‘சம்ஸ்க்ருதம்’ என்பது, பழங்காலம் முதலே, பாரத தேசத்தில், வழங்கி வரும் ஒரு மொழி. இது சமயம் மற்றும் சமயம் சாராத அனைத்து பயன்பாடுகளுக்கும் உபயோகப்படுத்தப்பட்டது என்ற சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டுள்ளது. பொ.யு.மு 7வது நூற்றாண்டில், பாணினி ‘அஷ்டாத்யாயி’ என்னும் நூலில், இதற்கான இலக்கண விதிகளைக் கறாராக வரையறுத்தார். அதன் பின், இம்மொழிக்கு ‘சம்ஸ்க்ருதம்’-‘நன்றாகச் செய்யப்பட்ட மொழி’ என்னும் இப்பெயர் ஏற்பட்டது. அதற்கு முன் , இதை ‘தைவீ வாக்‘ (தெய்வ மொழி) என்று அழைத்துக் கொண்டிருந்தனர்.
‘அ’ முதல் ‘ஹ’ வரையிலான அக்ஷரங்களை அடிப்படையாகக் கொண்டது இம்மொழி. மகேஸ்வரனின் உடுக்கையில் இருந்து தோன்றியவை இவை என்கிறது மாகேஸ்வர சூத்ரம்.
14 மாகேஸ்வர சூத்திரங்கள்:
அ இ உண்
ருலுக்
ஏ ஓங்
ஐ ஔச்
ஹயவரட்
லண்
ஞம ஙணநம்
ஜபஞ்
கடத ஷ்
ஜபகடதஸ்
க ப ச ட த சடதவ்
கபய்
சஷஸர்
ஹல்
–“இதி மாஹேஸ்வராணி சூத்ராணி”.
ஆயினும், இவற்றை எழுதுவதற்கான எழுத்து வடிவம், பொ.யு.மு 2 வது நூற்றாண்டு வரை இருக்கவில்லை என்கின்றனர். வாய்மொழியாக கடத்தப் பட்ட மொழியாகவே இது இருந்துள்ளது. எந்தெந்த அக்ஷரம், தொண்டை, நாக்கு, மேல் அண்ணம், உதடு, மூக்கு போன்ற எந்தெந்த இடங்களிலிருந்து சொல்லப்பட வேண்டும் என்று விதிகள் உள்ளன.

‘அல்ப பிராணா’, ‘மஹா பிராணா’, ‘அனுஸ்வரம்’, ‘விஸ்ர்க்கம்’, ‘உபத்மானீயம்’, ‘ஜிஹ்வா மூலீயம்’ என்று உச்சரிப்புக்கான சொற்கள் அதிகம் உள்ள மொழி சம்ஸ்க்ருதம்.
வேதங்களிலும், உதாத்த(சமமான குரலில் சொல்வது), அனுதாத்த(குறைத்துச் சொல்வது), ஸ்வரித(அசைத்துச் சொல்வது) என்று உச்சரிப்புகளுக்கான குறிப்புகள் உள்ளன. மாற்றிச் சொன்னால் அர்த்தம் மாறி விடுகிறது. ஆறு வேதாங்கங்களில் ஒன்றான ‘ஷிக்ஷா’, இந்த உச்சரிப்பு முறை(phonetics) பற்றி விரிவாகச் சொல்கிறது. வர்ணம்(அக்ஷரங்களின் உச்சரிப்பு), ஸ்வரம்(ஏற்ற இறக்கங்கள்), மாத்திரை(கால அளவு), பலம்(உச்சரிப்பு வலிமை), சாமம்(தொடர்ச்சி), சந்தானம்(புணர்ச்சி) என்று ஆறு விஷயங்களில் கவனம் செலுத்தியே வேதங்களை உச்சரிக்க வேண்டும். எவ்வாறு சொல்லக் கூடாது என்பதற்கும் விரிவான விதிகள் உள்ளன. பாட்டு போலப் பாடக் கூடாது, வேகமாகச் சொல்லக் கூடாது, தலையை ஆட்டிய படி சொல்லக் கூடாது, அர்த்தம் தெரியாமல் படிக்கக் கூடாது, மென்குரலில் சொல்லக் கூடாது என்பன சில விதிகள். வாய்மொழியாகவே வேதங்களையும், பெரும் இலக்கிய பொக்கிஷங்களையும் காலங்காலமாக துளியும் மாற்றமில்லாமல் கடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கொண்ட மொழி சம்ஸ்க்ருதம்.
