அத்ராந்தரே மஸ்ருண ரோஷ வஸாத் அஸீம்நி
ஸ்வாஸ நிஸ்ஸஹ முகீம் ஸுமுகீம் உபேத்ய
ஸவ்ரிடம் ஈக்ஷித ஸகீவதனாம் தினாந்தே
ஸானந்த கத்கத பதம் ஹரிரித்யுவாச
அதற்குள் மாலை வேளையில் அங்கு ஆனந்தத்தோடு வந்த ஹரி, ரோஷத்தால் எல்லையில்லா கோபம் கொண்ட ராதையின் முகத்தைப் பார்த்ததும், என்ன செய்வது என்று தெரியாது, அவள் தோழியின் முகத்தையும் பார்த்தபடி மிகுந்த வெட்கத்துடன் அவள் அருகில் வந்து குழறும் வார்த்தைகளால் இவ்வாறு சொன்னான்:
வதஸி யதி கிஞ்சிதபி தந்தருசி கௌமுதீ
ஹரது தர திமிரம் அதிகோரம்
ஸ்புரததர ஸீதவே தவ வதன சந்த்ரமா
ரோசயது லோசன சகோரம்
கொஞ்சமாக வாய் திறந்து பேசினாலும், தெரியும் உன் பல்வரிசையின் குளிர்ந்த ஒளியால் என் மனத்தில் உள்ள அதிகோரமான இருளை போக்கு; நிலவை போன்றிருக்கும் உன் முகத்தில் உள்ள, துடிக்கும் அதரங்களின் மதுவை, என் கண்கள் என்னும் சகோர பட்சிகளுக்கு விருந்தாக்கு;
ப்ரியே சாருஸீலே ப்ரியே சாருஸீலே
எனக்கு பிரியமானவளே; இனிய இயல்பு கொண்டவளே;
முஞ்ச மயி மானம் அநிதானம்
ஸபதி மதனானலோ தஹதி மம மானஸம்
தேஹி முக கமல மதுபானம்
காரணமின்றி என் மேல் கொண்டுள்ள கோபத்தை களைந்துவிடு; இப்போது மன்மதனின் அனலினால் என் மனம் தகித்துக் கொண்டிருக்கிறது; உன் தாமரைப் போன்ற முகத்தின் மது பானத்தை எனக்கு அளிப்பாய்;
ஸத்யமேவாஸி யதி ஸுததி மயி கோபினீ
தேஹி கர நகர ஸர காதம்
கடய புஜ பந்தனம் ஜனய ரத கண்டனம்
யேன வா பவதி ஸுக ஜாதம் (ப்ரியே)
அழகிய பல்வரிசை கொண்டவளே, உனக்கு என் மேல் உண்மையிலேயே கோபம் இருந்தால், உன் கூர்மையான நகங்கள் என்னும் அம்புகளால் என்னை காயமாக்கு; உன் புஜங்களால் என்னை கட்டிப்போடு; உன் பற்களால் என்னை கிழித்துப் போடு; இல்லையென்றால் உனக்கு எதனால் சமாதானம் கிடைக்குமோ அந்த விதத்தில் எனக்கு தண்டனை கொடு (ப்ரியே)
த்வமஸி மம ஜீவனம் த்வமஸி மம பூஷணம்
த்வமஸி மம பவஜலதி ரத்னம்
பவது பவதீஹ மயி ஸததமனுரோதினீ
தத்ர மம ஹ்ருதயம் அதி யத்னம் (ப்ரியே)
நீயே என் வாழ்வு; நீயே எனக்கு அணி; நீயே இவ்வுலகம் என்னும் கடலில் எனக்குக் கிடைத்த ரத்தினம்; இவ்வுலகில் நீ எப்போதும் எனக்கு இயைந்திருப்பவளாக இரு; அதற்கே என் மனம் மிகுந்த முயற்சி செய்கிறது (ப்ரியே)
நீல நளினாபமபி தன்வி தவ லோசனம்
தாரயதி கோகன த ரூபம்
குஸும ஸரபாண பாவேன யதி ரஞ்ஜயஸி
க்ருஷ்ணமித மேததனு ரூபம் (ப்ரியே)
அழகி, உன் கண்கள் எப்போதும் நீலத் தாமரையை ஒத்திருக்கும்; ஆயினும் கோபத்தினால் இப்போது சிவந்திருக்கின்றன; இந்த சிவந்த நயனங்களை மலரம்புகளாக என் மேல் எய்துவாயானால், கருத்த என் உடலும் சிவந்ததாகும்; அதுவே உசிதமானதும் கூட (ப்ரியே) [ராதை சிவந்தவள், கண்ணன் கருத்தவன் என்னும் கருத்து இங்கே தெளிவாகக் கூறப்படுகிறது]
ஸ்புரது குச கும்பயோ: உபரி மணி மஞ்சரி
ரஞ்ஜயது தவ ஹ்ருதய தேஸம்
ரஸது ரஸனாபி தவ கனஜகன மண்டலே
கோஷயது மன்மத நிதேஸம் (ப்ரியே)
உன் ஸ்தனங்களின் மேல் உள்ள மணி மாலைகள் ஜொலிக்கட்டும்; உன் இதயம் எனக்கு இன்பமளிக்கட்டும்; உன் இடையில் அணிந்துள்ள அணியும் இனிமையாக சப்திக்கட்டும்; இவையனைத்தும் மன்மதனின் ஆணையை கோஷிக்கட்டும்.
