என்னைப் பற்றி

நான்

அழகை நேசிப்பவள்

நுட்பத்தை ஆராதிப்பவள்

நேர்மையை உபாசிப்பவள்

எப்பொழுதும்

ஒரு ரசிகையாயிருப்பவள்

‘இம்ம்’ என்றமைந்திருக்கும் ஆழ்கடல்-முகவுரை

நான் கல்பனா ஜெயகாந்த். பிறந்தது, 1975 ஆம் ஆண்டு செப்டம்பர் ஏழாம் தேதி, ஸ்ரீரங்கத்தில்.

எல்லா வாசகரும் சொல்வதைப் போல, எனக்கும், கிடைக்கும் சிறு சிறு காகிதத்தையும் விடாமல் வாசிக்குமளவு, சிறு வயதிலிருந்தே வாசிப்பின் மீது பெரும் ஈர்ப்பு இருந்தது. என் பெயரை இரண்டு மூன்று முறையாவது அழைத்த பின்பே ஏனென்று கேட்கும் வழக்கம் கொண்டிருந்தேன் என்று உறவினர்கள் அலுத்துக் கொண்டதுண்டு. என் சிறு பிராயத்தை பெரும்பாலும் கனவிலும் கற்பனையிலுமே கழித்ததாகத் தான் இப்போது திரும்பிப் பார்க்கையில் தோன்றுகிறது. எழுந்தமர்ந்து எதையாவது எழுதியே தீர வேண்டும் என்று, என்னை கிடக்க விடாமல் செய்த சில சிறு வயது இரவுகள் நினைவுக்கு வருகின்றன. சம்பிரதாயமான கூட்டுக் குடும்பம் எங்களுடையது. எங்கள் குடும்பங்களில் வழக்கத்தை மீறிய சிறு அசைவும் அனுமதிக்கப்படுவதில்லை. எம்மவர் இலக்கியத்தின் மீதோ வாசிப்பின் மீதோ பற்றுக் கொண்டவர்கள் அல்லர். அது ஒரு கவனச் சிதறலாகவே பார்க்கப்பட்டது. அதனால் வாசிப்போ எழுத்தோ இரகசிய ஆசையாகவே என்னுள் கனன்று கொண்டிருந்தது.

எங்கள் கல்லூரி நூலகத்தில் கிடைத்த Arthur Conan Doyle, Arthur Hailey, Jeffrey Archer, Barbara Cartland ஆகியவர்களிடமிருந்து என் வாசிப்பு துவங்கியது. ரமணி சந்திரனும், சாண்டில்யனும், பாலகுமாரனும், சுஜாதாவும் ஒன்றிரண்டு புத்தகங்களுக்கு மேல் என்னை ஈர்க்கவில்லை. தீவிர எழுத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த நண்பர்களிடமும், உறவினர்களிடமும் விசாரித்தது நினைவுக்கு வருகிறது. ஒரு திகைத்த பார்வையே எனக்கு பதிலாகக் கிடைத்ததையும் நினைவு கூர்கிறேன். ‘ஜெயகாந்தன்’ என்னும் பெயர் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ஆகிய திரைப்படங்களின் மூலமே எனக்கு அறிமுகமானது.

எனக்கு சரியான தீவிர இலக்கிய அறிமுகம் திருமணத்திற்கு பின் என் கணவர் ஜெயகாந்தின் மூலமே கிடைத்தது. நான் திருமணமாகி என் இல்லம் புகுந்த போது அங்கு தி.ஜாவும், லா.சா.ராவும், அசோகமித்திரனும், ஜெயகாந்தனும், ஜெயமோகனும், நாஞ்சில் நாடனும், சுராவும், ஆல்வின் டொஃப்லரும், அயன் ராண்டும், ராபர்ட் பெர்சிக்-உம் என் கணவரின் புத்தக அலமாரியில் எனக்காகக் காத்திருந்தனர். என் வீட்டில் நான் சமைக்கவோ, உண்ணவோ, உறங்கவோ எதுவும் செய்ய வேண்டியதில்லை. மனம் விரும்பிய அளவு வாசிக்கலாம், வாசித்ததை என் கணவரோடு விவாதிக்கவும் செய்யலாம். என் கணவன் என் அருமைத் தோழன். இப்போதும் அவ்வாறு தான். என் பெயரோடும் என் ஆன்மாவோடும் எப்போதும் துணையிருப்பவன்.

ஜெயமோகன் என் ஆசிரியர். இலக்கியம் என்னும் இவ்வியக்கத்தில் மிக மிக முக்கியமானவர். இணைய வழி அவரின் எழுத்தே பல விதங்களில் என்னை சிந்திக்கச் செய்கிறது. வழி நடத்துகிறது. ”இம்ம்’ என்றமைந்திருக்கும் ஆழ்கடல்’ என்னும் இத்தொகுப்பை ஜெயமோகனுக்கே நான் சமர்ப்பணம் செய்கிறேன்.

என் மிக முக்கிய நண்பர் திரு. பிரபு மயிலாடுதுறை அவர்கள். என்னை எனக்கே அடையாளம் காட்டியவர். என் கவிதைகள் தமிழ் சூழலில் ஒரு தனிக் குரல் என்ற முதல் நம்பிக்கையை என் மேல் வைத்தவர். பலனுக்காக இன்றி இலட்சியத்திற்காகவே வாழ்பவர். இலக்கியத்தையே சதா உபாசிப்பவர். அவருக்கும் இத் தொகுதியை சமர்ப்பணம் செய்கிறேன்.

பெரும்பாலான கவிதைகளை எழுதியவுடன் வாசித்துக் காண்பிப்பது எனக்கு உண்மையிலேயே தாயாக இருக்கும் என் மகள்களிடம் தான். தேஜஸ்ரீக்கும் அம்ருதாவுக்கும் என் தீராத அன்பும், ஆசிகளும்.

நான் M.C.A, B.Ed படித்து குவைத், அபுதாபி ஆகிய நாடுகளில் கணிப்பொறியியலும், கணிதமும் கற்பித்த ஆசிரியை. சம்ஸ்கிருதம் கற்பதும் இணைய வழியில் அதை கற்பிப்பதும் எனக்குப் பிடித்தமானவை. என் இணைய தளத்தில் சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு சில மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறேன்.

இப்புத்தகத்தை பதிப்பிக்கும் ‘யாவரும்’ பதிப்பகம் ஜீவகரிகாலனுக்கும், எங்கள் நண்பர் Dr.சுனில் கிருஷ்ணனுக்கும் என் நன்றிகள். புத்தகத்தில் உள்ள ஓவியங்களை வரைந்தளித்த நண்பர். ரமேஷ் சுப்ரமணியன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கல்பனா ஜெயகாந்த்,
அபுதாபி,
ஜூன் 1, 2021
mashanadira@gmail.com
www.kalpanajayakanth.com