தமிழக வரலாறு-ஒரு பயணம்(1)

தமிழகத்தில் வரலாற்றின், வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தின், சின்னங்களை சுமந்திருக்கும் இடங்களுக்கு, காலக்கிரமப்படி ஒரு பயணம் செல்வதாயிருந்தால், எந்தெந்த இடங்கள் அதில் இடம் பெற வேண்டும் எனத் தொகுக்கும் ஆர்வம் வந்தது. எனக்கே எனக்கான ஒரு பட்டியலைத் உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. அதற்கான ஒரு ஆரம்பகட்ட முயற்சி இந்தக் கட்டுரை.

1. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம்:

பழைய கற்காலம்: (Paleolithic age)


பழையகற்காலம் என்பது, மனித தொழில்நுட்ப வளர்ச்சிக் கால கட்டமான கற்காலத்தின் முதல் பகுதியாகும். இது சுமார் 20,00,000 ஆண்டுகளுக்கு முன், மனித மூதாதையர்களான ஹோமோ ஹெபிலிஸ் (Homo habilis) போன்ற ஹொமினிட்டுகள் (hominids) கற்கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதுடன் ஆரம்பமானது.
தென்னிந்தியாவில் இரண்டு இடங்களில் தொடக்க பழங்கற்கால கலாச்சாரம் கண்டறியப்பட்டுள்ளது.

1. அதிரம்பாக்கம்:

தமிழ்நாட்டில் சென்னையின் வடமேற்கு பகுதியில் உள்ள அதிரம்பாக்கம் பள்ளதாக்கு இந்தப் பகுதிகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளைச் சுற்றி பழங்கற்காலத்திய விலங்குகளின் புதைப்படிமங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் கூறுகின்றன. இவை கி.மு 3,00,000-ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்கின்றனர்.

தென்னிந்தியாவில் வாழ்ந்த மனிதர்கள் பெரும்பாலும் பண்டைய "பழங்கற்காலத்தில்" நீண்ட காலம் வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கைக்கோடரி மற்றும் வெட்டுக்கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி வேட்டையாடி சேகரித்து வாழும் மக்களாக இருந்தனர் என்கின்றனர்.
அதிரம்பாக்கம்
2. திருநெல்வேலி:

50,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தற்கால மனித இனத்தின் (ஹோமோ செப்பியன்ஸ் செப்பியன்ஸ் ) மூதாதைய இனத்தினர் மிகவும் மேம்பட்ட நிலையில், பல்வேறு கற்களைப் பயன்படுத்தி தகடு போன்ற கருவிகள், மெல்லிய நுண்தகடு கருவிகளை உருவாக்கி பயன்படுத்தினர். 

சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நுண்கல் கருவிகள் என்று அறியப்படும் இன்னும் சிறிய கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். சூரிய காந்தக் கல், அகேட் கல், சிக்கிமுக்கி கல், குவார்ட்ஸ் கல் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி அவற்றை உருவாக்கினர். 

1949 ஆம் ஆண்டில், இது போன்ற நுண்கல் கருவிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நுண்கற்கள் காலமானது கி.மு 6000-3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் என தொல்லியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன.

புதிய கற்காலம்: (Neolithic age)

தமிழ்நாட்டில் சுமார் கி.மு 2500 ஆண்டு புதிய கற்காலம் தொடங்கியது. சாணைபிடித்தல் மற்றும் மெருகேற்றல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி புதிய கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் தங்கள் கற்கருவிகளுக்கு நயமான வடிவம் அளித்தனர். பண்டைய எழுத்துக்களைக் கொண்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடரியின் மேற்பகுதி தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன்-கண்டியூரில் இந்த கற்கோடாரியின் மேற்பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள எழுத்துக்கள் சிந்து சமவெளி-ஹராப்பா நாகரீகத்தில் கண்டெடுக்கப்பட்ட சித்திர எழுத்துக்களை ஒத்திருக்கின்றன என்பதால், ஹராப்பா நாகரீகத்தோடு தமிழர்களுக்கு இருக்கும் தொடர்பை வலியுறுத்துவதாக இருக்கிறது என்று ஐராவதம் மஹாதேவன் கூறுகிறார்.

புதிய கற்கால மனிதர்கள் பெரும்பாலும் சிறிய சமதளமான மலைகள் அல்லது மலையின் அடிவாரத்தில், சிறிய, ஏறத்தாழ நிரந்தரமான குடியிருப்புகளில் வாழ்ந்தனர். மேய்ச்சல் காரணங்களுக்காக அவ்வப்போது அவர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்தனர். அவர்கள் இறந்தவர்களை பள்ளங்கள் அல்லது புதைகலங்களில் புதைத்து சடங்குகளை முறையாகச் செய்தனர். அவர்கள் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உருவாக்க தாமிரத்தைப் பயன்படுத்தவும் தொடங்கினர்.

