ஒற்றை நரம்பின் கதை

அந்தரக் காற்றில்
தானாய் அதிர்கின்றன
அவன்
தந்திகள்

அவ்விசையில்
திகையும்
நூலேணியின்
அடுத்த படியில்
காலடி வைக்கிறான்

கைகள் பற்றிக் கொள்ளவும்
அடுத்த காலடி எடுத்து வைக்கவுஂம்

இனியும்
திகைந்தால் தான் உண்டு

ஒரு காலில்
பறந்து கொண்டிருக்கும்
அவனை

கொஞ்சமே கொஞ்சமாய்
பதிலுக்கு
பற்றியிருக்கிறது
அம்மெல்லிய
நூலேணியின்
ஒற்றை நரம்பு