உடல், பால், பொருள்-பெருந்தேவி-வாசிப்பனுபவம்

#மீ டூ காலகட்டத்தில், கவிஞர் பெருந்தேவியால் ‘மின்னம்பலம்’ இதழில் பல கட்டுரைகளாக எழுதப் பட்டு, பின் அவை செம்மையாக்கப்பட்டு, புத்தகமாக ‘உடல் பால் பொருள்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் தெற்காசிய மதங்கள், பண்பாட்டு மானுடவியல், இந்திய மருத்துவ வரலாறு, பெண்ணியம் ஆகிய துறைகளூடே ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவரான பெருந்தேவி, இந்நூலில். ‘வல்லுறவு’ என்னும் சமூக நோய்க்கூறைப் பற்றி பல்வேறு தளங்களில் ஆராய்ச்சி செய்கிறார். ஒரு கவிஞராக, இலக்கியப் பிரதிகளை வைத்து ‘வல்லுறவின்’ பரிமாணங்களை ஆராயும் போது பல ஆழமான புரிதல்களை கண்டடைவதோடு, மிக நேர்த்தியான மொழியில் அவற்றை முன் வைக்கவும் செய்கிறார்.

‘கற்பு’ என்னும் சொல் வலுவாக வேரூன்றியிருக்கும் தமிழ் சமூகம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இக்கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. முன்பு ‘கற்பழிப்பு’ என்ற சொல்லால் குறிக்கப்பட்ட ‘வல்லுறவு’ என்னும் செயலை, அதனால் ஏற்படும் அஞரை(trauma என்பதற்கு ஆசிரியர் உபயோகிக்கும் இந்த வார்த்தை மிக அழகானது), அதிலிருந்து ‘பாலியல்’ நீக்கப்பட வேண்டிய அவசியத்தை, அதை மீண்டும் மீண்டும் சித்தரப்பதால் வலுவாகப் போகும் ‘வலிமை-நொய்மை’ என்னும் கருத்தாக்கங்களை, ‘consent’ என்பது ‘சரி’/’வேண்டாம்’ என்னும் வார்த்தை மாத்திரம் அல்ல- அமைதியாக இருந்தாலுமே அச்செயல் நடைபெற்ற பின்னணியை ஆராயவேண்டிய அவசியத்தை, ‘பாலியல் சீண்டல்கள்/அத்துமீறல்கள்’-இவற்றுக்கான வரையறைகளை, ‘வல்லுறவுக்கு’ நம் மரபு அளிக்கும் sanction-ஐ என பல தளங்களை விவாதிக்கிறார் ஆசிரியர்.

Sex/Gender:

ஆண்/பெண் என்ற வார்த்தைகளையும், அதற்கு நாம் அளிக்கும் அர்த்தங்களையும் கேள்விக்கு உள்ளாக்கி தன் நூலைத் துவக்குகிறார் ஆசிரியர்.

‘Sex-பால் என்பது உடற்கூறாக ஏற்கனவே இயற்கையில் தரப்பட்ட அடிப்படையான அடையாளம், ஆனால் பாலினம் (gender) பண்பாட்டுக் கட்டமைப்பு’

என்ற கருத்தை மறுத்துவிட்டு தொடங்குகிறது இவர் பயணம்.

‘Sex-பால் என்பதே பண்பாட்டு ரீதியான, அரசியல்மயமான ஒன்றுதான்’ என்பதே இவர் பின்-அமைப்பியல் பெண்ணியலாளரும் தத்துவ அறிஞருமான ஜுடித் பட்லரிடமிருந்து எடுத்துக் கொள்ளும் புரிதல்.

//‘ஆண்,’ ‘பெண்’ எனும்போது இந்தப் பயன்பாடுகள் ஓர் உடல் இருப்பைச் சாதாரணமாக விவரிப்பதாக அமைவதில்லை, மாறாக அவை பொருள் வழங்கி உடல் இருப்பைப் பால்மயமாக்கி வேறுபடுத்திக் கட்டமைப்பதாகவும் அதற்கான நியதியை மொழிபவையாகவும் உள்ளன.

