நீலம்-வாசிப்பனுபவம்-1

ஜெயமோகனின் ‘நீலத்தை’ எப்படியாவது முழுமையாக உண்டு செறித்துவிடவேண்டும் என்ற ஆவல் எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு அள்ளில் எடுத்துவிட முடியாத ஊற்று இது. முதல் முறை ஒவ்வொரு அத்தியாயமாக வாசித்தேன். இரண்டாவது முறை முழுமையாக. இம்முறை ஒவ்வொரு அத்தியாயம் வாசித்ததும் சிறு சிறு குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்கிறேன்.

ஜெயமோகன் முன்னுரையில் சொல்வது போல பாகவதமும், ஜெயதேவரின் அஷ்டபதியும் கலந்த கலவை ‘நீலம்’. பாகவதம் என்று சொல்வதை விட நாரயணீயம் என்று சொல்லலாம். நாராயணீயத்திலும் ராதை யுவதியாக, ராச லீலையில் பங்கு பெறுபவளாக வருகிறாள். ஆனால், நீலத்தில் கண்ணனின் குழந்தை பருவம் முதலே, யசோதை அளவே அவனின் பால லீலைகளிலும் பங்கு பெறுபவளாக இருக்கிறாள்.

பாகவதத்தில் ராதை என்ற கதாபாத்திரமே கிடையாது; ‘அனயா ஆராதித: ‘ என்று ஆராம்பிக்கும் ஒரு ஸ்லோகத்தை பிரமாணமாகச் சொல்லி, ஆராதித: என்ற சொல்லில் வருபவளே ராதை , அதனால் பாகவதத்தில் இந்த ஒரே ஒரு இடத்தில் மட்டுமே ராதை வருகிறாள், என்று வாதிடுகிறார்கள். ஜெயமோகனும் ராதை என்பவள் ‘ஆராதிப்பவள்’ என்ற குறிப்பை முன்னுரையில் அளித்து விட்டே, நூலைத் தொடங்குகிறார்.

ராதாராணியின் கையிலிருக்கும் கிளி தான் வியாஸரின் மகன் ‘சுகர்’ என்றும், ராதை என்ற சொல்லைக் கேட்டாலோ சொன்னாலோ சுகர் உணர்ச்சி வயப்பட்டு மூர்ச்சையாகிவிடுவார் என்பதால், அவர் பரீக்ஷித்துக்கு பாகவதத்தைச் சொல்லும் போது, கவனமாக ராதையின் பெயரை தவிர்த்துவிட்டு சொன்னதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதனால் தான் ராதையின் பெயர் பாகவதத்தில் காணப்படுவதில்லை என்றொரு சுவையான கதையைச் சொல்கின்றனர்.

முதன்முதலில் ஒரு பெரும் பாத்திரமாக ராதை எழுந்து வருவது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெயதேவரின் அஷ்டபதி/கீத கோவிந்தத்தில் தான் என்று சொல்கின்றனர். அதற்கு முந்தைய இலக்கியங்களில், ராதையைப் பற்றிய சிறு சிறு குறிப்புகளே வருகின்றன. வேதங்களிலேயே ‘ராதை’ என்ற பெயர் வருகிறது. மஹாபாரதத்திலும் ராதை என்ற பெயர் உண்டு. பத்ம புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் ஆகியவற்றில் ராதை பற்றிய தகவல்கள் இருக்கின்றன. ஒன்றாம் இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘காதா சப்தசதியில்’ ராதை என்று பெயரிடப்பட்ட ஒரு முக்கிய கோபிகை இருந்தாள் என்று வருகிறது. நிம்பார்காசாரியார் என்ற தெலுங்கு கவிஞர் தான் முதன் முதலாக ராதையை கடவுளின் நிலையில் வைத்தவர் என்று சொல்கின்றனர். ஜெயதேவரின் சமகாலத்தவரான அவரிடமிருந்தே கீத கோவிந்தத்தின் ராதைக்கான விதையை ஜெயதேவர் பெற்றுக் கொண்டார் என்று சொல்வாரும் உண்டு.

‘ராதா வல்லப மார்க்கத்தில்’ ராதையே அதிதேவதை-கண்ணனுக்கும் ஒரு படி மேலானவள். கோலோகத்தில் ராதை கண்ணனோடு கூடி வாழ்வதாக அம்மார்க்கத்தவர் நம்புகின்றனர். தத்துவ ரீதியாக, ராதையை கண்ணனின் ஹ்லாதினி(இன்பமளிக்கும்) சக்தியாக, பரமாத்மாவை அடைய விரும்பும் ஜீவாத்மாவாக, கண்ணனின் பெண்ணுருவாக, கண்ணனின் அர்த்தநாரியாக எண்ணிக் கொள்கிறார்கள். ஜெயமோகன் நீலத்தில், ராதையையும் கண்ணனையும் சைதன்ய மகா பிரபுவின், ஆத்மானந்தரின் ‘ராதா மாதவ’த்திலிருந்து பெற்றுக் கொள்கிறார்.

