
முகநூலில் ஒரு நண்பர் ‘மா ஆனந்த் ஷீலா’ என்ற இப்பெண்மணியைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த போது தான் இவரைப் பற்றி முதலில் அறிய நேர்ந்தது. மேலும் இவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. இவரிடம் முக்கியமாக என்னைக் கவர்ந்தது, மிகவும் பரபரப்பான ஒரு சாகச நாவலை ஒத்திருக்கும் இவரது வாழ்க்கை; மற்றும் ஓஷோவுடனான இவரது உறவு.
நெட்ஃபிளிக்ஸில் வரும் ‘Wild wild country’ என்ற தொடரிலும், ‘Searching for Sheela’ என்ற ஆவணப்படத்திலும் இவரது வாழ்க்கை பெருமளவில் பேசப் பட்டிருக்கிறது. இவருடைய குரலில் தான் இவ்விரு படங்களின் பெரும்பாலான காட்சிகள் ஒலிக்கின்றன. இவர் உயிருடன் இருக்கும் போதே இவருடைய தரப்பு பதிவு செய்யப்பட்டிருப்பது என்பது ஒரு முக்கியமான நிகழ்வு. இவரைப் போன்று கழுத்தளவு சர்ச்சையில் சிக்கியவர்கள் எல்லோருக்கும் இது போன்ற ஒரு வாய்ப்பு அமைவதில்லை. அந்த விதத்தில் இவர் ஒரு அதிர்ஷ்ட சாலி. யூட்யூபிலும் இவரது பேட்டிகள் சில காணக் கிடைக்கின்றன.
ஓஷோவே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தான். அவர் முன் வைக்கும் தரிசனம், அவர் சொல்லும் தியான முறை, அவர் பரிந்துரைக்கும் commune முறை அனைத்துமே ‘மீறல்’ ஆனவை. மரபான குருமார்கள் உபதேசிக்கும் அனைத்திலிருந்தும் விலகி நிற்பவை. சரியானவையா-யார் முடிவு செய்வது, ஆனால் மிகப் புதியவை, இந்த நவீன காலகட்டத்தில் கூட. அத்தகைய ஒருவரின் வலது கையாக செயல்பட்டவர் தான் ஷீலா. ஒரு கட்டத்தில் அவரே, ஓஷோ 15 நாட்கள் வரையில் ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு என்று அலைக்கழிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தார் என்பது விசித்திரமான ஒரு திருப்பம் தான்.
ஒரு குஜராத்தி குடும்பத்தில் கடைக் குட்டியாக பிறந்தவர் ஷீலா. அழகி. இவர் மேல் மிகுந்த அன்பு கொண்ட இவருடைய தந்தை , அக்காலத்திலேயே இவரை மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறார், ‘நீ சந்திக்கும் முதல் ஆடவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை, வாழ்க்கையை explore செய்’ என்ற அறிவுரையுடன். இந்த அறிவுரையே மீறல் கொண்டதாகத் தான் தெரிகிறது நம் மரபான மனங்களுக்கு.
அமெரிக்காவில் தனக்கு பிடித்த வெள்ளையரை திருமணம் செய்து கொண்டு இந்தியா வருகிறார். தந்தையே அவரை ‘ரஜனீஷ்’ என்று அக்காலகட்டத்தில் அழைக்கப்பட்ட ஓஷோவிடம் அறிமுகப் படுத்துகிறார். பார்த்தவுடனேயே காதலில் விழுந்து விட்டதாக தன் வார்த்தைகளிலேயே நினைவு கூர்கிறார் ஷீலா-I fell in love with him. ‘பகவான் ரஜனீஷிடம்’ இவர் கொண்ட இந்தக் காதலே அவரைப் பின்னால் வரும் பலவற்றையும் செய்ய வைக்கிறது.
புனாவில் ஆசிரமம் நடத்திக் கொண்டிருக்கும் ரஜநீஷ், பெரிய இடம் ஒன்றை வாங்குவதற்காக தன்னுடைய அப்போதைய செக்ரெட்டரியான லக்ஷ்மியை அனுப்புகிறார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் அது. லக்ஷ்மியால் எந்த இடத்தையும் வாங்க முடிவ்தில்லை. பல மறைமுகத் தடங்கல்கள் வருகின்றன ரஜனீஷ் அமைப்புக்கு. ரஜனீஷ் செக்ரெட்டரியை மாற்ற முடிவு செய்கிறார். அப்பதவிக்கு ஷீலாவை தேர்ந்தெடுக்கிறார். ஷீலா தலைப் பொறியாக அப்பதவியை எடுத்துக் கொள்கிறார்.
