ரிஷி மூலம்-ஜெயகாந்தன்-புத்தக வாசிப்பனுபவம்

இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன், இந்த நாவலை முதன்முறையாக வாசித்தேன். இரண்டாவது முறையாக இப்போது வாசிக்கும் போது தான் புரிகிறது, எந்த நாவலிலிருந்து என்றே தெரியாமல் மனதில் நிரந்தரமாக இந்நாவலின் பல காட்சிகள் தங்கியிருக்கின்றன என்பது. ராஜாராமன் தன் அன்னையின் அறையை வெளியிலிருந்து பார்த்து பிரமித்து, தன் கற்பனையில் அதை மிகைப்படுத்திக் கொள்ளும் இடத்தையும், அறைக்குள் அவன் அன்னையைப் பார்க்கும் இடத்தையும் என் மனம் மறக்காமல் சேமித்து வைத்திருந்திருக்கிறது.

ஒரு இடத்தில் கூட சொல் மிகாது மிகக் கச்சிதமாக எழுதப் பட்ட நாவல் ‘ரிஷி மூலம்’. மிகத் தீவிரமான கதை. கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளான கதை, ஆயினும் இன்று வரை இது சரியாக வாசிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஃபிராய்டியன் விளக்கம் தான் பெரும்பாலானவர்கள் கொடுத்திருக்கிறார்கள் இக்கதையில் உள்ள ராஜாராமன்-இந்து, ராஜாராமன்-சாரதா மாமி உறவுகளுக்கு. அது சரியானதா, அதற்கு மேலும் ஒன்று உள்ளதா என்று இக்கதையை வாசித்து முடிக்கும் நுட்பமான வாசகர்கள் அனைவரும் அசை போட்டுக் கொண்டே தான் இருப்பார்கள்.

இந்தியர்களின் கலாச்சாரத்தில் மகன்களின் பங்கு தனித் தன்மை வாய்ந்தது. இங்கு, சம்பிரதாயங்களும், சிந்தனை மரபும், ஏன் வாழ்க்கையின் இலட்சியமே கூட ஒரே ஒரு மகனையாவது பெற்று விட வேண்டும் என்னும் எண்ணத்திலேயே நிலை கொண்டிருக்கிறது. மகன் இல்லையென்றால் ஒருவரின் வாழ்வே ஒரு விதமான தோல்வி தான் என்பது இங்கு சொல்லாச் சொல்லாக இருக்கிறது. தவமாய் தவமிருந்தாவது, மீண்டும் மீண்டும் முயன்றாவது ஒரு மகனையாவது பெற்றுக் கொள்ளும் முயற்சியிலேயே இருக்கிறார்கள் பெரும்பாலான இந்திய தம்பதியர். தந்தைக்கும் மகனுக்குமான உறவு ஒரு வகையென்றால், மகனைப் பெற்ற தாய்க்கும், அம்மகனுக்கும் உள்ள உறவு மிக மிக உணர்ச்சி கொந்தளிப்பானது. தீவிரமானது. பெற்ற தாய்க்கு பல பெருமைகளையும் மரியாதைகளையும் பெற்றுத் தருபவனாக இருக்கிறான் மகன். பெருமை வருகிறதோ இல்லையோ, பல சிறுமைகளிலிருந்து காக்கிறான் அவன் தன் தாயை. கணவனை கழுத்துப் புருஷன் என்றும், மகனை வயிற்றுப் புருஷன் என்றும் கொள்ளும் ஒரு சமூகம் தான் இது. அது போன்ற ஒரு மகனுக்கு ஏங்கித் தவிப்பவளாயிருக்கிறாள் இக்கதையின் சாரதா மாமி.

ராஜாராமனோ தன் வயதுக்கு மீறிய நுண்ணுணர்வு கொண்ட ஒரு ஆண்பிள்ளை. மற்ற எவரும் கவனிக்காத விஷயங்கள் கூட அவனுக்கு எளிதில் புரிந்து விடுகின்றன. அதீத கற்பனைத் திறனும், நினைவாற்றலும் கொண்டவனாக இருக்கிறான் ராஜாராமன். தான் குழந்தையாக தொட்டிலில் தூங்கிய போது பார்த்த தன் அன்னையின் அறையின் அமைப்பு கூட அவனுக்கு நினைவிலிருக்கிறது. தன் அன்னையும் தந்தையும் கொள்ளும் ஏகாந்தங்கள் முதற்கொண்டு அவனுக்கு அனைத்தும் புரிகின்றன. மிகச் சிறிய வயதிலேயே தன்னை ஆணென்றே உணரும் ஒரு இயல்பு கொண்ட குழந்தை ராஜாராமன்.