பொ.யு.மு. 2வது நூற்றாண்டில் இருந்து இதை ‘ப்ராஹ்மி’ எழுத்துக்களில் எழுதத் துவங்கினர். பொ.யு.பி 1 முதல் 4வது நூற்றாண்டு வரை ‘நாகரியிலும்’, பொ.யு.பி 7வது நூற்றாண்டில் இருந்து, இப்போதைய வடிவமான ‘தேவ நாகரியிலும்’ எழுதத் தொடங்கியுள்ளனர். எழுதுவது என்ற செயலுக்கான, ஸம்ஸ்க்ருதச் சொல்லான ‘லிக்’ தாது(மூலச் சொல்), இலக்கண நூல்களிலும், இதிஹாஸங்களிலும் காணப்படுகிறது. அக்ஷரங்களை அதனதன் இடத்தில் வைப்பது(அஷர விந்யாஸம்-தாந்த்ரீகத்தில் ஒரு முறை), இலையில் அல்லது ஓலைச்சுவடியில் கீறுவது ஆகிய பொருட்களைக் கொண்டது இச்சொல். வரைவது, கிறுக்குவது, கல்லில் பொறிப்பது என்ற செயல்களுக்கும் இச்சொல்லை பயன்படுத்தலாம். இவையெல்லாம் சேர்ந்து, ‘எழுதுவது என்ற செயலை அறிந்திருந்தனர்’ என்றும், அசோகரின் கல்வெட்டுக்களை(300 B.C), சாட்சியாகக் கொண்டு பொ.யு.மு 2வது நூற்றாண்டு முதல் எழுதத் தொடங்கினர் என்றும் முடிவுக்கு வரலாம். பொ.யு.பி 11-வது நூற்றாண்டிலிருந்து தான் காகிதத்தில் இதை எழுதத் தொடங்கினர்.

வேத காலமும் செவ்வியல் காலமும்:
வேத காலத்தில் இருந்த சம்ஸ்க்ருதம் இயற்கையானதாக இருந்தது. இலக்கணத்தினால் அதிகமாக கட்டுப்படுத்தப்படவில்லை. சம்ஸ்க்ருதத்தில், ஆத்மனேபதம், பரஸ்மைபதம் என்று வினைச்சொற்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ‘ஆத்மனேபதம்’ என்றால் ஒரு வினையின் பயன், வினையைச் செய்பவனுக்குக் கிடைக்கும்.(பசதே-தனக்குத் தானே சமைத்துக் கொள்கிறான்). ‘பரஸ்மைபதம்’ என்றால் அவ்வினையின் பயன் மற்றவர்களுக்குக் கிடைக்கும்(பசதி-மற்றவர்க்குச் சமைக்கிறான்). மிகச் சில வினைச் சொற்களையே இரண்டு முறைகளிலும் சொல்ல முடியும் என்று விரிவான விதிகள் உள்ளன. வேத காலங்களில் இது போன்று கறாரான பிரிவுகளும் விதிகளும் இல்லை. வேதங்களில் ஆத்மனேபதத்தையும் பரஸ்மைபதத்தையும் மாற்றி மாற்றித் தோன்றியபடி உபயோகித்திருக்கின்றனர். இக்காலகட்டத்தில் இலக்கணம் கறாராக இல்லாமல் இலகுவாக இருந்திருக்கிறது.
வேத காலகட்டத்தில், சமயம் சார்ந்த சடங்குகளுக்கு மட்டுமல்லாமல், உரையாடலுக்கும் சம்ஸ்க்ருதத்தை உபயோகித்திருக்கின்றனர். ‘ரிஷிகள், சடங்குகளின் போது சரியாக உபயோகித்தாலும், உரையாடலின் போது பல இலக்கணப் பிழைகளைச் செய்தனர்’ என்ற குறிப்பு பாணினியின் அஷ்டாத்யாயியில் காணப் படுகிறது. பாணினிக்கு முன்பு இலக்கணம் செய்த ‘யாஸ்கர்’ போன்றவர்கள், இப்பிழைகளைக் களைய முயன்றிருக்கின்றனர். அஷ்டாத்யாயியில், ஒரு வியாகரண பண்டிதருக்கும், தேரோட்டும் சூதனுக்கும் நடந்த உரையாடலும், ‘சூத’ என்ற சொல்லைப் பற்றி, சூதனுக்கு பண்டிதரைக் காட்டிலும் அதிகமாகத் தெரிந்த நுட்பங்களைப் பற்றியும் சொல்கிறார் பாணினி. அஷ்டாத்யாயியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரே சொல் பல்வேறு விதமாக உபயோகப்படுத்தப்பட்டதைப் பற்றிய குறிப்பும் உள்ளது. இவற்றிலிருந்து வேத காலகட்டத்தில் பேச்சுமொழியாகவும், வட்டார வழக்காகவும், சம்ஸ்க்ருதம் அல்லது தைவீ வாக் இருந்ததை அறிந்து கொள்ளலாம்.
