குஸ்தி-சிறுகதை

அம்மாவிடம் அரித்து பிடுங்கி தைத்து வைத்திருந்த மேட்சிங் ஜாக்கெட்டோடு  புதுப் புடவையையும் அணிந்து கொண்டாள் ரம்யா. சேலை கட்டி விட பக்கத்து வீட்டு செல்வியக்காவை கேட்டிருந்தாள். அவள் வராததால் தானே தெரிந்த வரை கட்டிக் கொண்டாள். இன்று அவளுக்கு பிறந்த நாள். அவளுக்கு ஒரே உற்சாகமாக இருந்தது. ரெடியாக எடுத்து வைத்திருந்த மேட்சிங் வளையல்களையும் , அவள் வேலை செய்யும் வீட்டு அம்மா தந்த சற்றே மங்கிப் போன கவரிங் நகைகளையும் அணிந்து கொண்டாள். கண்ணுக்கு மையும், நெற்றியில் கலர் பொட்டும் வைத்துக் கொண்டாள். ரம்யா நல்ல வளர்த்தி. அவளுக்கு சேலை எடுப்பாக இருந்தது. பீரோ கண்ணாடியில் இந்த பக்கமும் அந்த பக்கமும் திருப்பித் திருப்பித் தன் அழகை பார்த்துக் கொண்டாள். ஷாம்பு போட்டு குளித்திருந்தாள்.  தலை முடி பறக்க பறக்க அவளுக்குத் தானே ஒரு ஹீரோயினாக ஆகி விட்டது போல் ஒரு உணர்வு.  மெல்ல ஒரு பாடலை முணுமுணுத்த படி செருப்பை மாட்டிக் கொண்டாள்.

ரோட்டில் நடக்க ஆரம்பித்ததும் அவளுக்கு பரபரவென்றிருந்தது, உடலெல்லாம் பூப்பூத்தது போல். எல்லோரும் அவளையே பார்ப்பது போல் அவளுக்குத் தோன்றியது. மண்டை பிளக்கும் வெயிலில், நிலா வெளிச்சத்தில் நடப்பது போல் மெல்ல அடி மேல் அடி வைத்து நடந்தாள் ரம்யா.

பக்கத்து வீட்டு செல்வியக்கா அவளோடு வருவதாகச் சொல்லியிருந்தாள். வழியில் சாக்லேட் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் வீட்டுக்கு முதலில் செல்ல வேண்டும்.  அவர்களுக்கு சாக்லேட் கொடுத்து விட்டு, பின் வேலைக்கு வரவில்லை என்று சொல்ல வேண்டும்.  நினைக்கும் போதே இனித்தது அவளுக்கு. பிறகு அது வரை தெரு முக்கிலேயே நிற்கும் செல்வியை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போக வேண்டும்.  அம்மா கொடுத்த நூறு ரூபாய் கையில் இருந்தது.  கோவிலருகில் கண்ணில் பட்டதை எல்லாம் அவளும் செல்வியும் வாங்கிச் சாப்பிட வேண்டும். பலவாறாக நினைத்துக் கொண்டே செல்வி வீட்டருகில் சென்றாள்.

வாசலில் அமர்ந்து கொண்டு தலை சீவிக் கொண்டிருந்த, செல்வியக்காவுடைய அம்மா  அவளை ஆச்சரியமாக பார்த்தாள்.

‘என்ன ரம்யா, சேலையெல்லாம் கட்டி நகையெல்லாம் போட்டு சூப்பரா எங்க கெளம்பிட்ட, இந்நேரத்துக்கு நீ வேலக்கி இல்ல போவ? எங்க உங்கம்மா, முன்னையே போயிருச்சா?’

‘ஆமாத்தே, அது முன்னாடியே போயிருச்சு, செல்வி எங்க’

‘எதுக்குடீ’

‘இல்லத்த, எனக்கு இன்னிக்கி பெர்த்டே.  நான் வேலக்கி போவல. செல்விய கூட்டிகிட்டு  கோவிலுக்கு போலாம்னு சொல்லியிருக்கேன். அதுக்குதான் வந்தேன்.’

