தேவபாலபுரத்தில் பீஷ்மர் நோக்கி நிற்கும் பருவ மழையுடன் ஆரம்பமாகும் இந்நாவல், சத்யவதி, அம்பிகை, அம்பாலிகை வனம்புகுவதற்காக படகிலிருந்து இறங்கியதும், விதுரன் நோக்கி நிற்கும் பருவம் கடந்த மழையுடன் முடிகிறது. ஒரு மழைக்காலத்தில் தொடங்கி ஆறு வருடங்கள் கடந்த மற்றொரு மழைக்காலம் வரை. காந்தாரியின் அஸ்தினபுரி நகர் நுழைதல், குந்தியின் நகர் நுழைதல், கர்ணனின் பிறப்பு, அர்ஜுனனின் பிறப்பு என இந்நாவலின் பல முக்கியமான நிகழ்வுகள் மழையிலேயே நடைபெறுகின்றன.
நிறைய பாத்திரங்களுக்கான அடித்தளமும், அவர்களிடையே இருக்கும் உறவுச் சிக்கல்களுக்கான அடிப்படைகளும் இந்நாவலில் பேசப்படுகின்றன.
திருதராஷ்ட்ரன்,பாண்டு மற்றும் விதுரன்:
அஸ்தினபுரிக்குள் நுழையும் போது அம்பாலிகையை தன் மகளாக பாவித்தவள் தான் அம்பிகை. கண்ணில்லாத மகனை அடைந்ததும், தன் தங்கையின் மகன் முடி சூட்டப்படுவானோ என்று சந்தேகம் கொண்டு, தங்கையின் மீது குரோதம் கொள்ள ஆரம்பிக்கிறாள். சரி செய்ய முடியாத ஒரு துயரம் எடுத்துக் கொள்ளும் வடிவங்கள் தான் எத்தனை? அவளின் குரோதமும் சந்தேகமுமே திருதராஷ்ட்ரனாக வளர்ந்து நிற்கிறது. எப்போதாவது தனக்கு உணவு மறுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தான் அள்ளியள்ளி உண்பதாக அவனே சொல்கிறான். பெருந்தோளன் ஆகி நிற்கிறான். கண்ணற்றவன் என்பதால் ஒலியை இசையை தன் உலகமாக்கிக் கொள்கிறான் திருதராஷ்ட்ரன். இசையின் உலகில் மட்டுமே அவன் அமைதி கொள்கிறான். மற்ற சமயங்களில் எல்லாம் யாராவது தன்னை ஏமாற்றி விடுவார்களோ என்ற அச்சமும் அதனால் ஏற்படும் அவநம்பிகையும் கொள்கிறான்.
பாவைகளை வைத்து விளையாடும் சிறுமியாக, தன் தமக்கையை அன்னையாக பாவிக்கும் பெண்ணாக இருக்கும் அம்பாலிகை, அவளின் குரோதத்தைக் கண்டதும் அஞ்சி விலகுகிறாள். தமக்கையின் தீச்சொல் தன் மகனை பாதித்து விடுமோ என்று பயம் கொள்கிறாள். அவளின் பயமே வெளிரிப் போன பாண்டுவாக வளர்ந்து நிற்கிறது. வெயிலிலோ வெளியிலோ எங்கும் செல்ல முடியாதவன் என்பதால் சித்திரங்களால் ஆன ஓர் நிகருலகை தனக்கென சமைத்துக் கொள்கிறான் பாண்டு.
பெரிதாக கல்வியோ முறையான ஆயுதப் பயிற்சியோ, ஏதும் கிடைக்காமல் ஒருவர் புஷ்ப கோஷ்டத்திலும் மற்றவர் சித்ர கோஷ்டத்திலுமென வளர்கிறார்கள்.
தன் மகன் வியாசனைப் போன்றே உருவம் கொண்டவனான விதுரனை சத்யவதி வளர்க்கிறாள். விதுரன், அறிவிலும் ஞானத்திலும் வியாசனைப் போன்றே வளர்ந்து நிற்கிறான். கிட்டத்தட்ட அஸ்தினபுரியை ஆட்சியே செய்பவனாய் இருந்தாலும் சூதப்பெண்ணின் மகன் என்பதால், அமைச்சன் என்றே அழைக்கப்படுகிறான்.
