக்கற்ற சந்தனத் திலகம்.

விபுல புளகபர தந்துரிதம் ரதி கேளி கலாபிரதீரம்
மணிகண கிரண ஸமூஹ ஸமுஜ்வல பூஷணம் ஸுபகஸரீரம்

புளகாங்கிதம் கொண்ட தேகத்தோடும், ரதி கேளியினால் நிதானமிழந்தும், நிறைய ஒளி வீசும் மணிகள் கொண்ட ஆபரணங்கள் அணிந்திருந்ததால், ஜொலிக்கும் மங்களகரமான சரீரமும் கொண்டிருந்தான்(ஹரிம் ஏகரஸம்)

ஸ்ரீ ஜயதேவ பணித விபவ த்விகுணீக்ருத பூஷண பாரம்
ப்ரணமத ஹ்ருதி வினிதாய ஹரிம் ருசிரம் ஸுக்ருதாய ஸாரம்

ஸ்ரீ ஜெயதேவரால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகள் கண்ணனின் ஆபரண பாரத்தை இரு மடங்காக்கி விட்டன. புண்ணியங்களின் சாரமான ஹரியை உறுதியாக மனதில் இருத்தி வணங்குவீர்களாக..