காணாப் பறவைகள்

காண முடியாப்
பறவைகளாய்
காற்றில்
பறந்து கொண்டிருக்கின்றன
சொற்கள்

கிளிகள்
கூரலகு கொண்டவை

இசை
பெரும் பறவை
நீண்ட தோகை கொண்ட மயில்

இல்லை
கழுகு

மேகமாய் விரியும்
பெரும் இறகுகள் கொண்டவை

காண
ஒண்ணாதவையாய்
காற்றிலாடி
தவம் செய்கின்றன
காலங்காலமாய்

வேண்டி வருந்தும்
விரலில்
குரலில்
செவியில்
மனதில்

இரங்கி

மீண்டும்
மெல்ல
வந்தமர

ஏதுமற்றவனெனில்
ஆன்மாவில்

காணா
அப்பறவைகள்