நீர்மை – ந.முத்துசாமி

‘நீர்மை’ என்ற இக்கதை உண்மையில் எதைப் பேசுகிறது-தன் பத்தாவது வயது தொடங்கி விதவையாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட அவளின் துயரத்தையா, பெரும்பாலும் நீரிலேயே தன்னை மிதக்க விட்டிருக்கும் அவளின் பித்தையா, எக்குரலும் சென்று சேர முடியாத அவளின் தனிமையையா, அல்லது அத்துமீறல் நடந்ததா இல்லையா என்று தெளிவாகப் புலப்படாத ஒரு கலங்கலையா அல்லது இவை அனைத்தையுமேவா?

‘புஞ்சை’ என்னும் கிராமத்தில் வாழும் இம்மனுஷியை எல்லோரும் ‘தண்ணிப் பிசாசு’ என்று தான் அழைக்கின்றனர். எப்போதும் அவள் ‘சாலைக்குளம்’ என்னும் அக்குளத்தில் தன்னை மிதக்க விட்ட படியே இருக்கிறாள். எந்தப் பாரத்தைக் குறைத்துக் கொள்ள அவள் அவ்வாறு செய்கிறாள். காலத்தையா, அவளின் உடலையா, அல்லது அவளின் நினைவுகளையா, எதை உணராதிருக்க அவள் தன்னை எப்போதும் நீரிலேயே மிதக்க விடுகிறாள்.

பத்து வயது வரை, தோழி, திருமணம் என்று அக்காலத்தில் வாழ்ந்த எல்லோரையும் போலத் தான் அவள் வாழ்க்கையும் அமைந்திருக்கிறது. பத்தாவது வயதில், அவள் கணவன் இறந்து போகிறான். அவன் முகமாவது அவளுக்கு நினைவிருக்குமா என்பது சந்தேகம் தான். அவனின் அந்திமக் காரியங்களுக்காக அவள் தன் தந்தையோடு புகுந்த வீட்டுக்குச் செல்கிறாள். மீண்டு வரும் போது ஒரு வாழ்நாளையே வாழ்ந்து முடித்த அதிர்ச்சியோடு தான் வந்து சேர்கிறாள் என்கிறார் ஆசிரியர். எது அவள் பிஞ்சு மனதை அவ்வளவு அதிர்ச்சி கொள்ள வைக்கிறது.

தன் பிறந்த இடமும் இப்போது முன்பு போல் இல்லை. அவளின் தோழிகள் இப்போது தோழிகள் அல்லர். வெளியிலேயே செல்லாது அனைவரையும் பெயர்களாக மட்டுமே அறிகிறாள். நிகழ்வுகள் அனைத்தும் அவளுக்கு சொற்கள் மாத்திரமே. அடுத்த முப்பது ஆண்டுகள் முழுத் தனிமை. உண்மையில் அவளையும் பெயராக அன்றி உருவமாக எவருமே அறிவதில்லை அவ்வூரில். பின் விழுகிறது அடுத்த இடி அவள் தலையில். அவளுக்கு அணுக்கமான கடைசிக் கண்ணியான அவள் தந்தையும் இறந்து போகிறார். பிரேதத்தை எடுத்துச் செல்லும் போது தான், வேறு வழியே இன்றி அவள் மீண்டும் வெளியே வருகிறாள். அவளை உருவமாக அனைவரும் பார்க்கிறார்கள். அவளுக்கு அனைத்தும் அதிர்ச்சி தருவதாக உள்ளன, தன் தோழியின் தொடுதல் உட்பட. உண்மையில் அவளுக்குத் தன் தோழியை அடையாளமே தெரிவதில்லை. ஓடிப்போய் சாலைக் குளத்தின் நீரில் விழுகிறாள். ஒரு வேளை அந்த நீரின் ஸ்பரிசம் மட்டும் தான் அவளுக்கு பரிச்சயமானதாக இருக்கிறதோ? பூப்பெய்திய நாள் முதல், அவளுக்கு ஏற்பட்ட ஒரே ஸ்பரிசம் அது மட்டும் தானோ? சடங்குகளுக்காக காவிரிக்குக் கூட அவளை இழுத்துக் கொண்டு தான் போக வேண்டியிருந்தது என்கிறார் ஆசிரியர். அவளறிந்த ஒரே அன்னை மடி அந்த சாலைக்குள நீர் தான் என்று தோன்றுகிறது. அன்றிலிருந்து அடுத்த ஐம்பது வருடங்கள் அப்பெண் அச்சாலைக் குள நீரோடு தான் வாழ்ந்திருக்கிறாள்.

