
இந்த ஜனவரி மாதத்தில், ‘வல்லினம்’ இதழில் நான்கு சிறுகதைகள் வெளியாகியுள்ளன-ஜெயமோகனின் ‘பெருங்கை’, ஷோபா சக்தியின் ‘வர்ணகலா’, பா. திருச்செந்தாழையின் ‘நெருப்பில் விளைபவை’, அஜிதனின் ‘ஜஸ்டினும் நியாயத் தீர்ப்பும்’. நான்குமே நல்ல வாசிப்பனுபவத்தை தரக்கூடியவையாக இருக்கின்றன.
பெருங்கை:
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு யானைகளின் மீது இருக்கும் தனிப்பட்ட பிரியம் அவரின் வாசகர்கள் அனைவரும் அறிந்ததே. இக்கதையிலும் ‘கேசவன்’ என்னும் யானை வருகிறது. பாறாங்கற்களை பூப்போல எடுத்து வைக்கும் தன் பெருங்கையினால், நீல நிற ரப்பர் வளவிகளையும் உடையாமல் எடுத்து விளையாடுகிறது தன் பாகனுடன். அவனுக்கு ஆசானின் மகள் சந்திரியின் மீதிருக்கும் காதலை முதலில் அறிந்து கொள்வது கேசவன் தான். அவன் அச்சம் கொண்டு வளவிகளை தராமல் மறைத்து விடலாம் என நினைக்கும் போது, அவற்றை சந்திரியிடம் எடுத்துக் கொடுத்து அவர்கள் காதலை சேர்த்து வைப்பதும் கேசவன் தான்.
பிரபஞ்சத்தின் பெருங்கருணையின் குறியீடாக, ஆகாசத்தைப் போல் பெருத்த கருத்த யானை; அதனால் எத்தனை சுலபமாக பெரிய பாரங்களையும், காரியங்களையும் கையாள முடியுமோ அதே அளவு சுலபமாக நுட்பங்களையும் கையாள முடியும் என்னும் சித்தரிப்பு; பாகனின் காதலை புரிந்து கொள்ளும் நுண்ணறிவு, இவையனைத்துமே ஜெயமோகனின் கதையுலகில் ஏற்கனவே சந்தித்த சூழல்கள் தான். அதே பழகிய விஷயங்களை புதிய வார்ப்பில் அளித்திருப்பதாகத் தோன்றியது. ஜெயமோகனின் கதைக் களத்தோடு இருக்கக் கூடிய அதிகமான பரிச்சயமும் இத்தோன்றலுக்குக் காரணமாக இருக்கலாம்.
இக்கதையை வாசிக்கும் போது, குறியீடு, படிமம் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், அழகிய காதல் கதையை அனுபவித்து வாசிக்கும் எளிய வாசகியாகவே இருந்திருக்கலாமோ எனவும் தோன்றியது.
வர்ணகலா:
‘வர்ணகலா’ ஷோபாசக்தியின் காத்திரமான படைப்பு. சாதியுணர்வின் கோர முகம் மெல்ல வெளித் தெரியும் கதைக்களன். பாரிஸில் வாழும் தமிழர்களின் பகட்டை பகடி செய்யும் விதம், கதையின் முடிச்சை வாசகரையே யூகிக்கச் சொல்லும் வரிகள், கதையின் சில்லிட வைக்கும் முடிவு என கதை மிக நன்றாக அமைந்து வந்திருக்கிறது. ஷோபாசக்தியின் ‘பாக்ஸ்’ நாவலை நான் முன்பே வாசித்திருக்கிறேன். நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இலங்கையை நினைக்கும் போதெல்லாம் இந்தக் கதையும் நினைவுக்கு வரும், நெடுங்காலம்.
நெருப்பில் வளர்பவை;
பா. திருச்செந்தாழையின் இக்கதை நுணுக்கமான வேலைப்பாடுகளால் செய்யப்பட்ட ஒரு சிற்பம். ஒவ்வொரு வரியும், சித்தரிப்பும் முக்கியமானவை, ஓவியத் தன்மை கொண்டவை. இவரின் “ஆபரணம்’ சிறுகதையும் இதைப் போன்றதே.
