
சங்ககாலப் பாடல்களின் படிமவெளி, பெரும்பாலும், கழலும் வளையல்களாலும், பசலை நோய் கொண்ட தலைவிகளாலும் நிரம்பியிருக்கிறது என்பது ஒரு பொதுவான மனப்பதிவு. சங்க காலப் பெண்கள் எப்பொழுதும் , பிரிந்த காதலனை நினைத்தே ஏங்கிக் கொண்டிருந்தார்களா, அல்லது வேறு எவ்வாறாவது தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள் என்று தேடும் ஆர்வம் எழுந்தது. முக்கியமாக சங்ககால பெண் கவிஞர்கள் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட விதத்தை ஆராயத் தோன்றியது. கவனத்தை ஈர்த்த மூன்று கவிஞர்கள் – பெருங்கோப்பெண்டு , தாயக்கண்ணியார் மற்றும் வெறி பாடிய காமக்கண்ணியார்.
உயவற் பெண்டிரே மல்லேம்;
பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரே மல்லேம்
‘பெருங்கோப்பெண்டு’ என்ற புலவர் பாடிய ஒரே பாடலிது. புறனானூற்றில் இடம்பெற்றிருக்கிறது.
இவர், ‘ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்’ என்ற பாண்டிய மன்னனின் மனைவி. பெருங்’கோ’வின் பெண்டு. ‘ஒல்லையூர்’ என்னும் ஊரை பகைவரிடமிருந்து மீட்டமையால் இந்த மன்னனின் பெயர் ‘ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்’ என வழங்கலாயிற்று.
பலசான்றவிரே! பலசான்றவிரே! நின் தலைவனோடு
இறப்ப நீ போவென்று கூறாது அதனைத் தவிர்கவென்று சொல்லி
விலக்கும் பொல்லாத விசாரத்தையுடைய பலசான்றவிரே! அணிலினது
வரிபோலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால்
அரிந்திடப்பட்ட விதைபோன்ற நல்ல வெள்ளிய நறிய நெய்தீண்டாமல்
இலை இடையே பயின்ற கையாற் பிழிந்து கொள்ளப்பட்ட
நீர்ச்சோற்றுத்திரளுடனே வெள்ளிய எள்ளரைத்த விழுதுடனே
புளிகூட்டி அடப்பட்ட வேளையிலை வெந்த வேவையுமாகிய இவை
உணவாகக் கொண்டு பருக்கைகளாற் படுக்கப்பட்ட படுக்கையின் கண்
பாயும் இன்றிக் கிடக்கும் கைம்மைநோன்பால் வருந்தும்
பெண்டிருள்ளேமல்லேம் யாம்;
இது இப்பாடலின் பொருள். பெருங்கோப்பெண்டு பாண்டிய மன்னனின் காதல் மனைவி. தன்னுடைய ஒரு பாடலில் ‘போருக்குச் சென்று வென்று மீள்வேன், இல்லையெனில் என் காதல் மனைவியை பிரிவேன் ஆகுக’, என வஞ்சினம் உரைக்கிறான் பூதப்பாண்டியன். இவன் குறிப்பிடும் காதல் மனைவி ‘பெருங்கோப்பெண்டு’ தான். இம்மன்னன் போரிட்டு வென்று மீள்கிறான். ஆயினும் பின்னர் உடல் நலமின்றி மாள்கிறான்.
இந்தச் செய்தியை கேட்டவுடன் பெருங்கோப்பெண்டு, தானும் அவனோடு சிதையேற முடிவு செய்கிறாள். கரிய கட்டைகளை அடுக்கச் சொல்கிறாள். ஈரக்கூந்தல் இரு புறமும் நீர்சொட்டியபடி தொங்க, கண்களில் மிகுந்த கண்ணீரோடு, இடுகாடு நோக்கிச் செல்வதை, ‘பேராலவாயர்’ என்ற மற்றொரு புலவரும் பாடியுள்ளார்.