இப்போது 75-80 வயதாகியிருக்க வேண்டும் அவளுக்கு. கதை சொல்லியான கண்ணன் விவரம் தெரிந்து அப்போது தான் அவளின் இருப்பை கவனிக்க ஆரம்பிக்கிறான். தினமும் ஈரப் புடவையில், கால் முழுக்க வீதி மண் படிந்திருக்க அவர்கள் வீட்டில் வந்து பால், தயிர் வாங்க வருகிறாள். ‘பட்டு’ என்று இவன் அம்மாவை பெயர் சொல்லித் தான் அழைக்கிறாள். பைத்தியம் இல்லை. பெயர் சொல்லி அழைக்குமளவுக்குத் தெரிகிறது. தானே விரும்பித் தான், தன்னை அனைத்திலிருந்தும் துண்டித்துக் கொண்டு இருக்கிறாள் என்று தோன்றுகிறது.

கண்ணனும் அவன் தம்பியும் கால்சட்டையில்லாமல் விளையாடும் போது , கண்ணனை ‘கண்டாமணி’ என்று அழைத்துவிட்டு கொஞ்சம் சிரித்தும் கொள்கிறாள். அவன் கால்சட்டை அணிய ஆரம்பித்ததிலிருந்து அவ்வாறு அழைப்பதில்லை.

பின் அவளுக்கு மெல்ல ஓர்மை குலைகிறது. ஒருமுறை, இவனை வேறு யாரோ என்று நினைத்துப் பேசுகிறாள். மற்றொரு சமயம் ‘ நீ வெட்டியாரான் கோவிந்தன் பையனா?’ என்று கேட்டு விட்டு, ‘என்னைப் பார்த்து கல்லடிக்குப் பயந்து ஓரத்தில் கூனிக் குறுகி அடியைத் தவிர்த்து விடலாம் என்ற நம்பிக்கையோடு ஒடுங்கும் வெற்றுத் தெரு நாயைப் போல ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டு “யாருடா?” என்றாள்,’ என்கிறார் ஆசிரியர். பின் குடத்தை அங்கேயே போட்டு விட்டு தன் குளத்திற்கு ஓடிச் செல்கிறாள்.

வெட்டியாரான் அவளின் குத்தகைக்காரன் வரதராசுவின் பாட்டன். அவள் சிறுமியாக இருக்கும் போதே கிழவனாக இறந்து போனவன். அப்படியென்றால் அவன் மகன் அவளின் தந்தை வயதிலிருக்க வேண்டும். கண்ணனின் பாட்டி அவள் எப்போதுமே கிழக்கு பக்கம் செல்வதில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறாள். அங்கே 35-40 வருடங்களாக மழையில் கரைந்த, சாலையை இரண்டாகப் பிரிக்கும் ஒரு குட்டிச் சுவர் இருக்கின்றது. சேரியையும் அக்ரஹாரத்தையும் பிரிக்கும் சுவரா அது? கண்ணனைப் பார்த்து அவள் பயந்து ஓடியதும் ஒரு மதில் சுவர் அருகில் தான், அவன் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது. அக்ரஹாரத்து வாத்தியாரும் சேரிக்காரர்களை ஊர்வலமாக அக்ரஹாரத்துக்கு கிழக்கிலிருந்து மேற்காகத் தான் அழைத்து வருகிறார். சேரி அக்ரஹாரத்துக்கு கிழக்கே தான் இருந்திருக்க வேண்டும். அப்போது கிண்டலாக, ‘அம்மா, உங்களுக்கு பூர்ண கும்பம் கொண்டு வர்றா..’ என்கிறார். வரதராசுவும், ‘அம்மா வராங்கடா..ஒதுங்கிக்கங்க’ என்று சிரித்துக் கொண்டே குறிப்பிடுகிறான். இத்தனை குறிப்புகளும் சேர்ந்து அவள் வாழ்வில், வெட்டியாரின் மகனுக்கும் அவளுக்குமான மர்ம பக்கத்தை நமக்கு குறிப்புணர்த்துகின்றன. சதா அவள் நீரிலேயே கிடப்பதற்கும், விரும்பித் தனிமையை ஏற்றுக் கொண்டதற்கும் இந்த மர்மமும் ஒரு காரணமாக இருக்குமோ என்றுத் தோன்றுகிறது.

இந்த ஊர்வலம் நடந்த நாள் முதல் அவள் பால் தயிர் வாங்க வருவதை நிறுத்திக் கொள்கிறாள். வாங்க வந்தாலும் யாசிப்பது போல் நின்று வாங்கிக் கொள்கிறாள். கண்ணனைப் பார்த்ததும் அவளுக்கு வரும் பயமும், பின் அவளின் யாசிப்பது போன்ற பாவனையும் சேர்ந்து கதையை இரு வேறு சாத்தியங்களில் நமக்குத் திறந்து கொடுக்கிறது. பயம், வெட்டியாரான் மகன் செய்தது அத்துமீறல் என்கிறது. யாசிப்பது போல் அவள் நிற்பது அவள் அனுமதித்தது அது என்கிறது, அல்லது தனக்கு நடந்த அத்துமீறலுக்கும் தானே பொறுப்பேற்றுக் கொண்டு குற்றவுணர்வு கொள்கிறாள் என்கிறது. எப்படியாகினும் சிதைக்கப் பட்டது அவள் மனமும் வாழ்வும் தான்.