பொ.யு.மு 7வது நூற்றாண்டில் பாணினியின் அஷ்டாத்யாயி எழுதப் படுகிறது. பொ.யு.மு 5வது நூற்றாண்டில், வரருசி என்கிற காத்யாயனர் ‘அஷ்டாத்யாயிக்கு’ ‘வார்த்திகம்‘ எழுதுகிறார். பொ.யு.மு 2 வது நூற்றாண்டில், பதஞ்சலி ‘அஷ்டாத்யாயிக்கு’ ‘மஹாபாஷ்யம்‘ எழுதுகிறார். இவையெல்லாம் தான் ‘சம்யக் க்ருதம் இதி-சம்ஸ்க்ருதம்’ என்ற மொழியை, இலக்கண கட்டமைப்பு கொண்ட உறுதியான மொழியாக உருவாக்கின எனச் சொல்லலாம். பாணினி சடங்குகளுக்கு உபயோகப்பட்டதை ‘வேத மொழி’ என்றும், சமயம் சாரா அனைத்திற்கும் (பேச்சுவழக்கு உட்பட) உபயோகப்பட்டதை ‘பாஷா’ என்றும் குறிப்பிடுகிறார். தன் இலக்கண விதிகளை இரண்டிற்கும் தகுந்தவாறு வடிவமைத்துள்ளார். இவ்வாறாக சம்ஸ்க்ருதம் உருவானதும் பிறந்ததே, செவ்வியல் காலகட்டம், கிட்டத்தட்ட பொ.யு.மு 7வது நூற்றாண்டில் தொடங்கி, எனலாம். அதற்கு முன் இருந்தது வேத காலகட்டம்.
செவ்வியல் காலகட்டத்தில் , சம்ஸ்க்ருதம் மிக வேகமாக வளர்ந்தது. கவிதை, கலை, இயங்கியல்(dialectics) என்று அனைத்தும் இதில் எழுதப்பட்டன. உலகில் சம்ஸ்க்ருதம் தொடாத கருத்தே இல்லை என்னும் அளவுக்கு இது இருந்தது. மன்னர்களின் அவையில் சம்ஸ்க்ருதமே அதிகார மொழி ஆனது. ஆவணங்கள், கல்வெட்டுகள், ஆணைகள் ஆகிய அனைத்தும் பொ.யு.மு 2வது நூற்றாண்டில் தொடங்கி, 19வது நூற்றாண்டு வரைகூட சம்ஸ்க்ருதத்தில் அமைந்திருந்தன. ஆயினும், உரையாடலுக்கு என உருவான ‘பாஷா’ எனும் பகுதி, பாணினியின் கடுமையான இலக்கண விதிகளால் வீழ்ச்சியை சந்தித்தது. பேச்சு வழக்கு, வட்டார வழக்கு ஆகியவை முற்றிலும் மறைந்தன.
ப்ராக்ருதமும் சம்ஸ்க்ருதமும்:
செவ்வியல் காலகட்டத்தில், ‘பாஷா’ என்ற கடுமையான இலக்கணம் கொண்ட மொழிக்கு பதிலாக ‘ப்ராக்ருதம்’ என்னும் இலகுவான மொழி பரவத் தொடங்கியது. ‘ப்ரக்ருதௌ பவௌ’-ப்ராக்ருதம்-மக்களிடம் இருப்பது, என்பது இதன் பொருள். சம்ஸ்க்ருத்தை நன்றாக அறிந்தவர், ஆயினும் அத்தனை விதிகளுக்கும் கட்டுப்பட்டு, பிழையின்றி பேச முடியாதவர்கள் ப்ராக்ருதத்தில் பேச ஆரம்பித்தனர். சம்ஸ்க்ருத நாடகங்களில், தலைவன், கல்வியறிவு பெற்ற உயர்குடியினர் ஆகியோர், சம்ஸ்க்ருதத்திலும், பெண்கள், வேலைக்காரர்கள் ஆகியோர் ப்ராக்ருதத்திலும் பேச வேண்டும் எனும் விதி, இத்தகைய சூழ்நிலையினால் தொடங்கியிருக்கலாம்.