ஸ்தல கமல பஞ்ஜனம் மம ஹ்ருதய ரஞ்ஜனம்
ஜனித ரதி ரங்க பர பாகம்
பண மஸ்ருணவாணி கரவாணி சரணத்வயம்
ஸரஸ ஸதலக்தக ஸராகம் (ப்ரியே)
இனிமையான குரல் கொண்டவளே, உன் கால்கள் நிலத்தில் உள்ள தாமரைகளைப் போன்றவை; என் மனதுக்கு மிகவும் பிடித்தமானவை; ரதியின் அரங்கத்தில் அருமையான பாகம் வகிப்பவை; சொல், அவ்விரண்டு கால்களையும் சிவந்த அல்காவினால் நான் அலங்கரிக்கட்டுமா?
ஸ்மரகரள கண்டனம் மம ஸிரஸி மண்டனம்
தேஹீ பத பல்லவம் உதாரம்
ஜ்வலதி மயி தாருணோ மதன கதனானலோ
ஹரது ததுபாஹித விகாரம் (ப்ரியே)
என் காதலியே, மன்மதனின் விஷத்தை போக்கவும், என் தலைக்கு அணிகலனாகவும், உன் இளந்தளிர்களைப் போன்ற பாதங்களை எனக்குக் கடனாக அளிப்பாயா; என் தேகம் மன்மதனின் அனலினால் எரிகிறது; அந்த அனல் உண்டாக்கிய விகாரத்தை உன் பாதங்களால் நீக்கு(ப்ரியா)
[இந்த ஸ்லோகத்தைப் பற்றி ஒரு மிக அழகிய கதை உள்ளது. இந்த 19-வது அஷ்டபதியில் கண்ணன் ராதையை சமாதானம் செய்ய பல விதங்களில் பேசிப் பார்க்கிறான். அவள் மசிவதாக இல்லை. ஜெயதேவர் கண்ணன் என்ன செய்திருப்பான் என மனக் கண்ணில் எண்ணிப் பார்க்கிறார். அப்பொழுது கண்ணன் ராதையிடம், தன் தலையில் அவள் பாதங்களை ஆபரணமாக வைக்கச் சொல்லி கேட்பதாகவும், அதன் பின்னாவது தன்னை மன்னிக்கும்படி கெஞ்சுவதாகவும் ஒரு காட்சி அவருக்குத் தோன்றுகிறது. ஆனால், கண்ணனின் தலையில் கால் வைக்கச் செய்வதா என்றெண்ணி, அக்காட்சியை எழுத அவருக்கு மனம் ஒப்புவதில்லை. தன் மனைவி பத்மாவதியிடம் தான் ஆற்றில் சென்று குளித்து விட்டு வருவதாகச் சொல்லி புறப்படுகிறார்.
சென்ற சில விநாடிகளிலேயே மீண்டும் வந்து, ‘என் தலையில் உன் பாதங்களை வை’ எனப் பொருள்படும், ‘ஸ்மரகரள கண்டனம்..’ என்னும் இந்த அழகிய ஸ்லோகத்தை எழுதுகிறார். பின்பு நெடு நேரம் தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு ஊறியதால், கண் எரிவதாகச் சொல்லி பத்மாவதியின் சேலை தலைப்பில் கண்களை துடைத்துக் கொண்டு, குளிப்பதற்கு சென்று விடுகிறார்.
சில மணி நேரம் கழித்து, மீண்டும் வந்து, ஓலைச் சுவடிகளை எடுத்து வர மனைவியை பணிக்கிறார். அதில் தான் பல நூறு முறை எழுத வேண்டாம் என நினைத்த ஸ்லோகம் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப் படுகிறார். பத்மாவதியின் சொற்களின் மூலம் நடந்ததை அறிகிறார். தான் எண்ணெய் வைத்துக் கொண்டு வரவும் இல்லை, இந்த ஸ்லோகத்தை எழுதவும் இல்லை என்று மறுக்கிறார். பின் அவர்களுக்குப் புரிகிறது.
ஜெயதேவர் உருவத்தில் வந்தவன் கண்ணனே என்றும், அவனே இந்த ஸ்லோகத்தை எழுதினான் என்றும், ராதையின் பாதத்தை தன் தலையில் சூட அவனுக்கு முழுச் சம்மதமே என்றும் எண்ணி ஆனந்தத்தில் மூழ்குகின்றனர். பத்மாவதியின் எண்ணெய் கறை படிந்த சேலையும் இந்நிகழ்விற்கு ஸ்தூல சாட்சியாய் நிற்கிறது. இத்தனை கவிதைகள் எழுதிய பின்பும் தன் கண்களுக்குத் தெரியாமல் தன் மனைவியின் கண்களுக்கு கண்ணன் தெரிந்ததால் ஜெயதேவர் மிகுந்த ஏக்கம் கொண்டதாகவும் சொல்கின்றனர்]
இதி சடுல சாடுபடு சாரு முர வைரிணோ
ராதிகாம் அதிவசன ஜாதம்
ஜயது பத்மாவதி ரமண ஜயதேவகவி
பாரதி பணிதமிதி கீதம் (ப்ரியே)
இவ்வாறு அழகிய, இனிய, நினைவு கொள்ளத்தக்க, சாமர்த்தியமான வார்த்தைகள் முரனின் பகைவனால்(ஹரியினால்) ராதிகாவிடம் சொல்லப்பட்டது; பத்மாவதியின் கணவனான ஜெயதேவரால் சொல்லப்பட்ட இப்பாடல் வெற்றி பெறட்டும்.