ஓட்டம்

வசதியான
வெம்மை நிறைந்த
அழகிய 
என் அறையில்

இடது புறம்
பூந்தொட்டி 
பாதி படிக்கப்பட்ட புத்தகம்
வலது புறம்
மென்குறட்டை
என

நேற்றிரவு படுக்கப் போனேன்

இதோ இன்று  காலை
விடிந்திருக்கிறது
விறைக்கும் குளிர்
புகை
ஓலம் 
இடிந்த கற்கள்
சூழ

என்
காதும்
கண்களும்
மங்கலாகி இருக்கின்றன

வெகு தூரத்தில் இருக்கும்
என் சகோதரன்
தன் செல்ல நாய் குட்டியோடு
மெத்தென்ற 
காலணி அணிந்து
மென் பனியில்
ஓடத் தொடங்கியிருப்பான்

நானும் இனி என் ஓட்டத்தை
ஆரம்பிக்க வேண்டும்

நேற்றிரவோடு 
தன் ஓட்டத்தை
நிறுத்திக் கொண்டவர்களுக்காகவும் சேர்த்து