‘The Disciple’-திரைப்பட விமர்சனம்

‘சைதன்யா தம்ஹானே’ என்பவரால் மராத்தி மொழியில் எழுதி இயக்கப்பட்டு எடிட் செய்யப்பட்ட படமிது. ஏப்ரல் 30, 2021 அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.

இசை சம்பந்தமான எந்த படமானாலும் எங்கள் மகள் தேஜஸ்ரீ, அது வந்தவுடனேயே எங்களுக்கு அறிமுகப் படுத்தி விடுவாள். அவளோடு அமர்ந்து படம் பார்ப்பது ஒரு அலாதியான அனுபவம். வரும் பாடல்களின் ராகங்களைப் பற்றிச் சொல்வாள். சேர்ந்து பாடிக் காட்டுவாள். மிக அழகான சங்கதிகள் வரும் போது ‘உச்’ கொட்டிக் கொண்டு ரசித்துக் கொள்வாள். அவளை ரசிப்பதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், நாங்கள் அனைவரும் படம் பார்ப்போம். அவ்வாறு சேர்ந்து அமர்ந்து பார்த்தது இந்தப் படம்.

படம் ஆரம்பித்தவுடன் சில காட்சிகளிலேயே இந்தப் படத்தைப் பற்றி எழுதப் போகிறேன் என்று எனக்குத் தோன்றி விட்டது. மிக முக்கியமான காரணம் ‘மாயி’ என்று குரல் மட்டுமாக வரும் அந்த பாத்திரப் படைப்பு. ஒவ்வொரு முறை கதாநாயகன் தன் பைக்கை எடுத்துக் கொண்டு சாலையில் செல்லும் போதும், பயண சப்தங்களுக்கு பதிலாக, மாயியின் குரல் ஒலிக்கத் துவங்குகிறது. ஓரிரண்டு முறைகளுக்குப் பின் நானும் அந்த பைக் பயணங்களுக்காக காத்திருக்கத் தொடங்கி விட்டேன். நடுங்கும் குரலில் அந்த அன்னை சொல்லும் சொற்கள், இசையைப் பற்றியது மட்டுமல்ல, மொத்த கலைகளையும் பற்றியது. அத்தனை தேர்ந்த ஞானம், சில வரிகளில் சொல்லப்படும் போது, கலைமகளே சொல்வது போல் உள்ளது.

சரத் நெருல்கர் என்பவன் ஒரு ஹிந்துஸ்தானி சங்கீத மாணவன். அவனுடைய குரு மிகச்சிறந்த ஞானம் கொண்டவர். ஆனால் நிறைய கச்சேரிகளில் பாடுபவரல்ல. குறைந்த எண்ணிக்கையிலான, அவ்வளவாக பணம் தராத சிறு சிறு கச்சேரிகளில் பாடுபவர். சரத்துடன் சேர்த்து இன்னும் இருவருக்கு சொல்லிக் கொடுக்கிறார். மிக நன்றாக சொல்லித் தருகிறார். கடுஞ்சொல் பேசாதவர். இன்னும் நிறைய பயிற்சி செய் என்று மட்டும் சரத்திடம் கூறிக் கொண்டே இருக்கிறார்.

சரத்துக்கு இசையை சிறு வயது முதலே அறிமுகப்படுத்துபவர் அவன் தந்தை. இரவோடு இரவாக மகனை அழைத்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்து, ஒரு பிரபல இசைக் கலைஞரின் அதி காலை நேரக் கச்சேரியைக் கேட்கச் செல்லும் அளவு இசைப் பித்து பிடித்தவர் அவர். இசை பற்றிய தகவல்களை அவனுக்குத் தந்து கொண்டேயிருக்கிறார். ஞாயிறு அன்று கூட அவனை விளையாட அனுப்பாமல், தனக்குத் தெரிந்தவரை இசை சொல்லித் தருகிறார். ஒரு ம்யூஸிகாலஜிஸ்டாக இசைக் கோப்புகள், கலைஞர்கள் பற்றிய ஆவணப்படங்கள் ஆகியவற்றை சுற்றியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார். அவர் ஷரத் ஒரு மிகப் பெரிய இசைக் கலைஞனாக வர வேண்டும் என்று விரும்புகிறார். தன்னுடைய குருவான, ‘மாய்’ என்றழைக்கப்படும் அம்மையாரின் இசை பற்றிய ஒலிநாடாவை பொக்கிஷமாகப் பாதுகாத்து மகனிடம் கையளித்து விட்டுச் செல்கிறார்.

தன் தந்தையின் கனவை நனவாக்க தன்னால் இயன்றதையெல்லாம் செய்கிறான் ஷரத். முடிந்த வரை இசை பயிற்சி செய்கிறான். குருவுக்கு அணுக்கத் தொண்டனாக இருக்கிறான். திருமணம் செய்து கொள்ளாமல் குருவுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாகக் கொள்கிறான். ஒரு லக்ஷிய சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறதோ அப்படியே வாழ்கிறான்.

