அஷ்டபதி 23-கிஸலய சயனே..(க்ஷண மதுனா..)

கதவதி ஸகீ ப்ருந்தே அமந்தத்ர பாபர நிர்பர
ஸ்மர பரவஸாகூத ஸ்பீத ஸ்மித ஸ்னபிதாதரம்
ஸரஸம் அலஸம் த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டாம் முஹூ: நவபல்லவ
ப்ரஸவ ஸயனே நிக்ஷிப்தாக்ஷீம் உவாச ஹரி: ப்ரியாம்

அவளைச் சுற்றியிருந்த தோழிகளின் சுற்றம் நீங்கிய பின், அளவற்ற வெட்கம் நிரம்பியவளாய், மன்மதனின் அழைப்பை உணர்ந்து பரவசம் கொண்டவளாய், மெல்ல மெல்ல வளரும் புன்னகையில் குளித்த அதரங்கள் கொண்டவளாய், புதிதாய் பிறந்த இளந்தளிர்களாலான சயனத்தை நோக்கி கண்களை தாழ்த்தி நின்றவளாய், கனிந்த மனம் கொண்டவளாய், மகிழ்ச்சி நிரம்பியவளாய், இருந்த ராதையை, தனக்கு பிரியமானவளை பார்த்து கண்ணன் இங்கனம் சொன்னான்:

கிஸலய ஸயன தலே குரு காமினி சரண நளின வினிவேஸம்
தவ பத பல்லவ வைரிபராபவம் இதமனுபவது ஸுவேஸம்

இளந்தளிர்களால் அழகாக தயாரிக்கப்பட்ட இந்த மஞ்சத்தில் உன் தாமரை போன்ற பாதங்களை வைப்பாய், காதலி, உன் பாதங்கள் எத்தனை மென்மையானவை, என்பதை அறிந்து இந்த மஞ்சம் பொறாமையை அனுபவிக்கட்டும்.

க்ஷண மதுனா நாராயணம் அனுகதம் அனுபஜ ராதே ராதே

ராதையே, ராதையே, இப்பொழுது ஒரு நொடி நாராயணன் சொல்வதைக் கேள், அவன் சொல் படி நட.

கரகமலேன கரோமி சரணமஹம் ஆகமிதாஸி விதூரம்
க்ஷணமுபகுரு ஸயனோபரி மாமிவ நூபுரம் அனுகதி ஸூரம்

வெகு தொலைவு உன்னை வரச் செய்து விட்டேன், என் கரத்தாமரைகளால் உன் கால்களை பிடித்து விடுகிறேன்; என்னைப் போல உன்னையே எப்போதும் தொடர்ந்து வரும் உன் கொலுசுகளை இந்த சயனத்தில் ஒரு நிமிடம் ஓய்வு கொள்ளச் செய்(க்ஷண மதுனா..)

வதன ஸுதாநிதி களிதம் அம்ருதமிவ ரசய வசனம் அனுகூலம்
விரஹமிவாபனயாமி பயோதர ரோதக முரஸிது கூலம்

நிலவைப் போன்ற உன் முகத்திலிருந்து வழியும் அமுதத்தைப் போன்ற அனுகூலமான வார்த்தைகளைச் சொல்; உன் விரகத்தையே நீக்குவது போல உன்னை கஷ்டப்படுத்தும் இந்த ஆடைகளையும் நீக்குகிறேன்(க்ஷண மதுனா..)

ப்ரிய பரிரம்பண ரபஸ வலித மிவ புளகிதம் அதிதுரவாப்தம்
மதுரஸி குசகலஸம் வினிவேஸய ஸோஷய மனஸிஜ தாபம்

காதலனின் அணைப்பை வேண்டி, மெய் சிலிர்த்து, தாங்க முடியாத ஏக்கம் கொண்டிருக்கும் நீ என் மீது சாய்ந்து கொள், மன்மதனால் உண்டான தாபத்தை போக்கிக் கொள்(க்ஷண மதுனா..)

அதர ஸூதார ஸம் உபனய பாமினி ஜீவய ம்ருத மிவ தாஸம்
த்வயி விநிஹித மனஸம் விரஹானல தக்த வபுஷம் அவிலாஸம்

பாமினி, உன் அதரத்தின் தேன் சுவையை எனக்களி, உன்னுடைய இந்த சேவகன் இறப்பிலிருந்து உயிர் கொள்ளட்டும்; உன் மீதே ஈடுபட்டிருந்த இம்மனத்தின் விரகத் தீயால் எரிக்கப்பட்ட என் உடல் குளிரட்டும்.(க்ஷண மதுனா..)

ஸஸிமுகி முகரய மனிரஸனாகுணம் அனுகுண கண்ட நினாதம்
ஸ்ருதியுகளே பிகருதவிகலே மம ஸமய சிராத் அவஸாதம்

நிலவைப் போன்ற முகம் கொண்டவளே, உன் இடை நகையிலிருந்து உன் குரலோடு சேர்ந்து ஒலிக்கும் அவ்வொலியை எழுப்பு; நெடுங்காலம், குயில்களின் ஒலியால் தடித்துப் போய் கேளாமலான என் இரண்டு செவிகளையும் காப்பாற்று.(க்ஷண மதுனா..)

மாமபி விபலருஷா விகலீக்ருதம் அவலோகிதம் அதுநேதம்
மீலதி லஜ்ஜிதமிவ நயனம் தவ விரம விஸ்ருஜ ரதிகேதம்

உன்னுடைய கோபத்தால் நடுங்கி இருக்கும் என்னை, வெட்கத்தால் மூடியிருப்பது போலத் தோன்றும் உன் கண்களால் பார்த்து மகிழ்ச்சி கொள்; உன் கோபத்தை விட்டு விடு. (க்ஷண மதுனா..)

ஸ்ரீ ஜயதேவ பணிதமிததம் அனுபத நிகதித மதுரிபு மோதம்
ஜனயது ரஸிக ஜநேஷு மனோரம ரதிரஸ பாவ விநோதம்

ஸ்ரீ ஜெயதேவரால் சொல்லப்பட்ட இவ்வொவ்வொரு சொல்லும் மதுவின் எதிரியின்(கிருஷ்ணனின்) மகிழ்ச்சியைச் சொல்கிறது. இது ரசிக ஜனங்களில், மனதை மயக்கும் காமக் களியாட்டு உணர்வை உண்டாக்கட்டும்(க்ஷண மதுனா..)