‘பாஷா’ என்ற சம்ஸ்க்ருதத்தின் பேச்சுவழக்கு பகுதி தான் ப்ராக்ருதத்துக்கு முன்னோடி. ஆனால் பாஷாவுக்கும் பிராக்ருதத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ரு,ரூ,ல்ரு,ல்ரூ, ஐ, ஔ ஆகிய சம்ஸ்க்ருத உயிரெழுத்துக்களே பிராக்ருதத்தில் கிடையாது. மெய்யெழுத்துக்களும் மாறும். உதா: ப்ராப்னோதி என்ற சம்ஸ்க்ருத சொல், பப்போதி என்று ப்ராக்ருதத்தில் மாறும்; ப்ரதிகூல-பட்டிகூல; வ்ருக்ஷ:-வச்சே; ப்ராக்ருதத்தில் ஆத்மனேபத வினைச்சொல்லே கிடையாது.
பௌத்தர்களும், ஜைனர்களும் ப்ராக்ருதத்தை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தனர். இலக்கியமும், அதிகாரபூர்வமான ஆவணங்களும் சம்ஸ்க்ருதத்திலும், பேச்சுமொழி ப்ராக்ருதத்திலும் என்னும் நிலை உருகொள்ள ஆரம்பித்தது. கொச்சையான ப்ராக்ருதத்தின் பயன்பாட்டைக் குறைக்க பல அறிஞர்கள் முயன்றனர். பௌத்த தத்துவ அறிஞர் அஷ்வகோஷர் சம்ஸ்க்ருதத்தில் தன் நூலை எழுதினார். ஜைன அறிஞர் ஸித்தர்ஷி , ப்ராக்ருதத்தைக் காட்டிலும் சம்ஸ்க்ருதமே எளிதானது என்று தன் படைப்புகளில் சொல்லிப் பார்த்தார். ‘ஹிதோபதேஷம், பஞ்சதந்த்ரம், ப்ரயோகம்’ என்று எளிமையான சம்ஸ்க்ருதத்தில் புத்தகங்கள் எழுதி, இந்நிலையை மாற்ற முயன்றனர். ஆயினும், ப்ராக்ருதமே மக்களிடையே பரவலானது. சம்ஸ்க்ருத கவிஞர்களோ அனைத்து இலக்கண விதிகளையும் உபயோகப்படுத்தி, வார்த்தை விளையாட்டுகளில் திளைத்து, சம்ஸ்க்ருதத்தை மேலும் மேலும் செயற்கையானதாக மாற்றிக் கொண்டிருந்தனர்.
ப்ராக்ருதம் என்றால் இயற்கையானது என்றொரு பொருளும் உண்டு. நூற்றாண்டுகள் கடந்த போது, ‘பாஷா’ ப்ராக்ருதமாக உருமாறியது; பின், பிராக்ருதத்திற்கும் இலக்கணம் வந்தது. வரருசியின் ‘ப்ராக்ருத ப்ரகாஷா’ முக்கியமான ப்ராக்ருத இலக்கண நூல். ஹேமசந்திரர், புருஷோத்தமர் ஆகியோரும் இதற்கு இலக்கணம் செய்துள்ளனர். பிராக்ருதத்திலேயே வழங்கி வந்த பல விதமான வழக்குகளில், மேன்மையான, அல்லது மெருகு வாய்ந்த மஹாராஷ்ட்ரி, பாலி, ஆர்ஷ-பிராக்ருதம் போன்றவைகளில் மெல்ல இலக்கியங்களும் வரத் தொடங்கின. மௌரியர்கள் ஆட்சிக் காலத்தில், சிறிது காலம், இவை ஆட்சி மொழிகளாகவும் இருந்தன.
