என் இரண்டாவது கவிதைத் தொகுப்பு-தேன்பிசுக்கு-பிரசுரம்

என்னுடைய முதலாவது கவிதைத் தொகுப்பான ”இம்ம்’ என்றமைந்திருக்கும் ஆழ்கடல்’, 2021 டிசம்பரில் விஷ்ணுபுரம் விழாவில் வெளிவந்தது. அதற்கு முன்பான என் பயணத்தை விட அதற்கு பின்பான பயணமே எனக்கு மிகுந்த பதற்றத்தைத் தருவதாக அமைந்தது. பல இரவுகள் உறக்கமின்றி கழிந்தன. கவிதைத் தொகுப்பின் பிரசுரம் தான் காரணமா, தெரியவில்லை. நான் என்ன எதிர்பார்த்தேன், தெரியவில்லை. வாசகியாக இருந்த பொழுதைக் காட்டிலும், தொகுப்பு வெளி வந்ததும், என் மதிப்பு சிறிதளவு குறைந்து விட்டதாக ஒரு உள்ளுணர்வு. இத்தனைக்கும் எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், செல்வேந்திரன் மற்றும் சில நண்பர்களின் உற்சாகமூட்டும் எதிர்வினைகள் கிடைத்தன. தமிழ் இலக்கியத்தின் தலை சிறந்த எழுத்தாளரான ஜெயமோகன் இத்தொகுப்பிற்காக ஒரு அரங்கும் அமைத்துத் தந்தார். இருந்தும் குழப்பமும் பதற்றமுமே கொண்டிருந்தேன்.

முதல் தொகுப்புக்கு பின்னான கவிதைகளை என்ன செய்ய? தெரிந்தோ தெரியாமலோ என் மூலம் எழுந்து வந்த சொற்கள் இவை; நன்றாகத் தான் இருக்கின்றன; இவற்றை அனாதையாக விடலாமா என்ற குற்றவுணர்வு ஒரு புறம். விரும்பிச் சேற்றை வாரிப் பூசிக் கொள்ள வேண்டியதில்லை என்ற எச்சரிக்கை உணர்வு ஒரு புறம். இரண்டுக்கும் இடையில் அலைக்கழிந்து கொண்டிருந்தேன். ஜூன் 16, 2022-லேயே ‘தேன் பிசுக்கு’ என்ற இந்தத் தொகுப்பை கிண்டிலில் உருவாக்கியும் விட்டேன். ‘Publish’ என்ற கடைசி பொத்தானை அழுத்த மட்டும், யோசித்துக் கொண்டேயிருந்தேன்.

பின்னர் ஒரு கடிதம் வந்தது. அதிலிருந்த வரிகள் இவை.

இம்ம் என்றமைந்திருக்கும் கடல் என்ற உங்களது கவிதைத் தொகுப்பை வாசித்தேன். அரிதாகவே சில வரிகள் ஈர்த்தன . முதல் தொகுப்பு என்னும் வகையில் இது சந்தோசத்திற்கு உரிய ஒன்று .’பொயட்டிக் சென்ஸ் பொயட்ரி'(கவிதைகளைப் படிப்பதால் அதன் பாதிப்பில் எழுதப்படும் ஆரம்பக்கட்ட நிலை ) -கள்தான் அதிகம் இருந்தன . ஜெயமோகன் சொல்வதையும் நாஞ்சில் சொல்வதையும் அவ்வளவாக நம்பாதீர்கள் .அவர்களின் சொற்களில் உயர்வுநவிற்சிதான் தென்படுகிறது .

இதை வாசித்ததும் எனக்கு ஒரு தெளிவு பிறந்தது. தன் நோக்கத்துக்கு அப்படியே எதிர் திசையில் இக்கடிதம் என்னை உந்தியது. முதல் வேலையாக அந்தக் கடைசி பொத்தானை அழுத்துவது என முடிவு செய்தேன்.

இன்று காலை கண்டராதித்தனின் ‘திருச்சாழல்’ பற்றிய முக நூல் குறிப்பு ஒன்றைக் கண்டேன். அது தந்த நேர்மறை பலத்தில் இதோ இந்த பொத்தானை அழுத்தியும் விட்டேன்.

எனக்கு ஒரு ‘pet theory’ உண்டு. ‘ஸத்’, ‘சித்’, ‘ஆனந்தம்’, இவை பிரம்மத்தின் குணங்கள். ஒரு கலையின் ஏதோ ஒரு நுனி, இவற்றில் ஒன்றைத் தொடும்போது, அது மகத்தான கலையாகிறது. என் கவிதைகள் இவற்றின் விரல் நுனியை எங்கோ தொடுகின்றன என எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவற்றை இங்கே பிரசுரிக்கிறேன்.

https://www.amazon.in/dp/B0DHZFRZNN
கல்பனா ஜெயகாந்த்
ஶ்ரீரங்கம்
24.9.2024