
காலை ஒன்பதரை மணிக்குத் தான் ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்க வேண்டும். சரியான நேரத்தில் கிளம்பியிருந்தாள் சசி. மிதமான வேகத்தில் தன் காரை செலுத்திக் கொண்டிருந்தாள். தூரத்தில் அங்கங்கு பனி படர்ந்த ஆல்ப்ஸ் மலைத் தொடர்கள் தெரிந்தன..கூடவே சல சலவென ஒரு சிறிய ஓடை அவளோடேயே பயணித்தது.. இங்கு இப்போது வசந்த காலம். சாலையோரத்தில் இருந்த எல்லா வீடுகளின் ஜன்னல்களும் வெவ்வேறு நிறமுடைய மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. சாலை ஓரமாக மரத்துண்டுகளைக் குடைந்து தொட்டிகளாக்கி, பூச்செடிகளை நட்டு வைத்திருந்தனர். வருடத்தில் சில மாதங்களே இத்தனை அழகாக இருக்கும் இவ்வூர். மிச்ச நாட்களில் எல்லா இடங்களையும் பனி மூடியிருக்கும். அடர் பச்சை நிறத்தில் வெகு சில மரங்களைத் தவிர வேறு ஒன்றுமே உயிரோடு இருக்காது.
தன் ஆராய்ச்சிகூடத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், அங்கு இருக்கும் நடராஜர் சிலையை நினைத்துக் கொள்வாள் சசி. இன்று அவ்வாறு நினைத்த போது ஒரு துள்ளு துள்ளியது அவள் மனம். ஏனென்று அவளுக்குத் தெரியவில்லை.
எப்போதுமே அவளுக்கு மிகவும் பிடித்தமான சிலை அது. Eternal cosmic dance.. என்று மனதில் சொல்லிக் கொண்டாள். ஸ்டியரிங் மீது கண் போனது. கோடானுகோடி ப்ரோடான்ஸும் எலெக்ட்ரான்ஸும் குதித்து நடனமாடுவது போல் இருந்தது. எங்கெங்கும் நிறைந்திருக்கும் நடனம். இவற்றுக்கு நடுவில் ஒவ்வொரு அணுவிலும் அமைந்திருக்கும் கடவுள் துகள். ‘கடவுள் துகள், கடவுள் துகள்’ என்று எப்போதும் போல் அவள் மனம் ஜபிக்க ஆரம்பித்தது.
அவளுடைய ஆராய்ச்சித் தோழன் லீ க்கு அவளைப் பார்த்தால் பயங்கர கிண்டல். அந்தத் துகளை ‘கடவுள் துகள்’ என்றே அழைக்கக் கூடாது என்பது தான் அவன் கட்சி. Proton, Electron போல Boson அது அவனுக்கு, அவ்வளவு தான். அணுவின் அமைப்பை விளக்கும் போது ஏற்படும் ஒரு சமன்பாட்டு குறைவுக்கு இயற்பியலாளர்கள் அளித்த பெயரே Higg’s field. ஒரு அணுவில் தோன்றும் Higg’s field தான் .boson-அவ்வளவே, இது அவன் வாதம்.
ஆனால் சசிக்கு அங்கனம் இல்லை- ”Higg’s field என்பது எங்கும் நிறைந்திருக்கும் ஒரு ஆற்றல் வெளி; சூன்யத்தில் கூட அது இருக்கும் அதனால் அது ‘ப்ரம்மம்’. ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் Higg’s field தான் Higg’s boson , அது ஜீவாத்மா” என்பாள்.
அவன் உரக்க சிரிப்பான். நீ ஒரு ‘spiritual fool’ என்பான்.
இவள் அவனிடம் வாதாடுவாள். ”ஒவ்வொரு அணுவிடைத் துகளும் ஹிக்ஸ் வெளியோடு முயங்கும் போதே அதற்கு எடை உண்டாகிறது. எடை இல்லையென்றால் அவை அனைத்தும் photon போல ஒளியின் வேகத்தில் பறந்து போய் விடும். ஒரு உருவாகவே திகையாது. ஹிக்ஸ் வெளி அவற்றை பிடித்து வைத்திருக்கிறது, தன்னோடு சேர்த்துக் கொள்ளாமல். அவை இரண்டும் தனித்தனியாக இருக்கும் போது புடவி சமைகிறது-பரமாத்மா, ஜீவாத்மா போல” என்பாள்.
