ஓலம்-சிறுகதை

இன்றைக்கு ஏனோ வழக்கத்தை விட இருட்டாக இருந்தது தெரு. எங்கோ ஒரு நாயின் ஊளை வேறு. வத்சலா யாராவது வருகிறார்களா என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  பின்னர் ஏதோ முடிவு செய்தவளாக, கையில் அந்த பையை எடுத்துக் கொண்டு,  கதவைப் பூட்டப் போனாள்.

நடு வாசல் டக்கென்று திறக்கும் ஓசை கேட்டது. யாரென்று பார்த்தாள். கணவரின் ஒன்று விட்ட அண்ணா வந்து கொண்டிருந்தார்.

“வெளிய கெளம்பர போலிருக்கு..” என்றார்.

”ஆமாண்ணா.. இவர இன்னும் காணம்..அதான் நானே போய் கோடியாத்துல குடுத்துரலாம்னு போயிண்டிருக்கேன். நேத்தியே லேட்டாயிடுத்துன்னு மாமி திட்டினா..” என்றாள் வத்ஸலா.

“இத்தன நேரம் வந்திருக்கணுமே விசு”

“ஆமாண்ணா, நானும் அவருக்காகத் தான் காத்திண்டிருந்தேன்”

“சரி..வந்த விஷயத்த சொல்லிடறேன்..நாளக்கி சுருக்க பூஜய முடிச்சுண்டு காத்தால 9-9½ மணிகுள்ள பிராமணார்த்தத்துக்கு அவன் வந்துடணும்..அட்ரஸ் அவனுக்குத் தெரியும்..பெரிய பார்ட்டி… லேட்டாயிடப்படாது,..அதான் நேர்லயே நியாபகப் படுத்தலான்னு வந்தேன், என்ன”

”சரிண்ணா”

”பைய என்கிட்ட வேணா குடு..நான் அவாத்துல குடுத்துட்டு போறேன்…”

“அய்யோ, வேணாண்ணா, நீங்க போயி, அதெல்லாம் வேணாம்..” பதறினாள் வத்ஸலா.

”இருட்டா இருக்கே..வா முக்கு வர நான் துணைக்கு வரேன்..”

“சரி..” என்று கதவை பூட்டிக் கொண்டு செருப்பை மாட்டிக் கொண்டாள்.

”பொண்ணரசி எங்க..?”

“பூஜைய முடிச்சுண்டு, அவளயும் அழச்சிண்டு வரேன்னுதான் சொன்னார்..”

“ம்,.. பையனாத்துல இருந்து தாக்கல் எதாவது வந்ததா..?”

”இன்னும் இல்லண்ணா…அவா சரின்னுட்டா, அடுத்து என்னப் பண்ணப்போறோம்னு வயத்துல திக், திக்குங்கறது..”

’ம்..’ என்றார்.

“ஒண்ணும் கவலப்படாத…பகவான் பாத்துப்பான்”

“ஹும்..” என்ற பெருமூச்சு தான் வந்தது வத்ஸலாவுக்கு.

கையின் கண்ணாடி வளையல்களை அசையாதபடி மேல் கையில் இறுக்கிக் கொண்டாள்.

“நான் தூக்கிக்கறேன் குடு.. “அண்ணா பையை வாங்கிக் கொண்டார்.

வெளிச்சமற்ற முக்கில் யாரோ திரும்புவது போல் இருந்தது. நடையைப் பார்த்தால் அது சுமதி தான் என்று தெரிந்தது. “தனியா வராளே..இவரெங்க?” அண்ணாவும் அவளைப் பார்த்து விட்டார். வேகமாக அவளிடம் சென்றார் “ஏண்டி தனியா வர..? அப்பா எங்க..?” முந்திக் கொண்டார்.

”க்ளாஸ் முடிஞ்சு ரொம்ப நேரமா கட வாசல்லயே காத்துண்டிருந்தேன்.  அப்பாவ காணல. எல்லாரும் ஒரு மாதிரி பாத்தா..அதான் நானே கெளம்பி வந்திண்டிருக்கேன்.. அப்பா எங்கன்னு என்ன கேக்கறேளே?” என்றாள் சுமதி.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ”சரி நீங்க ரெண்டு பேரும் ஆத்துல போய் இருங்கோ, நான் கோவில்ல போய் பாத்துட்டு வரேன்’ சுமதியிடம் சொன்னார் அண்ணா.

சாவியை அவளிடம் கொடுத்துவிட்டு, ”அண்ணா நானும் உங்களோட வரேன்” பதிலுக்கு காத்திருக்காது, அவரை முந்திக் கொண்டு நடந்தாள் வத்ஸலா. வழியில் கோடி மாமி வீட்டில் அவசரமாக பையை வைத்துவிட்டு தொடர்ந்து நடந்தார்கள்.

நான்கு தெரு தள்ளி திட்டி வாசலுக்கருகே இருந்தது விஸ்வநாத ஐயர் வழக்கமாகப் பூஜை செய்யும் பிள்ளையார் கோவில். வேகமாக நடந்ததில் வியர்த்து குங்குமம் நெகிழ ஆரம்பித்து விட்டது வத்ஸலாவுக்கு.

மூன்றாவது தெரு திரும்பும் போதே பார்த்து விட்டாள்.  கோவிலுக்கு 50 அடி முன்னால் ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது. ஓடிச் சென்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே பார்த்தாள். ஒரு உருவம் 2-3 ஆக மடங்கி சைக்கிளுக்கு அடியில் கிடந்தது. சுற்றி இருந்தவர்கள் சைக்கிளை நகர்த்திக் கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் செல்லில் டார்ச் லைட்டை ஆன் செய்திருந்தார்.