தன் தாயைப் போல மனைவி அமைந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிக்கொண்டு இன்றும் பிரம்மச்சாரியாக இருக்கிறார் பிள்ளையார், என்ற கதை திகழும் நிலமிது. ராஜாராமனுக்கும் அவனுடைய அன்னையே அவன் மனம் கவர்ந்த முதல் பெண். தன் அன்னை தனக்களிக்காமல் தன் தந்தைக்கு அளிக்கும் முன்னுரிமையால் அவன் தன் தந்தையின் மீது பொறாமை கொள்கிறான். அன்னையின் மீது அவனுக்கிருக்கும் அன்பு அவளால் எதிரொலிக்கப்படுவதில்லை. அவள் அறை முதற்கொண்டு அவள் பரிவு வரை, அனைத்தும் அவனுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் விலக்கப்படுகின்றன.

விலக்கப்படுவதாலேயே அந்த அறையின் மீது அத்தனை பித்து கொள்கிறான் ராஜாராமன். ஒரு வகையில் அவனுக்கு விலக்கப்பட்ட அனைத்திற்குமான குறியீடு தான் அந்த அறை. விலக்கப்பட்டதின் மீது கொள்ளும் வசியத்தினாலேயே அவன் அறைக்குள் யாரும் அறியாமல் செல்கிறான். தற்செயலாக அன்னையை ஆடையின்றிக் காண நேரும் போது, அன்னை அவன் கண்களில் ஆணைக் கண்டு விடுகிறாள். இருவரிடையே மேலும் வன்மம் பெருகுவதற்கு அது ஏதுவாகிறது. அன்னையின் வெறுப்பு, அல்லது வெறுக்கிறாள், குறைவாக நினைக்கிறாள் என்ற நினைப்பு, அவனைக் குற்றவுணர்ச்சி கொண்டவனாக்குகிறது. மேலும் சிக்கல் நிறைந்த உளவியலை அவனுக்குத் தருகிறது.

அன்னையென்னும் உறவின் மீது ராஜாராமன் கொள்ளும் தடுமாற்றங்கள், மகன் என்னும் உறவின் மீது சாரதா மாமி கொள்ளும் அதீதங்களைச் சந்திக்கும் போது பால் திரிந்தது போல் ஆகி விடுகிறது.

ஒரு வேளை இந்துமதியும் கிருஷ்ணய்யரும் ராஜாராமனை அத்தனை விலக்கியிருக்கவில்லையென்றால், இன்னும் முதிர்ச்சியுடன் அவனை இந்து கையாண்டிருந்தால், இத்தனை சிக்கலாக ஆகியிருக்காமல் இருக்கலாம். சாரதா மாமியின் பிள்ளை வேண்டும் என்னும் ஆசையும் வேகமும் கூட இச்சிக்கலுக்கு ஒரு காரணம்.

ராஜாராமன் மிகச் சிறியவனாக இருக்கும் போதே, தன் மனதில் தோன்றி விடும் காமம் என்னும் ஆதி இச்சையின் மீது கொள்ளும் குற்றவுணர்வு, அதை மறைக்க அவன் போட்டுக்கொள்ளும் வேஷங்கள், என்ன வேஷங்கள் போட்டாலும் அவன் ஆழ்மனது கனவுகளின் மூலம் அவ்விச்சைகளை பூர்த்தி செய்து கொள்வது, பின் சாரதா மாமியிடம் நனவிலேயே அவ்விச்சையை பூர்த்தி செய்து கொள்வது, அதற்காக மேலும் குற்றவுணர்வு கொண்டு, கஞ்சாவும் பீடியும் உபயோகிக்கும் ஆனால் லௌகீகத்தை துரந்த சாமியாராக வேடமிட்டுக் கொள்வது, பொறுப்பற்ற அவனை, சித்தன் என மற்றவர்கள் நினைப்பது என்று சங்கிலித் தொடராக குற்றவுணர்வு பல திரைகளாக அவன் காமத்தின் மீது விழுந்து கொண்டேயிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் மாற்றாக அந்த ஆதி இச்சையை பாசாங்கு இல்லாமல் நேருக்கு நேர் சந்தித்திருந்தால், அவனுக்கு பெரியவர்கள் யாராவது உதவியிருந்தால், இப்பிரச்சனை ஆரம்பத்திலேயே சரியாகியிருக்கும். (இக்கதையில் உள்ள ‘பெரியவர்களு’க்கு இதை கையாளுமளவு முதிர்ச்சியிருக்கிறதா என்பது சந்தேகம் தான்)