இரும்புக் காலம்:(கிமு 1200 – கிமு 230)

இரும்பைப் பயன்படுத்தி ஆயுதங்கள் மற்றும் கருவிகளை வடிவமைக்கும் முறையை மனிதர்கள் இரும்புக் காலத்தின் போது தொடங்கினர். பல நூறு இடங்களில் காணப்படும் பெருங்கற்களாலான இடுகாடுகளைக் கொண்டு தீபகற்ப இந்தியாவில் இரும்புக் காலக் கலாச்சாரம் இருந்ததை அறிய முடிகிறது.
(Megalithic structures).

கிருஷ்ணகிரிக்கு அருகிலிருக்கும் மல்லசந்திரத்தில் இது போன்ற ஒரு பெருங்கற்கால இடுகாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. (3 BC-3 CE) 
மல்லசந்திரம்
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள இருளபந்தாவிலும் இது போன்ற பெருங்கற்கால இடுகாடு கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் கி.மு 1000 வது ஆண்டைச் சேர்ந்த பெருங்கற்களாலான புதைகல இடுகாடுகள் இருந்ததற்கான தெளிவான அடையாளங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் இருக்கும் ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பூமியிலிருந்து 157 புதைகலங்களை அகழ்ந்தெடுத்தனர். அவற்றில் 15 கலங்கள் மனிதனின் மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் மற்றும் எலும்புகள், உமி, அரிசி தானியங்கள், கருகிய அரிசி மற்றும் புதிய கற்கால கோடரிக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருந்தன. கண்டெடுக்கப்பட்டுள்ள புதைகலத்தில் எழுத்தப்பட்ட எழுத்துகள், 2800 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலத்தின் தமிழ்-பிராமி வரிவடிவத்தை ஒத்திருப்பதாக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து அகழ்வாய்வு சோதனைகளை மேற்கொள்ளுவதற்கான தொல்லியல் களமாக ஆதிச்சநல்லூர் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. முற்கால வரலாறு:

சங்க காலம்:

இக்காலப்பகுதி கிமு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப்புலவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர் என்ற காரணத்தால் இக்காலப்பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சுமாராக கி.மு 600 மற்றும் கி.பி. 200 ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தில், தமிழகத்தில் சேர, சோழ பாண்டியப் பேரரசுகள் இருந்துள்ளன. இவைதவிர வேளிர் போன்ற சில சுயாட்சி தலைவர்கள் ஆட்சியும் தமிழகத்தில் இருந்துள்ளது.

பண்டைய தமிழ்நாட்டில், வேந்தர் என அழைக்கப்பட்ட அரசர்களின் தலைமையின் கீழ் இருந்த மூன்று முடியாட்சி மாநிலங்களும், வேள் அல்லது வேளிர் என்ற பட்டப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட பல பழங்குடி இனத் தலைவர்களின் தலைமையில் இருந்த பழங்குடி இனக் குழுக்களும் இருந்தன. இவர்களுக்கு அடுத்ததாக, உள்ளூர் பகுதிகளின் இனக் குழுக்களின் தலைவர்கள் இருந்தனர், இவர்கள் கிழார் அல்லது மன்னர் என அழைக்கப்பட்டனர்.

கி.மு மூன்றாம் நூற்றாண்டின் போது தக்காணப் பீடபூமி,  மௌரியப் பேரரசின் ஒரு அங்கமாக இருந்தது. கி.மு முதல் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை இந்த பகுதி சாதவாகனர் வம்சத்தினரால் ஆளப்பட்டது. வடக்கு பகுதியைச் சேர்ந்த இந்தப் பேரரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழ் பகுதி முற்றிலும் தன்னிச்சையாகவே இருந்தது.

முற்காலத் தமிழ் மொழியில் தமிழகம் என்ற சொல் 168 ஆவது புறநானூற்றுப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் என்று குறிக்கப்பட்ட இப்பகுதி முழுவதுமாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியாகும். தற்பொழுது இப்பிரதேசம் தோராயமாக தற்காலத் தென்னிந்தியா என்பதாக அறியப்படுகிறது. இத்தென்னிந்தியப் பகுதியில் தமிழ்நாடு, கேரளா , ஆந்திரப்பிரதேசத்தின் சில பகுதிகள், கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகள், இலங்கை முதலிய பகுதிகளும் அடங்கும்.

தமிழ் அரசர்கள் மற்றும் குழுத்தலைவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் அவர்கள் சண்டையிடுவது இடங்களுக்காகவே. அரசனின் நீதிமன்றங்கள் ஆற்றலைப் பகிர்ந்தளிப்பதற்கு பதிலாக சமூக நிகழ்வுகளுக்கான மையங்களாக இருந்தன. 