“ஏன்னா..” கதறி விட்டாள் வத்சலா. விஸ்வநாத ஐயருக்கு  மண்டை உடைந்து இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது.. உதடு கிழிந்திருந்தது. கை ஒரு பக்கம் துவண்டிருந்தது. கால் தலைக்கு மேலே நீட்டிக் கொண்டிருந்தது. ஒரு கையால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டிருந்தார்.  அடி பட்ட நாயின் முனகலைப் போல ஒரு கேவல் ஒலி அவரிடமிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. ’அய்யோ..’ அவரிடம் அமர்ந்தாள் வத்ஸலா.

கால்களை நேராக்க முயன்றாள்..ஆ..என்று அலறி விட்டார்.. அசைந்ததால் வலி அதிகமாகி இருக்க வேண்டும். நிறைய பெரு மூச்சுகளுக்கு இடையே மெல்ல ஏதோ முனகியது அவர் உதடுகள். யாரோ ஒருவர் தண்ணீர் பாட்டில் கொடுத்தார். கொஞ்சம் தண்ணீர் புகட்டியவுடன் மெல்ல கண்கள் திறந்தன. வத்ஸலாவையும் அண்ணாவையும் பார்த்தவுடன் அழுகையில் அவர் முகம் கோணிக் கொண்டது.  மீண்டும் கண்களை மூடிக் கொண்டார் விஸ்வநாதன்.

“ஐயரு  பூஜ முடிஞ்சு கதவ சாத்திட்டு இந்தாண்ட வந்தாரா, ஒரு பத்தடி நடந்திருப்பாரு, 5-6 பசங்க, சைக்கிள்ல வந்து சுத்திகினாங்க..உருட்டுக் கட்டையால மாறி மாறி அடிச்சானுங்க.. அவர் வயித்திலேயே ஒத விட்டாங்க, ஐயரு கீழ விழுந்துட்டாரு.. முடிய பிடிச்சு தரையில தேச்சுக்கிட்டே அவர இழுத்துட்டு போனாங்க. நான் மத்தரந்தான் அத பாத்தேன். எல்லாரையும் சத்தம் குடுத்து கூப்டுகிட்டு அவங்கள பிடிக்க போறத்துக்கு முந்தி கொஞ்ச தூரம் இழுத்துட்டு போயிட்டாங்க. அதுல ஒருத்தன் மாத்திரம், சைக்கிள்ல இருந்து இறங்கி, குனிஞ்சு அவருகிட்ட என்னமோ செஞ்சிட்டிருந்தான். அதுக்குள்ள நாங்க கிட்ட நெருங்கிட்டதுனால சைக்கிள அவர் மேலேயெ போட்டுடுட்டு இருட்டுல ஓடிட்டான். எல்லாரும் ஓடிட்டாங்க. ஒரு அஞ்சு நிமிஷத்துல எல்லாம் நடந்து முடிஞ்சுருச்சு.. அவன் என்ன பண்ணினானோ.. எங்கங்கெல்லாம் அடி பட்டுருக்கு, கொஞ்சம் நல்லா பாருங்கப்பா” பூக்காரியின் குரல் நடுங்கிய படி சொன்னது. வத்ஸலாவுக்கு உடம்பு உலுக்கிப் போட்டது.  அடி வயிற்றிலிருந்து ஆங்காரம் பொத்துக் கொண்டு வந்தது…கைகளிரண்டையும் முறுக்கி ஒன்றோடொன்று இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

அண்ணாவும் இன்னும் இருவரும் சேர்ந்து மெல்ல விசுவை அருகில் நின்ற ஆட்டோவில் ஏற்றினர். ஆ ஆ என்று அலறி மூர்ச்சையானார் விசு.  வத்ஸலா அழ அரம்பித்தாள்.. அவசரமாக அவர் முகத்தில் நீர் தெளித்தனர். இருந்தும் அவர் கண் விழிக்கவில்லை. அவள் வயிறு அதிர ஆரம்பித்தது..

அவள் மூக்கு வரை குங்குமம் வழிந்து விட்டது. முகம் முழுக்க கண்ணீர் திட்டுகளுடன் அவர் நெஞ்சின் மீது கை வைத்துக் கொண்டு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் வத்ஸலா. அவள் கண்களில் இருந்து கண்ணீர் நின்ற பாடில்லை.

ஆட்டோ ஆஸ்பத்திரி நோக்கி புறப்பட்டது.

முந்தாணையை பந்து போல் சுருட்டி வாயில் அதக்கிக் கொண்டு, ‘பாவம், பாவம் ‘ என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள் பூக்காரி. ஆட்டோ கண் மறைந்ததும் கூட்டம் மெல்ல கலைய ஆரம்பித்தது. இரண்டு விடலைகள் ஒருவன் முதுகில் ஒருவன் அறைந்து கொண்டு ஏதோ பேசி சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்.

தூரத்தில் கேட்ட நாயின் அடி வயிற்று ஓலம் மீண்டும் ஒரு முறை மிக அருகில் இன்னும் பலமாகக் கேட்டது, ‘இந்த எளவெடுத்த நாயி இன்னிக்கின்னு பாத்து என்னா கூவு கூவுது..சனியன்’ யாரோ கூட்டத்தில் புலம்பியபடி சென்றதும் காதில் கேட்டது.