மலர்த்துளி-சிறுகதைத் தொகுப்பு-ஜெயமோகன்

ஆண் பெண் உறவுச் சிக்கல்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் இருக்கிறோம். காதலையோ, திருமண வாழ்வையோ ஏற்றுக் கொள்வதில் நிறைய புதிய எண்ணங்களுடன் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர் சமகால இளம்பெண்கள். எங்கு பார்த்தாலும், ‘பெண்கள் திருமணம் செய்து கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள்; நிறைய நிபந்தனைகளை விதிக்கிறார்கள்’ என்று வருத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் இளம்பெண்களின் மொழியே மாறியிருக்கிறது. ஒரு தனிப்பட்ட கலைச்சொல் அகராதியே உருவாகியிருக்கிறது. இவர்களின் கலைச் சொற்களை அறியாதவர்களுக்கு காதலோ, திருமணமோ பெரும்பாலும் அமைவதில்லை. இளைஞர்கள் புழங்கும் தளங்களில் சென்று பார்த்தால், உலகமே தலைகீழாக சுழன்று கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறது. ‘ஆண் இப்படிப்பட்டவன்’, ‘திருமணமானதும் இப்படி நடந்துகொள்’, போன்ற எந்த அறிவுரையும் எள்ளி நகையாடப்படுகிறது, புறங்கையால் ஒதுக்கப்படுகிறது. இளம்பெண்கள் தங்கள் முக்கியத்துவத்தையும், தாங்கள் முக்கியம் என்று எண்ணுபவை எவை என்றும் நன்கு அறிந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற ஒரு சூழல் அமைந்துள்ள இந்த சமகாலத்தில்-2023ம் வருடத்தில், ‘மலர்த்துளி’ என்ற இக்கதைத் தொகுப்பு வந்துள்ளது.

பன்னிரெண்டு காதல் கதைகள் கொண்ட தொகுப்பு இது. ஆசிரியரே சொல்வது போல, பெரிதாக படிமங்களோ, ஆழ்பிரதிகளோ இல்லாத எளிய காதல் கதைகள். இவற்றில் வரும் பெண் கதாபாத்திரங்கள் முப்பது வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தவை போலத் தெரிகின்றன- கதையில் விவரிக்கப்படும் சந்தர்ப்பங்களால் மட்டுமல்ல, அவர்களின் எண்ணங்களால், மதிப்பீடுகளால். இது போன்ற கதாபாத்திரங்கள் இப்பொழுதும் பொருத்தம் தானா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. 30-50 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கக் கூடிய காதல்களின் பதிவுகள் இக்கதைகள்.

இவற்றில் மூன்று கதைகள் ‘கேளாச் சங்கீதம்’, ‘கல் குருத்து’, ‘பெருங்கை’ ஆகியவை முன்பே இதழ்களிலும், ஜெயமோகனின் தளத்திலும் வெளி வந்தவை. கேளாச் சங்கீதமும், கல் குருத்தும் வெளி வந்த போது, மிகுந்த பரவசத்தை ஏற்படுத்தியவை. அவை இத்தொகுப்பில் உள்ள விலகல்கள். புதிய கதைகளில் ‘மலர்த்துளி’ மீண்டும் ஒரு விலகல். உடைந்து போன கொலுசின் ஒரு பகுதியை அந்த வீட்டின் ஜன்னலுக்குள் தூக்கி எறியும் இடம் மிக அழகாக அமைந்துள்ளது. ‘பெருங்கை’ வந்தபோது, கொஞ்சமாக ‘கூறியது கூறல்’ போலத் தெரிய ஆரம்பித்தது. இத்தொகுப்பில் உள்ள மற்ற கதைகள் யாவும் எப்போதோ முன்பே ஜெயமோகனாலேயே சொல்லப்பட்டவை போலத் தோற்றமளிக்கின்றன.

உதாரணத்திற்கு, வெண்முரசிலேயே சேடிகளின் உலகம் காட்டப்பட்டு விட்டது. ‘கொலைச் சோற்றில்’ வரும் சேடிகளின் உலகம் ஒரு மறுச்சொல்லல். கழுமாடனின் கருவை உவந்து பெற்றுக் கொள்ளும் பெண்ணும். புனைவு களியாட்டக் கதைகளிலேயே கழு மாடன்கள் வந்தாயிற்று, உதவும் கள்வனும் தான். மாற்றாந் தாயினால் அவதியுறும் பெண் எத்தனை பழைய கதாபாத்திரம். விடுதலையை விரும்பும் உயர்குடிப் பெண், அன்னை அழைப்பது போல் அழைக்கும் காதலி, வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் பெண், அவளின் வலிப்பு நோய் என சொல்லிக் கொண்டே போகலாம்.

‘Leo Tolstoy’ ன் கதைகளில் மீண்டும் மீண்டும் உழைக்கும் விவசாயிகளுக்கு, தன் நிலங்களைப் பிரித்துத் தர நினைக்கும் கனவானின் கதாபாத்திரம் வந்து கொண்டேயிருக்கும். அதைப் பற்றி ஜெயமோகனிடமே நான் கேட்டதை நினைத்துக் கொள்கிறேன். ‘ஆம், அவ்வாறு சில சூழல்கள், கேள்விகள் ஒரு எழுத்தாளனின் எல்லாப் படைப்புகளிலும் இடம் பெறுதல் இயல்பு தான்’ என்றார். அது போன்றதா இது? ஜெயமோகனின் motif-ஆ இக்கதைகள்? அப்படி எடுத்துக் கொண்டாலும், இந்த motif-ல் புதிதாக என்ன achieve ஆகியிருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. பல ஆயிரம் பக்கங்கள் எழுதியுள்ள எழுத்தாளர் இன்னமும் புதிது புதிதாகத் தான் எழுத வேண்டும் என்று எண்ணும் ஒரு வாசகரின் பேராசையா இது? ஆம் என்றும் கொள்ளலாம்.

ஒரு இசைக் கலைஞன் பாடும்போது அன்றைய கச்சேரியின் ராகம் ஓரளவாவது புதிய சங்கதிகளாலும் புதிய அபிப்ராயங்களாலும் நிகழ்ந்திருக்க வேண்டும். இல்லையெனில் முன்பு கேட்டது போன்றே ஒவ்வொரு கச்சேரியும் அமைந்து விட வாய்ப்புள்ளது. தேர்ந்த இசைக் கலைஞன் தனக்கு பழக்கமான சங்கதிகளால் ஒரு கச்சேரியையே நிகழ்த்தி விட முடியும். ரசிகனுக்கு அது மிகப்பெரிய நஷ்டம். கலைஞனுக்கும் தான்.