
காத்திரமான எழுத்துக்களை வாசிக்கும் போது மனம் குதூகலம் அடைகிறது. அதுவும் பெண் எழுத்தாளர் எழுதியதென்றால், மனம் பெருமையில் விம்மி விடுகிறது. பெண், ஆணென்ற எந்த முன்னொட்டும் அவசியம் இல்லாது, ஒரு புதுப் பார்வையை முன்வைக்கும் எழுத்தென்றால், மனம் கிறங்கித் தான் விடுகிறது. எழுத்தாளர் ஜா.தீபாவின் எழுத்துக்கள் அவ்வகையானவை.
இவரின் ‘மறைமுகம்’ கதையை முன்பே வாசித்திருக்கிறேன். மிக நுட்பமாகச் சொல்லப்பட்ட கதை. இறந்து போன தன் குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு காமாட்சியின் மனதில் ஓடும் எண்ணங்களை- தான் அசைத்துவிட்டு குழந்தை அசைகிறதோ என்று எண்ணிக் கொள்வது, பசிக்குமோ என்று எண்ணி பால் தர முனைவது, தன் கை வெம்மையை குழந்தையின் உடல் வெம்மை என்று பிரமை கொள்வது என்று பலவாறாக மிக நுண்மையாக சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். பாலகனகன் வீட்டிற்கு வரும் ஒன்றிரண்டு முறைகளுக்குள், அவன் முகத்தையாவது மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து அவள் உருவாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்களும், கடைசி வரை அம்முகம் அவனைப் போல, அவர்களின் குழந்தையைப் போல , பிடி கிட்டாது அவளிடமிருந்து நழுவிச் சென்று கொண்டேயிருப்பதும் துயரமான கவிதையைப் போல் அமைந்துள்ளது. கடைசியில் அவளே அவன் உடலை அடையாளும் காட்டும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். சுத்தமாக நினைவிலில்லாத முகத்தை என்னவென்று அடையாளம் சொல்ல. அவன் முகத்தை அருகில் சென்று உற்றுப் பார்க்க, அவளுக்கு கிடைப்பதென்னவோ துருவின் வாசனை தான். தன் கணவனின் கடைசி நினைவாக அந்தத் துரு வாசனை தான் அவளுக்கு வாய்க்கிறது என்பதின் அவலம் மனதை நெகிழ்த்தி விடுகிறது. மற்றோர் உலகில், முகம் தெரியாததால் தன் குழந்தையை கண்டு பிடிக்க முடியாமல் அவன் தேடி அலையட்டும் என்று நினைத்துக் கொள்வதைத் தவிர அப்பெண் வேறெவ்வாறு பழி கொள்ள முடியும். சுதந்திர போராட்டத் தியாகியான வாஞ்சி நாதனின் வாழ்வு அவரின் மனைவியின் பார்வையில் முற்றிலும் வேறொன்றாக விரிகிறது இக்கதையில். எத்தனை நுட்பமான எழுத்தாளர் இவர் என்று எண்ண வைக்கிறது.
