ரமணா பாலசந்திரன் என்ற இந்த வீணையிசைக் கலைஞர், மிக இளையவர். மிக முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய ஒரு genius. வீணையில் ஆலாபனை முடிந்தவுடன், பல்லவி ஆரம்பிக்கும் போது, வீணையொலியோடு இவர் குரலிசையும் சேர்ந்து கொள்கிறது. அப்போது மிக அற்புதமான ஒன்று அங்கு நிகழ்கிறது. இவர் குரல் வீணையோடு இணையும் அந்தத் தருணம் divine and blessed. அகண்ட சச்சிதானந்தமே தான். வீணையிசையின் இடையே, எப்பொழுது இவர் பாடத் தொடங்குவார் என்று காத்திருப்பது ஒரு இனிய அனுபவம்.
கொரோனா முதல் அலை காலகட்டத்தில் நாங்களும் எங்கள் மகள்களும் வெவ்வேறு ஊர்களில் மாட்டிக் கொண்ட போது இருந்த பதற்றமான சூழ்நிலையில் இவரின் சில home concerts எங்களுக்கு அத்தனை ஆசுவாசமாக இருந்தன. எங்கள் வீட்டில் இவரை முதலில் அடையாளம் கண்டவர் ஜெயகாந்த் தான். அப்பொழுதிலிருந்தே இவரின் இசையைத் தேடித் தேடி ஜெயகாந்த் கேட்டுக் கொண்டேயிருக்கிறார். எங்களையும் கேட்கச் செய்வார். சமீபத்தில் இந்த இசைத் துணுக்கை அனுப்பினார். மிக ஆழமான ஒரு அனுபவம்.
மிக இளையவரான இவர், home schooling செய்யப்பட்டுள்ளார்; ரமணரின் பக்தர் என்று தகவல்கள் பகிரப் படுகின்றன. விக்கி பக்கங்களில் மேலும் நிறையத் தெரியுமாக இருக்கும். இக்கலைஞருக்கு அவர் கலையைத் தவிர வேறு என்ன அறிமுகம் வேண்டியிருக்கிறது. குரலும் வீணையிசையும் இத்தனை கச்சிதமாக, அழகாக முன்பு எப்போதுமே கலந்ததில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. சில இடங்களில் வீணையெது குரலெது என்றே தெரிவதில்லை. கீழ் ஸ்தாயியில் வாசிக்கப்படும் போது கேட்கும் வீணையின் கம்பீரம் வேறெதிலாவது கேட்க முடியுமா? அப்பொழுது அது ருத்ர வீணையாகிறது. நேரடியாக மனதின் தந்திகளே வாசிக்கப்படுவது போலத் தோன்றுகிறது. இது ஒரு விதமான தியான அனுபவமே தான்.