தோணி-சிறுகதை

இரவு எட்டு மணியிருக்கும். தூரத்தில் அவன் குரலைக் கேட்டதுமே மனம் பட பட வென்று அடித்துக் கொண்டது இவளுக்கு.  உடம்பின் அத்தனை  செல்களும் முழுப் பிரக்ஞைக்கு வந்தன. வீட்டுக்குள் நுழைந்ததுமே இரகசியமாக அவர்களின் கண்கள் சந்தித்துக் கொண்டன.  குப்பென்று சிவந்த கன்னங்களுடன் முகத்தை மெல்லக் குனிந்து கொண்டாள். இவளைக் கண்டு கொள்ளாதது போல் பெரிய குரலில் ஏதோ பேசிக் கொண்டே தன் மாமாவின் அருகில் சென்று அமர்ந்தான் அவன். இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அவனின் அண்ணி மெல்லிய புன்னகையுடன் சமையல் அறைக்குள் சென்றாள். மாமியார் ரசத்துக்கு தாளித்துக் கொண்டிருந்தாள். சின்ன மாமியார் கட்டு சாதத்தை பிரித்து சிறு சிறு பாத்திரங்களில் மாற்றிக் கொண்டிருந்தாள்.

அண்ணி, “அம்மா, எல போடவா?” என்றாள். ‘ம்..’ என்றாள் மாமியார். 

அவர்கள் அன்று மாலை தான் கல்யாண மண்டபத்திலிருந்து வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஆம், திருமணம் இவளுக்கும் அவனுக்கும் தான். புது மணப்பெண் இவள். மண்டபத்திலிருந்து கிளம்பி வேனிலேயே, சில நெருங்கிய உறவினர்கள் சூழ, ஆறு ஏழு மணி நேரம் பிரயாணம் செய்து அன்று மாலையில் தான் வீடு வந்து சேர்ந்திருந்தார்கள்.

வீட்டுக்குள் நுழையும் போது, அவனின் டில்லி அத்தை மட்டும், அரைக்கால் ஆழாக்கு அரிசியை நிலைப் படியில் வைத்து இவளை அதை உதைத்துத் தள்ளி விட்டு வரச் சொன்னாள். இவளும் மெல்லிய வெட்கத்துடன் அதைக் காலால் மெல்லத் தள்ளி விட்டாள். மெல்லத் தள்ளி விட்டதற்கு, அரிசியைக் காலால் தொடுவதற்கு இவளுக்கு சங்கடமாய் இருந்ததும் ஒரு காரணம். கொஞ்சம் போல் சிந்திய அரிசியை எல்லோரும் பரிதாபமாகப் பார்த்து விட்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள்.

மற்றபடி பெரிதாக சடங்குகள் ஒன்றும் நிகழவில்லை. மிக மிகச் சாதாரணமாக இவள் இல்லம் புகுந்தாள். பால் பழம் கொடுப்பதெல்லாம் அவர்கள் வீட்டு வழக்கம் இல்லை போல. யாரும் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. அவரவர் பெட்டிகளை சரி பார்த்து அடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

புதுப்பெண்ணுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள். அதே அத்தை மட்டும், அவளை குளித்துவிட்டு வேறு புடவை உடுத்திக் கொள்ளச் சொன்னாள். வேறு யாரும் பெரிதாக ஒன்றும் கவலைப்படவில்லை. பழகாத சிறிய குளியலறையில் குளித்துவிட்டு, அங்கேயே புதுப் புடவையையும் அணிந்து கொண்டு வெளியே வந்தாள் இவள். அதற்குள் கூடத்தில் இலை போட்டிருந்தார்கள். பரிமாறத் துவங்கப் போகிறார்கள்.

இவள், தானும் அண்ணியோடு சேர்ந்து சமையலறைக்குச் செல்லத் துவங்கினாள். இவள் தனக்கு இணையாக நடந்து வருவதை தவிர்த்து விட்டு வேகமாக நடந்தாள் அண்ணி.  அவளுடன் ஓடிச் செல்வதற்கு மனம் ஒப்பவில்லையாதலால், கொஞ்சம் மெல்ல நடந்தாள் இவள். 

தயங்கித் தயங்கி, சமையலறைக்குள் நுழைந்து, “நானும் பரிமாறவா? என்று மாமியாரிடம் கேட்டாள்.  ‘இல்ல, நீ உக்காந்துகோ’, என்று சொல்லிவிட்டு வேறு வேலையாக சென்று விட்டாள் மாமியார்.  மெதுவாகக்  கூடத்திற்கு வந்தாள்.  அனைவரும் அவரவர் இலை முன் அமர்ந்து விட்டனர்.  மணமகனிடம் ஒரு இலை மட்டுமே காலியாக இருந்தது. யாரும் இவளை உட்காரச் சொல்லவில்லை.

சிறிது தயக்கத்திற்குப்  பின் தண்ணீர் ஜக்கை எடுத்து எல்லா டம்ளர்களிலும் தண்ணீர் நிரப்ப ஆரம்பித்தாள். ஸ்வீட்டை எடுத்து வந்து கொண்டிருந்த மாமியார், ‘உன்ன உக்காரச் சொன்னேனே”, என்று விட்டு முறைத்தாள். கால் நடுங்க மணமகனின் அருகிலிருந்த இலையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

இவளைத் தவிர பெண்கள் யாரும் பந்தியில் இல்லை.  இவளுக்கு சங்கடமாக இருந்தது.  பயங்கர பசியிருந்தும் ஒரு வாய் கூட சாப்பிட முடியவில்லை.  வெறுமே கைகளால் அளைந்து கொண்டிருந்தாள்.

