(96 கவிதைகள் கொண்ட கவிதைத் தொகுப்பு இது…விரைவில் கிண்டிலில் வெளிவரும்)
(Link இங்கேயே போஸ்ட் செய்யப்படும்)
கவிதைகள் கீழே…

1) ஒரே நேரத்தில் பூக்க வைக்கும் வேர்ப்பின்னல் ஆயிரம் அலைகளுக்கு அடியில் 'இம்'மென்று அமைந்திருக்கும் ஆழ்கடல் ஈர்த்தும் விலக்கியும் சுற்றும் அனைத்தையும் தாங்கி நிற்கும் கடுவெளி என் ஆழத்து அகவிழி 2) காணா அவ்விழியின் பெரு நோக்கு எதைக் கண்டதால் விரியா அதன் இதழில் இச்சிறுநகை 3) ஆழம்.. ஆழம்.. ஆழம்.. பட்டு இருட்டில் வழுக்கி.. வழுக்கி.. வழுக்கி.. முடிவிலா ஆழத்தில் மெல்ல மூழ்குகிறேன் கெஞ்சி கொஞ்சி மிழற்றி சிணுங்கி வருடி அவள் என்னை மீட்டுகிறாள் உடலெல்லாம் நாவாக அவள் ஒக்கலில் அமர்ந்திருக்கிறேன் ஆழம் செல்லச் செல்ல அவள் ருத்ரன் ஆகிறான் கார்வையில் முழுக்காட்டுகிறான் அவன் அதிர்வலையில் நீந்துகிறேன் உயிர் உலுக்கிப் போட கண்ணீர் சொரிகிறேன் நாதக் கடலில் ஒற்றைப் புள்ளியாகி கரைந்தே அழிகிறேன் அழிந்தே மீண்டும் முகிழ்க்கிறேன். 4) முழுக் கறுப்பு தனிக் கறுப்பு இன்மையெனும் அடர் கறுப்பு காலம் இல்லா ஆழ் கறுப்பு அனைத்தையும் உண்ணும் தீக்கறுப்பு வரம்பழிய கரைந்தழிவர் வெளிச்சத்தையும் வெளி விடாத காந்தன் கருந்துணைவன் என் காதலன் 5) எங்கும் இருண்டிருந்தது சட்டென்று ஒரு இருப்பை உணர்ந்தேன் அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்திருப்பான் போல ‘யார் நீ’ சலனமற்றிருந்தான் ஆவல் மிக அவனை நோக்கிச் செல்ல முயன்றேன் இருப்பை இழக்காதிருக்க அவனையே அவதானித்திருந்தேன் என்னுடையவை அனைத்தோடும் அவனோடேயே இயைந்திருந்தேன் சிறு வெளிச்சம் போதும் பார்த்து விடுவேன் ஒரு பெரும் மின்னல் அவனைக் கண்டு விட்டேன் ஆ.. 6) இப்படி ஒரு குரல் தோல் உயரம் முகம் யார் இது என்ன செய்து கொண்டிருக்கிறாள் முற்றிலும் அந்நியமானவள் இவள் உடலிலா நான் 7) ஒரு நாள் இதுவாய் மறு நாள் அதுவாய் ஆடி காட்டும் அன்றைய பிம்பத்தில் தன்னை நிறைத்துக் கொள்கிறாள் பின் ஓரிரவில் அனைத்தையும் களைந்து ஆடியே இல்லாத மூலையில் தனக்கே தனக்கான இருளில் கரைந்து அமர்கிறாள் 8) அகண்ட கருவெளி அதிலோர் நீலத்துளி துளியுள் பச்சைப்புள்ளி பச்சைக்குள் செந்நிறக்கூடு கூட்டுக்குள் வெண்ணிற ஊற்று அது மெல்லப் பெருகி பெரு வெள்ளமாகிறது கருமை அதில் கரைந்தழிகிறது ஊற்றின் கண்ணோ தானோ தனதோ அற்ற இருப்பே பயணமென்றான அழகிய சிறு கருந்துளி 9) எரிந்து கொண்டிருந்தது ஒன்று காத்துக் கொண்டிருந்தது ஒன்று அப்போது தான் வந்திறங்கியது ஒன்று சென்றவரை நினைத்து மூழ்கியது ஒன்று பாவங்களைக் கழுவியதொன்று தன்னைக் கரைத்தவர் உண்டு மீண்டு எழுபவரும் உண்டு சீதையை அம்பையைச் சுமந்து அனைத்தையும் கண்டு மிக மிகக் குளிர்ந்து காலங் காலமாய் ஒழுகிக் கொண்டிருக்கிறாள் கங்கை 10) அது என்னைத் தன் கை விரல் நீட்டி தொட்ட போது விறைத்துவிட்டேன் உள்ளிருந்து ஒரு நடுக்கு உடலெங்கும்.. உதடுகள் காய்ந்து கண்கள் குளமாயின மூச்சே விட முடியாது அழுத்திப் பிடித்தது நெஞ்சை இனி தூரத்திலாவது தெரியுமா ஒரு துளி வெம்மை தெய்வம் 11) உன் போர்வையும் என் போர்வையும் அருகருகே தொட்டுக்கொண்டு கிடக்கின்றன அவற்றுக்கு நம் கதை தெரியாது அவையாவது அங்கனம் இருக்கட்டும் தொடுதல் நன்று தொடுதல் வாழ்த்து அனைவர்க்கும் அனைத்துக்கும் தொட்டுக் கொள்ள ஒரே ஒரு துளி வெம்மையாவது அமையட்டும் 12) விரிந்த வானின் கீழ் தனியளாய் நிற்கிறேன் அவ்வப்போது பற்றிக் கொள்ளும் கைகள் அடிக்கடி விட்டுச் செல்கின்றன எத்தனை பேசினாலும் மலையளவு சொற்கள் பழுதின்றி மிச்சமிருக்கின்றன ஒத்தி எடுத்தாலும் காட்சிகள் துளி மிஞ்சாது உள் நுழைவதில்லை சுற்றிலும் உள்ள முற்றமைதியின் பேரோசை செவிகளைத் துளைக்கிறது யுகத் தனிமை.. மூச்சு மட்டுமே என் நிரந்தரத் துணை அது என்னைக் கைவிடுகையில் என் தனிமையும் என்னைக் கைவிடுகிறது 13) என் கையைப் பற்றிக் கொள்ளாதே விட்டுவிடுவாயோ என்ற பதற்றத்தை என்னால் தாங்க முடியவில்லை எனக்கு நன்றாகத் தெரியும் உனக்கு முடிவின்றி கைகள் இல்லை எதையோ விட்டுவிட்டே என்னைப் பற்றுகிறாய் எதையோ பற்றுவதற்கே என்னை விடுகிறாய் பாலையின் மகள் நான் மணலையே மலையாகப் பார்ப்பவள் என் கையிலிருந்து உன் கை நழுவும்போது உச்சி மணலில் புதைந்து போகிறேன் உயிர்த்தெழுதல் கடினமாகிக் கொண்டே செல்கிறது பயணம் வெற்று வெளியில் தான் என்றாலும் மலைகளின்றி இருந்தால் கொஞ்சம் சுலபம் பாலை நிலவைப் பார்த்தபடி