பிராக்ருதமும் வட்டாரவழக்குகளும்:
பொ.யு.மு 6வது நூற்றாண்டில், புத்தரும், மஹாவீரரும் தங்கள் கோட்பாடுகளை பிராக்ருதத்திலேயே உபதேசித்தனர். மௌரியர்களின் ஆட்சிக் காலத்தில் அது அதிகார மொழியானது. ஆனால், தத்துவ விவாதங்களுக்காக பௌத்தரும் ஜைனரும் சம்ஸ்க்ருதம் பயின்றனர். அதனால், அதற்குப் பின்னர், சம்ஸ்க்ருதமே பௌத்த, ஜைனர்களுக்கும் அதிகார மொழியாக மாறியது.
ஆயினும், பிராக்ருதமே பேச்சு வழக்காக நீடித்தது. பிராக்ருதத்திற்கு நிறைய வட்டார வழக்குகள் இருந்தன.
- ‘மாகதி’– கௌதம புத்தர் இதில் தான் தன் கோட்பாடுகளை உபதேசித்தார். பீஹாரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இது பேசப்பட்டது. ‘மஹாராஷ்ட்ரி’, ‘பெங்காலி’ ஆகியவை இதிலிருந்து தோன்றியன.
- ‘அர்த்த மாகதி’-மஹாவீரர் உபயோகப்படுத்தியது. வாரணாசி பகுதிகளில் பேசினர்.
- ‘சௌரசேனி’– யமுனை ஆற்றங்கரையில் உள்ள மதுராவில் பேசப்பட்டது. பஞ்சாபி, ஹிந்தி, குஜராத்தி ஆகியவை இதிலிருந்து தோன்றின.
- பொ.யு.பி 4வது நூற்றாண்டில், ‘அபப்ரம்ஷ’ என்ற ஒரு மொழி பிராக்ருதத்திலிருந்து தோன்றியது. அதுவே பிரக்ருதத்திற்கும், சமகால வடமொழிகளுக்கும் பாலமாய் அமைந்தது எனலாம். ‘அபப்ரம்ஷ’ என்றால், ‘களங்கப்பட்ட’ அல்லது ‘இலக்கணத்தில் அடங்காத’ என்று பொருள். பிஹாரி, ஒடியா ஆகிய மொழிகள் ‘அபப்ரம்ஷ’ விலிருந்து தோன்றியுள்ளன.
- தண்டினின் ‘காவ்யதர்ஷா’ என்ற அலங்கார நூல், ‘பைஷாசி’ என்றொரு மொழியிருந்ததைச் சொல்கிறது. விந்திய மலைக் காடுகளில் இருந்த மலைவாழ் மக்கள் இம்மொழியைப் பேசியதாக அறிகிறோம். தண்டின் இதை ‘பூத மொழி’ என்கிறார். பூதங்கள் பேசும் மொழி அல்லது முன்பு பேசப்பட்ட மொழி(பூத என்றால் இறந்த காலம்) என்று இரண்டு விதமாகவும் பொருள் கொள்ளலாம். பிராக்ருதத்திலிருந்தே கூட இது மிகவும் விலகியிருந்தது என்கின்றனர். சம்ஸ்க்ருதத்தின் மீதும், பிராக்ருதத்தின் மீதும் கடும் வெறுப்பு கொண்டிருந்த குணாட்யர், இம்மொழியில் ‘ப்ருஹத்கதா’ என்னும் படைப்பைப் படைத்துள்ளார். ஆனால் அதுவும் அழிந்து விட்டது. ‘ப்ருஹத்கதாமஞ்சரி’, ‘கதாசரித்சாகரா’ ஆகியவை இதை ஒட்டி எழுதப்பட்ட சம்ஸ்க்ருத க்ரந்தங்கள். பாணபட்டர், தண்டின், சுபந்து, த்ரிவிக்ரம பட்டர் ஆகியோர், ப்ருஹத்கதையைப் பற்றி தத்தம் படைப்புகளில் பேசுகின்றனர்.
காலவரிசை:
சம்ஸ்க்ருத, பிராக்ருத மொழிகளின் வரலாற்றைப் புரிந்து கொள்ள, சில புறவயமான காலவரிசைப் புள்ளிகளை அறிந்து கொள்வது உபயோககரமானதாக இருக்கலாம்.
- 485 B.C யில் நிகழ்ந்த புத்தரின் மறைவு.
- 326 B.C யில் நிகழ்ந்த அலெக்ஸாண்டரின் படையெடுப்பு. சந்திரகுப்தரின் அவையைப் பற்றி கிரேக்கத் தூதரான மெகஸ்தனீஸின் குறிப்புகள்.