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ,
பேர் அஞர்க் கண்ணள், பெருங் காடு நோக்கி,
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன்
முழவு கண் துயிலாக் கடியுடை வியல் நகர்ச்
சிறு நனி தமியள் ஆயினும்
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே!
பெருங்கோப்பெண்டை ‘அஞர் கண்ணள்’ என்கிறார் புலவர். ‘Shocked eyes’, அல்லது ‘traumatized eyes’ என்று பொருள் கொள்ளலாம். அவள் ஒரு கணமும் தன் கணவனை விட்டுப் பிரியாதவள்- ‘தன் மனைவிக்குத் துணையாக ஓயாது முழவு தான் இசைத்துக் கொண்டிருக்கிறதே ‘ என்று அவன் ஒரு கணம் அவளை விட்டு நீங்கினாலும் உயிர் நடுங்குமளவு மெல்லியலாள், வயதில் இளையவள், கணவன் மாண்டபின் தெருவுக்கு வந்து விட்டவள், என்கிறார் பேராலவாயர். இத்தகையவள் சிதைபாயத் தயாராகிறாள்.
கணவனின் மேல் மிகுந்த காதல் கொண்டவள் தான் பெருங்கோப்பெண்டு. அவன் இல்லாத உலகில் அவள் வாழ்வதை விரும்பவில்லை. ஆயினும் அதற்கு, அவள் தன் காதலுக்கும் மேலதிகமாகச் சொல்லும் காரணம் தான் நம்மைத் திகைக்கச் செய்கிறது
அணிலின் வரியைப் போல வரிகள் கொண்ட காய் வெள்ளரிக்காய். அதன் விதைகளைப் போன்று, நெய் தீண்டாது , ஒன்றொடொன்று ஒட்டாது, பருக்கை பருக்கையாக இருக்குமாம், பிழிந்து வைக்கப்பட்ட நீர்ச்சோறு. அதை கைப்பிழி பிண்டம் என்கிறாள். இறந்து போனவருக்கு அளிக்கப்படுவதை பொதுவாக பிண்டம் என்றழைப்போம். இவளுக்கு உயிரோடு இருக்கும் போதே பிண்டம் தான் அளிக்கப்படும் கைம்பெண் என்பதால். அதோடு எள்ளுத் துவையலையும், புளி சேர்த்து வேக வைத்த வேளையிலையும் வைத்துத் தான் சாப்பிடவேண்டுமாம். கிட்டத்தட்ட இறந்தவருக்கு அளிக்கப்படும் பலிப் பிண்டமே தான் இது. மேலும் உயவர் பெண்டிர் , வெறுந்தரையில் பாயுமின்றி தான் படுக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறாள். உணவும் , உறைவிடமும் இவ்வாறு ஆவதற்கு பதில் கணவனின் சிதையில் ஒரேடியாய் எரிந்து விட முடிவு செய்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாய் வாழ்க்கை முழுவதும் எரிவதைக் காட்டிலும் சில மணிகள் தானே எரிச்சல் என்று சிதையை தேர்ந்தெடுக்கிறாள், ஒரு நொடி பிரிந்தாலும் உயிர் நடுங்குமளவு மென்மையானவள்.
இப்பாடல் சங்க காலத்தைப் பற்றிய ஒரு நிரந்தர ஆவணம். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி வரை கூட இது போன்ற சிதையேறலும், உணவுக்கட்டுப்பாடுகளும் விதவைகளுக்கு விதிக்கப்பட்டன என்பது இக்கவிதைக்கு ஒரு ‘தற்காலத் தொடர்பை’ அளிக்கிறது.
நெகிழச் செய்வதாக இருக்க வேண்டும் என்றெண்ணி, அவள் தன் முடிவுக்கு காதல் பிரிவு தான் காரணம் என்று தன் பாடலில் சுலபமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால், கைம்மை கட்டுப்பாடுகளே காரணம் என்று தெளிவாக, நேர்மையாக முன் வைக்கிறாள். இப்பாடல் கவிதையாகிறது. பெருங்கோப்பெண்டும் சாகாவரம் பெறுகிறாள்.