இவர்கள் மூவருக்கும் பெண் தேடும் பொறுப்பு எப்போதும் போல் பீஷ்மரிடம் வருகிறது.
காந்தாரியும் குந்தியும்:
க்ஷத்திரியர்கள், செல்வந்தர்கள், ஆனால் கங்கைக்கரை க்ஷத்திரியர்கள் அல்ல என்னும் முகவரியோடு களத்தில் நுழைகிறது காந்தாரம். கங்கைக்கரையை ஆளவேண்டும் என்னும் பெரு விழைவு கொண்டவனாக இருக்கின்றான் சகுனி. தன் தங்கையை மகத அரசுனுக்குத் தர வேண்டும் என்பது தான் அவனின் திட்டமாக இருக்கிறது. ஆனால் மகத அரசன் அவனுக்கு குதிரை சவுக்கை அனுப்பி அவனைக் குதிரைச் சூதன் என அவமதித்து விடுகிறான். அந்த நேரத்தில் பீஷ்மரின் மணத்தூது அவர்களை அடைகிறது. கண்ணில்லாதவனுக்கு தான் தங்கையைத் தர வேண்டும் என்றாலும், அவன் கனவு நிறைவேறும் ஒரு வாய்ப்பு உருவாகிறது. அவன் கனவை ஆதரிக்க, வசுமதி என்னும் காந்தாரி, திருதராஷ்ட்ரனை மணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்கிறாள். பின்னர் திருதராஷ்ட்ரனின், குருட்டு முரட்டு வலிமையால் ஈர்க்கப் படுகிறாள். அவனின் மற்றொரு முகமான இசை ரசனையைப் பற்றி அறிந்ததும் அவன் உலகில் நுழைய அவளும் கண்களை கட்டிக் கொள்கிறாள். மகாபாரதத்தில் தான் ஒரு பதிவிரதையென்பதால் கண்களை கட்டிக் கொள்ளும் காந்தாரி, வெண்முரசில் அவன் மேல் கொள்ளும் காதலால் கட்டிக் கொள்கிறாள். மிகச் சிறந்த அழகியான காந்தாரியை ஏன் திருதராஷ்ட்ரனுக்கு மணம் செய்வித்தார்கள், மற்றும் அவள் ஏன் தன் கண்ணைக் கட்டிக் கொண்டாள் என்பதற்கு வெண்முரசு தரும் புதிய விளக்கங்கள் இவை.
யாதவர்கள், அங்கங்கே சில குடிகள் அரசுகள் ஆகி விட்டன, ஆயினும் இன்னும் க்ஷத்திரிய அந்தஸ்து கிடைக்க வில்லை என்னும் பின்னணியுடன் களம் புகுகிறார்கள் குந்தியும் வசுதேவனும். கன்றுமேய்த்து வாழும் எளிய ஆயர்களாக வாழ்வதில் ஒப்புதல் இல்லை அவர்கள் இருவருக்கும். வசுதேவன் மதுராவுடனும், குந்தி மாரர்த்திகாவதியுடனும் என இருப்பதிலேயே கொஞ்சம் பெரிய யாதவ அரசுகளுடன் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். அஸ்தினபுரியிலிருந்து மணத்தூது வந்திருக்கிறது என்றவுடன், விதுரனுக்குத் தான் கேட்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறாள் குந்தி. பாண்டுவுக்கு என்றறிந்ததும், தன் சந்ததியினருக்கு க்ஷத்திரிய அந்தஸ்து கிடைத்து விடுமென்பதால், அவன் பாண்டுரனாக இருந்தாலும் பரவாயில்லை என அவனை மணக்க ஒப்புக் கொள்கிறாள். எவருக்கும் எதிரியாகாமல் இருப்பதற்காக, மிகுந்த சமயோஜிதத்துடன் தன் சுயம்வரத்தை வடிவமைக்கிறாள் குந்தி. கம்ஸன் வெற்றி கொள்ளும் படி ஒரு போட்டி, சல்லியன் வெற்றி கொள்ளும் படி ஒன்று, பாண்டு வெற்றி கொள்ளும்படி ஒன்று என வடிவமைத்து மூவரைக் குறித்தும் தனக்கு மிக நன்றாகத் தெரியுமென்றுக் காட்டுகிறாள். சாமர்த்தியமாக விளையாடி பாண்டுவை கரம் பிடிக்கிறாள் குந்தி, அஸ்தினபுரியையும் தான். இதன் மூலம் தமையன் வசுதேவனை விட, அரசுசூழ்கையில் வல்லவளாக தன்னை நிலை நிறுத்தியும் கொள்கிறாள்.