ஆழ்கடலின் நீர்க்குமிழியாய் சுவடின்றி மறைந்து விடுவேன் தயை கொள் 14) நன்றாக இருக்கிறது என்றேன் எரிச்சல் கொண்டாய் நன்கு அறிவேன் நான் உனக்கு ஒரு பொருட்டல்ல ஆனால் எதையும் மாற்றி விடாதே அது நன்றாகவே இருக்கட்டும் எனக்காக இல்லாவிட்டாலும் அதற்காக.. 15) நான் உன்னைப் பார்த்து புன்னகைக்கிறேன் தவறாக எண்ணாதே உன்னிடமிருந்து எனக்கு ஒன்றும் வேண்டாம் உண்மையாகவே உன்னிடமிருந்து எனக்கு ஒன்றுமே வேண்டாம் 16) வேண்டாம் என்றேன் வேண்டுமா என்றாய் எடுத்துக் கொண்டேன் தட்டிப் பறித்தாய் தள்ளிப் போனேன் கிட்டே வந்தாய் கட்டி அணைத்தேன் எட்டி உதைத்தாய் உன் விருப்பம் என்று கை கட்டிக் கொண்டு விட்டேன் இப்போது என்ன செய்வாய்? 17) அழுக்கை கிருமியை திரையை தடித்த தோலை தனக்கு சிறியதான சட்டையை உரித்துப் போட்டுக் கொண்டே அது முன் செல்கிறது 18) நிகழும் முன் அது நொடி நேரம் மெல்லிய சங்கிலியில் ஊசலாடுகிறது அறுபட்டால் புதுத் தொடர் இல்லை அதுவே விபத்தோ தேர்வோ விதியோ 19) விழித்தெழுந்த பொழுது ஒன்றும் மாறியிருக்க வில்லை மனம் மட்டும் கொஞ்சம் மரத்திருந்தது மூச்சும் கேவலாய் வெளி வந்தது பின் நினைவுக்கு வந்தது இனி எதுவும் முன்பு போல் இல்லை என்னில் ஒரு பகுதியே இல்லை இது பகுதி மரணம் மரணித்து மரணித்து.. பின் துளிர்த்து துளிர்த்து.. என் பயணம் 20) நானே உதிர்கிறேன் என்று சொல்லியிருந்தாலும் நீ என்னை உதிர்த்திருக்கலாமா? அறிவேன் புதுத் தளிர் பச்சென்றிருக்கும் உடனே என்னிடத்தை நிரப்பி விடாதே சில காலம் காலியாக வைத்திரு தரை தொட்டதும் என் இருக்கை நானின்றி இருப்பதை மல்லாந்து கிடக்கும் வரை பார்த்துக் கொள்கிறேன் 21) உயிர் மூச்சும் வாய் நீரும் நஞ்சென்றாயின அரவம் தீண்டியதால் அரவம் என்றேயாயினர் தொட்டுத் தொட்டு சாவைக் கடத்தினர் உயிர் பிழைக்க வேண்டி தனித் தீவுகளாயினர் விடிந்தது உயிருதிர் காலம் உதிரும் ஓசையும் கேட்காத் தனிமையில் ஊழி நடனம் 22) பச்சென்றிருந்தது ஒரு குளம் பூச்சியும் தவளையும் பாம்பும் களத்தில்.. முதலில் அசைந்தது களப்பலி ஆனது பாம்புக்கு கழுகைப் பற்றித் தெரியாது இன்று அசையாதது நாளை அசையும் இக்குளத்தில் தான் நாளும் தாமரையும் பூக்கும் 23) புற்கள் காடாய் மண்டியிருந்தன நடுவே பெருஞ்சிங்கமொன்றும் புள்ளி மானொன்றும் அருகருகே நடந்து கொண்டிருந்தன மான் காதுகளை ஆட்டி கண்களைச் சுழற்றி தீவிரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தது பிடரி மயிர் சிலிர்க்க தலை குனிந்து கேட்டுக் கொண்டிருந்த சிங்கம் மெல்லத் தரையில் அமர்ந்தது மான் அதன் மேல் ஏறி குதித்து விளையாடி பின் மெல்ல அதன் காதோரம் இன்னும் ஏதோ சொன்னது கண்களில் நீர் வழிய தரையில் தலை வைத்து சாய்ந்தது சிங்கம் அதன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே நடந்து சென்ற மான் பின் எட்டுக் கால்கள் கொண்டு துள்ளிக் குதித்து பறந்து மறைந்தது 24) பச்சை நிறத்தில் வட்ட மேஜைகள் அதைச் சுற்றி நீல நிறங்களில் குட்டி நாற்காலிகள் மஞ்சள் நிறத்தில் சுவர்கள் அதில் பல வண்ணங்களில் மலர்கள் மலர்களின் ஊடே பச்சைப் பசும் புல் பரப்பு அதில் ஒரு யானை, ஒரு ஒட்டகச் சிவிங்கி காலடியில் இரண்டு முயல்கள் தூரத்தில் சில மான்கள் யானையும் ஒட்டகச் சிவிங்கியும் மான்களும் முயல்களும் சிரித்துக் கொண்டிருந்தன ஒவ்வொரு நாளும் சின்னக் குழந்தைகள் அக்குட்டி நாற்காலிகளில் அமர்ந்து வண்ணச் சித்திரங்கள் வரைந்தனர் சின்னக் களி மண் வீடுகள் கட்டினர் ரயில் பாட்டு, குயில் பாட்டு பாடினர் சுவரிலிருந்த யானைக்கு ஆசையாய் இருந்தது ஓர் இரவு அது வெளியே வந்தது சின்ன நாற்காலியில் கால் மடித்து அமர்ந்து தும்பிக்கையை மறைத்துக் கொண்டது சிரித்துக் கொண்டே மறு நாள் காலை அது மீண்டும் வந்தது யானையைப் பார்த்த அவர்கள் கைத்தட்டி கும்மாளமிட்டனர் சுற்றிச் சுற்றி நடனமிட்டனர் தொட்டு விளையாடச் சொல்லி வாலைப் பிடித்து இழுத்தனர் வலிந்து சிரித்துக் கொண்டே அதுவும் தொடப் பார்த்தது ஒளிந்து கொள்ள வைத்தனர் எத்தனையோ முயன்றும் கொஞ்சம் வெளித் தெரிந்து விட்டது ‘சரி போகட்டும், பாடு’ என்றனர் அதன் பிளிரலில் அவர்கள் பயந்தே விட்டனர் ஆடிக் காட்டுகிறேன் என்று காலைத் தூக்கியது அலறிக் கொண்டு ஓடியே விட்டனர் சின்ன அறையில் தனியாய் நின்ற யானை மீண்டும் சித்திரத்திற்குள் சென்று நின்று கொண்டது 25) மழையில் நனைந்து இசைக் குயிலெனப் பாடி நடையே ஆடலாக