‘தாயங்கண்ணியார்’ என்ற பெண் புலவரும் இதே போன்று கைம்மை நோன்பைப் பற்றிப் பேசுகிறார்.
‘ஒரு கணவனும் மனைவியும் கூடி வாழ்கின்றனர். அப்போது அவர்கள் வீட்டில் சமைத்த உணவின் சுவையும், தாளிப்பின் மணமும் இரவலர்களையும் விருந்தினர்களையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தன. ஆனால் இப்போது அவளின் கணவன் இறந்து விட்டான். அதனால் தலைமயிரையும், கைவளையயும் இழந்து விட்டாள். அல்லி அரிசியிலான புல்லுணவு உண்டு வாழ்கிறாள். ஒரு காலத்தில் அறுசுவை அடிசில் அளித்து விருந்தோம்பல் செய்த வீடு, இப்போது அவள் ஒருத்திக்குக் கூட உணவளிக்க முடியவில்லை’ – என்கிறார்.
குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற் புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்
கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
அல்லி உணவின் மனைவியோடினியே
புல்லென்றனையால் வளங்கெழு திருநகர்
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே
இப்பாடலும் கணவனை இழந்த சங்ககால பெண்ணின் வாழ்க்கைப் பற்றிய ஆவணம். தலைமயிரிழந்து, கைவளை களைந்து, அல்லி அரிசி உணவுண்டு வாழ்ந்திருக்கின்றார் கைம்பெண்கள். தாயக்கண்ணியார் பாடி, நமக்குக் கிடைக்கும் ஒரே பாடலிது.
கணவன் இறந்த பின் வாழ்ந்தால் மிகக் கொடுமையான வாழ்வு. கணவனோடு சிதை புக முடிவு செய்தாலோ, அதையும் தடுக்கின்றனர் சான்றோர் எனப் பெயர் கொண்டோர். அதனாலேயே பெருங்கோப்பெண்டு இவர்களை ‘பொல்லாச் சூழ்ச்சி பல்சான்றீரே..’ என்ற சொல்லினால் சாடுகிறாள்.
உயவற் பெண்டிரின் துயரைச் சொல்லும் இவ்விரு பாடல்களும் , ரத்தமும் சதையுமாக சங்ககால பெண்களை நம் கண் முன் நிறுத்துகின்றன. பிரிவுத் துயருக்கு மேலதிகமாக அவர்களின் பயமும், கையறு நிலையும், கோபமும் இப்பாடல்களில் பதிவாகியிருக்கின்றன.
நக்கனென் அல்லனோ:
‘வெறி பாடிய காமக்கண்ணியார்’ என்ற பெண் புலவர் 3 அகத்துறை பாடல்களும் 2 புறத்துறை பாடல்களுமாக, 5 பாடல்களைப் பாடியுள்ளார். ‘காமக்கண்ணியார்’ என்பது காமாட்சி என்ற சொல்லின் தமிழாக்கமாக இருக்கலாம். இவர் ‘வேலன் வெறியாட்டம்’ என்னும் வெறியாடலைப் பாடியதால் வெறிபாடிய காமக்கண்ணியார் என்னும் பெயர் கொள்கிறார்.
இவரின் ஒரு பாடல்:
அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரற் பொழுதில்,
‘படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்’ என,
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த
சாரற் பல் பூ வண்டு படச் சூடி,
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
நோய் தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?
தலைவி தலைவனிடம் காதல் கொள்கிறாள். அவன் அருவிகள் வீழும், அணங்குகள் வாழும் நெடுமலைகள் சூழ்ந்த நாட்டைச் சேர்ந்தவன், மணம் கமழ் சந்தனம் பூசிய மார்பன். ஏதோ காரணத்தால் அவர்கள் சந்திப்பதில்லை. அதனால் உற்சாகம் குன்றி காணப்படுகிறாள் தலைவி. அவள் வளையல்கள் கழல்கின்றன. எதனால் இவ்வாறு ஆனதென்றறியாது அவளின் தாய் , ஊரிலுள்ள வயதான பெண்டிரிடம் கேட்க, ‘கீழ்படியாதாரை பழி கொள்ளும் நெடுவேளை (முருகனை) பேண, இவள் தணிவாள்’ என்கின்றனர்.
