மைத்ரி-அஜிதன்

ஒரு கணம் கூட அதை ஏற்கவில்லை
 நான் என் சுயத்தின் மதுவை கண்மூடிப் பருகினேன், 
பின் என் ஆழத்து இருளுடன் மல்லிட்டேன், 
அதை வீழ்த்தி நகங்களால் திசையெங்கும் கிழித்தெறிந்தேன். 
-லல்லேஷ்வரி

இவ்வாறு ஆரம்பிக்கிறது இந்நாவல்.

கௌரிகுந்துக்கு வரும் போது தனியனாக, கசப்பு மிகுந்தவனாக, காதலியை வெறுத்தவனாக, அவளிடமிருந்து தப்பி ஓடி வருபவனாக இருக்கிறான் ஹரன். நிச்சயமின்மை, அகந்தை, குரூரம் ஆகிய இழிவுகளைக் கொண்டவனாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன். கடுமையான சண்டைக்குப் பிறகு, அவன் காதலி கௌரியும் அவனைப் பற்றி அவ்வாறு தான் சொல்கிறாள். தங்கள் அகந்தைகளால் பகடையாடுகின்றனர் அவரிருவரும், அம்மையையும் அப்பனையும் போல. பின் அவனுக்கு ‘மைத்ரி’ நிகழ்கிறாள், புறவயமாகவும், குறியீட்டு ரீதியாகவும். ‘மைத்ரி’ என்றால் ‘நிபந்தனைகள் அற்ற அன்பு’ என்பது ஒரு பொருள். முடிவில் மலை முடியிலிருந்து இறங்கி, கௌரிகுந்தின் வெம்மையான நீரில் அமிழ்கிறான். என்ன அவன் நினைத்ததை விட சற்று அதிக வெம்மையாக இருக்கிறது அந்நீர் அவன் காதலியைப் போலவே.

சுயத்தின் மதுவைப் பருகியதிலிருந்து, இருளைக் கிழித்து வீசியெறிந்தது வரை ஹரனில் ஒரு பயணம் நடக்கிறது அகவயமாகவும் புறவயமாகவும். மைத்ரியால் செலுத்துப்படுகிறது அது. அப்பயணக் கதையே இந்நாவல்.

மைத்ரி தன் பிறந்த ஊரான கங்கிக்கு ஹரனை அழைத்துச் செல்கிறாள். கோவேறு கழுதைகளின் மீது ஏறிச் செல்கிறார்கள். சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த இடத்தில் இன்னும் அதே போல எரிந்து கொண்டிருக்கும் ஹோம குண்டம் இருக்கும் கோவிலுக்குச் செல்கிறார்கள். அவர்களின் பயணம், இ மசக்பீன் இசையோடே சேர்ந்து, தேவதாருக்களாலும், கஸ்தூரி மான்களாலும், மோனல் பறவைகளாலும், புக்யால் புல்வெளிகளாலும் பிலங்கனா நதியாலும் நிரம்பியிருக்கிறது. கங்கியிலிருந்து கௌரிகுந்துக்கு தன் காதலனைக் காண நடந்தே வரும் பிச்சி பெரியம்மாவாலும், திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விட்ட பெரியப்பாவாலும் தான்.

பயணம், நிறைய புறவயத் தகவல்களுடனும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உத்தராகாண்ட் செல்பவர்கள் எடுத்துச் செல்லத் தக்க கையேடு அளவு துல்லியமான தகவல்களை அளிக்கிறார் ஆசிரியர். அவ்விடத்தின் இசைக் கருவிகள், பெண்கள் அணியும் ஆபரணங்களின் பெயர்கள், கங்கியில் அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு வகைகள் அவற்றின் செய்முறைகள் உட்பட, வஸந்த உத்ஸவங்கள் அனைத்தும் விவரிக்கப்படுகின்றன. பாங்கு கலந்த நீரைப் பருகியதால் ஏற்படும் மயக்கம் போன்ற உறக்கத்தில் ஆழ்ந்து, ஹரன் வேறொரு காலப் பரிமாணத்துக்குச் செல்வது மிக அழகு. அவர்கள் திரும்பி வரும் போது விவரிக்கப்படும் மழையும் தான்.

ஒருவருக்கு ஒருவர் தீவிரமாக ஈர்க்கப்பட்டிருப்பதை இருவருமே உணர்கிறார்கள். வெளிப்படுத்தியும் கொள்கிறார்கள். மறுநாள் ஹரன் வலியால் அவதிப்படும்போதும் மைத்ரியின் முகமே அவனைத் தேற்றுகிறது. பெரியம்மாவைப் போல நடந்தே அவனிடம் வந்து சேர்கிறாள் இந்த ‘பஹாடி பிச்சி’யும். மந்தாகினி அருகில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கௌரியைப் பற்றி மைத்ரியிடம் சொல்கிறான் ஹரன். அவன் முட்டி மீது தலையை வைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறாள் மைத்ரி. அவளின் பெரியம்மாவுக்குத் தந்ததைப் போல, தேவி அவளுக்கும் தாங்க முடிவதை விட ஒரு துளி அதிக வலியை அளித்து விட்டாள் போல.

மறு நாளும் மைத்ரி வருகிறாள். இம்முறை ஹரனோடு கூடுகிறாள். ஒரு நொடி ஹரனுக்கு கௌரியின் முகம் நினைவில் வந்து செல்கிறது. கூடலின் பிறகு, எச்சொல்லுமின்றி, மைத்ரி மெல்ல விலகிச் செல்கிறாள். பிரிவை ஹரனால் தான் தாங்க முடிவதில்லை. பெருந்துயரோடு மலையேறிச் செல்கிறான். தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் போது அவனுக்குக் கேட்கிறது கௌரியின் குரல் கௌரிகுந்த் அருகிலிருந்து. படு வேகமாக இறங்கி வந்து கௌரிகுந்தின் நீரில் மூழ்குகிறான். தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டி தவம் புரியும் கௌரியை, சிவன் ஏற்றுக் கொள்ளும் இடம் கௌரிகுந்த். சிவன் தன் காதலை ஒப்புக் கொள்ளும் அதே இடத்தில் ஹரனும் தன் காதலை ஒப்புக் கொள்கிறான்.

மைத்ரியின் புகாரேயற்ற, காதலுக்காக காதலையே விடும் காதல் இந்நாவலின் சிறப்பு. மைத்ரி, கௌரி இருவரும் கொள்ளும், காதலின் இயல்பான நீட்சியான காமமும் தான். கற்பு, பத்தினி இவற்றுக்கெல்லாம் இதுகாறும் சொல்லப்பட்ட அர்த்தங்களை விடுத்து, அவற்றை redefine செய்யும் நவீன இளைஞர்களின் உலகைச் சேர்ந்தது இக்கதை.

காமத்தைப் பொறுத்த வரையில் இக்கதையில் கௌரியும், மைத்ரியும் கொள்ளும் ‘agency’ முக்கியமானது. அதைவிட முக்கியமானது, இந்த ‘agency’ இக்கதையில் point of discussion-ஏ இல்லை, normalize செய்யப்பட்டிருக்கிறது என்பது. இளம் எழுத்தாளர்களான அனோஜன், மயிலன் ஆகியோரின் கதைகளிலும் இக்கூறை நம்மால் பார்க்க முடிகிறது. மிக மிக வரவேற்கத் தக்கது இது.