மலரும் நேரத்திற்காய் காத்திருந்து வர்ணங்களால் நிறைத்து கவிதைகள் எழுதியவள் பின்னொரு இரவில் சொல் மிகையென்றான கவிதையானாள் 26) அரையிருள் அறையது மத்தியில் ஒரு ஒளி வட்டம் சொற்ப ஆடையணிந்த ஒருத்தி நீள நீள கை காலாட்டி தாளத்தில் அசைந்து ஆட ஆரம்பித்தாள் உச்சத்தை அடைந்ததும் அணைந்தது ஒளி வட்டம் கண்ணாடி முன் அமர்ந்து உதட்டுச் சாயத்தை அழித்து பொய் இரப்பைகளை அகற்றி நகங்களைக் கழற்றினாள் ஆடைகளை அணிந்து கொண்டு மெல்லத் திரும்பினாள் கண்ணீர் திரையிட்டது 27) வெட்டவெளியில் ஒரு ஒற்றைச் செடி எப்போதோ எங்கிருந்தோ வந்து முளைத்த விதை இலைகள் துவண்டிருந்தன காம்புகள் காயத் துவங்கியிருந்தன சதா தலை கவிழ்ந்திருந்தாள் வேர் மட்டும் ஓய்வின்றி நீர் தேடி அலைந்தது நீரோட்டத்தைக் கண்டு கொண்டதும் பச்சை பிடித்து விடுவாள் வெட்டவெளியில் விதையை முளைக்க வைக்கும் முன் கடவுளாவது ஒரு முறை யோசித்திருக்கலாம் 28) கத்தி முனையில் நடந்து பாதமெல்லாம் தழும்புகளைச் சுமக்கும் கூத்தாடி நான் ஒரு தேக்கரண்டி உப்பு அரைச் சிட்டிகை பெருங்காயம் இரண்டு முட்டை நெய் அதெல்லாம் சரி தான் எத்தனை பங்கு அன்பு எத்தனை பகுதி உண்மை எத்தனை துளி விஷம் எப்போது புரியும் எனக்கு பறவை தன் குஞ்சுக்கு சின்ன அலகால் கொஞ்சம் கொஞ்சமாய் தந்தது நானும் ஆரம்பித்து விட்டேன் துளித் துளியாய் என் விஷத்தை புகட்ட. நீலகண்டனா என்ன விஷத்தைக் கழுத்திலேயே தேக்க.. 29) இல்லை இல்லை என்பதற்கே அவள் ஆற்றல் முற்றிலும் செலவானது உன் போதாமையெல்லாம் அவள் மீது இறக்கி வைத்தாய் மூழ்கி விட்டாள் நச்சரவம் தீண்டிய பின் உடலில் நஞ்சன்றி எஞ்சுவது என்ன சூழும் நஞ்சில் உருகி அழிவதன்றி ஊழும் தான் என்ன.. 30) குழலூதிக் கொண்டிருந்தாய் கண்கள் கிறங்க சொக்கிப் போயிருந்தேன் சின்னக் குரலில் மெல்லப் பேசினேன் இடியெனத் தாக்கி குரல்வளையை நெறித்தாய் இப்போது பேச்சென்ன மூச்சு கூட இல்லை கணமும் தயங்காதே நெறித்த கையினால் குழலெடுத்து வாசி சங்கீதம் மிகவும் முக்கியம். 31) மெத்தென்ற வெள்ளைப் பூனை பச்சைக் கண்கள் ஒளிர பார்த்துக் கொண்டிருந்தது சின்னக் குரலில் மெல்ல ‘மியாவ்’ என்றது வட்டிலில் கொதிக்கும் பாலைக் கொட்டினேன் சிவந்த நாக்கை நீட்டி வாயை நக்கிக் கொண்டது சோம்பலாக அடியெடுத்து வைத்து மெல்ல பாலிடம் வந்தது சின்ன நாக்கை பாலில் நனைத்தது துள்ளிக் குதித்து கணத்தில் மறைந்தது மாலை நேர மெல்லிய காற்றில் சாய்ந்தமர்ந்து சங்கீதம் கேட்கலானேன். 32) வீட்டின் ஏதோ ஒரு மூலையில் தான் அவள் எப்போதும் அமர்ந்திருந்தாள் குத்துக் காலிட்டு கைகளை கால்களுக்குள் விட்டுக் கொண்டு பொக்கை வாயை அரைத்தபடி வெயில் வரும் இடங்களாக இருக்கலாம் உலர்ந்து சுருங்கியிருந்தாள் அன்று அவர்கள் எழுந்து வந்த போது பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை அமர்ந்திருந்தவள் சற்றே சரிந்திருந்தாள் அருகே அவள் தட்டு ஈ மொய்த்தபடி இனி நாளையிலிருந்து அவள் உணவு காக்கைக்கு பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை 33) ‘முகமூடி… முகமூடி… ‘ குரல் கேட்டது ஆச்சரியம் கை நிறைய முகமூடிகள் தலையிலும் கழுத்திலும் முதுகிலும் கூட நாலைந்து….. ஒன்று சிரித்தது ஒன்று அழுதது ஒன்று விழுந்து விழுந்து சிரித்தது ஒன்று பேதை சில சிங்கங்கள்.. ஒரு புலி, நான்கு ஓநாய் மற்றும் இரண்டு பூனை “வாங்கும்மா..” “எனக்கு வேண்டாம்..” “இதில்லாம எப்பிடி.. வாங்கிக்க” “வேண்டவே வேண்டாம்” “புரியாத புள்ளையா இருக்கியே” “நீ போ..” கதவைச் சாற்றப் போனேன் “வேகாத வெயிலம்மா, அலையறேன்..” அவன் திரும்பும் போது என்னோடு பேசிய அவன் முகம் பின் கழுத்தில் மாட்டியிருந்தது.. 34) அரைக்கண் தான் திறக்க முடிந்தது அதையும் அசைக்க முடியவில்லை காட்சிகள் மங்கலாகத் தெரிந்தன கை கால்கள் கல்லாய்ச் சமைந்திருந்தன போட்டது போட்ட படி கிடந்தேன் நிறைய பேர் வந்தனர் அழுதனர் புகழ்ந்தனர் வேண்டினர் சிலர் நடிக்கவும் செய்தனர் எனக்குப் புரிகிறதா எவருக்கும் தெரியவில்லை அனைத்தையும் அறிந்தபடி இதோ இங்கே கிடக்கிறேன் சாட்சி பூதமாய் 35) ஒருவருக்கு பிறப்பு ஒருவருக்கு பதவி சிலருக்கு அறிவு சிலருக்கு நுட்பம் ஒரு சிலருக்கு மதிப்பு வேறு சிலருக்கு புகழ் பலருக்கு செல்வம் அல்லது அழகு அவரவருக்கு அவரவருக்கான தங்கக் கூண்டு 36) அன்பு செய்வது ஒன்றும் கடினமல்ல உயிராக நேசிக்கலாம் பித்துக் கொண்டு காதலிக்கலாம் மிச்சமின்றி முழுக்க முழுக்க தன்னைத் தரலாம் வானளாவ உயர்த்தி வைக்கலாம் திசையெங்கும் உரக்கக் கூவலாம் எதிரொலிக்கக் காத்திருந்தால் மீண்டும் முயன்றால் மீண்டும் மீண்டும் முயன்றால்.. இனிப்பென்றால் வலியே தான் 37) நாளை அவளும் வருவாளோ இனிய புன்னகை ஒன்றை சதா சூடியிருப்பாள் அழகி சந்தித்தால் கண்கள் மின்னும் முகம் ஒளி கொள்ளும் வேண்டாம் வந்து விடாதே உன் கண்ணும்.. உன் உதடும்.. உன்னை..