கண்ணன் சிறு குழந்தையாக கோகுலம் நுழையும் நாளின் புலரியிலிருந்து ஆரம்பக்கிறது இந்நாவல். கரிச்சானும்(முதலில் எழும் பறவை), காகமும், மரகதப்புறாவும், நாகணவாய்க்கூட்டமும், மயில்களும், மணிக்குருவியும் கண்ணனை வா, வா என்றழைப்பதாய் துவங்குகிறது.

பின் சொல், தென்றலின் வடிவை எடுத்துக் கொள்கிறது. தலையொடு காலாக, பூப்பெய்தும் பருவத்து கன்னியான ராதையை வர்ணிக்கிறது( தேவியை தலையிலிருந்து கால் வரை வர்ணிப்பதே மரபு). கண்ணனின் கோகுலம் புகும் நாளும், ராதையின் ‘இல்லம் நிறைத்த நாளும்’ ஒன்றெனவே நிகழ்கின்றன. அன்னையரும், மாமியரும் ராதையை சூழ்ந்திருக்க ஏனென்றே அறியாது, கருவறையில் தனிமையில் அமர்ந்திருக்கும் தெய்வமென ஏக்கத்தில் அமர்ந்திருக்கிறாள் ராதை.

நீலக்கடம்பின் கிளையை பறித்தெடுக்கும் நொடியில் படுகிறது அவனின் நீலக் கழல்கள் அவள் பார்வையில். அன்றிலிருந்து துவங்குகிறது ராதையின் பயணம், செவ்விதழ் பாதம் விரிந்த அந்நீலக் கழல்களை நோக்கி, ஒவ்வொரு நாளும்.

ராதையின் தோழியான லலிதையின் பார்வையில் முதன்முதலில் கண்ணனை வர்ணிக்கும் ஆசிரியர் அவனை பாதாதி கேசமாக வர்ணிக்கிறார்(பெருமானை பாதத்திலிருந்து வர்ணிப்பதே மரபு). அவனை முதலில் கண்ட நொடியில், ராதை அறிந்து கொள்கிறாள் தான் அவனுக்கானவள் என்று.

அன்னை ஏகனம்ஷையின் ஆலயத்தில் அமர்ந்து மகிபானு என்னும் குலமுதாதை, தேவகிக்கும் வசுதேவருக்கும் கண்ணன் பிறந்த கதையையும், கம்சன் அவர்களின் மேல் கொண்ட பகையையும் விவரிக்கிறார். பூரி ஜகன்னாதரின் காதலியாக பார்க்கப்படுபவள் அன்னை ஏகனம்ஷை. அவர்களின் காதல் ராதை-கண்ணனின் காதலுக்கு முன்னோடியாக பார்க்கப்படுகிறது. அதற்காகவே இக்கதை தருணத்தில் ஏகனம்ஷையின் கோவில் வைக்கப்பட்டிருக்கிறது எனத் தோன்றுகிறது.

பின், நீலக்கடம்பின் அடி வேரில் சாய்ந்துகொண்டு ஒரு முதுசெவிலி, நீராடும் ஆயர்பாடி பெண்களுக்கு, கண்ணனின் பிறப்பையும், அவனுக்கு முன்னால் பிறந்த ஏழு மகவுகளின் பிறப்பையும் சொல்கிறாள். தேவகியும் வசுதேவரும் மகவுகளை ஒவ்வொன்றாய் பறிகொடுக்கின்றனர். முதல் மகவைப் பறிகொடுத்தபின், தேவகி வனநீலி எழுந்த பூசகியைப் போல் சன்னதம் கொள்கிறாள். அவள் முன் இறந்த உடலாய்க் கிடக்க வேண்டுமென்றே விரும்புகிறார் வசுதேவர். ஆனால், தேவகி அந்த முதல் ஆராட்டுக்குப் பிறகு, மனம் காட்டும் பெருமாயையினால், தானும் வசுதேவரும் சிறைக்குள் இருப்பதையே மறந்து விடுகிறாள் என்பதாகச் சித்தரிக்கிறார் ஆசிரியர். மதுராவில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, ஒவ்வொரு முறையும் தன்னில் பேரழகை பூசிக் கொண்டு அடுத்தடுத்த மகவுகளை ஈன்றெடுக்கிறாள், தேவகி. கிருஷ்ணன் என்னும் பரம்பொருளை ஒருவர் மகனாக அடைய வேண்டுமானால், பொன்னை புடம் போடுவது போல எத்தனை எரிகளை நேர்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழாமல் இல்லை.

