
எழுத்தாளர்கள் பால் அடையாளங்களைக் கடந்த ஒரு தளத்தில் இருக்க வேண்டும் என நினைப்பவள் நான். அப்போது தான் எல்லாப் பாத்திரங்களின் மன அவசங்களையும் அவர்களால் மிகச் சரியாக எழுத முடியும் எனத் தோன்றுகிறது. ஆயினும் சில நுட்பமான இடங்களில், அவர்களின் பால் அடையாளம் சார்ந்த அனுபவங்கள் இயல்பாக வெளிப்படும்போது, எழுத்தின் கலையழகும் நம்பகத்தன்மையும் வலுவும் கூடிவிடுகின்றன. ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் உணர்வுகளை எழுதுவதைக் காட்டிலும் பெண் எழுத்தாளர்கள் அவற்றை எழுதும் போது, அவற்றின் அடர்த்தியும் நுட்பமும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கின்றன. முன்பு தொடப் படாத பல இடங்கள் அவர்களால் தொடப் படுகின்றன. இக்கதையிலும் அது நிகழ்ந்துள்ளது. சிறுமியிலிருந்து பெண்ணெனத் தன்னை உணரும் நுட்பமான ஒரு மாறுதலை உமா மகேஸ்வரி வெகு இயல்பாக, நேர்த்தியாக இதில் எழுதி விட்டார்; அப்பெண்ணின் கனவு அல்லது அவளின் ஆதாரமான ஒன்று உடைபடும் இடத்தையும், வாழ்க்கை முழுவதற்கும் அவளோடு தங்கப் போகும் ஒரு வடுவின் முதல் வலியையும் தான்.
‘மரப்பாச்சி’ சிறுகதையை இரு தவணைகளிலாக வாசித்தேன். அனுவின் அப்பா அவளுக்கு மரப்பாச்சியை கொடுத்ததிலிருந்து, அவள் அத்தை வீட்டிற்கு வண்டியேறுவது வரை என வாசித்து ஒரு முறை நிறுத்தினேன். பருவமடையப் போகும் சிறுமியின் மன ஓட்டங்களின் மிகச் சிறந்த வர்ணனை இது என எனக்குப் பட்டது. சமையல் பாத்திரங்களின் மாதிரிகள் அவளுக்கு களைப்பைத் தருகின்றன; ரயிலின் ஓசை சோகமாய் இருக்கிறது; கிளி மற்றும் குருவி பொம்மைகளின் ஒலிகள் விலக்கத்தை அளிக்கின்றன; மரப்பாச்சி அளிக்கிறது முடிவற்ற வாய்ப்புகள் உள்ள கனவுலகத்தை. இப்போது சொப்பு வைத்து விளையாடும் சிறுமி பெண்ணாகி விட்டாள். வயிற்றில் ஒன்றுடன், குழந்தைக்கு பாலூட்டும் அன்னையை ஏக்கத்தோடு பார்க்கும் முதல் குழந்தை, அன்னையெனும் பெண்ணிடமிருந்து தன்னை திரையிட்டு மறைத்துக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அதை உணரும் அன்னையின் ஆழ் மனம் அவளைத் தொட்டுத் தொட்டு தன் குழந்தையைத் தேடுகிறது. அவளின் மாற்றத்தை உணர்ந்து ஓயாத பதற்றத்தைக் கொள்கிறது.
பதின் பருவத்தில் சட்டென சிறுமிகள் கொள்ளும் தனிமையும் மௌனமும் விலக்கமும் மிக அருமையாக இந்தச் சிறுகதையில் பதிவாகியுள்ளன. முதன் முதலில் தாவணி அணியும் போது, இடுப்பைத் தழுவும் மென்காற்று தரும் குறுகுறுப்பைப் போன்ற ஒன்றை, இன்னதென்றறிய முடியாத ஒரு பதற்றத்தை, யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு கனவுலகை, நிலைகொள்ளாமையை ஆசிரியர் இயல்பாகச் சொல்லிச் செல்கிறார்.
மீண்டும் வாசிக்க ஆரம்பித்த போது, அனு காற்றின் உல்லாசத்தை அனுபவித்த படி மலைகளின் ‘நீல வீச்சைப்’ பார்த்துக் கொண்டு அத்தை வீட்டிற்கு சென்று சேர்ந்திருந்தாள். மாமாவின் தொடுதல் அளித்த ‘நச நசப்பை’யும் தான். ‘இதை எதிர்பார்க்கலையே’ என எண்ணிக் கொண்டேன். இரவில், கொல்லைப்புறத்துக் காற்றையும், பிச்சிப் பூவின் மணத்தையும், மருதாணிப் பூக்களின் சுகந்த போதையையும், நிலவின் மழலையொளியையும் அனுபவித்து விட்டு அவள் வீட்டிற்குள் திரும்ப நுழையும் போது நமக்கும் தான் இடி போல் தலையில் விழுகிறது மாமாவின் பேய்த்தனம். இந்த வல்லுறவில் கசங்கும், ‘அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத ஒன்றை’ அனாயாசமாக எழுதிச் செல்கின்றன ஆசிரியரின் சொற்கள்.