காந்தாரி மற்றும் குந்தியின் மணியறைக் காட்சிகளும் மிகவும் முக்கியமானவை. யானையைப் போல பலசாலி, ஆயினும் மூர்க்கன் மற்றும் முரடன் என எண்ணிக் கொண்டிருக்கிறாள் காந்தாரி திருதராஷ்ட்ரனைப் பற்றி. மணியறையில் தான் அவனின் இசை ரசனைப் பற்றி அறிய வருகிறாள். இப்பொழுது அவனின் கண்ணற்ற தன்மையே அவளுக்கு மிகவும் பிடித்ததாக ஆகிறது. தானும் கண்ணற்றவளாகிறாள்.
கர்ணணை அப்போது தான் பெற்றெடுத்து நதியில் தொலைத்திருக்கிறாள் குந்தி. அவனுக்கு பால் அளிக்க முடியாத வேதனையை அனுபவித்திருக்கிறாள். மணியறையில் பாண்டு, பால் போல வெண்ணிற மீசை பூத்து நிற்கும் உதடுகளுடன் குழந்தையைப் போல நடுங்கிக் கொண்டிருக்கிறான். தொலைத்த மகவையே மீண்டும் பெற்றது போல ஆகி விடுகிறது குந்திக்கு. அந்தக் கணமே அவன் வாழ்வுக்கு அவள் பொறுப்பெடுத்துக் கொள்கிறாள். அவன் நிறைய குழந்தைகள் தனக்கு வேண்டும் என்று சொன்னதனாலேயே துர்வாசரின் மந்திரத்தை மீண்டும் மீண்டும் உபயோகிக்கிறாள். அவனுக்கு தான் அன்னையாகிவிட்டதால், களித்தோழியாக இருக்க மாத்ரியையும் ஒப்புக் கொள்கிறாள்.
விதுரனும் சல்லியனும்:
தனக்கான மணத்தூது என்றறிந்து தான் மார்த்திகாவதியினர், முதலில் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உய்த்தறிந்ததும், விதுரனுக்கு குந்தியின் மீதொரு ஈர்ப்பு உண்டாகிறது. நாவல் நெடுகிலும் அவனின் ஒரு தலைக் காதல்(?) காட்டப் படுகிறது. களமுற்றத்தில் குந்தி பல்லக்கில் வந்து இறங்கும் போதும், சத்யவதியிடம் குந்திக்காக பரிந்து பேசும் போதும், அவள் பாண்டுவுடன் நகர் நீங்கும் போதும், தன் மணியறையில் அவளை நினைத்துக் கொள்ளும்போதும், சகுனியிடம் சதசிருங்கத்திலிருந்து அவன் ஒற்றர்களை நீக்கும்படி சொல்லும்போதும் என அவனின் காதல் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
விதுரன் சார்வாக முனிவரை சந்திக்கிறான். அவர் அவனைத் தன் விழைவை பின்பற்றும்படி உபதேசம் செய்கிறார். சில பக்கங்களிலேயே குந்தியும் பாண்டுவும் துர்வாசரின் மந்திரத்தை உபயோகிக்க முடிவு செய்கிறார்கள். அனகையுடன் குந்தி தென்திசை நோக்கிச் செல்கிறாள். மறைவில் அனகைக்கு சில பேச்சுக் குரல்கள் கேட்கின்றன. மூன்று கௌதமர்களும் யம சூக்தம் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறாள் அனகை. அதனால் தர்மனுக்குக் உடற்தந்தை இவர்கள் மூவரும் அல்ல என்பது தெரிகிறது. விதுரனாக இருக்கலாமோ என்பது ஒரு மயக்கமாகவே இங்கு சொல்லப்படுகிறது. அல்லது மாண்டூக்யராகவும் இருக்கலாம். மஹாபாரதத்தில் கௌரவர்களின் பக்கமிருந்தாலும் விதுரனுக்கு பாண்டவர்களின் மீதிருக்கும் ஒட்டுதலுக்கான ஒரு புதிய விளக்கமாக இது அமைகிறது.