உன்னை.. தொண்டை அடைக்க கண்ணீர் முட்டியது 38) அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர் அவனுக்கு மூச்சு முட்டியது அவ்விடம் முழுவதும் அவள் உடல் வாசம் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் புன்னகைத்துக் கொண்டிருக்கிறாளா அவனுக்கு வலித்தது ஒரு அங்குலம் நகரவும் இடமில்லை மனதுக்குள் நெளிந்து கொண்டிருந்தான் கை கால்களை விடுவித்துக் கொள்வதாய் கற்பனை செய்து கொண்டான் அவள் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் இப்பொழுது அவன் வலி அவள் கண்களில்.. 39) என் மௌனத்தை விழியசைவை மூக்குச் சுளிப்பை புன்னகையை புன்னகையின்மையை கன்னக் குழைவைக் கூட புரிந்து கொள்ளாத உன்னை என் வார்த்தைகள் என்ன செய்து விட முடியும் என் கண்ணீர் தான் என்ன செய்து விட முடியும் வார்த்தைகள் ஆபாசமானவை தேவையற்றவை கண்ணீர் மேலும் ஆபாசமானது… அது என்னுடைய தோல்வி உன்னுடைய தோல்வியும் தான் நம்முடைய தோல்வி நம் இருவருக்கும் சொந்தமான ஒன்றே ஒன்று.. 40) தலை முடி பிடித்திழுத்து எட்டி உதைத்து கன்னத்தில் அறைந்து ஆயிரம் வசவுகள் உரைத்த பின் ‘இன்னும் ஒரு அசைவும் காணவில்லையே’ என்று அயர்ந்து அமர்ந்த பின் மெல்லிய கோடாக கன்னங்களில் கண்ணீர் பாம்பைக் கண்டு நாம் பயப்படுவது போல பாம்பும் நம்மைக் கண்டு பயப்படும் தானே? 41) ஒரு நொடியில் நாளை இன்றாகி விடுகிறது ஒரு நொடி முந்தியிருந்தால் நான் நாளைக்குச் சென்றிருக்கலாம் ஒரு நொடியைக் கடக்க எத்தனை வேகமாய் ஓட வேண்டும் மணல் கீழே விழ விழ ஒரு நொடி மேலே எழுகிறேன் நாளையை அடைகிறேன் 42) குட்டிப் பாம்பின் சின்னத் தலை மெல்ல எட்டிப் பார்த்தது “உண்டா.. இல்லையா..” “சீ..போ..சனியனே..” சட்டெனத் தலையை உள்ளிழுத்துக் கொண்டது மீண்டும் எட்டிப் பார்த்தது கொம்பு எடுத்துக் கொண்டேன் தப்பித்தேன் வளைக்குள் பாம்பு நன்கு பெருத்து விட்டது கண்ணயரும் வேளையில் மீண்டும் எட்டிப் பார்த்தது “உண்டு தான் போல..” “ம்ம்ம்..” என்கிறேன் 43) எத்தனை அழகான கேள்வியிது உனக்கு என் ஆயிரம் முத்தங்கள் மயான மௌனம் கொண்ட இரவுகளில் அதல பாதாளத்திலிருந்து என் குரல் எழுகையில் மறந்து விடாதிருக்க எனக்கு நானே பேசுகையில் புண்வாயைத் தொடும் வலியை மறக்க எண்ணுகையில் என்னோடு நானே இருக்க அஞ்சுகையில் பற்றிக் கொள்ள ஒரு கேள்வியை அளித்து விட்டாய் ஒரு வாழ்வையே இதற்கு பதிலாய் நான் வாழ்ந்து விடுவேன் 44) கன்னி அவள் வாலைக் குமரி சிற்றாடை கட்டியவள் பட்டாம்பூச்சி நின்ற இடத்தில் நின்றவளில்லை கல்லாகச் சமைந்துவிட்டாள் கால் கூட மாற்றவில்லை கல்லிலேயே கால் தடம் பதிந்து விட்டது காத்திருக்கிறாள் கடல் நோக்கியிருக்கிறாள் எந்த அலை அவன் தூதைச் சுமந்து வருமோ அறியாச் சிறுமி அலைகளை நம்புவதில் பயனுண்டா யுகங்கள் உருண்டோடின அவள் கை மாலையில்.. சிந்தாமல் சிதறாமல் நாகமணியாய் நாசியில் மினுக்குகிறது அவள் வைரம் இப்போதெல்லாம் அதுவே ஒவ்வொரு நாளும் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது மீண்டும் கிழக்கில் உதிக்கிறது 45) உன் ஆடையின் நுனியைப் பற்றிக் கொள்ளவே விழைகிறேன் நீ வரும் பாதையில் எதிர் வரவே நினைக்கிறேன் எப்படியும் என் குரலை கேட்டுவிடுவாயென்றே பாடுகிறேன் என் கொலுசொலியை நீ கேட்கவேண்டுமென்றே ஆடுகிறேன் நீ விட்டெறிந்த கல்லே என் தலையின் பானையை உடைத்ததாக எண்ணிக் கொள்கிறேன் ஒவ்வொரு முறை மூழ்கி எழும்போதும் என் ஆடை தொலைந்ததாகவே பதற்றம் கொள்கிறேன் என்றாவது என்னையும் நீ அறிவாயா 46) நீலச் சுவராய் தொடு வானம் வரை திசையை மறைத்து பெருகிக் கிடந்த கடலைக் இப்போது காணவில்லை அங்கு இருப்பது கொஞ்சம் தரை சில இடங்களில் புல்வெளி ஒரு இடத்தில் காடு சுற்றி வளைத்து மலைகள் மலைக்கு அந்தப்புறம் பாழ்வெளி அவ்விடத்தை இக்கணம் என்னவென்று அழைப்பது காணாமல் போவதென்றால் இல்லாமல் ஆவதா 47) நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது ஏன் என்று புரியவில்லை தலை தூக்கிச் சுற்றிலும் பார்க்கிறேன் வாயிலைத் திறந்து