அசோகப் பேரரசின் கீழ் இல்லாத பேரரசுகள் மற்றும் அதோடு நட்பு நிலையில் இருந்த பேரரசுகள் பற்றிய தகவல்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் சேரர்களின் வம்சங்களைப் (கி.மு 273-232) பற்றிய குறிப்புகள் அசோகரின் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.
சௌராஷ்ட்ராவில் உள்ள அசோகரின் கிர்னார் மலை கல்வெட்டு
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழ் பேரரசுகளின் கூட்டமைப்பைபற்றி கி.மு 150 ஆண்டைச் சேர்ந்த கலிங்கப் பேரரசை ஆட்சி செய்த அரசன் கார்வேலனின் ஹத்திகும்பா கல்வெட்டு(ஒரிஸாவில் புவனேஸ்வரத்திற்கு அருகில் உள்ள உதயகிரிக் குன்றில் உள்ளது) குறிப்பிடுகிறது.
ஹத்திகும்பா
இலக்கியத் தரவுகள்:

முற்கால சோழர்களில் கரிகாலச் சோழன் மிகப் புகழ்பெற்றவராக இருந்தார். சங்க இலக்கியங்களின் பல்வேறு செய்யுட்களில் கரிகாலச் சோழன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னாளில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் நூலில் வரும் பல்வேறு கதைகளிலும் கரிகாலன் பற்றிய செய்திகள் முக்கிய பொருளாக இருந்தன. 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கிய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளிலும் கரிகாலன் பற்றிய தகவல்கள் உள்ளன. இமாலயம் வரையிலான இந்தியா முழுவதையும் வென்றவன் எனவும் நிலமானியங்களைக் கொண்டு காவேரி ஆற்றின் வெள்ளத்தை தடுப்பதற்காக கரைகளைக் கட்டியவன் எனவும் இந்த நூல்கள் விளக்குகின்றன.

சோழர்களில் மற்றொரு புகழ்ழெற்ற மன்னன் கோச்செங்கண்ணன். சங்க கால இலக்கியப் பாடல்கள் பலவற்றில் அவனைப் பற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.

இந்திய தீபகற்பத்தின் தென்கோடிப் பகுதியான கொற்கையிலிருந்து முதலில் ஆட்சி செய்யத் தொடங்கிய பாண்டியர்கள் பின்னாளில் மதுரை நகருக்கு மாறினர். சங்க இலக்கியத்திலும் பாண்டியர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே காலத்தில் இருந்த கிரேக்க மற்றும் உரோமானிய ஆவணங்களிலும் பாண்டியர்கள் பற்றி உள்ளது. மெகஸ்தனிஸ், இந்திகா என்ற தனது நூலில் பாண்டியப் பேரரசு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மதுரையின் தற்போதைய மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் தெற்கு கேரளாவின் சில பகுதிகளை பாண்டியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பாண்டியர்கள் கிரேக்கம் மற்றும் ரோம் ஆகிய நாடுகளுடன் வணிகத் தொடர்பையும் கொண்டிருந்தனர். பாண்டியர்கள் தமிழகத்தின் மற்ற பேரரசுகளுடன் இணைந்து ஈழத்தின் தமிழ் வணிகர்களுடன் வணிக மற்றும் திருமணத் தொடர்பையும் கொண்டிருந்தனர்.

சங்க இலக்கியங்களின் பல்வேறு பாடல்களில் பாண்டிய மன்னர்கள் பலர் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்களில் 'தலையாலங்கானம் வென்ற' நெடுஞ்செழியன் மற்றும் தியாகச் செயல்களுக்கான சிறப்பான ஒருவராக குறிப்பிடப்படும் ஆரான் முதுகுடுமி பெருவழுதி என்ற மற்றொரு நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அகநானூறு மற்றும் புறநானூறு போன்ற தமிழ்நூல்களின் தொகுப்புகளில் உள்ள சிறிய பாடல்கள், மதுரைக் காஞ்சி மற்றும் நெடுநல்வாடை போன்ற இரண்டு முக்கிய நூல்களிலும் (பத்துப்பாட்டு தொகுப்புகளில் உள்ளது) சங்க காலத்தில் பாண்டிய பேரரசில் மேற்கொள்ளப்பட்ட சமூக மற்றும் வணிக ரீதியான செயல்கள் பற்றிய செய்திகள் உள்ளன.

தென்னிந்தியாவின் மலபார் கடற்கரை அல்லது அதன் மேற்கு பகுதி, தற்போதைய கேரள மாநிலம் ஆகியவை ஒன்றிணைந்த பகுதியாக சேரர்களின் பேரரசு இருந்தது. கடல் வழியாக ஆப்பிரிக்காவுடன் வாணிபம் செய்வதற்கு ஏற்ற வகையில் அவர்களின் இருப்பிடம் இருந்தது.

(தொடரும்)

(கிரெடிட்: தரவுகளும் படங்களும் தமிழ் விக்கிபீடியாவிலிருந்தும், 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழிலிருந்தும், இணையத்திலிருந்தும் எடுக்கப்பட்டு, என் சொந்த புரிதலுக்காகவும், உபயோகத்திற்காகவும் அடுக்கப்பட்டுள்ளன).