நமது சமூகச் செயற்பாடுகள் பலவும் பேச்சுவழக்குகளிலிருந்து, உடை உள்ளிட்ட பழக்கவழக்கங்களிலிருந்து சடங்கு, வழிபாட்டு முறைகளிலிருந்து, அரசியல், விளையாட்டு தொடர்பான நடைமுறைகளிலிருந்து இப்படிப் பலவும் இரு பால்களின் கட்டமைப்பை உருவாக்க முனைகின்றன, அதை வலுப்படுத்துபவையாக, அதை நோக்கிய நிகழ்த்தல்களாக உள்ளன.//

ஆணின் உடல் என்று நாம் அடையாளப்படுத்தும் உடலில் உள்ள ஜீவன், தான் ஆண் என்று நாம் நினைக்கும் அடையாளத்தை ஏற்றுக் கொள்கிறதா-எத்தனை முக்கியமான. கேள்வி இது. பெண் உடலுக்கும், பெண் என்னும் தன்னிலைக்கும் கூட இதே கேள்வி தான். திணிக்கப்படும் அர்த்தங்களை, ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவ்வாறு ஏற்றுக் கொள்ளும்படி அழுத்தம் தருதல், எத்தனை பெரிய அத்துமீறல், அடக்குமுறை. இதுவும் ஒருவகையான வல்லுறவே தான்.

வல்லுறவு:

//பெண்களைத் தன்னியல்பாகப் பாதிப்புக்கு ஆளாகுபவர் என்ற நிலையில் வைத்தும் ஆண்களை வன்முறையாளர்கள் என்ற நிலையில் வைத்தும் பேசுவது பிரச்சினைக்குரியது. இப்படி லேபிள்களுக்குக் கீழ் இரு பால்களையும் வரிசைப்படுத்துவது ஆணின் வலிமையையும் பெண்ணின் நொய்மையையும் அப்படியே மறுப்பின்றி ஏற்பதாகவும் அல்லவா இருக்கிறது? பாதிக்கப்படுபவர், பாதிப்புக்கு உள்ளாக்குபவர் பற்றி நான் உரையாடுவது பால்களின் (sexes) சாராம்ச குணமாகவோ அல்லது அடையாளத்தில் வைத்தோ அல்ல//

இவ்வாறு தொடங்குகிறது ஆசிரியரின் முன்னுரை. முதலாவதாக, Oppressor/Victim என்ற வார்த்தைகளிலிருந்து ஆண், பெண்ணென்ற அர்த்தங்களை நீக்குகிறார் ஆசிரியர். இச்செயல் ‘வல்லுறவு’ என்னும் செயலில் உள்ள power equation-ஐ சட்டென நமக்கு புரிய வைத்து விடுகிறது. எல்லா ஆண்களும் oppressor-கள் இல்லை; Oppressor-கள் எல்லாம் ஆண்கள் இல்லை; ஆனால் எல்லா power mongers-ம் oppressor-கள் தான் என்று இதை நீட்டித்துக் கொள்ளலாம்.

பாலியல் அத்துமீறல்கள்:

#மீ டூ போராட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட பல தலைப்புகளில் ஒன்று, ஒரு செய்கையை ‘பாலியல் அத்துமீறல்’ என்று வகைப்படுத்த உதவும் நெறிமுறைகள் என்ன என்பது. காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் மாறும் பண்பாட்டு மதிப்பீடுகளால் அதை வரையறுப்பதில் சிக்கல்கள் வருகின்றன.

//அமெரிக்கச் சமூகத்திலுமேகூட பாலியல் துன்புறுத்தல் பற்றி பரிச்சயமின்மை நிலவுவதை ‘MeToo’வை முதன்முதலில் பயன்படுத்திய கறுப்பினக் களப்பணியாளரும் சிவில் உரிமைப் போராளியுமான டரானா பர்க் குறிப்பிட்டிருக்கிறார்// என்கிறார் ஆசிரியர்.

பொதுவாக இவற்றையெல்லாம் ‘பாலியல் அத்துமீறல்’ எனக் குறிப்பிடலாம் என்றொரு பட்டியலைத் தருகிறார் ஆசிரியர்.

//பாலியல் துன்புறுத்தல் என்பது பேருந்து, கூட்டம் போன்ற இடங்களில் தொடுவதோ, அமிலத்தை வீசுவதோ, கத்தியால் குத்துவதோ மாத்திரமல்ல. கீழே தந்திருப்பது நமது சமூகச் சூழலில் பாலியல் துன்புறுத்தலாகக் கருதப்படக்கூடிய சில செயல்களின் பட்டியல்.