அப்போது அவளுக்கு 87 வயது இருக்க வேண்டும். அப்போதிலிருந்து மூன்றாவது ஆண்டு, தன் 90 வது வயதில் அவள் இறக்கிறாள். அப்போதும் வரதராசு தான் அவளருகில் இருக்கிறான்.

தயிர், பால் வாங்க வரும் காலங்களில், கண்ணனின் பாட்டி, அவளின் பிழியாத ஈரப்புடவை தோற்றத்தைப் பார்த்து, ‘அவ ஆம்படையான் இன்னிக்கித்தான் செத்தான்’ என்று தோன்றுவதாகச் சொல்கிறாள். கண்ணனின் பாட்டியும் சரி, அவனின் அன்னையும் சரி, அவளை ஒரு முறைக்கு மேல் ‘பட்டு’ என்றழைக்க விடுவதில்லை. இவள் கணக்கை ஒரு நாள் கூட பதினைந்தே முக்கால் அணாவுக்கு மேல் சொல்வதில்லை. இவளுக்குச் செய்வது புண்ணியம் என்று தான் சொல்கிறாள் பட்டு. குறும்பு செய்யும் இரண்டு மகன்கள், உணவின் நேரம் தப்பினால் இடித்துக் காட்டும் மாமியார், மாடுகள், கன்றுகள், கிணற்றிலிருந்து தண்ணீர் சேந்தி நிரப்ப வேண்டிய தொட்டிகள், எல்லாவற்றுக்கும் மேலாக, கடைந்து வெண்ணெய் எடுக்கப்பட வேண்டிய தயிர் என முற்றிலும் லௌகீகத்தில் தோய்ந்த வாழ்வு பட்டுவுக்கு. உண்மையில் கடையப்படும் தயிர் பட்டுவின் வாழ்வே தானோ என்று நமக்குத் தோன்றி விடுகிறது. அப்படிப்பட்ட பட்டு இவளுக்கு இரங்குகிறாள். இவளுக்கும் அந்த வீட்டில் காத்திருப்பதில் எந்தப் புகாரும் இல்லை. அங்கு நிற்கும் கொஞ்ச நேரத்தில் அவ்வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துக் கொள்கிறாளோ என்னவோ.

ஒரு முறை எல்லாக் குழந்தைகளும், ஸ்ரீஜெயந்திக்கு எண்ணெய் வாங்குவதற்காக அவள் வீட்டுக்குச் செல்கின்றனர். புழுதியும் ஒட்டடையும் வௌவால்களும் நிறைந்த வீடு. அவள் ஏற்றும் விளக்கும் பாசி படர்ந்து இருக்கிறது. எண்ணெய் சொட்டி சொட்டி, அதன் மேல் புழுதி படிந்து படிந்து, கீழே தரை மேடிட்டிருக்கிறது. இவை அனைத்துமே அவளுக்கான உருவகங்கள் தான் என்று தோன்றுகிறது. அவளைப் ‘பாட்டி’ என்று அழைப்பதற்கு குழந்தைகள் வெட்கப் படுகிறார்கள். அவர்கள் எவ்வளவு கேட்டும் அவள் எண்ணெய் தருவதில்லை. அங்கிருந்தும் அவள் குளத்துக்குத் தான் செல்கிறாள். மாட்டுக்கார பையன்கள் அவள் மேல் வசை பாடிக் கொண்டேயிருக்கிறார்கள். இவையெல்லாமும் கூட அவளின் வாழ்வின் ரகசியங்களைப் பற்றி நுட்பமாகக் கோடிட்டுக் காட்டிக் கொண்டே இருக்கின்றன.

இத்தனை விந்தையான பெண்ணை ஏன் ஒருவரும் ஆச்சரியத்துடன் பார்ப்பதில்லை என்று தான் கதைசொல்லிக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. அவள் இறந்தபின், சாலைக் குளத்தில் அவள் தெரிந்தாள் என்று சில நாட்கள் சொல்லி விட்டு, பின் அதையும் ஒரு நாள் அக்கிராம மக்கள் மறந்து முன் செல்கின்றனர். காலமும் புஞ்சை கிராமமும் அவளையும் செரித்து முன்னேறி விட்டன.

முன்னும் பின்னுமான கதைச்சொல்லல், குறியீடுகள்/ வாய் வழிக் கதைகள் முலமாக கதையை நகர்த்துதல், மிகக் கொஞ்சமாக சொல்லி விட்டு பெரும்பாலானவற்றை உய்த்துணர விடுதல் என்று கதை மிகச் செறிவானதாக அமைந்திருக்கிறது. அகழ அகழ, புதுப் புது தோற்றம் கொள்வது போல் அமைந்திருக்கிறது இக்கதை. எஸ். ரா இக்கதையை தமிழின் சிறந்த 100 கதைகளுள் வைக்கிறார். சாருவும் ந.முத்துசாமியைக் கொண்டாடுகிறார்.