கொண்டு அப்போது தான் நுழைகிறாய் முன் வரிசையில் அது நீயா தூக்கி வாரிப் போட்டது உற்றுப் பார்க்கிறேன் பக்கவாட்டில் மட்டும் உன் சாயல் கண்ணருகில் கன்னத்தில் தோளில் நடையில் குரலில் எங்கெங்கிலும் கண் பார்க்குமுன் உன்னை மனம் பார்த்து விடுகிறது பித்தம் முற்றுமுன் சொல் எனக்கு நிகழ்ந்து கொண்டிருப்பது என்ன? 48) சட்டென்று ஒரு பரவசம் மனம் காரணமின்றி குதூகலிக்கிறது உயிரின் அடி ஆழம் வரை குளிர்ந்து புல்லரிக்கிறேன் எனக்குத் தெரியும் நீ என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்னைச் சுற்றிலும் உன் பார்வை உன் இருப்பு விரிந்த வானின் கீழ் கையகல நிலத்தில் ஊசி முனையில் நின்று கொண்டு உன்னைப் பற்றி நினைக்கிறேன் அதே வானின் கீழ் மலைகளுக்கப்பால் மற்றொரு ஊசி முனையில் நின்று கொண்டு அதை நீ கேட்கிறாய் யாருமற்ற அந்தரத்தில் நம் சந்திப்பு 49) மாற்றி மாற்றி வைத்துக் கொண்டே இருந்தது பீறிட்டு வரும் நீரூற்று அதன் மென்பாதங்களை என்ன செய்ததோ அழுத்த அழுத்த கூடும் விசையில் உன்மத்தம் கொண்டது மேலும் அழுத்த முற்றிலும் அடங்கி பின் மற்றொரு திசையில் பீறிட பித்துக் கொண்ட அப்பூனை இன்னும் இன்னும் கிளர்ந்து விளையாடிக் கொண்டே இருக்கிறது 50) துல்லியமாயிருந்தது வானம் கழுவித் துடைத்தாற் போல் அனைத்தும் ஒளி கொண்டிருந்தன எங்கும் வான் நீலம் அருகிருந்த கடல் மட்டும் பச்சை பார்க்க பார்க்க வானம் தன் திரையை இழுத்துக் கொண்டது வானாயிருந்த தூரத்துக் கடல் இப்போது தனி நீலம் கொண்டது இரு பிரம்மாண்டங்கள் ஒன்றை ஒன்று நோக்கிக் கொண்டன எல்லைகள் விரிந்தன தொடுவான் மிகத் தொலைவில் மீண்டும் ஒன்றாகும் வரை திகைந்த இப்புது உலகம் திகழும் 51) முதலில் அவரிருவரும் ஒன்றாய் இருந்தனர் பின் பிரிந்து எதிரெதிர் நின்றனர் அவள் ஆற்றலின் முன் அவன் தோற்றே போனான் மொழி செல்வம் உடைமைகள் அனைத்தும் அவளது ஆயின அடுத்த முறை அவன் வென்றான் அவன் மாயமதுவென்றெண்ணி கண் மறைத்தாள் காண்பதற்கு அவனின்றி அவளே இல்லாதானாள் கண் திறக்க தோள் சேர்ந்து இணை பிரியாதாயினர் பார்ப்பவனும் பார்க்கப்படுபவனுமாய் 52) முதன் முதலில் உன்னைப் பார்த்த போது காற்றிலாடும் கொடியாய் படபடத்துக் கொண்டிருந்தாய் துள்ளுதல் என்றே அறிந்திருந்தேன் உன்னை சிட்டுக்குருவி பின் மெல்ல மெல்ல கால்கள் தரித்தன கண்கள் சாந்தம் கொண்டன உதடுகள் குறுநகை பூத்தன அமைந்திருக்கலானாய் இயைந்திருந்தோம் இதோ விட்டகலவும் போகிறாய் உன்னை என்னில் நிறைத்து விட்டு தேனொழுக்காய் 53) என்ன மகிழ்ச்சி வந்து விட்டதென்று பொங்கிப் பொங்கிச் சிரிக்கிறது இந்த நீரூற்று வாசனையும் அழகுமாய் பூக்கள் சொரிந்து நிற்கிறது இந்த மரம் அந்தியின் தொடுவானைப் போல சிவந்திருக்கிறது இப்போது தான் கழுவிய இந்த மருதாணிக் கை 54) கண்ணிலிருந்து கரைந்து ஈஷியிருக்கும் மை கன்னத்துப் பரு காதோர மென் மயிர் கழுத்தின் கருந்தடம் அலமாரியில் அடுக்கி வைத்த அவள் புடவை வாசம் இவையெல்லாம் எதற்கு அவளை பேரழகியாக்க காதல் திரு முதலில் அமர்வது அவன் மார்பினிலென்றால் 55) மடியில் அமர்த்திக் கொள்கிறான் கால் பொடியை நெற்றியில் சூடுகிறான் தோளில் ஏற்றிக் கொள்கிறான் சுற்றிச் சுற்றி வருகிறான் பெருங்காதலன் கொஞ்சிக் கொஞ்சி முத்தம் பெற்றுக் கொள்கிறான் அம்முத்தம் அமுதம் அதை மார்பில் அணிந்ததாலேயே அவன் பேராண்மகன் 56) முதற் புலரியின் ஓசை நீ விழித்தெழக் கூவுகிறாய் எரி சுமந்தோய் அனைத்தையும் வெல்கிறாய் உச்சிக் கூடு கட்டி உயிர் புரப்பாய் கரியன் வலியன் சாத்தன் நீ 57) அணைக்க வருகிறாய் முகம் திருப்பிக் கொள்கிறேன் இன்னொரு முறை இன்னொரு முறை மனம் அடித்துக் கொள்கிறது மீண்டும் அருகில் வருகிறாய் நகர்ந்து செல்ல முயல்கிறேன் இழுத்து அணை இழுத்து அணை திமிறிப் பறந்து தூரச் செல்கிறேன் பின்னாலேயே வா பின்னாலேயே வா ஓரக் கண்ணால் திரும்பிப் பார்த்து வரவில்லையென்றானவுடன் சோர்வாக வானைப் பார்த்து அமர்கிறேன் வந்தால்.. கையெட்டாத் தொலைவுக்கு மீண்டும் பாடிய படி பறந்து செல்வேன் 58) திசையை மறைத்துக் கொண்டு படுத்திருந்தது அது.. அதன் கண்படும் தூரத்தில் சின்னப் பறவைகள் அலகோடு அலகு பொருத்தி கொஞ்சிக் கொண்டிருந்தன ஒன்று பறந்து சுழன்று வந்து கொஞ்சியது பின் இது பறந்து சென்று மீண்டும் வந்து கொஞ்சியது அது மெல்லச் சிரித்துக் கொண்டது சட்டென்று அதற்கொரு சந்தேகம்.. பறந்து சென்றதா மீண்டு வந்தது