மிக நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், தாய் என்னும் பெயரினாலும் மகன் என்ற பெயரினாலும் அவரிருவரும் தத்தமது இச்சையை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்ற வாசிப்பிற்கு போதுமான இடம் இருக்கிறது இந்நாவலில்.

அதற்குக் காரணமாக, இந்திய சமூகத்திலிருக்கும் காமத்தின் மீதான அதீத எண்ணங்களையே சாடுகிறார் ஆசிரியர்.

கடுமையான சர்ச்சைக்குள்ளான இந்த நாவலைப் பற்றியும், அதன் கதாபாத்திரங்களைப் பற்றியும் ஆசிரியரே தன் சொற்களில் முன்னுரையில் கூறியிருப்பது பல insight-களை நமக்கு அளிக்கிறது. மொத்த முன்னுரையுமே முக்கியமானது தான். மிக முக்கியமான சில பகுதிகள் கீழே தரப் பட்டிருக்கின்றன:

//இந்த ரிஷிமூலத்து ராஜாராமனுக்கும், சாரதா மாமிக்குமான உறவு எந்த சமுதாயத்திலும் ஏற்படலாம். ஏற்படும்…நம்மைவிட வளர்ச்சியடைந்த சமுதாயங்களில் இவை நடக்கும் போது, அதற்கு அவர்கள் இத்தனை முக்கியத்துவம் தந்து அதற்காக அழிந்து போவதில்லை…

எனது சாரதா மாமி, ராஜாராமனை விடவும் ஆரோக்கியமான மனம் கொண்டவள். அவளால் அதை ஜீரணித்துக் கொள்ள முடிகிறது. அந்தத் தவறைப் பெருந்தன்மையோடு மறக்க முடிகிறது….ஆனால், ராஜாராமனுக்குப் பாலுணர்ச்சி பற்றிய பய உணர்ச்சி மட்டுமே இருக்கிறதே தவிர ஆரோக்கியமான பார்வை இல்லை. எனவேதான் அவனால் தன்னைத்தானே மன்னித்துக் கொள்ள முடியவில்லை….

தனது கதைக்கு ராஜாராமனே தீர்ப்பு வழங்குகிறான்; ஆற்றின் இக்கரையில் அமர்ந்துகொண்டு சுடுகாட்டில் எரிகின்ற ஒவ்வொரு சிதையிலும் தன்னை வைத்து எரித்துக் கொள்கிறானே.//

முக்கியமாக பாலுணர்வின் மேலிருக்கும் மனத்தடைகளையும், அவை சமுதாயத்தின் மனசிக்கல்களின் மீது செலுத்தும் ஆதிக்கத்தையும் இவ்வாறு விளக்குகிறார் ஆசிரியர்:

//இது போன்ற குற்றவுணர்வு, சமுதாயம் கொண்டிருக்கும் taboos மற்றும் inhibitions-ஆல் உண்டாகிறது ; இது போன்ற கட்டுகள் கொண்ட சமுதாயம் சிறந்த தனி மனிதர்களை உருவாக்குவதில்லை; செக்கு மாடுகளை உற்பத்தி செய்யும் சமுதாயம் ஃபிலிஸ்டீன் சமுதாயமாகவே இருக்க முடியும்; இது போன்ற தனிமனிதர்களே நாளை நிகழவிருக்கும் ஒரு அறிவியக்கத்தின் முன்னோடிகள்; இந்த தனிமனிதர்கள் தங்களுக்கு அல்ல, எதிர்கால சமுதாயத்திற்கு முக்கியமானவர்கள்; நான் பாலுணர்ச்சி கிளர்த்தும் கதைகளை எழுதுவதில்லை, மாறாக அதிலுள்ள பிரச்சனைகளைப் பேசுகிறேன்…//