1. முறையாகப் பரிச்சயமில்லாதபோது பேருந்து நிறுத்தம், உணவகம் போன்ற இடங்களில் வந்து வந்து பேசுதல்

2. தொலைபேசி / வாட்ஸ் அப் எண்ணைக் கேட்டு நச்சரித்தல் அல்லது யார் மூலமாகவாவது தெரிந்துகொள்ள யத்தனித்தல், பதில் இல்லாதபோதும் / வரவேற்கப்படாதபோதும் தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தல்,எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் செய்திகள் அனுப்புதல் போன்றவை. ‘ஆபாச’மானவையும் இதில் அடங்கும்.

3. கேட்காதபோதே தொந்தரவை உணரும் வகையில் உதவிகள் செய்தல். பெரிதாக அறிமுகமில்லாதபோதே பரிசுப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் அனுப்புதல்.

4. சம்பந்தப்பட்டவருக்குத் தெரியாமல் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தல். அதைப் பிறருக்குச் சுற்றுக்கு விடுதல்

5. ஒருவர் பொருள்களைக் (கைக்குட்டை, பூ போன்றவற்றை) கேட்காமல் / தெரியாமல் எடுத்து வைத்துக்கொள்ளுதல்.

6. ஒருவரது வீடு, பணியிடம் அல்லது கல்லூரி போன்ற இடங்களுக்கு அடிக்கடி வருதல், எப்போது வெளியே வருகிறார், எங்கே போகிறார் என்று நோட்டமிடல், பின்தொடர்தல்.

7. சொற்களால் துன்புறுத்தல், பிறரிடம் இழிவாக, களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் புறம்பேசுதல், பாலியல் சார்ந்து அவதூறு செய்தல்

8. சந்திப்புக்காக நச்சரித்தல், பார்ட்டி போன்ற இடங்களில் பார்க்கும்போது பாலுறவு கொள்ளக் கோரிக்கை விடுத்தல்.

9. பிறரிடம் பேசினால் பொறாமை கொள்ளல், அதனால் இழித்துப் பேசுதல் அல்லது வசைபாடுதல்.

10. அடி, உதை போன்ற துன்புறுத்தல்

11. தற்கொலை செய்துகொள்வேன் என்றோ ஒருவருக்கோ அவரைச் சார்ந்தோருக்கோ ஊறு செய்துவிடுவேன் என்றோ அச்சுறுத்துதல்

12. ஒருவர் இடத்தை / பொருள்களை நாசப்படுத்தல்.

13. ஏற்கெனவே காதல் இருந்து அது முடிந்துவிட்டது என்றால் முடிந்துவிட்டதை ஏற்றுக்கொள்ள மறுத்தல், விடாப்பிடியாகத் தொல்லை செய்தல்.

14. ஒற்றறிதல், சமூக வலைதளங்களில் troll செய்தல், பதில் வராதபோது தொடர்ந்து செய்தி அனுப்புதல்.

15. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் போகவிடாமல் தடுத்தல், அடைத்து வைத்தல்.

16. ஒருவருக்கு வரும் கடிதங்கள் / பார்சல்கள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்தல், அல்லது அவருக்குத் தெரியாமல் அவற்றைக் கைப்பற்றுதல்.

17. ஓரளவு பரிச்சயம் வந்தவுடனேயே ஒருவர் வீட்டுக்கோ, பணியிடத்துக்கோ, கல்வி கற்கும் இடத்துக்கோ சென்று அமர்தல், எழுந்து போகாமல் அடம்பிடித்தல்.//

ஒரு கையேடாக உபயோகப்படும் அளவு முக்கியமான புள்ளிகளைத் தொகுத்தளிக்கிறது இப்பட்டியல். மேலும், ‘பொதுவெளியில் செயல்படுபவர்களை, அவர்கள் தன் உடலை முன் வைத்தாலே ஒழிய, உடலாகப் பார்ப்பது’ என்று பலவற்றையும் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

தமிழ் சினிமாவின் கதா நாயகர்கள் ‘காதலிக்கிறேன்/ரசிக்கிறேன்’ என்ற பெயரில் செய்யும் பல செய்கைகள் ‘பாலியல் துன்புறுத்தல்’ என்னும் வகையைச் சேர்ந்தது தான் என்கிறார் ஆசிரியர்.