இவளுக்கு அம்மாவின் நினைவு வந்தது. கண்களில் நீர் திரையிட்டது.  ‘எல்லாரும் என்ன செஞ்சுட்டு இருக்காங்களோ?’

மதியம் மண்டபத்திலிருந்து கட்டு சாதம் கட்டிக் கொண்டு கிளம்பும் போது இவள் ஒரு சொட்டு கூட அழவில்லை. அம்மாவின் முகமும் கொஞ்சமாகக் கோணியதே தவிர அவளும் அழவில்லை. தம்பி ஸ்தம்பித்து இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்பா காட்சியில் இல்லவேயில்லை.  இவளுடன் பிறந்த வீட்டிலிருந்து இவளைக் கொண்டு விட யாரும் வரவேயில்லை.

பாவம் அம்மா, இவளைக் கொண்டு விடுவதற்கு தன் தம்பியையும், தம்பி மனைவியையும், ஏற்பாடு செய்து வைத்திருந்தாள் தான். அவர்களும் அரைமனதாக சம்மதித்தும் தான் இருந்தனர்.  ஆனால் சம்பந்தி வீட்டிலிருந்து ‘பெண்ணைக் கொண்டு விட வாருங்கள்’ என்ற பேச்சையே எடுக்கவில்லை. அம்மா அங்கலாய்த்தாள் -‘யாருமே அழைக்கலையே, அழைக்காத வீட்டுக்கு எப்படி நாமே வர்றோம்னு சொல்றது?’

அம்மாவின் சொந்தங்கள் எல்லோரும் குசு குசுவென்று பேசிக் கொண்டார்கள். ‘கூப்படக்கூட இல்லையாமே, நல்ல லட்சணந்தான்..’ அம்மா கையைப் பிசைந்து கொண்டாள்.

அப்போது புகுந்த வீட்டு அத்தை ஒருத்தி- ‘போகும் வழியிலே எங்க குல தெய்வம் கோவில் இருக்கு.  பெண்ணையும், பிள்ளையையும் அங்கு அழைச்சுட்டு போகப் போறோம்.  அந்த கோவிலுக்குள்ள எங்க குடும்ப ஆண்களும் அவங்க மனைவி, குழந்தைகளும் மட்டும் தான் போணும். நீங்க யாராவது வந்தாலும் வெளிய தான் ஒக்காரணும்..  உங்களுக்கு சங்கடமா இருக்கும், அதனால யாரும் வர வேணாம்’,என்றாள்.

’இது என்ன கூத்து’ என்று அம்மாவுக்கு ஆச்சரியம். ’இப்படியும் ஒரு கோவிலா. நிஜந்தானா? வர வேண்டான்னு சொன்னதும் எப்படி வர்றது’, குழம்பினாள்.

‘அம்மா, அவங்களே வர வேணாம்னு சொன்னப்பறம் யாரும் வர வேணாம்,  நான் பார்த்துக்கறேன்’, என்று இவள் தான் தைரியம் சொல்லிவிட்டு சட்டென்று வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள். அப்பொழுது இறுகிய அவள் முகம் வெகு நேரம் வரை அப்படியே தான் இருந்தது. அதை நினைத்துக் கொள்ளும் இப்பொழுதும் அப்படித்தான் இறுகுகிறது. ஆனால், வேனில், அவ்வப்போது கண் விழிக்கும் போது, யாருக்கும் தெரியாமல் இவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு திரும்ப ஆடி ஆடி விழுந்த அவன் தலையை நினைக்கும் போது தான் கொஞ்சம் சிரிப்பாக வருகிறது.

அளைந்து கொண்டிருந்த சாதத்தை ஒரு வழியாக சாப்பிட்டேன் என்று பெயர் செய்து விட்டு எழுந்தாள். இரண்டு இரவுகளாக இவளுக்குத் தூக்கமில்லை.  சாப்பிட்டதனைத்தும் வாயில்வரும்போல் இருந்தது. வாஷ்பேசினுக்கருகில் சென்றபோது தன்னையுமறியாமல் ஓங்கரித்துக் கொண்டுவந்தது. “ஓய்க்..”என்று விட்டாள். யாரும் பார்க்கிறார்களா என்று சுற்று முற்றும் அவசர அவசரமாக பார்த்துக் கொண்டாள்.

அப்போது ரூமில் இருட்டிலிருந்து ஒரு குரல் வந்தது- ‘பையன் சுறுசுறுப்புன்னு தெரியும், ஆனா இவ்வளவா, மூணு மாசமாவது ஆக வேண்டாமோ” சொல்லி விட்டு, திரும்பிப் படுத்துக் கொண்டது அது.

அதைக்கேட்டதும் வெட்கமும் சிரிப்பும் பொத்துக் கொண்டு வந்தது இவளுக்கு. தலை குனிந்தபடி சிரித்துக் கொண்டே திரும்பிய போது, எதிரில் வந்த மாமியாரின் கடுகடு முகத்தைப் பார்த்ததும், வந்த சிரிப்பு காணாமல் போனது.

தலை குனிந்தவாறு, எச்சில் இலைகளுக்கருகிலிருந்த தண்ணீர் டம்ளர்களை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள்.