இத்தனைக்குப் பின்னும் அவன் குரு புது சங்கதிகளைப் பாடச் சொல்லும் போது அவனால் பாட முடிவதில்லை. குரு மேடையில் பாடும் போது மற்ற சிஷ்யர்களுக்கு தருவது போல இவனுக்கும் அவ்வப்போது பாடுவதற்கு வாய்ப்பளிக்கிறார். இரண்டு மூன்று முறை தரப்பட்ட வாய்ப்பிலும் அவன் சரியாகப் பாடாமல் போகவே, குரு அவன் வாய்ப்பை மற்றவருக்கு அளித்து விடுகிறார். குரு, இம்முறை உன் குரல் சரியில்லை, அடுத்த முறை நன்றாகப் பாடு என்னும் போது, கடுமையாக தன் மீதே எரிச்சல் கொள்கிறான் ஷரத். நமக்கு மெல்ல மெல்லப் புரிய ஆரம்பிக்கிறது. கலை அவன் வசப்படுவதில்லை. எத்தனை முயன்ற போதும், பயிற்சி செய்த போதும், பிடி படாது அவனிடமிருந்து நழுவிச் செல்கிறது இசை.

இருந்தும் விடாது பிடித்துக் கொண்டிருக்கிறான் சரத். அவன் வயது ஏற ஏற, அவனுக்கும் தனிக் கச்சேரிகள் செய்யும் வாய்ப்பு அமைகிறது. அவன் கச்சேரி இணையத்தில் பகிரப்படும்போது, தேவையான ஆழம் அவன் இசையில் இல்லை என்ற விமர்சனங்கள் எழுகின்றன. மீண்டும் பயிற்சி செய்கிறான். மாயியின் சொற்களைத் தொடர்ந்து கேட்கிறான். தான் மிகப் பெரிய இசை ஆசிரியன் என்று கூட பாவனை செய்து கொள்கிறான்.

அவன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும் மாயியின் சொற்களில் சில, அவனை ஸ்தம்பிக்கச் செய்கின்றன-‘உன் தந்தையைப் போன்ற அணுக்கமான சிஷ்யன் எனக்கு வேறெவரும் இல்லை, ஆனால் உன் தந்தையைப் போன்ற மோசமான மாணவனும் எனக்கு வேறெவரும் இல்லை. இசையிலேயே எவ்வளவு வேண்டுமானாலும் புழங்கலாம், ஆனால் பாடுவது என்பது வேறொன்று’.

அன்றைய கச்சேரியில் அவனுக்கு எவ்வளவோ சங்கதிகள் வருகின்றன, ஆனால் அவையெல்லாம் உதிரியாக நிற்கின்றன. சட்டென்று முடிவு செய்து மேடையிலிருந்து இறங்குகிறான் ஷரத். அதோடு அவனுடைய பாடகன் என்ற வாழ்க்கை முடிவு பெறுகிறது. நான்கு வருடங்கள் சென்று திருமணம் செய்து கொண்டவனாக, தன் தந்தையைப் போன்றே வெற்றி பெற்ற ம்யூஸிகாலஜிஸ்டாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான் என்று கதை முடிகிறது.

கொஞ்சம் தவறினாலும் ஒரு elitist-ன் தரப்பாக மாறி விடக் கூடிய அபாயம் உள்ள கதை இது. மாயியிக்கு, குருவுக்கு, சரத்தின் தந்தைக்கு, சரத்துக்கு என்று அனைவருக்கும் இசையின் மீது இருக்கும் தீராத பித்தை, பக்தியை சிறப்பாகக் காட்சிப் படுத்தியிருப்பதால் அந்த அபாயத்திலிருந்து தப்புகிறது. அனைத்துக்கும் மேலாக மாயியின் குரலிலிருக்கும் அந்த நடுக்கம் இப்படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு செல்கிறது.

திரை மொழி கச்சிதமாக அமைந்திருக்கிறது. பாடுவதை விட்டவுடன், சரத், தன் மனைவி மகளோடு எலக்டிரிக் டிரெயினில் போகும் போது, ஒரு பிச்சைக் காரன் பாடுவதாக வரும் பாடல், படத்தை கச்சிதமாக முடித்து வைக்கிறது-‘புளிய மரம் நட்டேன், ஆனால் அதில் காய்த்ததென்னவோ மீன் தான்..’ இப்படியாகச் செல்கிறது அந்தப் பாடல்.

இசையின் மீது, கலையின் மீதுள்ள அந்த தீவிரமான அர்ப்பணிப்பு, அதுவே இக்கதையின் மையம். தனக்கு மிக மிகப் பிடித்தவொன்று தனக்கு வசமாகவில்லை என்பதை ஒத்துக் கொள்ளும் அவனின் நேர்மை-அதுவே இக்கதையின் உச்சம். He loves it so much that he lets it go- என்பார்கள். அதுவே இக்கதையின் திரண்ட ஞானம்.

மிகச்சிறந்த பாடல்களாலும், ஒளியமைப்பினாலும் நல்ல திரையனுபவத்தை அளிக்கிறது இப்படம். மாயியின் சொற்கள் மாத்திரம் ஒரு தொகுப்பாக வருமென்றாலும், இப்படத்தின் பாடல்கள் மட்டும் ஒரு தொகுப்பாக வருமென்றாலும், அத்தொகுப்புகள் போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷங்கள்.