சங்கப் பாடல்களிலும் திருக்குறளிலும் வரும் ‘மடலேறுதல்’ பற்றிய குறிப்புகளை ஆராய்வதன் மூலம், இத்தகைய துன்புறுத்தல்களை ‘மரபு’ எவ்வாறு அனுமதிக்கிறது என்பதையும் விளக்குகிறார் ஆசிரியர். ‘மடலேறுதல்’ பெண்ணை உடைமைப் பொருளாக்கி, சுயாதீனமுள்ள மனிதப் பிறவியென்னும் நிலையிலிருந்து இறக்குகிறது என்கிறார் அவர். மரபானவையெல்லாம் சரியானவை அல்ல என்பது என் துணிபு. ஆராய்ந்து தான் மரபை ஏற்றுக் கொள்ளவோ நிராகரிக்கவோ வேண்டும், முக்கியமாக ‘பெண்’ விஷயத்தில்.

‘பாலியல் துன்புறுத்தலை’ பொறுத்த வரை,பாதிக்கப்படுபவர் ஆணென்றாலும் பெண்னென்றாலும், தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக நினைத்தால் அது பாலியல் துன்புறுத்தல் தான் என்கிறார் ஆசிரியர். இக்குற்றம் சாட்டும் வாய்ப்பைத் தவறாக உபயோகிக்க மாட்டார்களா என்றால், ஒருவரின் மீது புகார் செய்ய சரியான அமைப்பும் சமமான வாய்ப்புகளும் வழங்கப்படாத, சமனற்ற சூழல் நிலவும் போது தான் பாலியல் ரீதியான குற்றச் சாட்டுகளை அடுக்கி அவரைக் குற்றவாளியாக்குவார் என்றும், சமமான வாய்ப்புகள் வழங்கப்படாதிருப்பதும் ஒரு வகையான துன்புறுத்தல் தான் என்பதும் அவர் கருத்து.

ஜெயகாந்தனின் படைப்புகளை முன் வைத்து‘சம்மதம்-consent’:

இப்புத்தகத்தின் மிக முக்கியமான பகுதி, என்று நான் நினைப்பது, ஜெயகாந்தன் எழுதிய ‘அக்னி பிரவேசம்’ என்னும் சிறுகதையை மற்றும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் நாவலை முன் வைத்து ‘வல்லுறவைப்’ பற்றிய ஆசிரியரின் விவாதங்களைத் தான்.

‘அக்னிப் பிரவேசத்தில்’ ஜெயகாந்தன் அடையும் உச்சத்திலிருந்து, ‘சில நேரங்களில் சில மனிதர்களில்’ அவர் இறங்கி விடுவதாகத் தான் படுகிறது ஆசிரியருக்கு. அக்னிப் பிரவேசத்தில் இருக்கும் அம்மா அல்ல நாவலில் இருக்கும் அம்மா என்கிறார். உண்மையில் நாவலை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே எனக்கும் அவ்வாறு தான் தோன்றியது. ‘நீ சுத்தமாயிட்டடீ குழந்த ‘ என்று சொன்ன அம்மா அல்ல, அவளை சதா குற்றம் சுமத்தும் நாவலின் அம்மா.

ஜெயமோகன், சுரேஷ்குமார இந்திரஜித் இருவரும் ‘அக்னிபிரவேசத்தைப்’ பற்றிய தத்தமது கட்டுரைகளில் பதிவு செய்திருந்த ‘இது வல்லுறவு என்னும் வகைமைக்குள் வர வேண்டியதில்லை’ என்னும் கருத்தை ஆதார பூர்வமாக மறுப்பதன் மூலம் ‘consent’ என்பதன் பல பரிமாணங்களை தெளிவு படுத்துகிறார் ஆசிரியர்.

//ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலில் இயங்கும் பாலின உறவுத்தளம் பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையில் இந்தக் கதைக் கட்டத்தைச்சுட்டி “ஒரு கயவனால் எளிதில் பாலுறவுக்கு ஆட்படுத்தப்படுகிறாள். அவளை அவன் வலுக்கட்டாயமாகக் கவர்ந்து செல்லவில்லை. சொல்லப்போனால் பேசி ஏமாற்றி அழைக்கவும் இல்லை” என எழுதுகிறார். கூடவே அவளுக்கு மறுக்கத் தெரியாததால் அவனுக்கு வயப்படுகிறாள் என்றும் குறிப்பிடுகிறார்.

அவன் சூயிங்கத்தை அவள் உதட்டில் பொருத்துகிறான். அவன் தரப்பிலிருந்து பார்க்கும்போது எளிமையான பாலியல் விருப்பச் செய்கை அது. “தான் ஒருவனுடன் இருந்ததை அவள் அன்னையிடம் சொல்லும்போதுகூட அதை மென்றுகொண்டுதான் இருக்கிறாள். அது ஒரு அசைபோடல், பெண்ணுடலின் கொண்டாட்டம், ஆனால், அவளுக்கே தெரியவில்லை” என்று இக்கதைக் கட்டத்தைக் குறித்து எழுதுகிறார் ஜெயமோகன்.

சுரேஷ்குமார இந்திரஜித் இந்த நாவலின் காலச்சுவடு செம்பதிப்புக்காக எழுதியிருக்கும் முன்னுரையில் இப்படி எழுதுகிறார்: “. . . சிறுமியைக் காரில் வருபவன் அழைத்துச் செல்கிறான். ஆனால் அவன், அவளைப் பலவந்தப்படுத்தவில்லை. அவள் இணங்கவில்லை; ஆனால் இணங்குகிறாள். விரும்பவில்லை; ஆனால் போராடவில்லை. வசப்பட்டுவிட்டாள் என்று கூறலாமா? அந்தத் தருணத்தை, அவளுடைய மனநிலையை, புதிராகவே கதாசிரியர் வைத்திருக்கிறார். அவள் போராட, அவன் பலவந்தப்படுத்திக் கற்பழிப்பதாகக் கதையை அமைத்திருக்கலாம். ஆனால் கதை சரிந்திருக்கும்.”//

என்று இரு எழுத்தாளர்களின் கருத்துகளையும் எழுதி விட்டு, ஆசிரியர் இவ்வாறு விளக்குகிறார்:

//சம்மதம் என்பது எது? நம் சமூகத்தில் ‘பலவந்தப்படுத்திக் கற்பழிப்பு’ என்றால்தான் சம்மதமின்மை அல்லது இணக்கமின்மை என்று பலரும் புரிந்துகொண்டிருக்கிறோம்…பாலியல் சுகத்தை உணர்தல் வேறு; அதற்கான விருப்பம் வேறு; இணக்கம் வேறு. இந்த மூன்றையுமோ அல்லது மூன்றில் ஏதோ இரண்டையுமோ ஒருங்கிணைத்துவிடுவதுதான் (conflate) பாலியல் உறவில் ஒருவரது ‘சம்மதம்’ பற்றிய நமது புரிதலில் இருக்கும் ஆகப் பெரிய கோளாறு. மிக முக்கியமாக சிறுகதையில் ஜெயமோகனும் சுரேஷ்குமார இந்திரஜித்தும் தவறவிடும் வரிகள் இவை:

‘மே ஐ கிஸ் யூ?’ அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நாக்கு புரள மறுக்கிறது. அந்தக் குளிரிலும் முகமெல்லாம் வியர்த்து, தேகம் பதறுகிறது.

திடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டதைப்போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, ‘ப்ளீஸ் . . . ப்ளீஸ் . . .’ என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி . . . அவள் கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப்போகிறது.

