சிற்றறையில்..

இத்தனைச் சிறிய
அறையில்
அத்தனைப் பெரிய யானை
எப்படி
வந்து நின்றது

எப்பக்கம் திரும்பினாலும்
அங்கு
அதுவன்றி வேறில்லை

கண் மூடி
அது அங்கில்லை
என்றே
எண்ண
விழைகிறேன்

என் கண்ணின்
கருமையும்
அதுவென்றே
ஆகிறது

இப்போது
அதன் மூச்சு
என் முகத்தில்

கண் திறந்து
பார்க்கிறேன்

தலையையும்
தும்பிக்கையயும்
காதுகளையும்
கால்களையும்
வேகமாய்
அசைத்த படி

அது
அங்கேயே நிற்கிறது
நொடியும்
மறக்க முடியாதபடி

அத்தனைப் பெரிய அதன்முன்
இத்தனைச் சிறியதாய்
நிற்கிறேன்

மண்டியிட்டால்
கால் தூக்கி
கொன்று விடலாம்

அதை
இத்தனைச் சிறிய அறையிலன்றி
வெட்ட வெளியில்
சந்தித்திருக்கலாம்

திரும்பிப் பார்க்காமல்
ஓடி
ஒளிந்திருப்பேன்

அல்லது
சிறு பறவையாகி
அதன் மத்தகத்தில்
அமர்ந்திருப்பேன்

துளி
கருணை கொண்டிருக்கலாம்

கையடக்க
மூர்த்தமாக்கி
வைத்து விளையாடியிருப்பேன்

அல்லது
மலரிட்டு
பூஜித்திருப்பேன்

எதுவுமில்லாவிட்டாலும்
மதமின்றியாவது
இருந்திருக்கலாம்

நெருக்கியடித்து
வாழ்ந்து தீர்த்திருப்பேன்

இச்சிற்றறையிலும்

அவ்வேழத்துடன்

4th August
9:58 AM