வைரம்-சிறுகதை

கைப்பையை திறந்து அதிலிருந்த லிஸ்டை எடுத்துக் கொண்டு அந்த பிரபலமான டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குள் நுழைந்தேன்.  ஜன நடமாட்டம் அதிகமில்லை. அடுக்கி வைக்கப் பட்டிருந்த ட்ரொலிகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு, வேண்டிய சாமான்களை சேகரிக்க ஆரம்பித்தேன்.

ஜேம் பாட்டிலை எடுக்கும் போது ஒரு குழந்தை வேகமாக வந்து என் மேல் விழுந்தாள். பின்னர் சிரித்துக் கொண்டே ஓடினாள். ஒரு பெண் “ஓடாத, ஓடாத… நில்லு” என்று கத்திக் கொண்டே அவள் பின்னால் ஓடினாள்.  நல்ல வேளை, பாட்டிலை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தேன், இல்லை என்றால் விழுந்து உடைந்திருக்கும்.

எரிச்சலுடன் திரும்பிய போது, சட்டென்று பொறி தட்டியது. ஓடிக்கொண்டிருக்கும் பெண் எனக்கு மிகவும் பரிச்சயமானவள்.  நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் என்னிடம் படித்தவள். நல்ல மாணவி. பெயர் மறந்து விட்டது… ம்..வசந்தா… இன்னொரு முறை அவளைப் பார்ப்பதற்காக அவள் சென்ற திசையையே பார்த்தேன்.

குழந்தையிடமிருந்து 2 சிப்ஸ் பேக்கட்களை பிடுங்கிக் கொண்டிருந்தாள்.

“பேக்கட்டையெல்லாம் தூக்கிட்டு ஓடக் கூடாது அபி, அந்த மாமா உன்ன பிடிச்சு உள்ள வச்சிடுவாங்க” செக்யூரிட்டியை காட்டி சொன்னாள்.

குழந்தை கொடுக்க மறுத்து, மீண்டும் ஓட ஆரம்பித்தது. இழுத்து பிடித்துக் கொண்டாள்.

“சிப்ஸ் சாப்டுட்டே இருந்தா வயிறு வலிக்கும். டாக்டர்ட போய்  ஆபரேஷன் தான் பண்ணனும். நல்ல பொண்ணு இல்ல, குடு அத..”

”தரமாட்டேன், தரமாட்டேன்.. 2 சிப்ஸ் வேணும், ப்ளீஸ்…”

”சொன்னா கேக்க மாட்ட, குடு அத…” வெடுக்கென்று பிடுங்கினாள் குழந்தையிடமிருந்து. ஓவென்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது அது. அதற்குள் இன்னொரு புறமிருந்து மற்றொரு குழந்தையின் அழுகையொலி கேட்டது. ‘பாரு, அக்‌ஷுவும் அழ ஆரம்பிச்சுட்டா.., நீ நிறுத்து, ஏய் சும்மா இரு”  என்று வாயின் மீது விரல் வைத்து மிரட்டினாள். குழந்தை இன்னும் பலமாக அழ ஆரம்பித்தாள். ‘வாய மூடேண்டி’ என்று பல்லைக் கடித்துக் கொண்டே முதல் குழந்தையை கை, கால் உதற உதற தூக்கிக் கொண்டு இரண்டாமவள் இருக்கும் இடத்துக்கு விரைந்தாள்.

இரண்டு குழந்தைகளின் அழுகையும் கட்டிடத்தயே ஆட்டிப் பார்த்தது. சங்கடமாக நெளிந்தாள். சுற்று முற்றும் யாரெல்லாம் கவனிக்கிறார்கள் என்று திரும்பி பார்த்துக் கொண்டாள்.

அவளையே கவனித்துக் கொண்டு என்னையே மறந்து நின்ற என்னையும் பார்த்து விட்டாள். ஒரு கணம் அவள் கண்கள் அகல விரிந்தன.  ‘மேம்..’ என வாய் உச்சரித்தது. குழந்தைகளின் அழுகை நின்ற பாடில்லை. டக்கென்று சிப்ஸ் பேக்கட்டை பெரியவளிடம் கொடுத்து விட்டு இரண்டாவதை எடுத்து இடுப்பில் அமர்த்திக் கொண்டாள். இரண்டும் கொஞ்சம் வாய் மூடின. எனக்கே தலை சுற்றி நின்றாற் போலிருந்தது.

அவள் முகத்தில் சங்கடமான புன்னகை. என்னை  அந்த சூழ்நிலையில் அவள் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.  ஈ.. என்று இளித்துக் கொண்டே என்னிடம் வந்தாள்.

“ வசந்தா தான நீ?”

“ஆமாம் மேடம்…நியாபகம் வெச்சிட்டு இருக்கீங்களே…!”

“உன்ன மறக்குமா?”