எல்லாவற்றையும்விட ஜெயகாந்தன் “கதற கதற” என்ற கிளிஷேவை இங்கே காரணமின்றிப் பயன்படுத்தியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

பெண்ணின் எதிர்வினையைக்கூட அவளது இணக்கமின்மையாக, சம்மதமின்மையாக ஏன் நம்மால் எடுத்துக்கொள்ள முடியவில்லை? சக எழுத்தாளர்களின் வாசிப்பில் குறை காண்பதல்ல என் நோக்கம். நம் அறிவுச் சமூகத்தில்கூடப் பாலியல் உறவில் பெண்ணின் ’சம்மதம்’ என்கிற இன்றியமையாத அம்சம் இன்னும் எப்படிச் சரிவர அணுகப்படாமல், உள்வாங்கப்படாமல் இருக்கிறது என்பதற்கான சிறிய எடுத்துக்காட்டு இது.//

‘சம்மதம்’ என்பதைப் பற்றிய புரிதலை தெளிவு படுத்திக் கொள்ள உதவும் மிகவும் முக்கியமான எதிர்வினை பெருந்தேவியுடையது.

இவ்விஷயத்தைப் பற்றி எனக்குத் தோன்றியவை: பொதுவாக உளவியலில், ஒருவர் ‘பயம்-fear’ கொள்கிறார், என்றால் அவர் மூன்று விதமாக எதிர்வினையாற்றுவார் என்பார்கள்-3 f’s-fight, flight, freeze. அக்னிப்பிரவேசத்தில் நடக்கும் வல்லுறவில், அப்பெண் சண்டயிடவில்லை, அவ்விடத்தை விட்டு ஓடவில்லை. செயலற்றுப் போய் விடுகிறாள். மிகச் சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவளான அப்பெண்ணுக்கு, அந்த காரும், அதனுள் இருக்கும் வாசனையும், மெத்தென்ற அதன் இருக்கைகளும் மாறுபட்ட ஒரு ‘போஷ்’ சூழலை, அதனால் உண்டாகும் ஒரு பயத்தை அளிக்கின்றன. தெரியாத இடத்துக்கு வேறு அழைத்துச் சென்றிருக்கிறான். கதவைத் திறந்து கொண்டு ஓடினாலும் அவளுக்கு வழி தெரியாது. பயத்தினால் பீடிக்கப்பட்ட அவள் ‘freeze’ ஆகிவிடுகிறாள். அடுத்த நாள் அசைன்மெண்டைப் பற்றிக் கவலைப்படும் சிறு பெண் அவள். அவள் சினிமாவில் காட்டப்படுவது போல ஓடவில்லை, போராடவில்லை என்பதனால் அவள் சம்மதித்து விட்டாள் என நினைப்பது தவறானது.

வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் சொன்ன பிறகும் கூட, அவள் சூயிங்கம்மை துப்பாமல் மென்று கொண்டேயிருப்பதும் ஒரு விதமான உறை நிலை தான். Brain freeze-ஆகி விட்டால், ஆடை நுனியை விடாது சுருட்டிக் கொண்டே இருப்பது போன்ற செயல்பாடு தான் அவள் அந்த ‘கம்’மை மென்று கொண்டேயிருப்பதும், என்று எனக்குத் தோன்றியது.

அவள் அவனிடம் ஈர்க்கப்படுகிறாளா என்றால், ‘ஆம், அதற்கான சமிக்ஞைகள் கதையில் இருக்கின்றன. ஆனால் பெருந்தேவி சொல்வது போல், சம்மதத்தில் மூன்று நிலைகள் இருக்கின்றன- ஈர்க்கப்படுதல் வேறு; உறவுக்கான விருப்பம் வேறு; இணக்கம் வேறு; அப்பெண் பாபுவிடம் ஈர்க்கப்பட்டாள்; உறவுக்கு சம்மதம் தெரிவித்தாளா என்றால் இல்லை தான். அதனால் இது வல்லுறவே தான்.

புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’யிலும் அப்பெண் செயலற்றுப் போய்விடுகிறாள். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டால், இது கடந்து விடும் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். ஒருவரின் செயலற்ற நிலையை உபயோகப்படுத்திக் கொள்வது வல்லுறவின்றி வேறென்ன.

சமூகத்தின் புரிதலை மேலும் மேலும் நுட்பமடையச் செய்வது தான் இலக்கியத்தின், கலைகளின் பணி. அவ்விதத்தில் இதனைப் பற்றிய விவாதமும் முக்கிய கலைச் செயல்பாடாகிறது.

