எப்போதும் வெல்லும் ஒன்று

காலடியிலேயே கிடக்கிறேன்
எப்போதும்
சென்னியிலேற்றி
அலைகிறேன்
தெய்வமெனத் தொழுகிறேன்
உன் முன்னால்
ஆயிரம் முறை
கழுத்தறுத்து விழுகிறேன்

நீ
முன்னும்
பின்னுமென
இரு பக்கமும்
கூரான கத்தி

குத்தும் போதெல்லாம்
என் உள்ளும் ஏறுகிறாய்

உறவு
உயிர்
மனம்
முற்றிலும் பலி கொண்டே ஆறுகிறாய்

என்
முள் கிரீடம்
கண்ணை மறைத்துத் தான் விடுகிறாய்
பெருக்கும் குருதி மழையில்

எனக்காவது நீ கிரீடம்
அவனுக்கு சுடுகலன்
எப்போதும் ஆறுவதில்லை நீ சுட்ட வடு

அடேய்..
ஓடிப் போய் விடு
இதைக் கண்டால்
உயிராவது எஞ்சும்

என்
போதையிது
சொல்லச் சொல்ல நாவினிக்கத்தான் செய்கிறது
எனக்கு மட்டும்

சுய நலமிக்கதிது

ஆம்..
அதனால் தான்
ஒவ்வொரு முறையும் இதுவே வெல்கிறது