ரஜனீஷுடையது போன்ற ‘சன்னியாசிகளின் கம்யூன்’ களுக்கு அமெரிக்கா சிறந்த இடமென்று எண்ணி, ஆரிகன் மானிலத்தில் ஆண்டிலோப் என்னும் சிற்றூருக்கு அருகேயிருக்கும் ஒரு மிகப்பெரிய ராஞ்சை ரஜனீஷின் அமைப்பு மூலமாக வாங்குகிறார் ஷீலா. பொட்டல் காடாகவும் மலைப் பிரதேசமாகவும் இருக்கும் அவ்விடத்தை தன் சகாக்களுடன் சேர்ந்து மிக அழகான ஒரு நகரமாக தன் கையாலேயே உருவாக்குகிறார். 24-25 வயதேயான ஒரு பெண் இத்தனை பெரிய ஊரையே தன் கையாலேயே துரும்பிலிருந்து கட்டியெழுப்புவது என்பது உண்மையிலேயே பெரும் சாதனை தான். ரஜனீஷுக்கான வீடு, தனக்கான வீடு, மேலும் சில முக்கியஸ்தர்களுக்கான வீடுகள், பிரார்த்தனை கூடம், சன்னியாசிகளுக்கான ஒரே போன்ற வாழ்விடங்கள், அனைவரும் சேர்ந்தமர்ந்து உண்பதற்கான உணவுக் கூடம், சமையல் கூடங்கள், பள்ளிக் கூடம், மருத்துவ நிலையம், நடுவே செல்லும் சாலைகள் என ஒரு நகரையே வடிவமைக்கும் வாய்ப்பு/திறமை அரசாங்கத்தின் பகுதியாக இருப்பவரைத் தவிர, ஒரு தனியாருக்கு கிடைப்பது என்பது அபூர்வமானது தான். ரஜனீஷ் அங்கு நிரந்தரமாக தங்க வருவதற்கு முன், “மணப்பெண் தன் கணவனுக்காகத் தன்னையே அலங்கரித்துக் கொள்வது போல அந்த நகரத்தை நாங்கள் அலங்கரித்தோம்”, என்கிறார் ஷீலா.
ரஜனீஷ் அங்கு வந்து இறங்கியவுடன், ஷீலாவையே ‘ரஜனீஷ்புரம்’ என்ற அந்நகரத்தின் பிரஸிடண்ட் ஆக்குகிறார். ‘நான் ரஜனீஷ்புரத்தின் மகாராணியாக இருந்தேன்’ என்கிறார் ஷீலா. எனக்கு வெண்முரசின் திரௌபதி தான் நினைவுக்கு வந்தாள். சுண்டு விரலில் ஆட்டி வைக்கிறார் ஷீலா அனைவரையும். ஓஷோவின் விசுவாசிகள் தான் பெரும்பாலான சன்னியாசிகள். அவர்களின் நடுவிலிருந்தே தனக்கென, விசுவாசமான ஒரு படையையே உருவாக்கி வைத்துக் கொள்கிறார் ஷீலா.
ரஜனீஷ்புரத்தில் வாழும் சன்னியாசிகளின், ‘free sex’, வாழ்க்கை முறை பக்கத்து ஆண்டிலோப், கிராமத்தில் வசிக்கும் ஷீலாவின் வார்த்தைகளில் சொன்னால், ‘red necks and bigots’ களுக்கு கடும் ஒவ்வாமையை உண்டாக்குகிறது. அவர்கள், ரஜனீஷ்புரத்திலிருக்கும் ஒரு ஹோட்டலில் குண்டு வைத்து விடுகிறார்கள். அச்சம்பவம் ஷீலாவை மாற்றி விடுகிறது. ரஜனீஷ் புரத்தில் நிறைய ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறார். சன்னியாசிகளுக்கு ஆயுதப் பயிற்சியும் அளிக்கிறார்.
