அஷ்டபதி 15-ஸமுதித மதனே(ரமதே..)

விரஹ பாண்டு முராரி முகாம்புஜ
த்யுதிரயம் திரயன்னபி வேதனாம்
விதுரதீவ தனோதி மனோபுவ:
ஸுஹ்ருத் அயே ஹ்ருதயே மதன வ்யதாம்

ஓ தோழி, இந்த சந்திரன் மன்மதனின் தோழன்; அவனின் வெளுத்த முகம் முராரியின் தாமரை முகத்தைப் போன்று இருப்பதால், என் விரஹம் திரையிடப்பட்டது போல் கொஞ்சம் குறைந்தாலும், இந்த மதன நோய் என் இதயத்திற்கு மிகுந்த வேதனையளிக்கிறது.

ஸமுதித மதனே ரமணி வதனே சும்பன வலிதாதரே
ம்ருகமத திலகம் லிகதி ஸபுலகம் ம்ருகமிவ ரஜீனீகரே

நன்கு எழுந்த ஆசையினால், அதரத்தில் முத்தமிடுவதற்காக அவள் அழகிய முகத்தை இழுக்கிறான்; சந்திரனில் தெரியும் மானைப் போல, அவள் முகத்தில் புளகத்தினாலேயே கஸ்தூரி திலகம் இடுகிறான்.

ரமதே யமுனா புளினவனே விஜயீ முராரிரதுனா

இப்பொழுது, யமுனையின் மணற் பரப்பில், வெற்றி கொண்டவனான முராரி, விளையாடிக் கொண்டிருக்கிறான்.

கனசய ருசிரே ரசயதி சிகுரே தரளித தருணானனே
குரவக குஸுமம் சபலா ஸுஷமம் ரதிபதி ம்ருக கானனே (ரமதே)

ரதியின் பதியான மன்மதன் மிருகமாய் அலையும் அக்காட்டில், கருமேகத்தைப் போல ஒளிரும் அவனைக் கண்டதால், தத்தளிக்கும் அழகிய முகம் கொண்ட அப்பெண்ணின் தலையில், மின்னலைப் போன்ற ஒளி பொருந்திய மருதாணிப் பூவை (குரவக குஸுமம்) வைத்து அழகு படுத்துகிறான்.

கடயதி ஸுகனே குசயுக ககனே ம்ருகமத ருசிரூஷிதே
மணிஸரம் அமலம் தாரக படலம் நகபத ஸஸி பூஷிதே (ரமதே)

கஸ்தூரி அணிந்ததால் ஒளி பொருந்திய, நகம் செய்த காயம் என்னும் சந்திரனைப் பூண்ட, இரு மேகங்களைப் போன்ற கனத்த அவள் மார்பகங்களில், நட்சத்திர வரிசையைப் போன்ற குற்றமற்ற ஒரு மணிசரத்தை அணிவிக்கிறான்.

ஜித பிஸஸகலே ம்ருது புஜ யுகளே கரதல நளினீ தளே
மரகத வலயம் மதுகர நிசயம் விதரதி ஹிமஸீதளே (ரமதே)

தாமரைத் தண்டுகளை வென்ற, பனியை விட குளுமையான, மிருதுவான அவள் புஜங்களில், தாமரையின் இலை போன்ற அவள் கைத் தலத்தில், வண்டுகளின் வரிசையைப் போன்றுள்ள, மரகத வளையத்தை அணிவிக்கிறான்.

ரதி க்ருஹ ஜகனே விபுலாபகனே மனஸிஜ கனகாஸனே
மணிமய ரஸனம் தோரண ஹஸனம் விகிரதி க்ருத வாஸனே (ரமதே)

ரதியின் இல்லமான அவள் பெருத்த இடையில், மன்மதனின் பொன் ஆசனத்தில், வாயில் தோரணத்தைப் போன்ற, மணிகளால் நிறைந்த இடை நகையை, அணிவிக்கிறான்.

சரண கிஸலயே கமலா நிலயே நகமணி கணபூஜிதே
பஹிரபவரணம் யாவக பரணம் ஜனயதி ஹ்ருதி யோஜிதே (ரமதே)

திருமகள் நிலைகொண்டிருக்கும், நகங்கள் என்னும் மணிகளால் பூஜிக்கப்பட்ட, தளிர் பாதங்களை தன் இதயத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டு, அக்கால்களின் ஓரங்களில் சிவப்பு நிறத்தை பூசுகிறான்.

த்யாயதி ஸத்ருஸம் காமபி ஸுத்ருஸம் கல ஹலதர ஸோதரே
கிமபலமவஸம் சிரமிஹ விரஸம் வதஸகி விடபோதரே (ரமதே)

இவ்வாறு ஏதோ ஒரு அழகியிடம் எப்போதும் விரஸமாகக் காதல் கொள்ளும், கலப்பையை ஏந்தியவனின்(பலராமனின்) சகோதரனை, எந்த பலனுமில்லாது, மரத்தின் வயிற்றில் (பொந்துக்குள்) இருந்து கொண்டு, நெடுங்காலம் நினைத்துக் கொண்டேயிருப்பதனால் என்ன பயன், சொல் தோழி.

இஹ ரஸ பணனே க்ருத ஹரி குணனே மதுரிபு பதஸேவகே
கலியுக சரிதம் ந வஸது துரிதம் கவிந்ருப ஜயதேவகே (ரமதே)

இவ்வாறாக ஹரியின் குணத்தை அழகிய பண்ணாகப் பாடிய கவிராஜனான, மதுரிபுவின் கால்களுக்கு சேவை செய்பவரான, ஜெயதேவருக்கு, கலியுகத்தில் வரும் எந்த கஷ்டங்களும் வராமல் இருக்கட்டும்.