வெயில்-சிறுகதை

இன்று எழுந்ததிலிருந்தே ஏனோ வெறுமையாகவே இருந்தது. மனம் எதிலும் பாவவில்லை. வழக்கமாக செய்பவை என்பதால், கைகளுக்கே காரியங்களைப் பற்றித் தெரிந்திருந்தன. வெளியிலிருந்து எந்த உத்தரவும் வேண்டியிருக்காது, தாமாகவே காரியங்கள் நடந்தேறின. ஏதோ எண்ணத்துடனேயே சமையலும் முடிந்து சாப்பிட்டும் ஆகி விட்டது. மிச்சமிருந்தவற்றை மூடி வைத்து விட்டு மாடியேறிவிட்டேன்.

தனிமையாக இருக்கும் போது ஊரடங்கிப் போகும் இந்த மதியங்களைப் போல கொடுமையானவை வேறில்லை. தெருவை உச்சி வெயில் எரித்துக் கொண்டிருந்தது. சாலையோரத்து களைச் செடிகளை மேயும் ஒன்றிரண்டு ஆடுகளையும், வீட்டின் நிழலில் அமர்ந்து கொண்டு, குருட்டு யோசனை செய்தவாறு, அவற்றை ஒரு நோட்டம் பார்த்துக் கொள்ளும் கிழவனையும் தவிர தெருவில் யாருமில்லை. யாருமில்லாத தெருவையும், ஆடாத இலைகளையும், வெயிலில் நெளியும் உருவுகளையும் , காய்ந்து எழும் மண் பொடியையும், பலகணியிலிருந்தவாறே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சாலையின் மறுதிசையிலிருந்து, சுள்ளி போல் காய்ந்திருந்த கை கால்ளை ஆட்டியாட்டி, ஒரு பக்கமாய் தாங்கித் தாங்கி நடந்து வந்தாள் அக்கிழவி. இடுப்பில் ஒரு பருத்தி சேலையை அணிந்திருந்தாள். பெரிய சைஸ் ரப்பர் செருப்பு வேறு, அவள் கால்களிலிருந்து கழன்று ஓடி விடும் போல, அவள் நடக்க நடக்க முன்னால் போய்க் கொண்டிருந்தது. கஷ்டப்பட்டு அதைத் தன் கால்களில் தக்க வைத்துக் கொண்டு நடந்து வந்தாள்.

ஒரு முறை, தலை தூக்கிப் பார்த்துவிட்டு, என் வீட்டை நோக்கி வர ஆரம்பித்தாள். எனக்கு ஏனென்று புரியவில்லை. ‘என்ன பாட்டி..’ மாடியிலிருந்தே குரல் கொடுத்தேன். கேட்க வில்லை போல. அழைப்பு மணியை அழுத்தினாள். அழைப்பு மணியின் ஓசை அடங்குவதற்கும், நான் மாடியிலிருந்து கீழே இறங்குவதற்கும் சரியாக இருந்தது.

பூட்டைத் திறந்தேன். வெயிலுக்கு கண்ணை மறைத்துக் கொண்டு என்னைப் பார்த்தாள். ‘என்ன பாட்டி..இன்னும் துணி ஒண்ணும் சேரலையே, நேத்து தான வந்தீங்க, மறந்துட்டீங்களா..’ என்றபடி கேட்டையும் திறந்தேன்.

எங்கள் வீட்டுத் துணிகளை அயர்ன் செய்பவள் அன்னம்மா பாட்டி. நாங்கள் இங்கு குடி வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகியிருந்தன. இப்போது ஒரு மாதமாக இந்தப் பாட்டியைப் பிடித்திருந்தேன். வாரம் ஒரு முறை தவறாது வந்துத் துணிகளை வாங்கிச் செல்வாள். வசதியாக இருக்கிறது.

‘இல்லம்மா..’ கொஞ்சம் தயங்கியது போல் இருந்தது.

‘என்னாச்சு..’.

‘மதிய சாப்பாடு எதாவது மிச்சம் இருக்கா, எனக்கு என்னவோ போல வருது’ என்றாள். கொஞ்சமாக உடல் தள்ளாடியது போலிருந்தது. எனக்குப் பாவமாக இருந்தது. இதுவரை என்னோடு அவள், பெரிதாக ஒன்றும் பேசியதில்லை. இப்பொழுது தான் இப்படிக் கேட்கிறாள்.

டக்கென யோசித்துப் பார்த்தேன். கொஞ்சம் போல சாதமும் ரசமும் இருந்தன. ‘கொஞ்சமா இருந்தாப் போதும். இதோ இம்புட்டு..’ கையைக் காட்டினாள். ‘இருக்கு, இருக்கு, வாங்க..’ ‘சும்மா, இந்த எலையில போட்டு குடும்மா..’ வாசலில் இருந்த வாழை மரத்தைக் காட்டினாள். ‘சரி, உக்காருங்க..’ சொல்லி விட்டு உள்ளே சென்றேன்.