இக்கதையில் வரும் அம்மையின் கையறு நிலை, அசந்தர்ப்பமாக அங்கு அமர்ந்திருக்கும் மலை, அவளின் அப்பா அவளைக் கைவிடும் குரூரம், பொரி தொழிற்சாலையில் நைட் ஷிப்டுக்க்காக அவள் பூசிக் கொள்ளும் பவுடரைப் போன்ற அந்த இளிப்பு, அக்கையின் சுயகௌரவம், தான்யாவை மண்ணை அளைய விடாது அவள் விரல்களைப் பற்றிக் கொள்ளும் காட்சி, அம்மை கேட்டுக் கொண்டதும் அவளுக்காக திரைச்சீலையை இறக்கி விட்டு தானும் அந்த இருளில் அமிழும் கதைசொல்லி என நுண் சித்தரிப்புகளால் பொலிகிறது இக்கதை. இன்னும் இத்தகைய சித்திரிப்புகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். நான்கு கதைகளில் மிகச் சிறந்தது இதுவே.
கதையின் பெயர் மட்டும் வேறு ஏதாவதாக இருந்திருக்கலாம் எனத் தோன்றியது.
ஜஸ்டினும் நியாயத் தீர்ப்பும்:
முழுமையான அடியாளாக, ரௌடித்தனத்தில் ஒரு நிலையை அடைய, மாமனிடம் தன்னை நிரூபித்துக் கொள்ளும் பயணத்தில் இருக்கிறான் ஜஸ்டின். கசாயம் அவனுடைய நண்பன் மற்றும் அடியாள் அல்லது கைத்தடி. தன் முதல் ரௌடித்தனத்தை செய்வதற்கு முன் ஜஸ்டின் செய்யும் சில தேர்வுளைச் சொல்கிறது இக்கதை. சாமிக்கு மாலை போட்ட நல்ல பெருமாளை கொல்லப் போவதில்லை என ஜஸ்டின் முடிவெடுக்கிறான், தன் மாமனின் அதட்டல்களையும் மீறி. தினந்தோறும் அவன் தெருவுக்கே சென்று தான் கொல்ல வேண்டியவனுக்கே காவலாய் இருக்கிறான். மாமன் அனுப்பும் ஆட்களோடும் சண்டையிட்டு நல்ல பெருமாளை அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். கொலைகாரன் காவல்சாமி ஆகுமிடம். அதே ஜஸ்டின், சாமி மலையேறியவுடன் தயக்கமின்றி அவனைக் குத்தி விடுகிறான்.
அதே போல் இஞ்சினீயரிங்க் படித்துக் கொண்டிருக்கும் தன் தம்பி இதிலெல்லாம் தலையிடாமல் இருக்க வேண்டும் என நினைக்கும் இடத்திலும் ஜஸ்டின் ரௌடியல்லாது, அடியாளல்லாது மற்றொருவனாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறான். ஜஸ்டின் ஒரு முப்பரிமாண பாத்திரப் படைப்பு.
வேற்று மதத்தை சேர்ந்தவனாயினும், சாமியாக இருக்கும் போது அவனைக் கொல்லாமல் இருந்து, அவனுக்கு சரியானது எனத் தோன்றியதைச் செய்த நல்ல செயலுக்காகத் தான் ஏசப்பா அவனுக்கு சொர்க்கத்தை வேண்டா வெறுப்பாகவேனும் அளிக்கிறார். ஏசப்பா, ஜஸ்டின் உரையாடல் அருமையான நகைச்சுவையாக அமைந்திருக்கிறது.
ஆயினும்
//நெடுநாட்கள் கழிந்தது.
பல்லாயிரம் பல லட்சம் ஆண்டுகள் கழிந்து, உலகின் கடைசி நாளும் வந்து சேர்ந்தது.// இந்த வரிகளில் ஒரு அமெச்சூர் தனம் வந்து விடுவதாக தோன்றுகிறது. இந்தப் பகுதி ஒரு பள்ளிக்கூட நாடகத்தைப் போல இருப்பதாகத் தோன்றுகிறது.
‘மைத்ரி’ நாவலிலும், அவள் அவனுக்கு, ” அதோ பார், கஸ்தூரி மான்”, ‘இதோ பார் ஆலமரம்’ எனச் கை நீட்டி காட்டும் இடங்களிலும் இந்த அமெச்சூர் தனம் எட்டிப் பார்த்து விடுகிறது.
கதை சொல்லும் உத்தியில் உள்ள இந்தச் சிறய விஷயத்தை தவிர்த்து விட்டுப் பார்த்தால், பல ஆழங்களைக் கொண்ட கதை இது.