நோட்ஸ் டு மைசெல்ஃப்-பாம்பே ஜெயஸ்ரீ

‘Museum of performing arts’, Chennai பதிவு செய்துள்ள மிக நேர்த்தியான நேர்காணல் இது. முதலில் இதைப் பார்க்க ஆரம்பித்த போது, பெரிதாக ஆர்வமில்லாமல் தான் பார்க்கத் துவங்கினோம். பாம்பே ஜெயஸ்ரீயின் இசைப்பயணத்தைப் பற்றி முன்பே கொஞ்சம் தெரியும் என்பதால் புதிதாக என்ன சொல்லி விடப் போகிறார் என்று நினைத்து தான் பார்க்க ஆரம்பித்தோம். பார்க்க ஆரம்பித்த சில மணித் துளிகளிலேயே நம்மை தன் ஆளுமையால் ஈர்த்துவிடுகிறார் பாம்பே ஜெயஸ்ரீ.

இவருடைய பாடல் திறமையைப் பற்றி நாமெல்லாம் அறிவோம் தான். ஆயினும் பேசும்போது, அவருடைய பதறாத, அந்த மெலிதான குரல், நமக்கு ஒரு அமைதியைத் தருகிறது. அவரை மிக விரும்ப வைக்கிறது. இந்தப் பெண்மணி ஒரு பாடகர் மாத்திரம் அல்ல, ஒரு மிகச் சிறந்த ஆளுமை, ஒரு elegant, dignified, aesthetic மனிதர் எனத் தோன்றி விடுகிறது.

எனக்கு இந்த நேர்காணலில் மிகவும் பிடித்தது, எது ஒன்றையும் விவரிக்கும் போது, அவர் செய்யும் துல்லியமான காட்சி சித்தரிப்பு மற்றும் அச்சூழலில் இருந்த வாசனைகளையும் சேர்த்து அவர் நினைவு கூறும் விதம். இவர் எவ்வளவு தூரம் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனிக்கிறார் என்று வியந்து போனேன். செவிப் புலனும், காட்சிப் புலனும், நுகர் புலனும் என எல்லாம் எத்தனைத் துல்லியமாக இருக்கின்றன இவருக்கு என்று தோன்றியது.

இவர் தன் குரு லால்குடி ஜெயராமனிடம் , மீனாட்சி மேமுதம்’ பாடலைக் கற்றுக் கொள்ளும் போது, ‘மஹாதேவ’ என்ற சொல்லுக்கும் ‘சுந்தரேச’ என்ற சொல்லுக்கும் நடுவில் உள்ள அந்த ‘மௌனம்’ எப்படி அந்த ராகத்திற்கும், அந்தப் பாடலுக்கும் ஒரு புது அர்த்தத்தை தனக்கு அளித்தது என்று சொல்லும் போது, ‘கவிஞர் இவர்’ என்று சொல்லிக் கொண்டேன். ஒரு பாடகர் மௌனத்தைப் பற்றிப் பேசுவது கவிதையன்றி வேறென்ன.

எதைப் பற்றிச் சொல்லும் போதும், அதில் மெல்லியதாக ஊடாடும் , ஒரு நகைச்சுவை, இவரை மிகவும் ‘endearing’ ஆக்குகிறது. தன் அன்னையைப் பற்றி சொல்லும் போதெல்லாம், அவர் குரலில் வரும், கண்ணுக்குத் தெரியாத மெல்லிய ஒரு உணர்வு – தான் ஒரு ரிபல்-ஆக இருந்தோமே, அம்மா இவ்வளவு pushy-ஆக இருந்தாளே, இரண்டு பேரும் அப்படியில்லாமல் இருந்திருக்கலாமோ என்று பலவிதமாக ஒரு கதையையே சொல்கிறது.

கர்னாடக சங்கீதத்தின் ஆரம்ப கால பாடங்களான சரளி வரிசை, ஜெண்டை வரிசை ஆகியவற்றைப் பற்றிய அவர் எண்ணங்களையும், ஒரு சங்கீத ஆசிரியர் தான் சொல்வது போலத் தான் மாணவர் பாட வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம் சங்கீதத்துக்கு ஏற்படும் இழப்பைப் பற்றி அவர் கூறுவதையும் ஒரு சங்கீத ரசிகையாக நானும் ஏற்கிறேன். இதில் அவரின் அக்கறை துலங்குகிறது. சங்கீதம் இன்னும் நிறைய பேருக்கு சென்றடைவதற்கான முக்கியமான எண்ணங்கள் இவை.

காபி கோப்பையை கீழே வைக்கும் சிறு ஓசையும் கூட, தனக்கு அந்த ராகமாக ஒலித்ததாகக் கூறும் போது, ‘நாதப்பிரம்மம்’ என்று சொல்லிக் கொண்டேன். எங்கும் நிறைந்திருக்கும் ஒன்று, சிலரிடம் மட்டுமே தன்னைக் காட்டிக் கொள்கிறது. தன்னோடு கலக்க விடுகிறது. வாய் திறந்து பாடக்கூடத் தேவையற்று, சதா நாதப் பிரம்மத்தோடே கலந்திருக்கும் மோகமுள்ளின் ரங்கண்ணாவை நினைத்துக் கொண்டேன். இன்றிரவு, இவர் குரலோடு தான்.