நெஞ்சொடு புலத்தல்-மயிலன் ஜி. சின்னப்பன்-வாசிப்பனுபவம்

‘நியமம்’ சிறுகதைக்குப் பிறகு, நான் வாசிக்கும் மயிலனின் சிறுகதையிது. மீண்டும் ஒரு முறை, ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறார். கதையில், இப்போதைய இளைஞர்களுடைய மொழி மற்றும் மன உலகம் நூறு சதவிகிதம் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது. பெண் தன்னை உணர்ந்து விட்டாள் எனத் தோற்ற மயக்கம் தரும் சமகாலத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உறவுச் சிக்கல் கையாளப்பட்டிருக்கிறது இக்கதையில். பிசிறின்றி, சிக்கலைக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். ஆயினும் மாட்டிக் கொண்டு முழிக்கும் அந்த ஆணிடம் சிறிய பரிவு இருக்கிறதோ ஆசிரியருக்கு என எண்ணத் தோன்றுகிறது.

24 வயதானவள் இக்கதையின் நாயகி. ஒரு மில்லினியல் கிட். தன் வயது காதலன் அஜயிடம், அவனுக்கு மற்றொரு பெண்ணின் மீதிருந்த ஈர்ப்பால் break up ஆகி, அதனால் மனச்சிதைவுக்கு ஆளாகி, பின் இக்கதையின் 35 வயது ஆண், ஒரு empath-இடம் காதல் வயப்படுகிறாள் அவள். அவன் ஏற்கனவே திருமணமானவன். மகனும் உண்டு. தான் ஒரு திருமணமானவருடன் உறவில் இருப்பதை நினைத்து, அவளுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. தான் ஒரு bitch என்று கழிவிரக்கமும் கொள்கிறாள். அந்த ஆணுக்கோ தன்னைப் பற்றி ஒரு தாழ்வுணர்ச்சியிருக்கிறது. தன்னால் தன் குறைகளை, கோபத்தை கையாள முடியாதென்பது தெரியும். அதனால் அலுவகத்திலும், அவள் முன்னிலையிலும், தன்னை ஒரு இலகுவான மனிதனாக, ஒரு ’empath’ – ஆக present செய்து கொள்கிறான். அவள் தோற்றத்தால் அவன் ஈர்க்கப்படவில்லை. அதைத் தெளிவாகவே வெளிப்படுத்துகிறான். அவளின் கெட்டிக்காரத்தனத்தினால் ஈர்க்கப்படுகிறான். அதைவிட இந்த கெட்டிக்காரப்பெண் தன்னிடம் காதல் கொண்டிருக்கிறாள் என்பதால் ஈர்க்கப்படுகிறான். கண்ணியம் மிகுந்தவன் என்ற தோற்றத்தை கெடுக்க விரும்பாததால் அவர்களின் நடுவே நடந்த முத்தங்களைக் கூட அவன் உடல் ரீதியான உறவாக முன்னெடுக்க விரும்புவதில்லை. அவளும் அதை விரும்புவாளா என்பதும் சந்தேகம் தான். இவன் சொல்லும் ‘லவ் யூ’ வைக் கூட அவள் எதிரொலிப்பதில்லை. அவள் சொல்லாததை கவனித்து, இவனும் சொல்வதை நிறுத்தினால், ‘சைல்டிஷ்’ என்று சொல்லி பிலு பிலுவென பிடித்துக் கொள்கிறாள்.

தன் மேலாளரோடோ மற்ற எவரோடோ இருக்கும் சிக்கல்களைப் பற்றி அவள் பேசினால், அவன் ஒத்து ஊத வேண்டுமென நினைக்கிறாள். ‘I don’t want a solution, I want only an empathetic ear’ இது சமகாலத்தில் நாம் அடிக்கடி கேட்கும் வரி. அவனுக்கும் அது தான் நடக்கிறது. இந்த உறவில் தனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை, தான் விலகிக் கொள்கிறேன் என்னும் போது கூட, அவள் தன் சுய மதிப்பை விட்டு விட்டு அவனிடம் கெஞ்சுகிறாள். அவன் இரக்கத்தால் உறவு நீடிக்கிறது.

திருவனந்தபுரத்தில் வேலை கிடைத்தவுடன், அங்கு சந்திக்கும் ஒரு தமிழ் பையனிடம் மெல்ல மெல்ல அவளுக்கு காதல் வளர்கிறது. காதலன் இருக்கும் பொழுதும், இந்த உறவும் அதே போல் நீடிக்க வேண்டும் என விரும்புகிறாள். ஒரு கட்டத்தில் இவன் அனுப்பும் காதல் முத்தங்கள், தன் புதுக் காதலனை ஏமாற்றுவது போல் தோன்றுகிறது என்கிறாள். இவன் விலகுகிறான். அவளும் தான். விலகிய பின் தான் இவனுக்குத் தெரிகிறது தான் முழுக்க உபயோகப்படுத்தப்பட்டது. தன் கனவான் பிம்பத்தை நொந்து கொள்கிறான்.

சமகால இளைஞர்களின் மனவோட்டங்களைப் பார்க்கும் போது, கொதித்துக் கொண்டிருக்கும் கொதிகலனைப் பார்ப்பது போலிருக்கிறது எம் வயதினருக்கு. இத்தனை complications அவசியம் தானா எனக் கேட்கத் தோன்றுகிறது.

இந்தியப் பெண் பொருளாதார ரீதியாக நிலைகொள்ள ஆரம்பித்து விட்டாள். ஆயினும் அவளுக்கு ஒரு விதமான பாதுகாப்புணர்வு தேவைப்படுகிறது. அவள் எதிர்பார்ப்பதை அளிக்க அவள் வயது ஆண்களுக்குத் தெரிவதில்லை. அத்தனை முதிர்ச்சியில்லை. அவளுடைய மொழியிலேயே சொல்ல வேண்டுமென்றால், ‘man child’ ஆக இருக்கிறார்கள். அதனால் கொஞ்சம் வயதில் பெரிய ஆணோடு உறவில் இருக்கிறாள். அதிலும் உடல் ரீதியாக இன்றி மனதளவில் மட்டும். Millenial கிட் தன்னை விரும்புகிறாள் எனத் தெரிந்தவுடன் அவளுக்கு பிடித்த வேடத்தை புனைந்து கொள்கிறான் அந்த ஆண். இது ஒரு தற்காலிக ஏற்பாடு என அவனுக்கு உறைத்தாலும் விலக முடிவதில்லை. கடைசியில் உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப் படுகிறான், மனரீதியாகத் தான். இவர்கள் விளையாடுவது மனம் என்னும் மென் மலரோடு. கசக்கி வீசப்படும் அவன் மனம் எத்தனை ‘counselling sessions’ க்குப் பிறகு சரியாகும், அவள் மனதைப் போலவே. ரணகளம் தான், இவர்களின் ரிலேஷன்ஷிப் விளையாட்டுக்கள்.

உண்ண உணவும், உடுக்க உடையும், தலைக்கு மேல் ஒரு கூரையும் இருந்தால் போதும், வாழ்வு சுகமாகக் கழியும் என்று எண்ணிய காலமும் இருந்தது. இப்பொழுது தான் எத்தனை புதிய குழப்பங்கள். எதுவும் குழம்பித் தான் தெளிய வேண்டும். இப்போது குழம்பும் காலத்தில் இருக்கிறோம்.