நியமம்-மயிலன் சின்னப்பன்-சிறுகதை வாசிப்பனுபவம்

மயிலன் சின்னப்பனின் முந்தைய கதையான ‘ஆகுதி’ யை முன்பே வாசித்திருக்கிறேன். அக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. Sensitive ஆகவும் sensible-ஆகவும் எழுதியிருப்பதாக அப்போதே தோன்றியது. அதைப் பற்றிய ஒரு வாசிப்பனுபவக் கட்டுரையையும் எழுத ஆரம்பித்தேன். முடிக்கவில்லை. இக்கதையை வாசித்ததும் இம்முறை விடுவதில்லை, வாசிப்பனுபவத்தை எழுதியே விடுவது என்று முடிவு செய்தேன்.

தன் கதைகளில், இக்காலத்தைய இளைஞர்களின் உலகை மிகத் துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகிறார் மயிலன். ஆம், இவ்வாறு தான் இருக்கிறது ஆண் பெண் உறவு தற்காலத்தில். ‘Guy friends’ என்று சொல்லப்படும் ஆண் நண்பர்களிடம் எந்த நெருடலும் இல்லாமல் தன் ஆழ்மன உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் இக்காலப் பெண்கள். ஆண் நண்பர்களும் மிகவும் sincere-ஆகவும், எந்த விதத்திலும் அப்பெண்களை நோக அடிக்காதவர்களாகவும், பொறுக்கித் தனமின்றி அப்பெண்களை நேசிப்பவர்களாகவும், தன் மனதறிந்த உண்மைகளை ஆலோசனைகளாக முன் வைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இது காண்பதற்கு மிகவும் உற்சாகமூட்டுவதாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கிறது. விதிவிலக்குகளும் இருக்கலாம் தான். பெரும்பாலானவர்கள் இப்படியிருப்பது ஒரு வகை முன்னேற்றம் தான்.

இவ்வுறவு எந்த இடம் வரை நட்பாக இருக்கிறது, இதன் அடித் தளத்தில் விளக்க முடியாத ஒரு ஈர்ப்பு இருக்கிறதா, அதைக் காதலென்று சொல்லலாமா, இந்த ஈர்ப்புக்கு ஏதாவது எதிர்காலம் இருக்கிறதா, சம்பந்தப்பட்ட இருவருக்கும் இந்த உறவைப் பேண என்ன விதமான inner compulsions இருக்கின்றன, இது நட்பாகவே இருந்து விடுமா, தத்தமது திருமண பந்தத்திற்கு பிறகும் தொடருமா, தொடர்ந்தால் இந்த கனெக்டை சம்பந்தப்பட்ட spouses எவ்வாறு கையாள வேண்டும், சந்தேகப் படலாமா( சந்தேகப் படுதல் நாகரீகமானதன்று, போதாமையின் வெளிப்பாடு என்றெல்லாம் பார்க்கப்படும் இக்காலகட்டத்தில்) என்று எத்தனையோ விதங்களில் இதை ஆராயலாம்.

ஈர்ப்பு இல்லை, வெறும் நட்பு தான் என்னும் போது நியமங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன. வெறும் நட்பா, இல்லை ஈர்ப்பா என்று மயங்கும் இடத்தை, அது தரும் குற்றவுணர்வை, குழப்பத்தை இக்கதை தொட்டிருக்கிறது. அந்த ஈர்ப்பு தங்களுக்குள் இருக்கும் போது ஒரு விதமாகவும், தன்னுடைய தந்தைக்கு மற்றொரு பெண்ணின் மீது ஏற்படும் போது கறார் தன்மையோடும் அதை அணுகுவது என்னும் உள நாடகம் இக்கதையின் முக்கியமான அம்சம். ஆண் அதை அணுகும் போது, ‘இதைப் பெரிதாக்காதீர்கள்’ என்று தந்தையின் பக்கத்தை எடுத்துக் கொள்வதும் ஆண்களின் ஆளுமையின் சுவாரஸ்யமான ஒரு பரிமாணத்தைக் காட்டுகிறது.