வல்லுறவினால் உண்டாகும் ‘அஞர்’:

‘வல்லுறவு நடப்பது உடலுக்குத் தானே. நான் வெறும் உடலல்ல என்று பெண்கள் எண்ணிக் கொள்ள வேண்டும்’ என்று சமீபத்தில் ஒரு கட்டுரையில் ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார். வல்லுறவு ஏற்படுவதால் உண்டாகும் உளவியல் அஞரை என்ன செய்வது. அது சாதாரணமானது அல்ல, மிகத் தீவிரமானது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலின் முதல் அத்தியாயத்தில் வரும் கங்காவின் பேருந்து பயணத்தைப் பற்றி விவாதிக்கையில், இளமையில் அவளுக்கு நடந்த வல்லுறவு அவளது ‘self image’-ஐ எவ்வளவு பாதிக்கிறது என்பதை விவாதிக்கிறார் ஆசிரியர்.

தன்னையும் அறியாமல் ஏதோ ஒரு விதத்தில் தான் இது போன்ற செய்கைகளை ஈர்க்கிறோம் என்னும் குற்றவுணர்வு பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்டு விடுகிறது. அவருக்கு எப்போதாவது ஒரு ஆரோக்கியமான வாழ்வு கிட்டுமா(பாலியல் கோணத்தில்) என்பது சந்தேகம் தான். வாழ்வு முழுமைக்கான ஒரு ஊனப்படுத்துதல் தான் இது, என்று எனக்குத் தோன்றியது.

அப்பேருந்துப் பயணத்தில் கங்கா நினைப்பதாக வரும் பல எண்ணங்கள் பல வகையாக அவளும் சமூகமும் condition செய்யப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது என்கிறார் ஆசிரியர். பெண்களுக்கான இடம் வீடு தான்-வெளிய வந்தால் இதையெல்லாம் அனுபவிக்க வேண்டியது தான்(இங்கொரு ‘சமூக ஒழுங்குப் படுத்தல்’ நடக்கிறது); வயதான ஆண்கள் பாலியல் அத்துமீறலில் ஈடு பட மாட்டார்கள்; தான் தோற்றத்தில் கவனமாக இருந்தும் தன் மீது சாய்கிறானே என்ற ஆதங்கம்; அண்ணா, மட்டும் என்ன, அவன் என்ன நினச்சிண்டு என்ன பாக்குறானோ; என்ற அவளது எண்ணங்களைக் கோடிட்டு காட்டுவதன் மூலம், இத்தகைய அத்துமீறல்கள் தனக்கு விதிக்கப்பட்டிருப்பதாக பெண் நம்புவதை, தன் கையறு நிலையை மறக்க, சந்தேகத்தின் பலனை துன்புறுத்துபவருக்கே அளிப்பதை, victim blaming ன் மூலம் தனக்கு நிகழ்பவற்றுக்குக்கான காரணம் தான் தானோ என நம்பவைக்கப்படுவதை, பாலியல் அத்துமீறல்கள் உறவுகளுக்கிடையேயும் சர்வ சாதாரணமாக நடப்பதை என பல சமூக செயற்பாடுகளின் மீது கவனம் ஈர்க்கிறார் ஆசிரியர்.

பாலியல் துன்புறுத்தல் எவ்வாறு சமூகத்தில் இயல்பாக்கம் (normalization) செய்யப்படுகிறது என்பதை நாடகீயமாகக் காட்டும் ‘பண்பாட்டுப் பிரதி’ நாவலின் இப்பகுதி என்கிறார் ஆசிரியர்.

நைஜீரியா நாட்டில், கொள்ளையர்கள் வந்தால் தருவதற்கு என்று தனியாக கொஞ்சம் பணம் வைத்திருப்பார்களாம். அந்நாட்டில் ‘கொள்ளை’ normalize ஆகியிருக்கிறது. அது போல் இங்கு ‘வல்லுறவை’/பாலியல் அத்துமீறலை’ normalize செய்ய முடியாது. நமக்கு நடக்கவில்லை என்றால் நல்லது, நடந்தால் கவலைப் படக் கூடாது, துடைத்து எறிந்து விட்டு செல்ல வேண்டும் என்னும் அறிவுரையல்ல; இது போன்ற அஞர் அளிப்பவரை வெட்கி கூசச் செய்வதே அறிவுச் செயல்பாடாக இருக்க முடியும்.

