ஸ்லோகம்
அஹமிஹ நிவஸாமி யாஹி ராதாம்
அனுநய மத்வசனேன ச ஆனயேதா:
இதி மதுரிபுணா ஸகீ நியுக்தா
ஸ்வயமிதமேத்ய புனர்ஜகாத ராதாம்
‘நான் இங்கேயே இருக்கிறேன், நீ போ, என் வார்த்தைகளைச் சொல்லி ராதையை சமாதானம் செய்து என்னிடம் அழைத்து வா’ என்று மது என்ற அரக்கனின் எதிரியான கிருஷ்ணனால் நியமிக்கப்பட்ட தோழி, தானே மீண்டும் ராதையிடம் வந்து இவ்வாறு கூறினாள்:
வஹதி மலயஸமீரே மதனமுபநிதாய
ஸ்புடதி குஸுமநிகரே விரஹி ஹ்ருதய தளனாய
மலையிலிருந்து வீசும் சந்தனக் காற்று மன்மதனை அருகில் வைத்துக்கொண்டு வீசுகிறது; விரஹத்திலிருக்கும் மனங்களை பிளப்பது போல் மலர் கொத்துகள் இதழ் விரிக்கின்றன:
தவ விரஹே வனமாலி ஸகி ஸீததி ராதே
தோழி ராதே, உன்னைப் பிரிந்த விரஹத்தால் காட்டுமலர்களை அணிந்த கிருஷ்ணன்(வனமாலி)மூழ்கிக் கொண்டிருக்கிறான்.(தவ விரஹே)
தஹதி ஸிஸிரமயூகே மரணம் அனுகரோதி
பததி மதனவிஸிகே விலபதி விகல தரோதி
நிலவின் குளிர்ந்த கிரணங்கள் அவனை தகிப்பதனால், அவன் மரணத்தின் பின் செல்கிறான், மன்மதனின் பாணங்கள் தன் மீது விழுவதால், பித்தன் போல் அதிகமாக புலம்புகிறான் (தவ விரஹே..)
த்வனதி மதுப ஸமூஹே ஸ்ரவணம் அபிததாதி
மனஸி வலிதவிரஹே நிஸிநிஸி ருஜம் உபயாதி
மதுவைச் செய்யும் வண்டுக் கூட்டங்களின் த்வனியைக் கேட்காமல் கைகளால் காதுகளை மூடிக் கொள்கிறான்; மனதிற்கு வலி தரும் விரஹத்தினால் ஒவ்வொரு இரவும் துன்பம் கொள்கிறான்.(தவ விரஹே)
வஸதி விபின விதானே த்யஜதி லலித தாம
லுடதி தரணி ஸயனே பஹு விலபதி தவ நாம
மனதுக்கு பிடித்த தன் வீட்டை விட்டு விட்டு, வெவ்வேறு இடங்களில் வசிக்கிறான்; தரையில் படுத்து புரள்கிறான்; உன் பெயரையே புலம்பிக் கொண்டிருக்கிறான். (இதைக் கேட்டவுடன் ராதை மூர்ச்சித்து விழுந்து விடுவதால் இந்த அஷ்டபதிக்கு ஐந்து ஸ்லோகங்கள் மட்டுமே இருப்பதாக ஒரு சுவையான கதை உள்ளது)(தவ விரஹே)
ரணதி பிக ஸமவாயே ப்ரதி திஷா மனுயாதி
ஹஸதி மநுஜ நிசயே விரஹ மபலபதி நேதி
குயில் கூட்டங்கள் தங்கள் காதல் கீதத்தை பாடும் போது, அதைக் கேட்க முடியாமல் எல்லா திசைகளுக்கும் முன்பே ஓடி விடுகிறான்; அதைப் பார்த்தவர்கள் அவனைக் கண்டு சிரிக்கும் போது, ‘ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை’ என தன் விரஹத்தை மனதிற்குள்ளேயே மறைத்துக் கொள்கிறான்.(தவ விரஹே)
ஸ்புரதி கலரவ ராவே ஸ்மரதி மணிதமேவ
தவ ரதி ஸுக விபவே கணயதி ஸுகுணாமதீவ
புறாக்களின் ஓசையைக் கேட்டால், கூடலின் ஒலியையே நினைத்துக் கொள்கிறான்; உன்னுடனான ரதி இன்பத்தையே மிக உயர்ந்ததாக எண்ணுகிறான் (தவ விரஹே)
த்வதபித ஸுபதா மாஸம் வததி நரி ஸ்ருணோதி
தமபி ஜபதி ஸரஸம் யுவதிஷு நரதிமுபைதி
உன் பெயரால் இருக்கக் கூடிய சுபம் தரும் மாதத்தின்(வைகாசியின்) பெயரை மனிதர்கள் சொல்வதைக் கேட்டால், ஸரஸத்துடன் தானும் அப்பெயரையே ஜபிக்கிறான்; மற்ற யுவதிகளிடம் எந்த ஈடுபாட்டையும் காட்டுவதில்லை(தவ விரஹே)
பணதி கவி ஜயதேவே விரஹ விலஸிதேன
மனஸி ரபஸவிபவே ஹரிருதயது ஸுக்ருதேன
கவி ஜெயதேவரால் சொல்லப்பட்ட இந்த விரஹத்தைப் பற்றிய சொற்களாலும், தவப் பயனாலும், ஹரியின் மீது மனதில் மிகுந்த ஈடுபாடு உண்டாகட்டும்.