அலைகள்
காலில் வந்து
அறைந்து கொண்டேயிருக்கின்றன
மூழ்குவதற்காக
காத்திருக்கிறேன்
மூழ்காது
நூறு முறை
பின்வாங்கி விட்டேன்
மனதிலேயே
உள்ளங்கால்கள்
கூசுகின்றன
முழுக வேண்டும்
என
யார் வைத்தது
என்னை நோக்கி
ஒரு கை
நீள்கிறது
கெட்டியாக
பிடித்துக் கொள்கிறேன்
அவனா
இல்லை அவளா
கை அத்தனை
மென்மையாக இருக்கிறது
அவனோ அவளோ
அக்கையை
இறுகப் பற்றியபடி
இனி
முக்குளியிட்டுத் திரும்பிவிடுவேன்
எவர்க்கும் தேவை
ஒரு கை தான் போல
வெளியிலிருந்தா
உள்ளிலிருந்தா
மீண்டும்
அக்குரல்
அடிவயிறு
மீண்டும்
சுருண்டு கொள்கிறது