நான் கவி இல்லை

காமமா
அன்பா
ஆன்மத் தொடர்பா
உள் விரியும் மலரா
அதன் வாசனையா

அல்லது கொலை வாளா

யார் மேலோ மட்டுமே கொள்ள வேண்டுமா

பதிலில்லையென்றால்

அய்யோ ஒரு முறைக்கு இரு முறை பூத்து விட்டால்

முதல் இதழ் பிரியும் போதே
விரிய விடாது
கருக வேண்டியிருக்கிறது மொட்டிற்கு

பொருத்தமான இடத்தில்
பொருத்தமான பொழுதில்
பொருத்தமானவருக்காய் 
பொருத்தமான எண்ணிக்கை மட்டுமே
பூக்க வேண்டியிருக்கிறது
அதற்கு

எந்திரமா என்ன

அல்லது
வசதி வாய்த்தவர் 
சொல்லும்
பெரும் பொய்யா

காதலை எனக்குப் புரியவில்லை
நான் கவி இல்லை தான் போலிருக்கிறது