தங்கள் பாதுகாப்புக்கும், வாழ்க்கை முறைக்கும் எந்தத் தடையும் வராமல் இருக்க வேண்டுமானால், அக் county-யின் கவுன்சில் அதிகாரம் தங்கள் கைக்கு வர வேண்டும் என்று புரிந்து கொள்கிறார் ஷீலா. அக்கவுண்டியில் நடக்கும் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலை வெல்கிறார். பக்கத்து நாட்டை படையெடுத்து வெல்வது போலத் தான் தோன்றுகிறது இச்செயல் நமக்கு. அமெரிக்க constitution-ல் இருக்கும் ‘Right to assembly’- தான், தாங்கள் தங்கள் நகரை அமைப்பதற்கான ஆதாரம் என்று நம்புகிறார்கள் ஷீலாவும் ரஜனீஷும். ‘சீலா’ என்று பிரியமாக அழைத்து ரஜனீஷ் இடும் அனைத்து பணிகளையும், அவை கடுமையானவை என்றால் கூட, தலையால் செய்து முடிக்கிறார் ஷீலா. ஒரு கட்டத்தில் இவருடைய இந்த க்ஷாத்திர குணமே அவரின் சறுக்கலுக்கும் காரணமாய் அமைகிறது.
ஹாலிவுட்டிலிருந்து வந்த ஹன்ஸ்யா, மற்றும் அவர் கணவரோடு மிகுந்த நட்புடன் பழக ஆரம்பிக்கிறார் ரஜனீஷ். அதில் பொறாமை கொள்ளும் ஷீலா தவறுகள் செய்ய ஆரம்பிக்கிறார். ஆண்டிலோப்பை கைப்பற்றியதோடன்றி, அடுத்த கவுண்டியையும் கைப்பற்றி ரஜனீஷுக்கு அளித்து தான் நற்பெயர் ஈட்டிக்கொள்ள வேண்டும் என்றெண்ணி திட்டங்கள் வகுக்கிறார். சால்மநெல்லா என்னும் ஒரு வகை நுண்கிருமியை உணவுகளில் தூவி பெரும்பாலான கவுண்டி மக்களை நோய் கொள்ளச் செய்து, தேர்தலில் பங்கு பெறாமல் செய்ய வேண்டும் என்றும், அதன் மூலமாக தான் அக்கவுண்டியை வெல்லலாம் என்றும், அவர் திட்டமிட்டதாக அவர் மேல் குற்றம் சாட்டப்படுகிறது. அக்குற்றச்சாட்டே அவரை சில மாதங்கள் கழித்து, சிறை செல்லவும் வழி வகுக்கிறது. நீதி மன்றத்தில் குற்றத்தை ஒத்துக் கொள்கிறார் ஷீலா. ஆனால், பின்னர், வழக்காட தன்னிடம் வசதி இல்லாததனாலேயே, அவ்வாறு ஒப்புக் கொண்டதாகச் சொல்கிறார் ஷீலா. ஒரு சமயம் தான் அந்த poisoning-ஐ செய்ய வில்லை என்கிறார்; மற்றொரு சமயம், தான் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால், அந்த நிகழ்வு மறக்கப்பட வேண்டும் என்கிறார். இப்போது வரை, ஒரு டவுனுக்கே விஷம் வைத்த அச் செயலை அவர் செய்தாரா இல்லையா என்பது ஒரு புதிராகாத் தான் இருக்கிறது.
இரண்டாவது குற்றமாக சொல்லப்படுவது ரஜனீஷுக்கு அணுக்கமாக இருக்கும் மருத்துவரை கொல்ல சதி செய்தது. ரஜனீஷின் உயிருக்கு மருத்தவரின் மூலம் ஆபத்திருந்தது என்பதாலேயே தான் அந்த காரியத்தை செய்ததாக ஒத்துக் கொள்கிறார் ஷீலா.
கொலை முயற்சி வெற்றியடையாமல் போகும் போது அவர் நகரை விட்டு வெளியேறுகிரார். ரஜனீஷுக்கு அவர் மேல் கடும் அதிருப்தி ஏற்படுகிறது. ரஜனீஷுக்கும் ஷீலாவுக்குமான வார்த்தை போரும், குற்றம் சாட்டுதலும் பொதுவெளியிலேயே ஆரம்பமாகின்றன. அரசாங்கம் உள் நுழைந்து இருவரையும் கைது செய்கிறது.