அதே போல், நகுல சகாதேவர்களுக்கு தாய்மாமன் ஆனாலும் பாரதப்போரில், சல்லியன் கௌரவர்களின் பக்கம் சேர்ந்து கொள்வதற்கும், குறிப்பாக கர்ணனின் ரதசாரதியாக அமர்வதற்கும் ஒரு விளக்கமாக, குந்தி சல்லியனின் மூலம் சூர்ய புத்திரனான கர்ணனை பெற்றுக் கொள்கிறாள் எனக் காட்டப்படுகிறது. ‘சல்லியன்’ என்ற பெயர் சொல்லப்படுவதில்லை. அவன் உடலை வர்ணிக்கும் போதும், சம்பந்தமில்லாது குந்தியின் மணத்தன்னேற்ப்பில் அவன் வந்து அமரும் போதும், மாத்ரி தன் தமையன் சல்லியனைப் பற்றி கூறும் போதும் என இந்த மயக்கம் உருவாகிறது.
கௌரவ பாண்டவர்களின் பிறப்பு:
மந்திரம் மூலம், தான் விரும்பிய தேவனின் புத்திரனைப் பெற்றுக் கொள்கிறாள் குந்தி என்ற மாயயதார்த்தத்தை லௌகீகமாக விளக்க அவள் யாதவப்பெண், ஒரு பசுவைப் போல தான் விரும்பியவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்னும் தளர்வு இருப்பதாக வெண்முரசு காட்டுகிறது. அதன் படி தர்மதேவதையின் அறப்புதல்வனாக, மாண்டூக்யரிடம் (அல்லது விதுரனிடம்) யுதிஷ்டிரன், வாயுவின் புத்ரனாக பலாஹாஸ்வ முனிவரிடம் பீமசேனன், இந்திரனின் புதல்வனாக சரத்வானிடம் அர்ஜுனன் ஆகியோரைப் பெற்றுக் கொள்கிறாள் குந்தி. மாத்ரி அஸ்வினி தேவர்களின் அம்ஸமாக, சரத்வானின் மாணவர்களான கனகனிடமும் காஞ்சனனிடமும் நகுல சகாதேவர்களைப் பெற்றுக் கொள்கிறாள். இவையனைத்துமே நேரடியாக இன்றி உய்த்தறியும்படி அமைக்கப்பட்டிருப்பது அழகூட்டுகிறது.
மஹாபாரதத்தில் காந்தாரிக்கு ஒரு தசைக் கோளம் பிறந்ததாக காட்டுவது போலன்றி, தன் பத்து தங்கைகளோடு காந்தாரி வருவது போலவும் அவர்கள் அனைவரும் சேர்ந்து நூறு பிள்ளைகளைப் பெறுவது போலும் காட்டியிருப்பதும் மேலும் அழகானதே.
நாகர்களும் இந்திரனின் புதல்வனும்:
கர்ணனின் பிறப்பின் போதும், துரியோதனின் பிறந்த நாள் விழாவிலும் நாகர்களின் வருகை, கௌரவர்களை நாகர்களின் பக்கத்தில் நிறுத்துகிறது. அவர்கள் குலத்தில் நெடு நாட்களாக சொல்லப்படும் ஒரு நிமித்தம் இருப்பதாகவும், அது நாகர்களின் குலத்தை முற்றழிக்க ஒருவன் பிறக்கப் போகிறான் எனவும், அவனைக் கொல்லும் ஆற்றல் இவ்விருவருக்கும் மட்டுமே இருப்பதாகவும், இவ்விருவரையும் பாதுகாக்கும் கடமை தமக்கு இருப்பதாகவும் சொல்கிறார்கள் நாகர்கள். பின்னால் வரப்போகும் காண்டவ வன எரிப்பு, பெரும்போர் ஆகியவற்றுக்கு, இவ்வாறாக அடித்தளம் அமைக்கிறது வெண்முரசு மழைப்பாடலில்.