பொது மொழி:

இப்புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ‘வல்லுறவு’ என்னும் சமூக நோய்க்கூறின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திக் கொண்டே செல்கிறது. முழுமையாக புரிந்து கொள்ள, ஒவ்வொரு கட்டுரையையும் பலமுறை வாசிக்க வேண்டும்.

இக்கருத்தைப் பொறுத்தவரை ஆசிரியர் மிக உயர்ந்த, நுட்பமான தளத்தில், புரிதலில் இருக்கிறார். ஆனால் சூழலில் உள்ள புரிதல் அத்தகையது அல்ல. இன்னும் ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது.

இது சார்ந்த கருத்துகள் அனைத்துக்கும் ‘ஃபெமினிசம்’ என்றொரு சொல்லை அளித்து விடுகிறார்கள். அச்சொல்லை ஒரு அருசி உடைய சொல்லாக எண்ணும் நிலை தான் இன்றும் இருக்கிறது. ‘ஃபெமினிஸ்டுகள்’ என்று சொல்லப் படுவோர், ‘இது இப்படித் தானே’ என்று ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக, கலகக் காரர்களாக, ஒரு அசூசையுடன் பார்க்கப் படுபவர்களாக இருக்கிறார்கள்.

இவையெல்லாம் பெண் சம்பந்தமான எண்ணங்கள் என்று முடிவு செய்யப்பட்டு, பெண்ணை நோக்கி ‘உனக்குத் தான் இதெல்லாம் இப்படித் தோன்றுகிறது; உன் பாட்டி பூட்டி மார்கள் அத்தனை திராணி இல்லாதவர்களா என்ன, தெரியாமலா ஒப்புக் கொண்டிருப்பார்கள்; உண்மையில் மிக உயர்ந்த இடத்தில் தான் உன்னை வைத்திருக்கிறார்கள்; தெய்வம் நீ, தியாகச் செம்மல் நீ, உன்னால் தான் இவையெல்லாம் செய்ய முடியும்’ என்று பலவாறாக பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.

‘வன்புணர்வு’ நடந்தால் கூட, அவ்வாறு செய்யத் தூண்டியது அவள் ஆடையோ அல்லது அவள் நடத்தையோ தான் என்று குற்றத்தை அவள் தலையிலேயே சாற்றுவது (victim blaming) மிகச் சாதாரணமாக எந்தக் கேள்வியும் கேட்கப் படாமல் இன்றும் இங்கு நடக்கிறது.

இவற்றைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகும் பெண்கள்/ஆண்கள், தாங்கள் உணர்ந்தவற்றையெல்லாம் காத்திரமாகப் பேசுவதற்கான ஒரு பொது மொழியையும், செறிவான புரிதலையும் இந்நூல் வழங்குகிறது. தமிழில் நிகழ்ந்த மிக முக்கியமான புத்தகங்களில் ஒன்று இது.

நூலில் உள்ள கட்டுரைகளின் பட்டியல்:

1. பாலியல் துன்புறுத்தல்: சிந்தனைக்குச் சில குறிப்புகள் 
2. பாலியல் வன்முறை: குறுக்குவெட்டு அரசியல்களும்
தன்வரலாறுகளும் 
3. ‘அக்கினிப் பிரவேசம்:’ பாலுறவில் சம்மதமும்‘
4. சில நேரங்களில் சில மனிதர்கள்:’
பாலியல் துன்புறுத்தலின் இயல்பாக்கம் 
5. பாலியல் சொல்லாடல்களின் பெருக்கமும்
பெண்ணை நோக்கிய விசாரணைகளும் 
6. பால் தன்னிலைகளின் கட்டமைப்பு:
வல்லுறவெனும் சமூகச் செயற்பாடு 
7. பொள்ளாச்சி வன்முறையில் குடும்ப ஒழுங்கு:
தண்டனை/அவமானம் 
8. மனிதன் “மிருகம்” ஆகும் தருணம்:
புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சிறுகதை 
9. #MeToo திறக்கும் புதிய பாதைகள் 
10. ரஞ்சன் கோகாய்: விசாரணை, சாட்சியம், நீதி 
11. ‘திரைகள் ஆயிரம்:’ கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்
12.“ஆடையும் மானமும் இல்லாததோர்
வெளியினில் ஆடி மகிழ்ந்திட விரும்புகிறேன்”