சமையலறையில் தேவைக்கு அதிகமாகவே சாப்பாடு இருப்பது போல் தோன்றியது. ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தேன். இரண்டு கைகளால் வாங்கிக் கொண்டாள், ‘நீங்க என்ன ஆளுங்க..’ என்றபடியே. சட்டென்று தலை தூக்கிப் பார்த்தேன். உள்ளே ஏதோ ஒரு இடத்தை எதோ ஒன்று மெல்லத் தொடுவது போலிருந்தது. புன்னகைத்துக் கொண்டேன். இல்லை, அப்படி நினைத்துக் கொண்டேன்.

வாசலிலிருந்த பைப்பில் கைகளைக் கழுவிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடித்ததும், தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்தாள்.

ஏதோ சொல்ல வருவது போல், வாயை மூடி மூடித் திறந்து கொண்டிருந்தாள். ‘போதுமா பாட்டி, கொஞ்சம் மோர் தரவா’ என்றேன். திருதிருவென்று விழித்த படி கொஞ்சமாகத் தலையை ஆட்டி ‘சரி’ என்றாள். மோர் எடுத்து வரச் சென்றேன்.

திரும்பி வரும் போது தனக்குத் தானே என்னவோ பேசிக் கொண்டேயிருந்தாள். மோரைக் கொடுத்ததும் அண்ணாந்து குடிக்க ஆரம்பித்தாள். பின் சேலைத்தலைப்பால் வாயை அழுந்தத் துடைத்தபடி கொஞ்சம் போல சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

நானும் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டேன். ‘வெய்யில்ல எங்க அலையறீங்க, வெயில் தாழ நடமாடறது தான..’ மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.

‘வெயிலெல்லாம் பாத்தா முடியுமா..பொண்ணு வீட்ல எப்பவும் சாப்ட்ருவேன், அது இன்னிக்கி எங்கயோ வெளில போயிருக்கு..’

‘ஓ..’தலையை ஆட்டிக் கொண்டேன்.

‘பேத்திக்கு காலேஜ் சேக்கணும்மா, அதான் அலஞ்சிட்டிருக்காங்க..’

‘என்ன காலேஜ்..’

‘அது என்னவோ, எனக்கு பேர் தெரியல, அதோ அந்தக் கோயிலாண்ட இருக்கே, நர்ஸ் காலேஜ், அங்க..’

நான் ஊருக்கு புதிது என்பதால் எனக்குப் புரியவில்லை. ‘ஓ..’ என்றேன்.

பின் மவுனமாக அமர்ந்திருந்தோம். பாட்டி சுவரில் தலை சாய்த்து கண் மூடி அமர்ந்திருந்தாள்.

கொஞ்சம் கழித்து, ‘வாரேம்மா..’, பாட்டி கிளம்புவதற்காக எழுந்து கொண்டாள். அனுப்ப நானும்.

கேட்டுக்கு வெளியே சென்று விட்டவள், மெல்லத் திரும்பினாள்.

‘காலேஜுக்கு பணம் கட்ட நெறைய ஆகும் போல இருக்கு, இன்னும் ரெண்டு நாள்ல கடைசித் தேதி. உங்களால முடிஞ்சா ஏதாவது குடுங்கம்மா..’

நான் இதையும் கொஞ்சம் எதிர்பார்க்கவில்லை. சில நொடிகள் கழித்து ‘அய்யாட்ட கேக்கறேன் பாட்டி..’ என்றேன்.

‘நாளக்கி பாப்பாவ அழச்சிட்டு வரவா..மார்க்கு, காலேஜ் பேப்பர் எல்லாம் கொண்டு வரேன்..’

‘நாளக்கி இந்நேரத்துக்கு வாங்க, அய்யா என்ன சொன்னார்னு சொல்றேன்’

‘சரிம்மா..’ முகத்தில் சிரிப்புப் பூத்தது. சிரித்த முகத்தில் பெரிய நெற்றிப் பொட்டும், பெரிய காதுத் தோடும் அழகாய் இருப்பது போல் தோன்றின.

‘பேத்தி பேரு என்ன..’

ஒரு நொடி தயங்கி, பின் பெயரைச் சொன்னாள். என் முகத்தையும் ஒரு முறை பார்த்துக் கொண்டாள். பின் மெல்ல மெல்ல கையை ஆட்டிக் கொண்டு, ஏதோ முணுமுணுத்தவாறே மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.

கேட்டை மூடி விட்டு, நானும் ஃபேனுக்குக் கீழ் சென்று அமர்ந்து கொண்டேன்.