மார்பெங்கும் முடியடர்ந்து, வளைந்த மீசையுடன், அம்புலி மாமாவில் அரசிளங்குமரிகளை வளைத்து குதிரையில் ஏற்றும் கைகளுடனும் இருக்கும் அவள் ‘மரப்பாச்சி’ கலைந்து விடுகிறது. ‘இதுவா? இதுவா அது? இப்படியா ?’ என்று அவளை அரற்ற வைத்து விடுகிறது. அவளிடம் கசங்கியது எது, தொலைத்தது எதை என்றறியாமல் ஜுரம் கொள்கிறாள். நமக்கும் தான் கடுங்கோபம் ஏற்படுகிறது. யார் தந்தார் இந்த மாமனுக்கு அதிகாரம், அவள் மரப்பாச்சியை உடைப்பதற்கு என உளம் கொதிக்கிறது. பேருந்தில் செல்லும் போது பின்னால் இடித்த ஏதோ ஒன்றும், திரும்பிப் பார்த்தால் குமட்டல் தரும் அந்த இளிப்பும், மொட்டைத் தலையும் என பலப்பல காட்சிகள் அவரவர் கண் முன் விரிவதையும் தடுக்க முடிவதில்லை தான்.
அம்மாவிடம் சென்று சேரும் போது, கீழே விழுந்த பளிங்குப் பாத்திரம் விரிசல் விட்டு விட்டதா என்று தடவித் தடவி பார்ப்பது போல் அம்மா அவளைப் பார்த்து பதற்றம் கொள்கிறாள். நாமும் தான். இனி இந்தக் குழந்தைக்கு இயல்பான வாழ்வு அமைய வேண்டுமே; மனதின் காயமும் வலியும் குணமாக வேண்டுமே என்றும் எண்ணிக் கொள்கிறோம்.
‘உடலுக்கு ஏற்படும் ஏதோ ஒரு காயத்தைப் போல வல்லுறவை எடுத்துக் கொள்ள வேண்டும், அதற்கு இவ்வளவு பதற வேண்டியதில்லை’ என்ற பிரபலமான ஆண்மையத் தரப்பு ஒன்று உண்டு. அதற்கு சரியான பதில் இந்தச் சிறுகதை. அத்துமீறல் அல்லது வல்லுறவு உடைப்பது எதை, எந்தக் கனவை என்பது இக்கதையின் வாசகர்களுக்கு புலப்படும். அது பெண்ணுக்கு நடந்திருந்தாலும் ஆணுக்கு நடந்திருந்தாலும், எதுவாயினும்.
ஒரு பதின் பருவச் சிறுமியின் மென்னுணர்வுகளைச் சொல்லும் இக்கதை, அ.வெண்ணிலாவின் ‘இந்திரநீலம்’ என்னும் சிறுகதையை நினைவு படுத்துகிறது. பெண்ணின் காமத்தைச் சொல்லும், அதன் இயல்பைச் சொல்லும், அவள் உடலின் மாறுதல்களைச் சொல்லும், பெண் எழுத்தாளரே சொல்லும் முக்கியமான படைப்புகள் இவ்விரண்டும். வல்லுறவைப் பற்றி வரும் பகுதி, பெருந்தேவியின் ‘உடல், பால், பொருள்’ கட்டுரைத் தொகுப்பில் அமைந்திருக்கும் வல்லுறவு பற்றிய அவரின் பார்வையோடு இயைந்து இருக்கிறது. அந்தக் கட்டுரைத் தொகுப்பில் ஜெயகாந்தனின் ‘அக்னிபிரவேசம்’ சிறுகதையை மிக விரிவாக ஆராய்கிறார் பெருந்தேவி. சங்க காலத்தின் ‘மடலேறுதல்’ பற்றியும்.
உமா மகேஸ்வரியின் ‘மரப்பாச்சி’ என்னும் இச்சிறுகதை ஒரு அலாதியான, நுட்பமான தளத்தில் அமைந்துள்ளது. ஒரு சிறுமியின் உணர்வுலகின் குறுக்கு வெட்டுத் தோற்றமும், அவளின் கண்ணாடியில் ஏற்படும் விரிசலும் என அழகையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தும் கதையாக இது அமைந்திருக்கிறது. எப்போதைக்குமாய் ‘மரப்பாச்சியையும்’ அதன் கலைதலையும் இது மனதில் இருத்தி விட்டது. உமா மகேஸ்வரி நுட்பமான உணர்வுகளை அனாயாசமாகவும் முதிர்ச்சியுடனும் கவிதை மொழியிலும் எழுதும் ஆசிரியராக இதில் வெளிப்படுகிறார்.
(‘நீலி’ – நவம்பர் 2023 இதழில் வெளிவந்தது)