ஒரு கோணத்தில் தன் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லத் தயங்காத ‘psychopath’-ஆகத் தெரிகிறார் ஷீலா. ஆனால் அவரோ ரஜனீஷின் மீதிருந்த காதலும், தான் உருவாக்கிய நகரத்தின் மீதிருந்த அன்னை பாவமுமே தன் அனைத்து செயல்களுக்கும் காரணமென்கிறார். தன் மேல் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ஜோடிக்கப்பட்டவை என்கிறார் ஷீலா.
இரண்டு இருபதாண்டு தண்டனைகள் வழங்கப்பட்ட ஷீலா, 39 மாதங்களிலேயே ‘நன்னடத்தை’ காரணமாக சிறையிலிருந்து வெளியேயும் வந்து விடுகிறார்
அவர் சொல்வது உண்மையோ அல்லது பொய்யோ, சுவாரஸ்யத்துக்கு கொஞ்சம் கூட குறைவில்லாத வாழ்வு தான் ஷீலாவுடையது. தனது 71-ஆவது வயதில் மிகுந்த பிரயாசைக்குப் பின் இந்தியா வர அவருக்கு அனுமதி வழங்கப் படுகிறது. அப்போது அவர் அளிக்கும் பேட்டியில் கூட ஓஷோவுக்கும் தனக்கும் நடந்த வார்த்தைப் போர் ஒரு’lover’s quarrel’ என்றே சொல்கிறார். ஒரு நிமிடம் கூட தன்னை பொது வெளியில் அவமானப்படுத்திய ஓஷோவை அவர் விட்டுத் தருவதில்லை. அவர் மேலான தன் காதல் கொஞ்சமும் குறையவில்லை என்கிறார் ஷீலா. ‘ஓஷோவை நான் spiritual-ஆக அணுகவில்லை, காதலியாகத் தான் அணுகினேன்; அத்தனை ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் ஓஷோவுக்கு காதல் பரிசாகத் தான் அளித்தேன்’ என்கிறார் ஷீலா. இறப்பதற்கு முன் ஓஷோ, ஷீலாவின் காதலைப் போல மற்றொன்று இருக்க முடியாது என்றும், தனக்காக அவள் உயிரை விடவும் தயாராக இருப்பாள் என்றும் சொல்வது போன்ற ஒரு காணொளியும் யூட்யூபில் காணக் கிடைக்கிறது.
எது வேடமாக இருந்தாலும், எது ஜோடிக்கப்பட்டதாக இருந்தாலும், ஷீலாவின் கதை ஒரு தீவிரமான காதல் கதை என்பதில் சந்தேகமில்லை. காதல் ஓஷோவின் மீதா, அதிகாரத்தின் மீதா, அல்லது தன் மீதேவா அல்லது மூன்றும் கலந்தவையா, என்பதில் தான் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியும்.
சர்ப்பத்தின் தீவிரமும், வசீகரமும், பயங்கரமும் ஒருங்கே அமைந்த வாழ்வு இப்பெண்ணுடையது. அல்லது இவ்வாறு சொல்லிப் பார்க்கலாம்: ஒவ்வொரு ஜைன அவதூதருக்கு அருகிலும் அவரைக் காப்பாற்றும் யக்ஷி ஒருவள் அமர்ந்திருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு-மோகினியாகவும், அருள்பவளாகவும், வேண்டிய நேரத்தில் கோரைப் பல் காட்டி ரத்தம் குடிப்பவளாகவும். ஷீலா என்ற இந்த எதிர் கதா நாயகி அது போன்ற ஒரு passionate யக்ஷி தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஓஷோவோ, ஷீலாவோ பேட்டிகளின் போது பெரும்பாலும் கண்ணிமைப்பதில்லை என்பது கூடுதலான ஒரு சிறிய தகவல்(!)
கதைகளில் மட்டுமே பார்த்த, எல்லாக் கோணங்களிலும் அடர்த்தி மிகுந்த ஒரு பாத்திரத்தை நிஜ வாழ்க்கையிலும் பார்ப்பதென்பது ஒரு தீவிரமான அனுபவம் தான். விதி அவரை இப்படி சமைத்திருக்கிறது என்றால் அது ஒரு வித ஆச்சரியம். தானே தன் தேர்வுகளால் தன்னை இவ்வாறு கட்டமைத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது மேலும் தீவிரமானது. ‘மனிதன்’ என்னும் நிகழ்வுக்கு தான் எத்தனை சாத்தியங்கள்.