எழுத்தாளர் இந்த உறவை ஒரு சாதாரணத் தவறாகத் தான் பார்க்கிறார்; தன்னையே ஒவ்வொரு சிதையிலும் வைத்து மானசீகமாக எரித்துக் கொள்ளும் அளவு குற்றவுணர்வு கொள்ளும் ராஜாராமனைப் பார்த்து ஒரு மருத்துவர் நோயாளியிடம் கொள்வது போன்ற அனுதாபம் தான் கொள்கிறார். ஆசிரியர் அவனை ரிஷி என்றழைக்கவில்லை. மன நோயாளி என்கிறார்.

//ஒரு மனநோயாளியின் மன உணர்வுகளைத் தன்னிலையில் இருந்து எழுதுவதன் மூலம்…

அந்த ராஜாராமன் மீது எனக்கு நெஞ்சு நிறைந்த அனுதாபம் உண்டு. ஒரு நோயாளியிடம் டாக்டருக்கு உள்ள அனுதாபம் போன்றது அது.

ரிஷிமூலம் என்பது ராஜாராமனின் புகழ்பாட வந்த காவியம் அல்ல, வாழ்க்கையின் அக்கரைக்குப் போய்ச் சிதையேற வேண்டிய ஒரு ஜீவன் இக்கரையிலேயே வெந்து புகைந்து கொண்டிருப்பதைக் காட்டுகிற வேதனைச் சித்திரமாகும். அது ஒரு இலக்கியாசிரியனின் கரத்தால் வரையப்பட்ட கேஸ் ஷீட் (Case Sheet)

அவனை ரிஷி என்று நானும் சொல்லவில்லை; அவனும் சொல்லவில்லை.//

இவ்வாறாக முதிர்ச்சியின்மையால், அதீத நிலைப்பாடுகளால், மனத்தடைகள் தரும் குற்றவுணர்ச்சியால் நிகழ்ந்த கதையாக ஆசிரியர் இதை முன்வைக்கிறார்.

ஒரு பிரதியில், ஆசிரியர் நினைத்ததை விடவும் தன்னிச்சையாக எழுந்து வரும் சொற்களில், இலக்கியம் மேலும் புதிய உச்சங்களைத் தொடுகிறது. இக்கதையின் இரண்டாவது அத்தியாயத்தில் ராஜாராமனின் அந்தராத்மா அவனைப் பற்றியும், பொதுவாக மனிதன் என்னும் மிருகத்தை பற்றியும் செய்யும் அவதானங்கள் அவ்வகையைச் சேர்ந்தவை. காமம் என்னும் ஆதி இச்சையை தர்ம நியாயங்களுக்கு ஏற்றவாறு மறு உருவாக்கம் செய்து கொள்ளும்போது ஏற்படும் சிக்கல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அதற்காக போட்டுக்கொள்ளும் திரைகளையும் வேஷங்களையும் பரிகாசம் செய்கின்றன:

//இவன் கடைப்பிடிச்ச ஆசாரம், அனுஷ்டானம், விரதம், வேத பாராயணம் பூஜை – புனஸ்பாரகம், ஸம்ஸ்கிருத சுலோகம், தமிழ்ப்பாடல், படிச்ச படிப்பு, வாங்கின மார்க்கு, வச்சு சிரைச்ச குடுமி போட்டுண்டிருந்த பூணூல் எல்லாம் வேஷம்! என்னை மறைக்க யாரோ கொடுத்ததை இவன் வாங்கிப் போட்ட திரைகள்! இதையெல்லாம் விலக்கி அவனுக்கே தெரியாமல் ஒளிஞ்சிண்டிருந்த என்னை நான் பார்த்துப் பார்த்துச் சிரிச்சிருக்கேன். இவனுக்கு நிஜமா அதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. இவன் என்னைக் கண்டு பயந்துண்டு, அந்தப் பயத்திலே, என்னண்டேயிருந்து தப்பிச்சுக்கிறதுக்காக என்னை அந்த வேஷங்களிலே மறைச்சு மறைச்சு வச்சான்//

//இந்த மிருகங்கள் ஆடை கட்டிக்கறதுனாலே இதுகளுக்கு மனுஷாள்னு பேரு.

