ஆபரணம்-திருச்செந்தாழை-சிறுகதை வாசிப்பனுபவம்

ஒரு ஓவியக் காட்சியைப் போல அமைந்திருக்கிறது இக்கதை. கட்டுப்போட்டக் காலை ஒரு அழுக்கு மூட்டையின் மீது வைத்திருக்கும் திரவியம்; அவன் அருகில் தொட்டிலில் தண்டை தெரிய களுக்கென்று புரண்டு படுக்கும் ஒரு பிஞ்சு; திண்ணையில் எழுதிக் கொண்டிருக்கும் மூத்தவன் அருகில் அமர்ந்திருக்கும் காளியண்ணன்; சிறுமியைப் போல் , நிமிர்ந்து பார்க்க முடியாமல் , அவர்கள் வந்ததை நம்ப முடியாமல், மரியம் திரவியத்தை பார்த்து புன்னகைத்ததைப் போல், தன்னைப் பார்த்தும் புன்னகைத்து விட்டால் என்ன செய்வதென்றறியாது குழப்பத்தோடு அடுக்களைக்குள் ‘சென்று கொள்ளும்’ சித்திரை; கவிந்து விட்ட அமைதியில் என்ன செய்வதென்றறியாது திகைத்து, ஒளிந்து கொள்ள முயலும் மரியம் என்று ஓவியம் போன்ற இக்காட்சியே கதையின் மையம். தன் நுட்பமான சித்தரிப்பினால் ஆசிரியர் சமைத்தளித்திருக்கும் இக்காட்சி நெடு நாட்கள் வரை மனதிலேயே உறைந்திருக்கும் என்று தோன்றுகிறது.

பொறாமையின், தோல்வியின், வெற்றியின் சித்திரம், என பலவாறாக இக்கதை அமைந்திருக்கிறது. சீனிச் சேவை வாங்கிக் கொள்ளும் முன் அம்மா சித்திரையின் முகத்தைப் பார்க்கும் மூத்தவன், பாலருந்தி முடித்தவுடன் அவள் இடுப்பில் அமர்ந்து கொண்டு அவள் கன்னத்தை நக்கும் கைக் குழந்தை, அவள் துவட்டி விடுவதற்காக, நடுங்கும் உடலுடன், அவளருகே நிற்கும் இரண்டாமவன் என்று ஒவ்வொருவரும் அவளுக்கு வெற்றியைப் பெற்றுத் தருகிறார்கள். மழைக்காலத்தில் பூச்சி பொட்டு வருமா என்ற மரியத்தின் கேள்விக்கு தனக்கே தெரியாமல் கணவனின் பேரில் வாஞ்சையுடன் சித்திரை சொல்லும் சொற்களும் அவளுக்கு வெற்றியைப் பெற்றுத் தருகின்றன.

மறு பக்கம், மரியத்திற்கு நிகழ்ந்திருப்பவையெல்லாம் தோல்விகள் தான். குழந்தையின்மை, திரவியத்தின் நோய், மூன்றாம் குழந்தையை தத்து கேட்ட போது சித்திரை ஒப்புக் கொள்ளாதது , அவர்கள் காரில் கிளம்பும்போது, தன் கன்னத்தை நக்கிய சிறு குழந்தையின் பால் மணத்தை முகரும் சித்திரையின் முகம் என அனைத்தும் மரியத்தின் முழுத் தோல்விகளே.

பாலில் முக்கியெடுத்ததால் கவுச்சி வாசனை வீசும் சித்திரையின் நெக்லஸை முகர்ந்து புன்னகைத்ததிற்கான பலன் இந்தத் தோல்வி. சித்திரையும், திலகரும் அத்தனை ஏமாற்றப்பட்ட போதும், அச்சூழலிருந்து ஒரு நொடி எழுந்து தங்கள் கனவைத் தொட்டு புன்னகைத்ததிலிருந்து துவங்குகிறது அவர்களின் வெற்றி.

முழங்காலளவு நீரில் பளிச்சென்றுத் தெரியும் ஆற்று மணல், தொடர்ந்து வரும் வாழைத் தோப்பின் பசுமை, அத்தோப்பிற்கென பிரத்யேகமாகச் செல்லும் வாய்க்கால் என இவை அனைத்தும் சித்திரை-திலகரின் குறைந்த வருமானத்திலும் பச்சென்று வாழும் வாழ்வை விவரிப்பது போல் உள்ளன. வரண்ட இடத்திலிருந்து, இத்தனை வளமாகயிருக்கும் இடத்திற்கு செல்லும் அப்பயணம், பசேலென்றிருக்கும் சித்திரை-திலகரின் வாழ்க்கையைப் பார்ப்பதற்கு மரியம் செல்லும் பயணத்திற்கான குறியீடு தான்.

அழுக்கான மெழுகுவர்த்தியாகவும், அவளிலிருந்து சிந்திய மெழுகுத் துளிகளாகவும் சித்திரையும் குழந்தைகளும் வர்ணிக்கப்படுவது புதியதான ஒரு கற்பனை. களைத்துப் போன யானையும் குதிரையுமாக சித்திரையும்-மரியமும் களத்தில் அமர்ந்திருப்பதாக வரும் காட்சியும் புதியதாய் இருக்கிறது

பணத்தாசை கொண்ட மரியத்திற்குள், முகத்தை மூடிக் கொண்டு அழும் சிறுமியை பார்க்கிறான் திரவியம். அவள் பணத்தின் மூலமாவது திருப்தி அடைந்து விட மாட்டாளா என்று, அவளின் வாஞ்சை நிறைந்த பார்வைக்காகவே ஓடி ஓடி உழைக்கிறான் அவன். மரியம் இட்ட பணியை செய்யும் படைத் தளபதி போலிருக்கிறான் அவன். தன் தம்பியை அவன் ஏமாற்றியதும் கூட அவள் மீது கொண்ட பற்றினால் தான். காய்ந்த நரைத்த முடியோடு தன் மடியில் படுத்துறங்கும் திரவியத்தை வாஞ்சையோடு பார்த்து புன்னகைக்கிறாள் மரியம். உண்மையில் இந்தக் கதையே அவர்கள் நடுவில் உள்ள அந்தக் காதலைப் பற்றியது தானா என்று எண்ண வைக்கிறது.

திருச்செந்தாழையின் ‘த்வந்தம்’ கதையையும் வாசித்திருக்கிறேன். அவருடைய அனைத்து கதாபத்திரங்களும், கண்களின் ஒளியாலும் புன்னகையாலும் சொல்லாததையெல்லாம் சொல்லிச் செல்கின்றனர். கதையில் நிகழ்வது ஒரு தளம் என்றால், புன்னகையின் மூலமும் கண் ஜாடைகளினாலும் மற்றொரு நுட்பமான தளமும் எப்போதும் இவர் கதைகளில் சொல்லப்படுகிறது. Fine, intense and thorough ஆசிரியர் திருச்செந்தாழை.