‘நீ நிறைய உளறுகிறாய், உன்னையே குழப்பிக் கொள்கிறாய்; ஹிக்ஸ் வெளி இல்லையென்றால் அணுவிடைத்துகளுக்கு அதனால் ஊண்டாகும் எடை இருக்காது, ஒத்துக் கொள்கிறேன், ஆனால் ஒரு துகள் மற்றொன்றை ஈர்ப்பதனால் உண்டாகும் எடை இருக்கும். அந்த எடையே முக்கியமானது’ என்பான்.
‘அப்படியென்று நீ நினைக்கிறாய் லீ, நான் அது முக்கியமில்லை என்று நினைக்கிறேன். இது வரை அது போன்று எடைகள் பிரிந்ததே இல்லை. எந்த எடை முக்கியமானாது என்று சொல்லும் அளவு இது வரையிலான பிரபஞ்ச செயல்பாடுகளில் எந்தத் தரவும் இல்லை லீ’ என்று சொல்லிக் கடந்து விடுவாள்.
‘இந்த ஹிக்ஸ் வெளியின் ஆற்றல் அளவைப் பார்- பிரபஞ்சத்தை நிலைத் தன்மையின் எல்லையில் வைத்திருக்கிறது. கொஞ்சம் கூடினாலோ குறைந்தாலோ, பிரபஞ்சம் நிலையழிந்துவிடும். கூரான அடிப்பகுதி கொண்ட கண்ணாடிக் கோப்பை ஏதோ மாயத்தினால் நிற்பது போல் இந்தப் புடவி இருந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் நிலை பிறழ்ந்தாலும் அந்தக் கோப்பை கீழே விழுந்து சுக்கு நூறாகி விடும். ஹிக்ஸ் வெளியின் அந்த சரியான அளவினால் தானே இப்படி கழைக்கூத்தாடியைப் போல புடவி பேலன்ஸ் செய்து கொண்டிருக்கிறது (எங்கள் நடராஜரின் தூக்கிய கால் போல-மனதுக்குள் நினைத்துக் கொள்வாள்). இது போன்ற critical value-வில் இருப்பது எத்தனை பெரிய ஆச்சரியம், உனக்கு இதன் பிரம்மாண்டம் உறைக்கவில்லையா?’ என்பாள்.
‘பிரபஞ்சம்’ அத்தனை எளிதில் நிலைத்தன்மையை இழக்காது சசி. அப்படியே இழந்தாலும் இதை விட நிலையான பிரபஞ்சமாகவே ஆகும். ஆதி காலம் முதல் மேலும் மேலும் நிலையான பிரபஞ்சமாகவே இது ஆகிக் கொண்டிருக்கிறது. கண்ணாடி கோப்பைப் போல் என்று எண்ணாதே, மலைச்சரிவில் உருண்டு இறங்கும் ஒரு பாறை என்று நினைத்துக் கொள்..ஒரு மலைப் பள்ளத்தில் தற்காலிகமாக நிலைப்பெற்றிருந்து, மீண்டும் எதோ ஒரு காரணத்தால் அடுத்த பள்ளத்தாக்குக்கு உருண்டு செல்லும் பாறை போல், அந்தப் புது இடத்தில் அது நீடு வாழும்’ என்பான்.
’சரி, அப்படியென்றாலும் ஒரு யுகத்திலிருந்து மற்றொரு யுகத்துக்கு செல்வது போல என்று சொல்லலாமா? ஒவ்வொரு யுகம் மாறும் போதும் ஒரு பிரளயம் உண்டு, என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்’ என்பாள்.
அதற்கு மேல் பேச அவனுக்கு வேறொன்றும் இருக்காது. ஆழ்ந்த அமைதிக்குச் சென்று விடுவார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பாஷணையிலும் இது தான் நிகழ்ந்தது.