அதனாலென்ன.. குறு நகை இன்னும் கொஞ்சம் பெரிதாகியது 59) உள்ளங்கையில் உள்ளங்கை தோளோடு தோள் இதயத்தின் அருகே இதயம் வைத்துக் கேட்பது வலி குறையும் ஓசை 60) ஊசி முனையளவும் வேடமற்ற ஆடையற்ற சுத்த முழுக் காமமும் கூட தெய்வமே தான் மரங்கள் நிறைந்த காட்டில் பாதக்குறடணிந்து பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்த இரவலனைப் போல 61) நேராக நுழைந்த கத்தி செவி வழி ஆன்மாவைத் தொட்டு சொல்லாய்த் தீயாய் தலை வணங்கத் திகழ்வதே அது பார்வையோ வாசனையோ அற்றவனின் பாதமே சென்னியில் அமைவது 62) தரையெங்கும் கொட்டிக் கிடந்தன மரமல்லிப் பூக்கள் நட்சத்திரங்களாய் கை மறையும் அந்தி மினுங்கியது அவள் கண் நீலம் மிச்சமிருந்த செம்மையையும் பூசியிருந்த நீலவானம் காத்திருந்தாள் படகிலாட 'ராதே..ராதே..' உன்மத்தம் கொண்டு இப்போதும் சுழன்றாடுவரோ 63) நரையோடிய தலையை கையால் நீவி முடிந்தாள் முகத்தைத் தலைப்பால் அழுந்த துடைத்த படி கால் நீட்டி அமர்ந்து கொண்டாள் வலித்த முட்டியை நீவிக் கொண்டே பழைய படத்தைப் பார்க்கலானாள் இம்முறை அக்காட்சி அதிர்வின்றிக் கடந்தது துணுக்குற்று அவசரமாய் காட்சியை மாற்றினாள் இப்போது கிள்ளையொன்று தன் வளைந்த அலகால் வேப்பம்பழத்தை கொரித்துக் கொண்டிருந்தது 64) பழைய ஆல்பம் பகைவனின் புகைப்படம் இவன் படம் என்னிடம் எப்படி புன்னகைத்துக் கொண்டிருந்தான் சிறிய வெட்கம் வேறு எத்தனை அழகு இந்தப் புன்னகை மட்டும் எனக்கானதாக இருந்திருந்தால்.. தவறான அறைக்குள் நுழைந்த எரிச்சலில் மூடினேன் அந்தரங்கத்தைக் காண நேர்வது துர்ப்பாக்கியம் தான் யாருடையதாயினும் 65) தொலைபேசியில் ஒருவர் கொஞ்சலாக பேசிக்கொண்டு உணவு மேஜையில் மூவர் அரட்டை அடித்துக் கொண்டு வாசலில் இருவர் செய்தித்தாள் வாசித்துக் கொண்டு இரண்டு சிறார்கள் கைக்குழந்தையின் அம்மையிடம் ஒன்று மிதிவண்டியில் ஒன்று குதிரையில் யாவர்க்குமாய் அரை ஆழாக்கு சோறு பொங்க ஆயத்தமானாள் 66) கருநீலப் புடவை பெரிய பொட்டு காதோர சுருள் குழல் கொஞ்சம் பூ கீற்றாய்த் தெரியும் நெற்றி ஜவ்வாது மணம் உதிருதிராய் வெண்டை தெளிந்த ரசம் எத்தனை பிடிக்கும் அவனுக்கு கரையிலமர்ந்து அசை போடுகிறாள் கங்கையின் சுழலை நோக்கி 67) கண்களைச் சுற்றி சுருக்கம் வாயைச் சுற்றியும் தான் தலை முழுவதும் நரை உடலும் வற்றல் தான் சுருங்கிப் போன கையால் மெல்லப் போடுகிறாள் அன்னம் என்னவள்.. மெல்லத் தொடுகிறேன் கண்களைப் பார்க்கிறேன் வியப்பு வெட்கம் 'லூசு' மெல்லச் சிரித்துக் கொள்கிறாள் பெருமூச்சுடன் சோற்றுத் தட்டைப் பார்க்கிறேன் அவள் கை இன்னமொரு முறை அன்னமிடுகிறது 68) சலனமற்றிருந்தது அக்கடல் அதைக் கிழித்துக் கொண்டு சென்றது ஒரு படகு உழுது சென்ற பள்ளத்தை நீர் இட்டு நிரப்பி விட்டது மீண்டும் பச்சைப் பரப்பு ஆயினும் தடம் மறைய வில்லை சின்னச் சின்ன அலையாய் அது எங்கெங்கோ பயணிக்கிறது அடங்கும் முன் மற்றொரு படகு அங்கு வந்து விடலாம் வந்தால் தான் என்ன அது நீரன்றோ 69) சுத்த ஆகாசத்தை பிரதிபலிக்கும் நீலத் தடாகம் அருகில் சென்றதும் தெளிவாய்த் தெரிந்தன அடியின் கற்களும் பாறைகளும் வண்டலும் சேறும் கல்லொன்று எரிந்தனர் உண்டானது நீர்க்கோலம் கலங்கித் தெளிய மீண்டும் நிஜ தரிசனம் இம்முறை ஒரு நூல் உயர்ந்து 70) வரிசையாய் தலையும் வாலும் ஒளிரும் மின்மினிகள் அருகே பெரும் புற்றுகள் ஒவ்வொரு துளையிலும் வெவ்வேறு காட்சிகள் இதற்குள் எப்படிச் செல்வார்கள் ஒன்றை எடுத்துப் பார்த்தேன் உள்ளிருந்த எல்லாம் நொறுங்கின ஜாக்கிரதையாக கீழே வைத்தேன் பெருமூச்சு விட்டேன் அடித்துச் செல்லப்பட்டன மின்மினிகள் ஒன்றை ஒற்றி எடுத்தேன் விரல் அடுக்கொன்றில் மோதி விட்டது அது சரிந்து மற்றொன்றின் மேல் விழுந்தது அதுவும் சரிய அனைத்தும் கலைந்தன சிற்றுயிர்கள் மந்தை மந்தையாய் அகன்று ஓடின கொத்தாக அள்ளினேன் ஒன்று என்னைக் கடித்து விட்டது கையை உதறிப் பின்னடைந்தேன் விஷம் கொண்டவர்கள் கடித்த தடம் கன்றிப் போனது வலியில் கண் மூடிக் கொண்டேன் மீண்டும் திறந்த போது அதே இடத்தில் அதே போல் மின்மினிகள் ஊர்ந்து கொண்டிருந்தன இன்னும் உயரமான புற்றுகள் முளைத்திருந்தன 71) பன்னிரண்டு கால்கள் எட்டுக் கைகள் நான்கு கொம்புகள் ஆறு விஷக் கொடுக்குகள் பத்து கண்கள் ஐந்து வாய்கள் மூன்று சிறகுகள் பேருருவம் கொண்டிருந்தாள் ஒரு கையால் மக்களைப் புரந்தாள் மற்றொன்றால் உணவு சேர்த்தாள் ஒன்றால் கூடு அமைத்தாள் மற்றொன்றால் எதிரிகளை