- 269 B.C தொடங்கி 232 B.C. வரை ஆட்சி செய்த அசோகர் கால கல்வெட்டுகள்.
- 399-414 A.D. யில் நிகழ்ந்த ஃபாஹியானின் வரவு மற்றும் குறிப்புகள்.
- 629-645 A.D யில் நிகழ்ந்த ஹுவான் ஸுவாங்கின் வரவு மற்றும் குறிப்புகள்.
- 672-675 A.D யில் நிகழ்ந்த ஐ-ட்ஸிங்கின் வரவு மற்றும் குறிப்புகள்.
- 1030 A.D யில் நிகழ்ந்த அல்-பெரூனியின் வரவு மற்றும் குறிப்புகள்.
இவற்றைத் தவிர, பல்வேறு காலகட்டங்களில் கிடைத்த, நாணயங்கள், தூண்களில் உள்ள எழுத்துக்கள், செப்புப் பட்டயங்கள், அவற்றிலுள்ள வாசகங்களின் யாப்பு முறை ஆகியவற்றைக் கொண்டு சம்ஸ்க்ருத இலக்கியத்தின் காலவரிசையை ஓரளவு நிர்ணயிக்க முடிகிறது. சம்ஸ்க்ருத அலங்காரங்களைப் பற்றிய நூல்களும் இதில் பெருமளவு உதவி செய்கின்றன.
16-ஆம் நூற்றாண்டு தொடங்கி, இந்தியாவிற்கு வந்த மேற்கத்திய பயணிகள் மற்றும் மத பிராசரகர்களின் குறிப்புகள் மூலமும் சம்ஸ்க்ருத இலக்கியத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
வேதங்களை குறிப்பாக ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மாக்ஸ்-முல்லர், காளிதாசனின் ‘சாகுந்தலத்தை’ மொழி பெயர்த்த சர். வில்லியம் ஜோன்ஸ், மனுஸ்ம்ருதி மற்றும் பகவத்கீதையை மொழிபெயர்த்த சார்ல்ஸ் வில்கின்ஸ் என்ற பல அறிஞர்களின் படைப்புகளும், சம்ஸ்க்ருத இலக்கியத்தை வரிசைப்படுத்தும் திறவுகோல்களாக அமைகின்றன.
சம்ஸ்க்ருத இலக்கியங்களில் பொதுவாக,
- அதை எழுதியவர்களைப் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன.
- வால்மீகி, காளிதாசன், தண்டின் ஆகிய பெயர்களெல்லாம், கவிஞர்களின் பட்டங்களே ஒழிய இயற்பெயர்கள் அல்ல. இப்பெயர்களிலேயே பலரும் எழுத முடியும் என்பதால், காலவரிசையை அறிந்து கொள்வது மிகவும் கடினமானதாக உள்ளது.
- சில கவிஞர்களின் பெயர்கள் நம்மிடம் வந்து சேர்ந்திருந்தாலும், அவர்களின் படைப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. உதா: பட்டார ஹரிஷ்சந்திரர், மெந்தர்
- சில படைப்புகள் நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன, எழுதியவர் பெயரில்லாமல். அவற்றை காளிதாஸர் போன்ற படைப்பாளிகளின் பெயர்களிலேயே தொகுத்து விட்டோம். உதா: புஷ்ப பாண விலாஸம், ச்ருங்கார லதிகா
- கிரேக்க மற்றும் அராபியர்கள் சில படைப்புகளை தம்மோடு எடுத்துச் சென்று விட்டனர்.
- பௌத்தர்கள் சில படைப்புகளை திபெத், சீனா ஆகிய இடங்களுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள மொழிகளில் மொழிபெயர்த்து விட்டனர்.
- ஆங்கிலேயரும், ஜெர்மானியர்களும் சில புத்தகங்களைத் தம்மோடு கொண்டு சென்று விட்டனர்.
ஆக, இவ்வாறாக, சம்ஸ்க்ருத இலக்கியத்தை மீள் கட்டமைப்பு செய்வது என்பது மிகக் கடினமான ஒரு பாதையாக அமைந்துள்ளது.
(மேலும்)
Source:
- A history of the Samskrita Literature-Dr. V. Varadachari.
- Grammar of the Prakrit language-D.C. Sirkar
- Miscellaneous Online and Offline resources.