அவள் கண்கள் கடந்த காலத்துக்கு சென்றன. எனதும் தான்

வகுப்பை கண் கொத்திப் பாம்பாய் கவனித்துக் கொண்டிருப்பாள் இவள். நாங்கள், இவள் இருக்கும் க்ளாஸுக்கு போகும் முன் லெக்சரை ஜாக்கிரதையாக ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக் கொள்வோம். கிடுக்கிப்பிடி கேள்விகள் போடுவாள். பிரமாதமாக வருவாள் என்று எதிர் பார்த்திருந்தோம். எதிர்பார்த்தபடி,  இறுதியாண்டில் இவள் தான் தங்கப் பதக்கமும் வாங்கினாள்.

ஆனால் இரண்டு மாதங்கள் கழித்து கையில் பத்திரிக்கையுடன் வந்து நின்ற போது, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. கண்களில் கனவும், கன்னத்தில் வெட்கமும் கொண்டிருந்தவளிடம் என்ன சொல்ல? வாழ்த்தித்தான் அனுப்பினோம்.

அப்பொழுதே கொஞ்சம் மாறியிருந்தாள்.இப்பொழுது முற்றிலும் மாறியிருக்கிறாள்.உடல் பருத்திருக்கிறாள். 24/25 வயது தான் இருக்கும். ஆனால் 35 வயதுக்குக் குறைவாக சொல்ல முடியாது. நான் அவளையே கவனிப்பதைப் பார்த்தாள்.

”மேம் எப்பிடி இருக்கீங்க, காலேஜ்லாம் எப்படி போகுது?  இந்த செட் ஸ்டூடண்ட்ஸ் எப்பிடியிருக்காங்க?” அவள் குரலில் ஆர்வம்.

“ம்… நல்லா போயிட்டிருக்குமா, அது சரி நீ என்ன பண்ணிட்டிருக்க?”

“அதான் பாக்கிறீங்களே மேம்…” முகம் கொஞ்சம் வாடியது.

”கல்யாணத்துக்கப்புறம் மேல படிக்கலையா? வேலைக்காவது போயிருக்கலாமே?”

“இல்ல மேம்…இவங்க ரெண்டு பேரையும் பார்க்கிறதுக்கே நேரம் சரியாயிருக்கு..பெரியவ LKG போறா…சின்னவளயும்  ஸ்கூல்ல போட்டவொடனே தான் யோசிக்கணும்..இன்னும் மூணு வருஷம் இருக்கு..”

“பாத்தும்மா..ஜாக்கிரதை..அதுக்குள்ள இன்னும் ஒண்ணு பெத்துக்காத…”. விளையாட்டு என்று நினைத்து சொன்னதும் தான் நாக்கைக் கடித்துக் கொண்டேன். அவள் முகம் சிறுத்து விட்டது. அழுது விடுவாள் போலிருந்தது. அவள் கையைப் பற்றினேன். மெல்ல கையை விடுவித்துக் கொண்டாள். கண்கள் அவள் குழந்தைகளை நோக்கிச் சென்றன.

‘டேடி, டேடி..’ என்று கத்திக் கொண்டே அங்கு வந்த ஒரு ஆணிடம் பெரியவள் ஓடினாள். அவளை தூக்கிக் கொண்டு அவன் எங்கள் அருகில் வந்தான்.

‘கார் பார்க் பண்ணிட்டு நீங்க வரதுக்குள்ள ரெண்டு பேரும் அதகளம் பண்ணிட்டாங்க..’ அவனை நோக்கி சங்கடமாய் சிரித்தாள்.

‘மேம், இவர் தான் என் ஹஸ்பெண்ட். இவங்க எங்க காலேஜ் மேம்’

அவன் ‘ஹலோ..’என்று விட்டு புன்னகைத்தான். நானும் ‘ஹலோ’ என்றேன். அவனிடம் என்ன சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. சில நொடிகள் எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றோம்.

இது வரை அவள் இடுப்பில் அமர்ந்து புறங்கையை சப்பிக் கொண்டிருந்த குழந்தை மறுபடியும் அழ ஆரம்பித்தது. சட்டென்று சுதாரித்துக் கொண்டாள்.

”மேம், குழந்தைக்கு ஃபீட் பண்ணனும். உங்களோடது அதே ஃபோன் நம்பர் தான. அப்பறமா கால் பண்றேன். அபி.. ஆண்டிக்கு பை சொல்லு..” என்று குழந்தையைப் பார்த்தாள்.

சிப்ஸ் சாப்பிடும் சுவாரஸ்யத்தில் அது ‘ஙே..’ என்று முழித்தது. “வரேன் மேம்” என்று சொல்லி விட்டு கணவனின் கைகளை பிடித்திழுத்துக் கொண்டு திரும்பினாள். அவள் காதுகளில் இருந்த வைரத்தோடு பளீரென்றது. அவள் கண்களின் முனையும், என் கைகளில் இருந்த அவள் கண்ணீரும் கூட.