‘பர்த்டேயா, சரி சரி.  செல்வி இன்னிக்கி எங்கியும் வரமாட்டா. அவள பொண்ணு பாக்க வராங்க.   எல்லாம் நல்ல படியா முடிஞ்சா நாளக்கி உங்கம்மா கிட்ட விஷயத்த சொல்றேன். அப்பறம் நீயும் செல்வியும் பேசிக்கங்க.  இப்ப நீ போ ஆத்தா.’

ரம்யாவுக்கு துக்கமாக இருந்தது. ‘செல்வி இல்லாம எப்பிடி போறது? என் பர்த்டேயன்னிக்கா அவங்க வரணும்’.

திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே செல்ல ஆரம்பித்தாள். 

‘செல்வியக்கா என்ன விட ரண்டு வயசு தான் பெருசு. இப்பவேவா பாக்க வருவாங்க.’ அவளுக்கு தலை கிர்ரென வந்தது.

மெல்ல கால் கொலுசு ஜல் ஜல்லென்று சப்தம் எழுப்ப அவள் வேலை செய்யும் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

அவள் அம்மா தூரத்திலேயே அவளைப் பார்த்து விட்டாள்.

‘ஏண்டி, இவ்ளவு நேரம். சாயங்காலம் கட்டினா போறும்னு சொன்னேனா?  சீவி சிங்காரிச்சுகிட்டு வந்திருக்கியே எப்பிடிடீ வேல செய்வ? பத்து நிமிஷம் முன்னாடியே வந்திருந்தா ஒத்தாசையா இருக்குமில்ல, உன்ன வச்சிட்டு என்ன செய்யறது?’

‘நான் இன்னிக்கி வேல செய்ய மாட்டேன் போ’

‘ஆமா, இவ பெரிய கலக்டரு, இன்னிக்கி செய்ய மாட்டேன், நாளக்கி செய்ய மாட்டேன்ன்னு, போடி போய் பாத்தரத்துல தண்ணி தெளிச்சு வய்யி’

‘போம்மா, நா ஒண்ணும் செய்ய மாட்டேன்.’ தொண்டை அடைத்துக் கொண்டது. கர கர வென்று அழ வேண்டும் போலிருந்தது.

‘என்னாச்சி, அம்மாவும் பொண்ணும் இன்னிக்கும் ஆரம்பிச்சாச்சா’ கேட்டுக் கொண்டே வீட்டுக்கார அம்மாள் வந்தாள்.

‘பாருங்கம்மா, பர்த்டேன்னு சாயங்காலம் கட்டிக்க சொன்னத இப்பவே கட்டிக்கிட்டு வந்து வேல செய்ய மாட்டேங்குது’.

‘ அட பர்த்டேவா, நல்லா தான் இருக்கு. ஜிமிக்கியும் நெத்திசூடியும்..அழகாயிருக்க ரம்யா’

‘நீங்க குடுத்தது தான்மா’

‘அப்பிடியா, நல்லா இருக்கு ரம்யா,  ஆனா ஏன் முகம் டல்லா இருக்கு’

‘ஒண்ணும்  இல்லம்மா’ கையிலிருந்த சாக்லேட்டை கொடுத்து விட்டு சிரிக்க முயன்றாள்.

‘எனக்கெதுக்கு சாக்லேட்டு, நீ சாப்பிடு. நீ இன்னிக்கி வேலை செய்ய வேணாம். தேராட்டம் வந்திருக்க..சும்மா உக்காந்துக்கோ’

‘நீங்க வேறம்மா, அதுக்கு செல்லம் குடுக்குறீங்க. அவங்க அப்பா அவளுக்கு பையன் பாக்க ஆரம்பிச்சிட்டாரு’

‘நெஜமாவா, இத்தன சின்ன பொண்ணுக்கா, படிப்பு வரலன்னு பத்தாவதோட நிறுத்துன, இப்ப இது வேறயா’

‘ நல்ல காரியம் ஒண்ணும் சொல்லாதீங்கம்மா’

‘அட .. நான் ஒண்ணும் சொல்லல. இவளுக்கு பதினாறு வயசாவது ஆச்சா?’