இவற்றையெல்லாம் நினைத்தபடியே, ஆராய்ச்சிகூடத்தை அணுகியதும் தன் பெயர் பொறிக்கப்பட்ட இடத்தில் வண்டியை நிறுத்த எத்தனித்தாள் சசி. மந்திரம் போல கடவுள் துகள் கடவுள் துகள் என்றே சொல்லிக் கொண்டிருந்தது அவள் மனம்.
Higg’s field-ன் ஆற்றல் மாற்றத்தைப் பற்றித் தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறாள் சசி.
எப்போதும் போல் அதே காட்சி அவளுக்கு மீண்டும் வந்தது- ’மிகப் பெரிய ஒரு இயந்திரத்தில் ஒரு சிறிய அச்சு பொருத்தப்பட்டு, அவ்வியந்திரம் மெல்லச் சுழல ஆரம்பிக்கிறது. நேரமாக நேரமாக அதன் விசை அதிகரித்து அதிகரித்து நிறுத்த முடியா மிகப்பெரும் விசையை அது அடைகிறது. என்ன செய்தும் அதை நிறுத்த முடிவதில்லை’. அச்சுழற்சி தன்னையே கொண்டு போய் விடும் என பயந்து நடுங்க ஆரம்பிக்கிறாள். மயிர்கூச்சல் எடுத்தது அவளுக்கு..
பீப் பீப் என்ற ஒலி அவளை உலுக்கிப் போட்டது. அவளின் காரின் பார்க்கிங் அலார்ம் அடித்துக் கொண்டிருந்தது. நல்ல வேளை, பக்கத்து வண்டி மயிரிழையில் தப்பித்திருந்தது. கணவனின் முகம் மனதில் வந்து போனது.. பாவம், பாதி நேரம் தான் காணும் கற்பனைகளினால் உண்டாகும் கெடு பலன்களை அனுபவிப்பவன் அவனே. மெல்ல சிரித்துக் கொண்டே காரை சரியாக நிறுத்தினாள்.
இறங்கி நடந்து தன் அலுவலகத்துக்கு செல்வதற்குள்ளேயே மற்றொரு கனவு அவளை ஆக்ரமித்தது..மிகப் பெரிய அரங்கம், அங்கு அவள் பெயர் ஒலிக்கிறது. விண்ணை முட்டும் கர கோஷம். அவளுக்கு பரிசு அளிக்கிறார்கள். முன் வரிசையில் அமர்ந்திருக்கும் அவள் கணவன் பெருமையோடு அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். மெலிதாக கை உயர்த்தி பரிசை அவனுக்கு காண்பிக்கிறாள். உணர்ச்சி மேலீட்டால் கன்னம் சூடாகிறது. இன்னும் ஒரு நொடியில் கண்ணீர் வந்து விடும் போல் இருந்தது. கடவுள் துகள் என்ற சொல்–திடுக்கிட்டு நிகழ் காலத்துக்கு வந்தாள்.. உடல் முழுதும் ஏதோ ஒரு பரபரப்பு..அவளுக்கு வெட்கமாக இருந்தது.
‘கற்பனைகளிலேயே வாழும் உயிர்’, தலையை ஆட்டி தன்னைத் தானே நொந்து கொண்டு, தன் பேனலின் முன் சென்று அமர்ந்தாள். நான்கு மணி நேரத் தொலைவிலிருந்த ஒரு செயற்கைகோளில் அன்று காலை ஆறு மணிக்கு பதிவான் தரவுகள் அவள் திரையில் இருந்தன. தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு. மற்றொரு முறை அதைப் பார்த்தாள். கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டாள். லீயை அழைத்து காண்பித்தாள். அவனுக்கும் தலை சுற்றியது.
அவன் அந்த ரிப்போர்டை எடுத்துக் கொண்டு தங்கள் ப்ரொஃபஸரைப் பார்க்க ஓடினான். சசி மெல்ல நடந்து அவர்கள் வளாகத்தில் இருந்த நடராஜர் சிலை முன் சென்று நின்றாள். தூக்கியிருந்த இடது பாதம் மெல்ல அரைவட்டமடித்து ஊர்த்வ தாண்டவத்துக்கு மாறி..