இதேயளவு நுட்பமாக அமைந்திருக்கிறது இவரின் ‘ஒற்றைச் சம்பவம்’ கதையும். பார்வையற்ற மணிமாலாவை நாதன் திருமணம் செய்து கொள்கிறான். பொதுப் பார்வையில் ஒரு அருஞ்செயலாக பார்க்கப்படும் இக்காரியம், நுணுகி ஆராய்ந்தால் ஒரு exploitative equation ஆக இருப்பது நமக்கு புலப்படுகிறது. நாதன் மணிமாலாவை அவளுக்காகத் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் தனக்கு கிடைக்கப் போகும் பிம்பத்திற்காக திருமணம் செய்து கொள்கிறான். முதலில் ஏமாந்து போகும் மணிமாலா பின் சுதாரித்துக் கொள்கிறாள். தன் பார்வையின்மை ஒரு விலைபொருளைப் போல சந்தைப் படுத்தப்படுவதை அனுமதிக்காமல் மணிமாலா அவனை விட்டு நீங்குகிறாள். தான் பார்வையற்றவளாக இருக்கலாம் ஆனால் ஊனமுற்றவளாக உபயோகப்படுத்தப்படுவதில் அவளுக்கு சம்மதமில்லை. தன் சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டைக் கூட அவனும் அவன் அன்னையும் இருந்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டு நீங்கிச் செல்கிறாள். அவளின் நிமிர்வு, இந்த பெருந்தன்மை, அவனை தோற்கடித்து விடுகிறது. அதனால் அவளை வெற்றி கொள்வதற்கான கடைசி ஆயுதமாக அவன் தற்கொலை செய்து கொள்கிறான். காலத்துக்கும் அதை நினைத்து அவள் புழுங்கட்டும்; அவனின் தற்கொலைக்கான காரணமாக அவளையே அனைவரும் பழி பேசட்டும் என்று நினைக்கிறான். அதே போல் அனைவரும், அவனின் அம்மா உட்பட அவளைக் குற்றவாளியாகத் தான் பார்க்கிறார்கள்.
இவை அனைத்தும் ஒன்றொன்றாக, கதைப் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சுருள் விரிவது போல தெளிந்து வருகிறது. மணிமாலா பார்வையற்றவள் என்பதைக் கூட மெல்ல வாசகர் புரிந்து கொள்ளும் விதத்தில் தான் கதையை அமைத்திருக்கிறார் ஆசிரியர். வடிவத்தில் ஒரு திரைக்கதையை ஒத்திருக்கிறது இக்கதை.
பார்வையற்றவளான மணிமாலாவுக்கு மற்ற புலன்களை அத்தனை நுட்பமாக அமைத்திருக்கிறார் ஆசிரியர். மற்றவரின் சிறு சிறு உடலசைவுகளையும், குரலின் ஏற்ற இறக்கங்களையும், மூச்சின் ஒலிகளையும் கொண்டு கூட அவளால் அவரை மிகத் துல்லியமாக எடை போட்டு விட முடிகிறது. கண்ணுள்ளவர்கள் என்று சொல்லப் படுபவர்களால் தான் மற்றவரை சரியாக பார்க்கவும் முடிவதில்லை. எத்தனை முக்கியமான பார்வையிது.
இந்தக் கதையில் வரும் இன்ஸ்பெக்டரை ஆசிரியர், பெண்ணாக படைத்திருப்பதிலும் ஒரு நுட்பம் இருக்கத் தான் செய்கிறது. ஒரு ஆண் இன்ஸ்பெக்டரால் மணிமாலாவுக்கு நடந்த exploitation-ஐ புரிந்து கொள்ள முடிந்திருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த இன்ஸ்பெக்டரும் தன் தந்தையின் கனவை தன் கனவாக ஏற்றுக் கொண்டவர்; மற்றவருக்காக வாழ்பவர்; அதனால் தான் மணிமாலாவின் நிலை அவருக்கு புரிகிறது. ‘பெண்’ணாக இருப்பதால் மட்டுமே பலவீனமானவர் என்று எண்ணப்பட்டு, ஒருவர் சந்திக்க வேண்டிய களங்களும் சுமைகளும் தான் எத்தனை.
இன்னின்ன வேலைகளைத் தான் பெண்கள் செய்வார்கள் என்ற கருத்தையும் , இவருடைய கதைகள் அநாயாசமாக உடைத்துக் கொண்டே செல்கின்றன. சமகால பெரு நகர வாழ்க்கையில் இவர் காட்டும் பெண் பாத்திரங்கள் ஏற்கனவே பொதுப் பார்வைக்கு பரிச்சயமானவையாக இருக்கலாம். ஆனால் கதையுலகிற்குள் அப்பாத்திரங்கள் உயிர்ப்புடன் உள்நுழையும் போது , வரலாற்றில் சமகாலத்தின் சரியான பிரதிபலிப்பாக பதிவாகின்றன. உயிர்ப்புடனும் நேர்மையாகவும் இவர் படைக்கும் கதாபாத்திரங்களின் மூலம், இவ்வகையில் மிகச் சிறந்த பங்களிப்பை இவர் செய்கிறார்.