‘இல்லம்மா, இன்னிக்கி தான் பதினஞ்சு பொறக்குது’

‘வளத்தியா இருக்கால்ல, அதான் கூட காட்டுது. பதினஞ்சிக்கல்லாம் பண்ணக் கூடாது தங்கம். அதுக்கு என்ன தெரியும்’

‘சரி தான்மா.  ஆனா நாம வேல அது இதுன்னு வெளிய போறோம். இது வேற பக்கம் அது இதுன்னு ஏதாவது பண்ணிக்கிச்சுன்னா.. அவங்க அப்பாவும் அண்ணனுங்களும் வெட்டி போட்ருவாங்கம்மா, அதான் பயமாயிருக்கு’

‘ஆ’ வென்று வாயை பிளந்து கொண்டு சீரியல் பார்த்துக் கொண்டிருந்த ரம்யாவைப் பார்த்தார்கள்.

‘ஒம் பொண்ண நீயே நம்பலன்னா எப்பிடி? அவங்க அப்பாவாவது சரி, சின்னப் பயலுக, இவ அண்ணனுன்களுக்கு என்ன தெரியும் இதையெல்லாம் பத்தி?’

‘ அய்யோ,  உன் தங்கச்சி இப்பிடியான்னு அவனுங்கள இல்ல கேப்பாங்க.  அவமானமில்ல.’

‘என்னவோ போ, நீ வேலய கவனி’ வீட்டுக்காரம்மா எழுந்து போனாள்.

வேலை முடித்து செல்லும் போது, ‘இந்தா ரம்யா பொண்ணு, எழுந்துக்கோ. பாவம் டீவி பாத்துக்கிட்டே தூங்கிட்டா, இந்தா..உனக்கு பர்த்டே கிஃப்ட், கிளிப்பு, ஸ்டிக்கர், தீனி ஏதாவது வாங்கிக்கோ’

‘தாங்ஸ்மா’

வாயைத் துடைத்துக் கொண்டு அம்மா பின்னாலேயே நடந்தாள் ரம்யா.

இரண்டு மாதங்களில் ஒரு தட்டில் பத்திரிக்கை வைத்து நீட்டினார்கள் தங்கமும் அவள் புருஷனும்.

மூன்றாவது மாதத்தில் ‘அம்மா, இனிப்பு எடுத்துக்கோங்கமா, ரம்யா முளுவாம இருக்கு’ என்றாள் தங்கம்.

‘அய்யோ..’ என்ற வார்த்தையை கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டாள் வீட்டுக்கார அம்மாள்.

‘நல்ல டாக்டர் கிட்ட கூட்டிட்டு போ தங்கம்’ கண் கலங்கியது.

பொங்கல் கழிந்து சில நாட்களில் ‘அம்மா பேத்தி பொறந்துருக்கு’ என்றாள் தங்கம்.

‘ரம்யா புருஷன் வந்து பாத்தாரா’

‘இன்னும் இல்லம்மா, வந்திருவாரு’ மென்று விழுங்கினாள் தங்கம்.

ஒரு நாள் அழைப்பு மணி அடித்த போது, வாசலில் தங்கம் நின்றிருந்தாள். கூடவே ரம்யாவும் கைக் குழந்தையோடு.

‘பச்ச ஒடம்புக் காரி, இவள எதுக்கு கூட்டிட்டு வந்த தங்கம்’

‘வீட்ல இருந்தா அளுதிட்டே இருக்கும்மா, அதான் மாறுதலா இருக்கட்டுமேனு’

டீவியின் முன்னால் குழந்தையைப் போட்டு விட்டு, இம்முறை யாரும் சொல்லாமல் தானே வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் ரம்யா.

குழந்தை ஜல் ஜல்லென்னும் கொலுசுச் சத்தத்தோடு கை கால் ஆட்டி காற்றோடு குஸ்தி போட்டுக் கொண்டிருந்தது.