அஷ்டபதி 24-குரு யது நந்தன..(நிஜ காத..)

ஸ்லோகம்
அதஸஹஸா ஸுப்ரீதம் ஸுரதாந்தே ஸாநிதாந்த கின்னாங்கி
ராதா ஜகாத ஸாதரமிதமானந்தேன கோவிந்தம்

பிறகு ராதை காதல் களியின் முடிவில், முற்றிலும் களைத்துப் போன அங்கங்களைக் கொண்டவளாய், சீக்கிரம் அழகாக அலங்கரித்துக் கொள்ள ஆசை கொண்டு, மென்மையாக, பிரியமானவனான கோவிந்தனிடம் மகிழ்ச்சியுடன் இவ்வாறு சொன்னாள்.

குரு யதுநந்தன சந்தன ஸிஸிர தரேண கரேண பயோதரே
ம்ருக மத பத்ரகம் அத்ரமனோபவ மங்கள கலச ஸஹோதரே

யது குலத்தில் பிறந்தவனே, சந்தனத்தை விட குளிர்ந்த உன் கைகளால் மன்மதன் உறையும் மங்கள கலசங்களான, இரட்டையர்களான, இந்த என் ஸ்தனங்களில் கஸ்தூரியால் இலைகளை வரைவாய்.

நிஜகாத ஸா யது நந்தனே க்ரீடதி ஹ்ருதயானந்தனே
நந்த நந்தனே பக்த சந்தனே – நிஜ

அவள்(ராதை) யது குலத்தில் பிறந்தவனிடம், இதயங்களை குதூகலம் அடையச் செய்பவனிடம், விளையாடிக் கொண்டிருப்பவனிடம், நந்தனின் மகனிடம், பக்தர்களை குளிர்விப்பவனிடம் மீண்டும் சொன்னாள்.

அளிகுல பஞ்ஜனம் அஞ்ஜனகம் ரதி நாயக ஸாயக மோசனே
த்வததர சும்பன லம்பித கஜ்ஜலம் உஜ்வலயப்ரிய லோசனே – நிஜ

பிரியமானவனே, மன்மதனின் அம்புகளை எய்யும் என் கண்களில், உன் உதடுகளின் முத்தங்களால் கலைந்த கண்மையை, வண்டுகளை வெட்கச் செய்யும் அளவு கருமையாக திருத்தி எழுதி ஒளிகூட்டி விடு.

நயன குரங்க தரங்க விலாஸ நிரோதகரே ஸ்ருதி மண்டலே
மனஸிஜ பாஸ விலாஸதரே ஸுபவம்ஸேனிவேஸய குண்டலே – நிஜ

மிக அழகாக ஆடையணிந்தவனே, என் கண்களின் மேலும் மேலும் விரிவதற்கான ஆசையை குறைக்கும், மன்மதனின் பாசத்தை ஏந்தியிருக்கும், என் காதுகளில், குண்டலங்களை சரி செய்து விடு.

ப்ரமரசயம் ரசயந்தமுபரி ருசிரம் ஸுசிரம் மம ஸம்முகே
ஜிதகமலே விமலே பரிகர்மய நா்மஜன கமலகம்முகே – நிஜ

தாமரை போன்ற முகம் கொண்டவனே, முழுதாய் மலர்ந்த தாமரையை வென்றது போன்றுள்ள என் முகத்தின் மேற்பகுதியில், வண்டுக் கூட்டங்களைப் போல, எப்போதும் இருக்கும் வசீகரிக்கும் அழகான தலை முடியை என் முகத்தின் அருகில் நின்று சரி செய்து விடு.

ம்ருக மத ரஸ வலிதம் லலிதம் குரு திலக மளிக ரஜனீகரே
விஹிதகளங்ககளம் கமலானன விஸ்ரமிதஸ்ரம ஸீகரே – நிஜ

தாமரை போன்ற முகம் கொண்டவனே, நிலவைப் போன்றிருக்கும் என் நெற்றியில், வியர்வைத் துளிகள் , இப்போது இல்லாதாகி விட்டன. கஸ்தூரியினால் , நிலவின் முகத்தில் இருக்கும் களங்கத்தைப் போல் திலகமிடு.

மம ருசிரே சிகுரே குரு மானத மானஸஜத்வஜ சாமரே
ரதிகளிதே லளிதே குஸுமானி ஸிகண்டி ஸிகண்டகடாமரே – நிஜ

எனக்குப் பிரியமானவனே, அழகானவனே, மன்மதனின் கொடியில் உள்ள சாமரத்தைப் போன்ற, மயிற்தோகையைப் பழிக்கும்படி உள்ள, ரதி கேளியில் கலைந்து போன என் கூந்தலில் பூக்களை சூட்டி அழகு படுத்து.

ஸரஸகனே ஜகனே மம ஸம்பர தாரண வாரண கந்தரே
மணி ரஸனா வஸனா பரணானி ஸுபாஸய வாஸய ஸூந்தரே- நிஜ

உயர்ந்த லட்சியங்கள் கொண்டவனே, சம்பரம் என்ற அசுரனைக் கொன்ற மன்மதனின் யானை உலாவும் அழகிய மலைச்சாரலை விட பெரியதாக இருக்கும் என் இடுப்பில், மணிகள் நிறைந்த ஆடை ஆபரணங்களை அணிவித்து விடு

ஸ்ரீஜயதேவ வசஸி ஸுபதே ஹ்ருதயம் ஸதயம் குரு மண்டனே
ஹரிசரண ஸ்மரணாம்ருத நிர்மித கலிகலுஷஜ்வர கண்டனே – நிஜ

ஸ்ரீ ஜெயதேவரால் சொல்லப்பட்ட மங்களம் தரும் , பதக்கம் போன்ற, ஹரியின் சரண கமலங்களை எப்போதும் நினைத்ததால் சேகரித்த அமுதம் போன்ற , கலியின் கொடுமையை நீக்கும் இவ்வரிகளில் எப்போதும் உன் மனத்தை நிறுத்துவாயாக.

(அஷ்டபதி நிறைவுறுகிறது. ராதா அஷ்டமியன்று இது நேர்ந்திருக்கிறது)