காதலனோடு ஏற்பட்ட பிணக்கினால் பாட்டில் பாட்டிலாக மது அருந்தும், சினிமாவில் இயக்குனாராக வேண்டும் என்னும் எண்ணத்தோடு சென்னைக்கு வந்திருக்கும் உமாவுக்கும்(தீபாவும் ஒரு இயக்குனர் தான்), தலையில் நடந்த ஒரு அறுவை சிகிச்சையால், தலைமுடியை வெட்டிக் கொண்டு, இருபது கிலோ எடை கொண்ட கேமராவையும் லாவகமாக ஒரு குழந்தையைப் போல தோளில் சுமந்தபடி நடக்கப் பழகியவளாய், டீ சர்டும், கையில் வெள்ளிக் காப்புமாக, கிட்டத்தட்ட தன்னை ஒரு ஆணாகவே மாற்றிக் கொண்ட காசி விசாலாட்சிக்கும் நடக்கும் உரையாடலில் துவங்குகிறது ‘வாடைக்காற்று’ கதை.
தனக்கு ஏற்பட்ட விபத்தின் போது காசி ஒரு குப்பைத் தொட்டியில் விழுந்து விட நேர்கிறது. அதன் நாற்றம் அவளை கனவுக்குள்ளும் தொந்திரவு செய்வதாக இருக்கிறது. எப்போதும் தன் மீதும், தான் இருக்கும் அறையிலும் அந்த வாசம் வருவதாக நினைத்து அருவருப்பு கொள்கிறாள் காசி. அதனால் தானோ என்னவோ அவள் தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொள்கிறாள், ஒளித்துக் கொள்கிறாள். நீண்ட தலை முடியுடன், ஜிமிக்கி, பொட்டு வைத்த, தன் பர்ஸுக்குள்ளேயே இருக்கும் தன் பழைய புகைப்படத்தை அவள் பார்ப்பதையே தவிர்த்து விடுகிறாள். ‘நீ அழகாத் தான் இருக்க காசி’ என்று உமா சொல்லும் போது, ‘என்னை மகிழ்விக்க, நான் அழகாக இருக்கிறேன் என்று சொல்லத்தான் வேண்டுமா’ என்று பதில் கேள்வி கேட்கிறாள் காசி.
மீண்டும் ஒரு முறை அந்த வாடை வீசும் குப்பைத் தொட்டியில் இறங்க வேண்டி வருகிறது காசிக்கு. இம்முறை அவள் தன் அருவருப்பிலிருந்து மீண்டு விடுவதாக கதை முடிகிறது. அக்குப்பைத் தொட்டியோடு நின்று அத்தனை அழுக்கோடு காசி ஒரு தற்படம் எடுத்துக் கொள்கிறாள். மிக அழகான கதை.
பெண்’ என்ற இருப்பின் பயணமே தானோ இக்கதை என்று எனக்குத் தோன்றியது. ஒரு விபத்தாக குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு பெண், அதன் வீச்சம் தன் மீது எஞ்சியிருப்பதாக நினைத்து, தன்னையே அருவருத்து, அதற்காக தன்னை ஒரு ஆணைப் போல மாற்றிக் கொண்டவள், சுய பிரக்ஞையோடு அதே குப்பைத் தொட்டியில் இறங்கி, அதோடு சிரித்தபடி தற்படமும் எடுத்துக் கொள்ளும் போது, தன் நிலையை embrace செய்து கொள்ளும் போது விடுதலை அடைகிறாள் என்று எண்ணிக் கொண்டேன்.
மிகச் சரியான நேரத்தில் மிகச் சரியானதை அழகாகச் சொல்லும் முக்கியமான எழுத்தாளர் ஜா. தீபா என்று நினைக்கிறேன்.
‘