அழித்தாள் நூறு ஆயிரம் முட்டைகள் இட்டாள் அவர்களின் உலகை அவளே சிருஷ்டித்தாள் அவர்களின் பராசக்தி அவர்களின் வான் நிறைந்து நின்று அவர்களைக் காத்தாள் சில சமயம் அழிக்கவும் செய்தாள் அவரவர்க்கு அவரவர் தெய்வம் 72) வலை போன்றிருந்தது அது மக்களைப் பெற்றவள் புன்னகையுடன் ராணியாய் சேவகர் புடை சூழ நடுவே அமர்ந்திருந்தாள் அடுத்த ஈற்று கருவுற்றிருந்தாள் அவளுக்குப் பிறக்கப் போகும் ஒருத்திக்கு சிறகு முளைக்கும் தன் காதலனுடன் உல்லாசமாய் பறப்பாள் காற்றில் கலப்பர் தரை தொடுவர் அவள் சிறகிழப்பாள் அவன் நினைவுகளை ஈற்று ஈற்றாய் பிரசவித்து தனக்கென்று நாடு கொள்வாள் வழிவழியாய் சிறகிழந்து நாடு கொண்டு கோலோச்சினாள் ராணி பின்னொரு சமயம் சிறகிழந்து நாடிழந்து மானமுமிழந்து அடிமையானாள் 73) அங்கு வேண்டியபோது உணவுண்ணலாகாது பிடித்ததை உண்ணமுடியாது கிடைத்ததை ருசித்துண்ணக் கூடாது போதவில்லை என்ற சொல்லே கூடாது மற்றவருக்கு பசியெடுக்க இவர் நோன்பிருத்தல் வேண்டும் அவரிலையில் தான் இவருணவு அவருக்கு போதுமென்றால் இவருக்கும் தான் உணவென்றக் கனவுமின்றி கிடைத்ததை உண்டு நொடியில் சுவையறிந்து பசி நிறைந்து உயிரும் தரித்தல் வேண்டும் வீதி வீதியாய்.. விசித்திர ஊமைகள் வாழும் விநோத ஊரது 74) பண்டொரு சிலை இருந்தது அழகி என்றால் அவள் தான் என்றனர் சுற்றிச் சுற்றி வந்து ரசித்தனர் அவளிலிருந்து பல சிலைகள் செய்தனர் பின் ஒரு நாள் பெரும் மின்னல் கண் திறந்தது மூச்சும் சொற்களும் அவள் சுவாதீனமாயின தன் திசையைத் தானே தேர்ந்தாள் வாழ அங்கிருந்து நகர்ந்தாள் உயிர் கொண்டதால் பேரழகியானவள் 75) ஏதுமின்றி இருந்தேன் ஆடை அணியச் சொன்னாய் அணிகள் பூணச் சொன்னாய் உன் மீது இரக்கம் கொண்டேன் அனைத்தையும் அணிந்து கொண்டேன் நிறைந்திருக்கிறேன் என்று கண்ணீர் மல்கினாய் விரும்பும் வரை புனைந்திருப்பேன் நிம்மதியாக இரு 76) அல்லோம். யாம் யாருக்கும் குடியல்லோம் அன்புக்கன்றி அன்பையும் யாம் அஞ்சோம் யாம் வரம்பின்றி விரிவோம் நீரும் யாமேயாம் 77) பூவிதழ் விழும் ஓசையாய் ஒலிக்கிறது அம்மனம் முகம் உடல் தோல் திரையிட்டிருக்கின்றன ஆன்மாவை சிறு அசைவும் தள்ளாடச் செய்கிறது அப்படகை அவன் கண்களைக் கேட்கக்கற்றுக் கொள்ளுங்கள் மூச்சில் சொற்களாய் ஆகும் வரை காத்திருப்பது கூட அழகன்று 78) இழுத்துக் கட்டிய முரசுத் தோல் விம் விம்மென்று அதிர்ந்து கொண்டிருந்தது கடந்து செல்லும் காற்றினால் இன்னும் தொடவே செய்யாத கையினால் சிலிர்த்தெழுந்து அசைவனைத்தையும் ஒலியாக்கியது ஒலி மிக அடியும் மிகுந்தது பின்னொரு நாள் கட்டுத் தளர அது ஊமையாய் மூலையில் அமர்ந்தது இவ்வெற்றியைச் சொல்ல வரிசையாய் மூலையில் அமர்ந்திருக்கும் அத்தனை முரசுகளில் எதை எடுப்பது 79) நிலையற்றிருந்தேன் தவித்தேன் இருக்கவோ கிடக்கவோ முடியவில்லை பெரும் வலி பின் பிறந்தது வீறிட்டழும் சட்டென உறங்கும் அவ்வப்போது மெல்லப் புன்னகைக்கும் என் மீது தாவி ஏற அடம் பிடிக்கும் சத்தம் அதிகம் தான் மூக்கு சிறியது பலமில்லை வயிறு உப்பல் சவலை எப்போதாவது கை கால் உறுதி கொண்டு முகம் தெளியும் நானாகி இங்கு இருக்கப் போவது 80) என் மணற் பரல்களோடு ஒன்றாய் இதுவும் கலந்திருக்கிறது கண் கூசும் ஒளியில்லை யாரும் கவனிக்கவுமில்லை ஆனாலும் இது வைரமே தான் பார்க்கப்படாமல் இருப்பதே நல்லது இன்னும் ஆழ ஒக்கலில் புதைத்துக் கொள்கிறேன் என் பொக்கிஷம் இதைச் சுமப்பதாலேயே நான் பேரழகு கொள்கிறேன் 81) பெரும்பாலும் எவரும் என்னைப் பறிப்பதில்லை திரும்பிக் கூட பார்ப்பதில்லை நான் உற்றுப் பார்க்கிறேன் சிலசமயம் வண்டிகள் சிலசமயம் மனிதர்கள் சிலசமயம் விலங்குகள் சிலசமயம் பறவைகள் எப்போதாவது ஒரு வண்டு அல்லது ஒரு பட்டாம்பூச்சி என்னையும் கடந்து செல்வதுண்டு காற்று அவ்வப்போது அசைப்பதுண்டு வண்டிகள் என்னை வேரோடு அசைப்பதுண்டு சில கால்கள் என் மீது நடப்பதுண்டு சில என்னை உதைப்பதுமுண்டு யாராவது சிறுநீர் கழிக்கையில் என் மீதும் சில துளிகள் தெறிப்பதுண்டு பயனற்றவள் நான் எனினும் ஒவ்வொரு நாளும் மலர்கிறேன் உயிர் என்பதாலோ வர்ணம் என்பதாலோ இம்மாபெரும் இருப்பின் ஒரு துளி என்பதாலோ கூட அல்ல எனக்கு அதைத்தவிர வேறொன்றும் தெரியாது என்பதால்.. 