அஷ்டபதி 14-ஸ்மர ஸமரோசித..(காபி மது ரிபுநா..)

அதாகதாம் மாதவ மந்தரேண
ஸகீமியம் வீக்ஷ்ய விஷாதமூகாம்
விஸங்கமானா ரமிதம் கயாபி
ஜனார்த்தனம் த்ருஷ்டவத் ஏததாஹ

மாதவனை விட்டு திரும்பி வந்து, சோகத்தால் ஊமையைப் போன்று மௌனமாக இருந்த தோழியைப் பார்த்து ஏதோ பெண்ணினால் இன்பம் கொண்டிருக்கிறான் ஜனார்த்தனன் என்று சந்தேகம் கொண்ட ராதை, நேரில் பார்த்தவள் போல் இவ்வாறு கூறினாள்:

ஸ்மர ஸமரோசித விரசித வேஷா
களித குஸுமபர விலுளித கேஸா

காம யுத்தத்துக்கு உசிதமான வேஷத்தைத் தரித்துக் கொண்டு, தளர்ந்த கேசத்தில் அணிந்த மலர்களின் பாரத்தால் தளர்வாக நடக்கும்

காபி மதுரிபுணா விலஸதி யுவதிரத்யதிக குணா

அதிக குணங்களைக் கொண்ட ஏதோ ஒரு யுவதி, மது என்ற அரக்கனின் எதிரியோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

ஹரிபரிரம்பண வலித விகாரா
குசகலசோபரி தரளித ஹாரா (காபி)

ஹரியினால் சுற்றி வளைக்கப் பட்டு, விளையாட்டாய் இழுக்கப்பட்டு, கலசங்களைப் போன்ற முலைகளின் மேல் ஆடும் மாலைகளை அணிந்த (ஏதோ ஒரு யுவதி..)

விசல தளக லளிதாநன சந்த்ரா
தததர பான ரபஸ க்ருத தந்த்ரா (காபி)

தாளமிடும் குழல்கற்றைகள் சூழ, சந்திரனைப் போன்ற அழகிய முகம் கொண்டவளாகவும், அவன் அதரபானம் செய்த வேகத்தால் மயக்கமுற்றவளாகவும் இருக்கும்(ஏதோ ஒரு யுவதி..)

சஞ்சல குண்டல தலித கபோலா
முகரித ரஸன ஜகன கதிலோலா (காபி)

ஆடும் குண்டலங்கள் வந்து இடித்துக் கொண்டேயிருக்கும் கன்னத்தையுடையவள்; அசைந்தாடும் இடையால், நடையால், சலங்கைகள் இனிமையாக சப்தம் செய்யும் இடையணியை அணிந்தவள்(ஏதோ ஒரு யுவதி..)

தயித விலோகித லஜ்ஜித ஹஸிதா
பஹுவித கூஜித ரதி ரஸ ரஸிதா (காபி)

காதலனால் பார்க்கப் படும் போது வெட்கத்தால் புன்னகைப்பவள்; ரதி ரஸக் க்ரீடையின் போது பல விதமாய் கூவும் ஒலிகளைச் செய்பவள்;(ஏதோ ஒரு யுவதி..)

விபுல புலக ப்ருது வேபது பங்கா
ஸ்வஸித நிமீலித விகஸதனங்கா (காபி)

மிகுந்த புளகாங்கிதமடைந்து பெரிதாக நடுங்கும் உடல் கொண்டவள்; காதலில் கண் மூடி அனங்கனை(மன்மதனை) மலரச் செய்கிறாள் (ஏதோ ஒரு யுவதி..)

ஸ்ரமஜல கணபர ஸுபக ஸரீரா
பரிபதி தோரஸி ரதி ரண தீரா (காபி)

அதிக ஸ்ரமத்தினால், பூத்த வியர்வை முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட உடலை உடையவள்; காம யுத்தத்தில் வெற்றி கொண்டு அவன் மார்பில் விழுந்து கிடப்பவள்(ஏதோ ஒரு யுவதி..)

ஸ்ரீஜய தேவ பணித ஹரி ரமிதம்

கலி கலுஷம் ஜனயது பரிஸமிதம் (காபி)

ஸ்ரீ ஜயதேவரால் சொல்லப்பட்ட இந்த ஹரியின் மகிழ்ந்தாடல், கலியினால் உண்டாகும் அனைத்து தோஷங்களையும் போக்கட்டும்.