முதல் பார்வைக்கு, கதைசொல்லிக்கு நந்தினியிடம் இருப்பது ஆழ்ந்த நட்பு எனத் தோன்றுகிறது. அவளுக்கும் தான். அசௌகரியம் ஏற்படுமளவு அணுக்கமான தகவல்களைக் கூட அவனோடு பகிர்ந்து கொள்கிறாள் நந்தினி. இரக்கம் சொண்டவன், அவளுக்காகத் தியாகம் செய்பவன், பெண்களைக் குறைந்தவர்களாக நினைப்பவன் போன்ற எந்த வித இம்ப்ரெஷனையும் தராமல் கவனமாக அவளிடம் பேசும் சொற்களை எண்ணி எண்ணிக் கையாள்கிறான் அவன். ஏன் அவள் மீது கொண்ட அன்பை நிரூபிக்க அவன் அத்தனை முயல்கிறான் என்று அவனுக்கே புரிவதில்லை.

உண்மையில் ஆழத்தில் தனக்கு அவள் மேல் ஈர்ப்பு இருப்பது அவனுக்குத் தெரியும். ஸ்மோக் செய்வதாகச் சொல்லி, மொட்டை மாடிக்குச் சென்று, அவள் தந்தை தோழியிடம் பேசுவதைப் போலத்தான் அவனும் தன் வீட்டில் செய்து கொண்டிருக்கிறான். அதனால் தான் அந்த பேச்சு வரும் போது, அவனுக்கு சுறீரென இருக்கிறது. அவளுக்கும் தன் மீது அதே போன்ற ஒரு ஈர்ப்பு இருக்கிறதா என அறிய அவள் செயல்களைக் கூர்ந்து தகவல்களைத் திரட்டிக் கொண்டேயிருக்கிறான். தன்னையும் அறியாமல் அவளின் அம்மாவுக்காக இல்லாமல், அப்பாவின் பக்கத்தை ஆதரிக்கிறான். இது கண்டு கொள்ளாமல் விடப் பட வேண்டும் என விரும்புகிறான். அதையே ஆலோசனையாகவும் முன் வைக்கிறான். அவளின் அப்பா இதிலிருந்து தப்பி விட்டால், தானும் இதிலிருந்து சேதாரமின்றி தப்பி விடுவோம் என நினைக்கிறான் போல.

அவளுக்கோ தந்தை என்னும் பிம்பம் உடைந்து விடுகிறது. அவனும் தந்தையை ஆதரிப்பதால்,’ஆல் மென் ஆர் சிக்’ என்கிறாள். அம்மாவின் பக்கத்தை எடுத்துக் கொள்கிறாள். ஆனால் தன் கணவன் கத்தும் போது, கத்தாமல் பேச அவளுக்கு அவன் வேண்டியிருக்கிறது. தனக்கென்றால் ஒரு நியமும் மற்றவருக்கென்றால், குறிப்பாக முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர் என்றால் மற்றொன்றும் என தனக்குத் தானே ஆடும் நாடகம் தான் இக்கதையின் ஜீவன்.

இக்கால இளைஞர்களுக்கு, மற்றவர் தன்னிடம் பேச வரும் போது கூட இவர் ஷோகேஸ் செய்ய வருகிறாரோ என்று சந்தேகத்துடன் பார்க்கும் தன்மை இருப்பது, புனிதம் என்று சொல்லப்படும் அனைத்தையும் சந்தேகப் படுவது, குறிப்பாக ‘அன்னை’ என்னும் பிம்பத்தின் மீது ஏற்றப் பட்டிருக்கும் புனிதத்தை கேள்விக்குள்ளாக்குவது, அதிகமான மனோதத்துவத் தகவல்களை தெரிந்து கொண்டு, அனைத்திற்கும் தனக்குத் தெரிந்த கலைச் சொற்களையளிப்பது என புதிதான தற்காலச் சிக்கல்களையும் தொட்டுச் செல்கிறது இக்கதை.

இக்கதையை எழுதியுள்ள மயிலன் ஒரு டாக்டர் என அறிகிறேன். வேறெதுவாக இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டேன். இக்கால தலைமுறையினரின் சிக்கல்களை நேர்மையாக ஆராய்ச்சி செய்யும் ஒரு Sensitive மற்றும் sensible ஆன ஒரு எழுத்தாளராக இவரை நான் பார்க்கிறேன்.