சிவை மற்றும் தோழியர்:
மஹாபாரதத்தில் பெயரிடப்படாத விதுரனின் அன்னைக்கு வெண்முரசு பெயர் அளிக்கிறது. அவளை ‘சிவை’ என்று அழைக்கிறது. அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் குறையுள்ள குழந்தைகள் பிறந்ததையடுத்து தன் மகனுக்கு மணிமுடி வருமோ என கனவு காண்கிறாள் சிவை. பெயர் சூட்டும் விழாவிலேயே மண்டபத்தில் அல்லாது தூரமாக அவள் அமர்த்தப்படுகிறாள். அதிலேயே அவளுக்கு உண்மை தெரிந்து விடுகிறது. கனவும் கலைகிறது. சில நாட்களிலேயே குழந்தையும் அவளிடமிருந்து பாலருந்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் பிரிக்கப்படுகிறது. அவளுக்கு பிரமை தான் மிச்சமாகிறது. விதுரன் மணியறை புகும்போது அவளின் இழப்பு பூர்ணமாகிறது.
சத்யவதிக்கு சியாமை, அம்பிகைக்கு ஊர்ணை, அம்பாலிகைக்கு சாரிகை , குந்திக்கு அனகை என அரசியரின் அணுக்கச் சேடியருக்கெல்லாம் பெயரளிக்கப்படுகிறது வெண்முரசில். இத்தோழிகள் அரசியின் நிழல்களைப் போலிருக்கிறார்கள்; அவர்களின் அதே குணாதிசியங்கள் தான் இவர்களுக்கும்; சில சமயம் அவர்களின் இருண்ட பக்கங்களையும் இவர்கள் காட்டுகிறார்கள் நிழல்களைப் போலவே. பெரும்பாலான சமயங்களில், அரசி மறைக்க விரும்பும் உணர்வை தோழி வெளிப்படுத்துவாள்; சொல்ல விரும்பாததைச் சொல்வாள். அரசியரின் எல்லாப் பக்கங்களையும் சொல்ல இது ஒரு அருமையான கதை உத்தி.
புராண கதைகள்:
கதைத் தருணங்களுக்கு புராணங்களில் இருக்கும் முன்தொடர்ச்சியையோ, பின்தொடர்ச்சியையோ காட்டுவதற்கு, சூதர்களின் மொழியில் அல்லது, நிமித்தகர்களின் மொழியில் ஒவ்வொரு புராணக் கதை நாவல் நெடுகிலும் சொல்லப்படுகிறது. காந்தாரியின் முன் தொடர்ச்சியாக அனசூயையின் கதை சொல்லப்படுகிறது. குந்திக்கு, ஆறுமக்களை பிறவிதோறும் அடையும் சித்தியின் கதை சொல்லப்படுகிறது. பாண்டுவின் சாபத்தைச் சொல்ல கிந்தமரின் கதையைச் சொல்கிறார் ஒரு நிமித்தகர். வெண்முரசு முழுவதிலுமே இது போன்ற ஒரு கதையுத்தி உபயோகப்படுத்தப்படுகிறது.
பாண்டுவின் இறப்பு:
பாண்டுவின் இறப்புக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எதிர்வினையாற்றுகின்றனர். விதுரனால் நேரடியாக அம்பிகையிடம் இச்செய்தியைச் சொல்ல முடிவதில்லை. சத்யசேனை, தான் தெரிவிப்பதாகச் சொல்கிறாள். அவள் கொண்டாடி மகிழப் போகிறாள், என நினைக்கும் பொழுது, அம்பிகை ஓடி வந்து அம்பாலிகையை கட்டிக் கொள்கிறாள்.
திகைத்து எழுந்த அம்பாலிகையை பாய்ந்து அள்ளி தன் நெஞ்சோடு இறுகச்சேர்த்துக்கொண்டு உடைந்த குரலில் “நம் மைந்தன் இறந்துவிட்டான் இளையவளே. பாண்டு மறைந்துவிட்டான்…” என்று கூவினாள். “நான் இருக்கிறேன். இளையவளே, உன்னுடன் நான் இருக்கிறேன்…”
இங்கு தான் இந்த நாவல் உச்சம் கொள்கிறது. அம்பிகை மற்றும் அம்பாலிகையின் ஆணவ மோதலில் தொடங்கிய நாவல் அவர்கள் தம் அகங்காரத்தை கைவிடும்போது நிறைவு கொள்கிறது. நான்கு மாதங்கள் பிந்திய மழையும் பெய்யத் தொடங்குகிறது. தவளைகள் மழை வேதம் சொல்ல ஆரம்பிக்கின்றன.

