வெண்முரசிலிருந்து பெற்றுக்கொண்டவை- சியமந்தகம்

மஹாகாவியம் என்றால் இந்த கூறுகளெல்லாம் இருக்க வேண்டும் என்றொரு பட்டியலைத் தருகிறது சம்ஸ்க்ருத இலக்கியம். அவை,

  • நகரங்கள், கடல், மலைகள் ஆகியவற்றின் வர்ணனைகள்
  • சந்திரோதய சூர்யோதய வர்ணனைகள்
  • வனோற்சவங்கள்
  • ஜலக்கிரீடை வர்ணனைகள்
  • மதுக் களியாட்டங்கள்
  • காதல் விளையாட்டுக்கள்
  • காதலரின் பிரிவு சோகம், விரகம் ஆகியவற்றின் வர்ணனைகள்
  • திருமண வர்ணனைகள்
  • குழந்தை பிறப்பை வர்ணித்தல்
  • அரசனின் சபை வர்ணனை
  • படை நகர்வு
  • போர் காட்சிகள்
  • தலைவனின் வெற்றி ஆகியவற்றை வர்ணித்தல்

இந்த பட்டியல் மனதிற்கு தோன்றியபடி எழுதப்பட்ட பட்டியல் அல்ல. சம்ஸ்க்ருத இலக்கியத்தில் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு பட்டியல். இதில் ஒன்று கூட விடுபடாது அனைத்து வர்ணனைகளையும் தன்னுள்ளே கொண்டுள்ள நூல் தொகுப்பு ‘வெண்முரசு’. தமிழில் எழுதப்பட்ட ஒரு பெருங்காவியம் அந்நூல். அதே சமயம் பழம் இலக்கியங்களைப் போல வெறும் அலங்காரச் சொற்களால் நிரம்பியதல்ல அது. ஒவ்வொன்றும், மனித(சில சமயம் விலங்குகளின்) மனத்தின் ஆழங்கள் உட்பட, வெகு நுட்பமாக விவரிக்கப்பட்ட நூல் அது. அதிலுள்ள எந்த கதாபாத்திரத்தையும் வெகு இயல்பாக சமகாலத்திலும் பொருத்தி விட முடியும். இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய இலக்கிய நிகழ்வு ‘வெண்முரசு’.

அந்நூல் வழியே ஆசிரியர் ஜெயமோகன் அத்தனை ஆயிரம் தமிழ்சொற்களை எனக்குத் தருகிறார். என் அகமொழியை முற்றிலுமாக மாற்றியமைத்த நூல் ‘வெண்முரசு’. எவ்வுணர்வைச் சொல்வதற்கும் சொல் தட்டுப்பாடு வராது மேலே மேலே பறக்க வைக்கும் எழுத்து ஜெயமோகனுடையது.

மற்றொன்று: வெண்முரசு மட்டும் என்றில்லாது, அவரின் எவ்வெழுத்தையும் படித்தவுடன் புரியும் தளமல்ல அதன் ஆழம். சிந்திக்க சிந்திக்க முற்றிலும் புதிதாக ஒரு ஆழம் தெளிந்து வருவது ஜெயமோகனின் எழுத்தில் எப்போதுமே நிகழும் ஒரு மாயம். கோட்பாடு சார்ந்து இல்லாது, ரசனை சார்ந்த வாசிப்பை எப்போதுமே முன்னெடுப்பவர் ஜெயமோகன். மொழி, ஆழம், நுட்பம் , ரசனை- இன்னும் பலவற்றை நான் ஜெயமோகன் என்னும் என் ஆசிரியர் வழி பெற்றுக் கொள்கிறேன்.

11 ஆகஸ்ட், 2022

https://jeyamohan60.blogspot.com/2022/08/blog-post_10.html