மனுஷனைத் தவிர மத்த மிருகங்களுக்கு நெறிகள் முறைகளெல்லாம் கிடையாது. அதனாலே அதுகளுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. மனுஷ மிருகங்களுக்கு நெறிகள் உண்டு. முறைகள் உண்டாம்; சாஸ்திரங்கள், சடங்குகள், தர்மங்கள், நியாயங்கள், சட்டங்கள், தண்டனைகள் எல்லாம்

உண்டு. இதெல்லாம் கெடறதும் உண்டு இதைக் கெடுக்கணுங்கிற ஆசையும் உண்டு கெடுக்க முடியலையேன்னு ஆத்திரமும் உண்டு. அதுக்காகப் பலி கொள்றதும் உண்டு; பலியாகிறதும் உண்டு. தனித்தனியா அழிச்சுட்டு எல்லாரும் கூடி அது இன்னும் இருக்குன்னு திரை பிடிக்கிறதும் உண்டு. திரையை விலக்கறவனை ஏதோ புண்ணியகாரியம் மாதிரி தீயிலே போட்டுப் பொசுக்கறதும் உண்டு. பொய் உண்டு, வேஷம் உண்டு, துரோகம் உண்டு; மனசறிஞ்ச பொய், பழக்கமாயிட்ட பொய், புரை தீர்த்த நன்மை பயக்கும்’ பொய் – அதெல்லாம் அவனவன் புத்தியைப் பொறுத்த வசதி – அதே மாதிரி வேஷம்; பிறருக்குக் காட்டற வேஷம், தனக்குத் தானே போட்டுக்கற வேஷம். முட்டாள்கள் மத்தியிலே கல்விமான் வேஷம். ஜம்பம் சாயாத இடத்திலே, ‘ஆன்னு அவிந்து அடங்கிய’ வேஷம், உலகத்தோடு ஓட்ட ஒழுகுகிற வேஷம்…//

ராஜாராமன் தன்னுடைய பார்வையிலிருந்து கதையை narrate செய்யும் போது வரும் சில வாக்கியங்கள், உறவுகளைப் பற்றி நம் கூட்டு மனங்கள் பயின்று வைத்திருப்பதை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகின்றன:

//ஆமாம், எல்லாமே கற்பனைதான். அம்மாங்கிறதும் அப்பாங்கிறதும் – உறவு பாசம் எல்லாமே நம்மோட கற்பனைதான்.

‘இதுநாள் வரைக்கும் பெற்றதாய் கூட எனக்கு வெறும் பெண்ணாகவே இருந்தாள். இனிமேல் எல்லாப் பெண்களும் எனக்குத் தாய்’ என்கிற சமாதானத்திலே இதுநாள் வரைக்கும் தலையிலே கனத்துண்டிருந்த ஒரு பாவச் சுமையை இறக்கி வச்ச மாதிரி இவன் சந்தோஷப்பட்டான்//

சாரதா மாமியும் சாம்புவையரும் இருட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது வரும் கௌதமர்-அகலிகை-இந்திரனைப் பற்றிய reference, கதையை மற்றொரு கோணத்தில் திறக்கிறது. சமுதாயத்தில், கலாச்சாரத்தில் அனாதி காலமாய் இருக்கும் ஒரு சிக்கலின் ஒரு கண்ணி தான் இக்கதை என்று தோன்றச் செய்கிறது.

கதை முடிவது, சாரதா மாமி தான் நினைத்து வந்த ‘குழந்தை’யல்ல ராஜாராமன் என்று புரிந்து கொள்ளும் இடத்தில்; அவ்வுறவின் மீதிருந்த புகை மூட்டம் விலகி, உண்மை நிதர்சனமாய் தழலாய் எரிகிறது, ஆனால் சிதையில்..

//அக்கரை மேட்டில் வரட்டிகள் அடுக்கி, கட்டைகள் பரப்பி, ஈர மண் பூசிய சிதையினுள்ளிலிருந்து பெருகிய புகை குறைந்து, திடீரென விறகுக் குவியலின் இடைவெளிகளிலும், வரட்டி அடுக்கின் ஊடாகவும், சிவப்பாகவும் ஆரஞ்சு நிறமாகவும் வானோக்கி உயர்ந்த தீ எழுந்து, தணலாய் எரிகிறது.//