பின் பரிநிமித்தகனின் வழி கம்சன் ஆடும் குருதிக்களம் விளக்கப்படுகிறது. அஷ்டமி ரோகிணியில் பிறந்த அனைத்து மகவுகளும் கொல்லப்படும் உறைய வைக்கும் சித்திரம் காட்டப் படுகிறது. இனி எப்போதும் மதுராவுக்குள் நுழையப்போவதில்லை எனக் கூறியபடி பரிநிமித்தகன் நகர் நீங்குகிறான்.

அடுத்த நாள் நடக்கிறது கண்ணனின் பெயர் சூட்டு விழா. நூறு நூறு பெயர்களை பல்வேறு பாத்திரங்களின் வழி கண்ணனுக்கு சூட்டி மகிழ்கிறார் ஆசிரியர். அவனுக்காக கொல்லப்பட்ட, அஷ்டமி ரோகிணியில் பிறந்த நூறு நூறு மைந்தர்கள் ஒவ்வொருவராக அப்பெயர்களை சூடிச் செல்கிறார்கள் என்ற கற்பனை மெய்சிலிர்க்கச் செய்கிறது. யசோதை அவனை ‘கிருஷ்ணா’ என்கிறாள். அக்கணத்தில் ‘தேவகி’யாகிற ராதை அவனை ‘கண்ணா’ என்றழைக்கிறாள்.

இப்போது, ஒவ்வொரு நாளும் விடிவதற்குள்ளாகவே கோகுலம் அடைந்து, யசோதைக்கும் முன்னரே முதல் முத்தத்தை அவனுக்கு அளிப்பவளாக மாறியிருக்கிறாள் ராதை. அன்னை விழி நோக்காத சிறு மகவைப் போல, எவர் கண்களையும் சந்திக்காது, எவர் கேள்விகளையும் செவி கொள்ளாது, அவ்வப்போது தனக்கெனவே புன்னகத்துக் கொண்டு கண்ணனும் தானும் மட்டுமான ஒரு உலகில் வாழ்கிறாள் ராதை.

கண்ணனின் முலையருந்தும் வைபவமும், நீராடும் வைபவமுமென பிள்ளைத் தமிழாகவே விரிகிறது இங்கிருந்து இக்கதை. முழங்காலில் தன் மகவை குப்புறப் படுக்க வைத்து நீராட்டும் தமிழன்னை ஆகிறாள் யசோதை இங்கு. நீரள்ளி விட்டு, மென்துகிலால் துடைத்து, நறுஞ்சுண்ணத் தூளிடும் உப அன்னை ஆகிறாள் ராதை.

அவனை இடுப்பில் அமர்த்தி ராதை காட்டும் உலகே அவன் முதன்முதலில் அறிவது. அவள் விழி வழியே அவன் காண்பதே அவன் உலகு. சொல்பெருகி உலகாகும் விந்தையையும் அவள் குரல் வழியாகவே கண்டடைகிறான்.

அம்மைந்தன் ஏறிச் செல்லும் புரவியாகிறாள் அவள். அவன் பறக்கும் கொடிமரம் ஆகிறாள். பின் நீலத்தழல் பற்றியெரியும் விறகாகிறாள். அவனை ஒவ்வொரு கணமும், முழுமையாக, எல்லாமுமாக ஆராதிக்கும் ‘ராதை’ ஆகிறாள். பின் ஆராதிக்கப்படுபவளாக , ‘ராதை’ ஆகிறாள்.

ஞானியருக்கு பாதம் கொடுப்பவன் ஆயர்குடியின் அன்னையரின் கைகளுக்குத் தலைகொடுக்கிறான் இங்கு. இன்று வரை கூட அவ்வாறு தான். எல்லா அன்னையரின் கைகளிலும் மகவாக தவழ்பவன் கண்ணனே தான். அவர்கள் செய்யும் அத்தனை அலங்காரங்களையும் சூடி மகிழ்கிறான். எவ்வணியும் அவனுக்கு பொய்யணியே என்றுணரும் ராதை அவனுக்கு மயில் பீலி சூட்டுகிறாள். அவளின் காதல் விழியை அவன் சென்னி மேல் எப்போதைக்குமாக பதித்து விட்டது போலாகிறது அப்பீலி விழி.

(மேலும்)