நாவலில் வரும் அரபிச் சொற்களெல்லாம் சர்வ சகஜமாக புழங்கும் அரேபிய தேசத்தில் வாழ்ந்து வருபவள் நான். இச்சொற்கள் இந்த நாவலோடு எனக்கு ஒரு நெருக்கத்தையும், இணக்கத்தையும், ஆழ்ந்த ஒரு உணர்வையும் உருவாக்குகின்றன, விடுமுறை முடிந்து இந்தியாவிலிருந்து விமானத்தில் ஏறி அமர்ந்ததும் கேட்கும், ‘பிஸ்மில்லாஹ் இர் ரஹ்மான் இர் ரஹீம்’-ஐப் போல.
தோப்பில் முஹம்மது மீரானின் ‘சாய்வு நாற்காலி’யை நானும் ஜெயகாந்தும் வாசித்திருக்கிறோம். அதிலுள்ள இஸ்லாமியச் சொல்லாடல்கள் எல்லாம் இப்போதும் எங்கள் வீட்டில் புழங்குபவை. ‘கையத் துஸியா கழுவினியா?’ என்று முதலில் கேட்காமல் எந்த வேளை உணவும் உள்ளே சென்றதில்லை எங்கள் வீட்டில். முன்பெல்லாம்(!) அதிகமாகத் தூங்கும் என்னை ‘ஆஸியா உம்மா’ என்று தான் விளிப்பார் ஜெயகாந்த். எதற்கெடுத்தாலும் ‘இன்ஷாஹ் அல்லாஹ்’ சொல்லாமல் இருக்க முடியாது எங்களால். இப்படியாக இஸ்லாமியச் சொல்லாடல்கள் புழங்கும் வீட்டின் பின்னணியோடு இந்நாவலை அணுகும் போது ஒரு connect தன்னளவிலேயே உருவாகி விட்டது. ‘ஜோதா அக்பர்’ பார்த்து குவாஜா மீது ஏற்பட்ட ஈடுபாடும் ஒரு காரணம்.
நாவலில் நுழைந்ததும் தான் இது முற்றிலும் வேறு ஒரு தளத்தில் இருப்பது தெரிய வந்தது. மூன்று இழைகள்- ஹுஸைனின் உயிர்த்தியாகக் கதை; படே குலாம் அலி கானை நோயிலிருந்து சிஷ்டி மீட்டதால் அவருக்கு உண்டாகும் நன்றியும், பக்தியும்; ஹைதருக்கும், சுஹராவுக்கும் இடையே முதல் பார்வையிலேயே உண்டாகும் காதல்- என தியாகம், பக்தி மற்றும் காதல் என்னும் உயர் விழுமியங்கள் சந்திக்கும் கதை.
நாவலின் ஆசிரியர் ஒரு படுகளத்தையும், ஒரு காதலையும் அருகருகில் வைத்தது தான் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. மொஹப்பத்தினால் ஒரு கிஸாவின் கீழ் இணையும் நபிகளின் இல்லத்தார், அந்த இல்லத்தாரின் மீது கொண்ட மொஹப்பத்தால் அவர்களுடன் இணைய கப்ரியலை அனுப்பும் இறைவன், ஹுஸைனின் மீது கொண்ட மொஹப்பத்தால் முஹர்ரம் பத்தாம் நாளில் கூடும் கூட்டம், சிஷ்டியின் மீதுள்ள மொஹப்பத்தால் அஜ்மீரில் கூடும் கூட்டம், மொஹப்பத் முகிழும் கணத்தின் செயல்முறை விளக்கம் போல ஹைதருக்கும் சுஹராவுக்கும் இடையே நடக்கும் மௌன ஆடல் என மொஹப்பத்தே இந்நாவலின் இணைப்பு சரம், இதன் சாரம். ஒரு இளங்காதலின் பின்னணியாக போர்க்களத்தை வைத்திருப்பதே இந்நாவலின் கலைவெற்றி என எனக்குத் தோன்றுகிறது.
ஹைதருக்கும் சுஹராவுக்கும் இடையே வெறும் பார்வைகளிலேயே நடக்கும் அந்த இனிய ஆடல் மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கிறது. கொஞ்சம் நாவலாசிரியரின் பெற்றோரான ஜெயமோகன் மற்றும் அருண்மொழியின் காதல் கதை போல, அல்லது ஜெயமோகனின் கதையுலகில் வரும் காதலைப் போல, இதன் சாயல் இருக்கிறது.
ஹுஸைனின் கதை தமிழில் சொல்லப்பட்டுள்ளது, இஸ்லாமிய இதழ்களில் அல்லாது பொதுவில், இஸ்லாமியர் அல்லாத ஒருவரால், அதன் அழகு மாறாமல், அதன் தீவிரம் குறையாமல், அதன் உள்ளடுக்குகளின் ஆழம் குறையாமல், பாலையின் மணம் மாறாமல்(கொடும் பாலையில், அரேபிய மண்ணில் அமர்ந்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்), அரேபிய சொற்களின் உச்சரிப்பும் பொருளும் மாறாமல். இதையும் மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன்.
என் மகள் குழந்தையாக இருந்த போது, அவள் உடல் உபாதைக்காக, தர்காவுக்கு சென்று துவா ஓதியது நினைவுக்கு வருகிறது. இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெகு இயல்பாக நடந்த இவையெல்லாம் இப்போது நடைபெறுகின்றனவா எனத் தெரியவில்லை. ஒரு இறுக்கமான காலகட்டத்தில் இருக்கிறோம். இக்காலகட்டத்தில் இந்த நாவல் வந்திருப்பதும் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.
முக நூலில், இந்நாவலில் வரும் இசை பற்றிய சிலச் சொற்கள் தவறானவை என சுட்டிக் காட்டப்பட்டன. இந்நாவலை படித்து முடித்த பின் அந்தத் தவறுகளெல்லாம் மிக மிகச் சிறியவை எனத் தோன்றுகிறது. நாவலை புரிந்து கொள்வதில் அவை எந்தத் தடையையும் உண்டாக்கவில்லை. முக நூலில் பார்த்த அந்தப் பதிவே இந்த நாவலை வாசிப்பதற்கான ஊக்கியாகவும் அமைந்தது ஒரு சுவாரஸ்யமே.
அஜிதனின் முதல் நாவலான ‘மைத்ரி’யைப் போலவே, ‘அல் கிஸாவும்’ அபாரமான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. அஜிதனின் சிறுகதையான ‘குழந்தையிறப்புப் பாடலையும்’ நினைத்துக் கொள்கிறேன். அவருக்கு ஷோபன்ஹாவர், மற்றும் வாக்னரின் மீதுள்ள பெரும் ஈடுபாட்டையும் நினைத்துக் கொள்கிறேன். மேலும் மேலும், மதம் தாண்டிய, எல்லைகள் தாண்டிய ஆன்மீகத்தை கலைப்படைப்புகளாகத் தருவார் எனத் தோன்றுகிறது.