உடனே களம் எழுதப் படுகிறது. வேலுக்கு கண்ணி சூட்டப்படுகிறது. வேலனின் புகழ் பாடப்படுகிறது. பலி கொடுக்கப்படுகிறது. செந்திணை குருதி தோய்த்து வீசப்படுகிறது. முருகன் ஆற்றுப்படுத்தப் படுகிறான்.
அந்நள்ளிரவில் சந்தனம் மணக்க வண்டுகள் மொய்க்கும் பூச்சூடி தலைவன், யானையைக் கொல்ல வரும் புலியைப் போல் பதுங்கி வருகிறான். காவல் செய்யும் காவலர்கள் அறியாது தலைவியோடு முயங்குகிறான். அவள் நோய் தீர்கிறது. தலைவனின் அணைப்பு அவள் நோய் தீர்த்ததை அறியாது, வேலனின் வெறியாட்டத்தினால் தான் அது தீர்ந்ததென்று தன் அன்னை நினைத்ததை, நினைத்து நினைத்து தலைவி சிரிக்கிறாள்.
இப்பாடலிலும் ‘கைவளை கழல்தல்’ வருகிறது. ஆனால் அதற்கும் மேலாக பல முக்கியமான தகவல்களும், உணர்வு நிலைகளும் இதில் பதிவாகின்றன.
1. இப்பாடல் ‘முருகு ஆற்றுப்படுத்தல்’ அல்லது ‘வேலன் வெறியாட்டம்’ என்னும் வழக்கம் சங்ககாலத்தில் திகழ்ந்ததை பதிவு செய்கிறது. இவ்வெறியாட்டின் செயல்முறையும் இப்பாடலிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
2. திருமண வயதில் உள்ள பெண்கள் நோய் கொண்டால், முருகன் பேணப் படவேண்டும் என்பது அக்காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு மரபு என்பது தெரிகிறது.
3. ‘படியோர்த் தேய்த்த தடக்கை’-‘கீழ்ப்படியாதாரின் மேல் சினங்கொள்ளும் முருகன்’ என முருகன் சித்தரிக்கப்படுகிறான். முருகத் தெய்வம் சினம் கொள்ளும் என்னும் உணர்வு இன்றும் தமிழ் மனங்களின் மனதில் ஆழத்தில் அமைந்துள்ளதை இப்பாடலின் நீட்சியாகக் கொள்ளலாம்.
4. அன்னைக்கும் மகளுக்குமான உறவின் ஒரு துளியும் இப்பாடலில் வருகிறது. அன்னையை ஏமாற்றியதை நினைத்துத் தான் அவளுக்கு அவ்வளவு சிரிப்பு.
5. ஊரிலுள்ள முது பெண்டிரின் வாக்குக்கான மதிப்பும், அவர்களுக்கான முக்கியத்துவமும் இப்பாடலில் தெரிகிறது.
பண்பாட்டு நோக்கில் தமிழ்ச் சமூகத்தின் மீது ஒளி பாய்ச்சும் இப்பாடல் , ‘நக்கனென் அல்லனோ..’ என்ற தலைவியின் கூற்றில் கவிதையாகிறது. நள்ளிரவில் புலியைப் போல பதுங்கி வரும் தலைவனோடு கூடியதால் அவளுக்கு நோய் தீர்கிறது. ஆனால் அவளின் அன்னை, ஊரின் முது பெண்டிர், ‘வேலன்’ வெறியாடுபவன் என்று அனைவரும் தாங்கள் செய்த சடங்கினால் தான் உடல் தேறியது என்று எண்ணிக் கொள்கின்றனர். அவ்வாறு எண்ணும் அவர்களைப் பார்த்து இவள் நகைக்கிறாள்.