82) மேகங்கள் அற்ற வானம் பறவைகள் இல்லை அலைகள் அற்ற கடல் ஆழமும் இல்லை கடலில் விழுந்த கல்லாய் காலில் கட்டிய எடையாய் எதிரொலியே அற்ற நிசப்தமாய் கனத்த மௌனம் நைந்து போன சொற்கள் புல்வெளிகள் நீரூற்றுகள் அலங்கார விளக்குகள் ஜோடனை செய்யலாம் தான் அது பிணத்தின் இளிப்பே தான் 83) மெல்லிய குளிர் பெரிய அறை நீளமான சிவப்பு கம்பளம் விளக்குகள் ஒவ்வொரு விளக்கின் கீழும் ஒரு சித்திரம் அதன் எதிரில் ஒரு இருக்கை சித்திரங்களைப் பார்த்தனர் சிலர் படியெடுத்தனர் சிலர் அறையின் மூலையில் அமர்ந்திருந்தான் அவன் கடந்து செல்லும் கால்கள் ஒவ்வொன்றாய் பார்த்தபடி தன்னுடையதின் எதிரே தயங்கி நிற்க அவைகளைக் கோரிய படி கடைசியில் ஒருத்தி அதனெதிரே அமர்ந்தாள் அவன் அங்கிருந்து அகன்றான் 84) அதிகாலை முதலே கருக் கொண்டிருந்தது தளும்பக் காத்திருக்கும் கண்ணீர் துளியாய் பாரம் மிக பொழியத் துவங்கும் பெய்யப் பெய்ய இலகுவாகும் முற்றிலும் தன்னை பெய்தே ஓயும் வேண்டுவோர் வேண்டாதாரின்றி பெய்யெனப் பெய்ய மீண்டும் தவத்தில் ஆழ்கின்றன மழை தீர்ந்த மேகங்கள் 85) ஜன்னலுக்கு வெளியே விரிந்த நீல வானம் அதன் ஆடியாய் பெருங்கடல் மிதக்கும் கப்பல்கள் கரை தொடும் படகுகள் நீரூற்றுகள் வண்ண மலர்கள் என இவ்வாறு இல்லாவிட்டால் அல்லது இருப்பது போல் எண்ணிக் கொள்ளா விட்டால் இருத்தல் எங்கனம் 86) கை கால்களை ஆட்டியாட்டி குப்புற விழுந்தே விடும் குழந்தையாய் செதுக்கத் துவங்கினான் உருவு கொண்டு வந்தது அவன் கண்டதா என்ன தனக்கென மனம் கொண்டுள்ளது வண்ணங்களில் தன்னை நிகழ்த்திக் கொள்ளும் புதுப்புதுக் கோலத்தைப் போல 87) அவள் வீடு மலையின் உச்சியில் இருந்தது வீட்டுக்குள் எப்போதும் அவள் இசை சின்னன்சிறு சொப்புப் பாத்திரங்கள் அவள் நினைத்ததை நினைத்தவுடன் சமைத்துக் கொடுத்தன சுற்றிலும் வேண்டியபோது மழை தெய்வங்களும் பூதங்களும் ஏவல் செய்தன அழகென்றால் அழகு ஒளியென்றால் ஒளி இல்லையென்றாலும் இல்லை தான் அவள் தன் சொந்த உச்சி வீட்டை நீங்க விழைவதேயில்லை நீங்கினாலும் பாதையை பத்திரமாய் பிடித்த படி மெல்லத் தரையிறங்குவாள் அது புகைப் பாதை என்றறியாமல்.. 88) அறையின் மூலையில் ஒரு பச்சை நிற பூ ஜாடி சற்றுத் தள்ளி இரண்டு டம்ப்பெல்ஸ் மேசையின் மீது கழற்றி வைக்கப்பட்ட கொலுசு கையில் ஒரு கோப்பை காபி கவிதை..கவிதை.. அரற்றுகிறது மனம் துள்ளி அடையும் எவ்வுச்சத்தில் எங்கும் கவிதைகள் மெல்ல அருந்துகிறேன் ஒவ்வொரு துளியையும் கவிதையாய் 89) அக்கடையில் பல வண்ணங்களில் கவிதைக் குவியல்கள் மஞ்சளில் ஒரு கூறு பச்சையில் ஒன்று இன்னும் பல வண்ணங்களில் ஒவ்வொன்று 'அம்மா வாங்க, அய்யா வாங்க' 'கவித வாங்க, வாங்க வாங்க' 'சல்லிசு தான் ஐயா, வாங்குங்க மஞ்ச கவித ரெண்டு வாங்கினா பச்ச கவித ரெண்டு ஃப்ரீ' கூவிக் கொண்டிருந்தாள் கடைக்காரி யோசித்துக் கொண்டே கடையருகில் நின்றான் 'மஞ்சள்ல ரண்டு குடும்மா. பச்ச ரண்டு கெடைக்கும்ல' ‘பச்ச நாலே எடுத்துக்கங்க’ கடைக்காரி புன்னகைத்தாள் 'செவப்பு?' 'ஐயோ வேணவே வேணாம்' வாங்கிய கவிதைப் பையை எடுத்துக் கொண்டு திரும்பியவனின் முதுகு மறையும் வரை பார்த்துக் கொண்டேயிருந்தாள் கடைக்காரி 90) அடர் காடு பல வண்ணப் பச்சை மரத்திலிருந்து மரம் தத்தித் தத்தி பார்க்காதவரிடமும் மறைந்திருந்து ஒவ்வொரு முறையும் புதிது புதிதாய் பாடி மகிழ்கிறது ஒரு பறவை தன்னைப் போன்றே பறவைகள் சூழ ஒவ்வொன்றும் ஒரு ராகம் பாட பெரும் பாடலொன்றின் ஒரு வரியையே மீண்டும் மீண்டும் பாடித் திரிவதை அறியுமா அப்பறவை 91) குயவன் ஒருவன் தன்னோடு தான் மட்டுமாகி தனக்கென்று பானை ஒன்றை வனைந்தான் அதில் வெள்ளையும் பச்சையும் மஞ்சளும் என வர்ணம் தீட்டினான் மயிலும் கிளியும் குருவியும் வரைந்தான் மதியத்தில் அங்கு வந்த ஒரு பயணிக்கு அதில் குளிர்ந்த நீரளித்தான் பயணியின் கண்களைப் பார்த்த குயவன் புன்னகையுடன் பானையை தந்து விட்டு மெல்ல அங்கிருந்து விலகினான் 92) நான் என நீ நினைக்கும் என் பிம்பத்துடனே உன் உறவு எனக்கும் அதுவே தழல் ஆட ஆட புன்னகைக்கிறேன் உன்னைப் பார்த்து என்னையும் தான் 93) கலைத்துக் கலைத்து அடுக்குகிறது வரைந்து வரைந்து அழிக்கிறது நான் உருக்கி உருக்கி வார்க்கிறேன் ஒவ்வொரு முறையும் புதிதாய் அதுவேயாய் 94) முகமற்றவளின் சிரிப்பு ஆன்மாவை நனைக்கிறது அவள் அழுகையும் தான் குரல் கூடத்தேவையில்லை மொழி செவிக்கானதோ விழிக்கானதோ அன்று 95) என்னையே சுற்றி சுழித்து ஓடிக்கொண்டிருந்தது இப்போது எங்கோ தொலைவில் ஒரு நொடி மௌனித்து விட்டு நானும் கடந்து செல்கிறேன் 96) கையசைவோ கண்ணிமைப்போ புன்னகையோ நினைவோ கூட வேண்டியிராத் தனிமை பேரினிமை தவம் முழுமை