ஆண்டுமுழுக்க தவம்செய்த தவளைகள்
நெறிமுழுமைசெய்த வைதிகர்களென
மழைத்தேவனுக்கு பிடித்தமான
குரலை எழுப்புகின்றனகாய்ந்த தோல் என வறண்ட ஏரியின்
சேற்றில் உறங்கிய தவளைகள் மேல்
விண்ணக ஒளி பொழிந்ததும்
கன்றுடன் மகிழும் பசுக்கூட்டம்போல
அவை மகிழ்ந்து கூவுகின்றனமழைக்காலம் தோன்றியதும்
தாகத்தால் தவித்து நீரைநாடும் தவளைகள்மேல்
மழையின் இறைவன்
அருளைப்பொழிகிறான்
மகிழ்ந்து எழுந்த ஒரு தவளை
தந்தையைக் கண்ட மைந்தன் போல
இன்னொரு தவளையைநோக்கித் தாவுகிறதுமழையைக் கொண்டாடும் இருதவளைகள்
ஒன்றையொன்று வாழ்த்துகின்றன
மழையில் ஆடிய ஒருதவளை
முன்னோக்கிப் பாய்கிறது
பச்சைநிறத்தவளை ஒன்றும்
புள்ளிகள் கொண்ட இன்னொன்றும்
தங்கள் பாடல்களை கோத்துக்கொள்கின்றனதவளைகளே!
உங்களில் ஒருவன் இதோ
குருவிடம் கற்கும் மாணவனைப்போல
இன்னொருவனின் குரலை பின்பற்றுகிறான்.
நீங்கள் நீரில் பாய்ந்து திளைத்து
அசைவுகளால் பேசிக்கொள்ளும்போது
உங்கள் உடல்கள் வீங்கிப்பெருக்கின்றன.பசுவைப்போல அழைக்கும் ஒன்று
ஆடுபோல் கத்தும் இன்னொன்று
புள்ளியுடையது ஒன்று
பச்சை நிறமான பிறிதொன்று
ஒரே பெயரால் அழைக்கப்படுபவை அவை
வெவ்வேறு தோற்றம்கொண்டவை
உரையாடிக்கொள்ளும் அவை
நாதத்தை பரிமாறிக்கொள்கின்றன.அதிராத்ர வேள்வியின்போது
நிறைந்த அவிப்பொருளைச் சூழ்ந்து அமர்ந்திருக்கும்
வைதிகர்களைப்போல
மழைதோன்றிய முதல்நாளில்
ஏரியைச்சூழ்ந்து அமர்ந்துகொண்டு
இரவெல்லாம் பாடுகிறீர்கள்!இந்தத் தவளை வைதிகர்கள்
சோமரசத்துடன் வேள்வியை நிறைவுசெய்து
தங்கள் கரங்களைத் தூக்குகிறார்கள்
தங்கள் ஆவியெழும் கலங்களிலிருந்து
இந்த வேள்வித்தவத்தவர்கள்
வியர்வை வழிய வெளிவருகிறார்கள்
எவரும் மறைந்திருக்கவில்லை!வேள்வித்தலைவர்களான இந்தத் தவளைகள்
தேவர்கள் விதித்த அறங்களைப் பேணுகிறார்கள்!
ஆண்டின் உரிய பருவத்தை
அவர்கள் தவறவிடுவதில்லை.
வருடம் சுழன்று மீள்கிறது.
மழை மீண்டும் வருகிறது.
வெம்மைகொண்டு பழுத்த அவர்கள்
மறைவிடங்களில் இருந்து வெளிவந்து
விடுதலையை கொண்டாடுகிறார்கள்பசுவைப்போல் அழைப்பவனும்
ஆடுபோல கத்துபவனும்
புள்ளியுள்ளவனும்
பச்சைநிறமானவனும்
எங்களுக்கு செல்வங்களை அளிப்பார்களாக!
எங்களுக்கு பசுக்கூட்டங்களையும்
வளங்களையும்
நீண்ட வாழ்நாளையும் அளிப்பார்களாக!
ஓம் ! ஓம்! ஓம்!