மற்றொரு பாடலில், ‘நான் தலைவனிடம் இத்தனை அன்போடு இருக்க, அவன் பதிலுக்கு ஏன் பாராமுகமாக இருக்கிறான் என்று வெறியாடும் வேலனிடமே கேட்போமா’ என்று நக்கலோடு தன் தோழியிடம் கேட்கிறாள் தலைவி.
நாடற்குக்
காதல் செய்தலும் காதலமன்மை
யாதெனிற் கொல்லோ தோழி, வினவுகம்
பெய்ம்மணல் முற்றம் கடிகொண்டு
மெய்ம்மலி கழங்கின் வேலற்றந்தே
மற்றொரு இடத்தில், கைவளை கழல்தல் அறிந்ததும், ‘கையறு நெஞ்சினள் ஆனாள் அன்னை’ என்று அன்னையை கேலி செய்கிறாள்.
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ
முருகன் ஆரணங் கென்றலின் அதுசெத்
தோவத் தன்ன வினைபுனை நல்லில்
‘பாவை அன்ன பலராய் மாண்கவின்
பண்டையிற் சிரக்கவென் மகட்கெ’னப் பரைஇக்
குறி சொல்லும் பெண்டிரை ‘முதுவாய்ப் பொய்வல் பெண்டிர்’, என்கிறாள். குறி கேட்பவரின் மனதை அனுசரித்து வேண்டியமட்டும் பொய் சொல்வார்கள் என்பதால், அவர்களை பொய்வல் பெண்டிர் என்று கேலி செய்கிறாள். எத்தனை துடுக்குத் தனம் இப்பெண்ணுக்கு. (பிரப்பு – அரிசி முதலியவற்றை அள்ளி முறத்தின்கண் பல்வேறிடங்களில் வைத்து அவற்றை எண்ணிக் குறி சொல்லுதல். இங்ஙனம் குறி சொல்லுவோர் கட்டுவிச்சியர்).
‘பாவை அன்ன பலராய் மாண்கவின் பண்டையிற் சிரக்கவென் மகட்கெ’ன, என்றால் ‘முன்னைக் காட்டிலும் என் மகள் இன்னும் அழகாக வேண்டும்’ என்று தாய் விரும்புவதாகச் சொல்கிறாள். இரண்டாயிரம் வருடங்களாக அன்னைக்கும் மகளுக்கும் இடையேயான உறவு இன்னும் அதே போன்றேயிருக்கிறது.
முந்தைய பாடல்கள், பெண்ணின் அச்சத்தையும், துயரையும், கோபத்தையும் பதிவு செய்கின்றதென்றால், காமக்கண்ணியாரின் பாடல்கள் அவளின் மெல்லிய நகைச்சுவையுணர்வை பதிவு செய்கின்றன.
மேலும், சிலப்பதிகாரத்தின் கண்ணகியைப் போலன்றி, பரத்தையைத் தேடிச் சென்ற கணவனை வெறுத்து ஒதுக்கி, ‘உன் பின்னே ஆதிமந்தியாரைப் போல ஓடித் திரிய மாட்டேன்’ என்று சொல்லி விட்டு, பின் அவனையே மீண்டும் சேரத் துடிக்கும் விந்தையான பெண்ணான ‘வெள்ளி வீதியார்’; காவிரியின் நீரோட்டத்தில் தொலைந்து போன ஆட்டனத்தியைத் தேடிப் பிச்சியாய் அலையும் ‘ஆதிமந்தியார்’ என்று, சங்கப் பாடல்களை அகழ அகழ, தம்மை வெவ்வேறு பரிமாணங்களில், வலுவாக நிகழ்த்திக் கொண்ட பல சங்கக் காலப் பெண்களும், அவர்களின் பல்வேறு உணர்வு நிலைகளும் மேலெழுந்து வந்தவாறே இருக்கின்றன.