அந்த முகில் இந்த முகில்-ஜெயமோகன்-வாசிப்பனுபவம்

சில பாடல்கள் அவ்வாறு தான்-இசையினாலோ, வரிகளாலோ, அதை முதலில் கேட்டபோதிருந்த நிலையினாலோ, அது எழுப்பும் கனவினாலோ-ஏதோ ஒரு காரணத்தால், பித்துக் கொள்ள வைத்து விடுகின்றன. ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்..’, ‘நானே வருகிறேன்..’ , எங்கே எனது கவிதை..’, ‘நேனா நீர் பஹாயே..’ இது போன்ற பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் நானும் முற்றிலும் helpless ஆகி விடுவதுண்டு. அதுவும் இரவு நடைகளின் போது, தற்செயலாக முழு நிலவும் சேர்ந்து விட்டால், அதே நேரம் மின் விளக்குகளும் இல்லாத ஒரு பகுதியாக அவ்விடம் இருந்து விட்டால், இல்லை, சலசலக்கும் கடல் நீரில் நிலவின் ஒளியாலான ஒரு தீற்றல் கண்ணுக்குத் தெரிந்து விட்டால், உருகி விடும் நான் மீள்வது வெகு நேரம் கழித்துத் தான்.

மோட்டூரி ராமராவும் ஸ்ரீபாலாவும் சைக்கிளில் ‘ஆ மப்பு, ஈ மப்பு..’ பாடலைப் பாடும் இடம் இதே போன்ற ஒரு பெரும் கிறக்கத்தை எனக்களித்தது. இக்கதையின் உச்ச தருணம் அது. மற்றொரு உச்ச தருணம் மிக மிக மென்மையாய் அவள் தலைமுடியை அவன் தொடும் இடம்.

அவனுக்கு அவள் அறிமுகமாவது ஒரு குழு நடனமங்கையாக. திரைச்சீலையைப் போன்ற அவளின் அநாயாசமான நடனமே அவனை முதலில் ஈர்க்கிறது. பின் அவள் நிமிர்வும், நீள் விழிகளும். ஏதோ ஒரு நுண்ணுணர்வினால், இவள் மற்றவர் போலில்லையென அவன் உள்மனத்திற்கு தெரிந்து விடுகிறது. இவள்தான் தனக்கானவள் என்றும் அவனுக்குத் தோன்றி விடுகிறது. அவளின் அகவுலகான ரசனைகள் பற்றியெல்லாம் அவனுக்குத் தெரியாது, புறவுலகான வாழ்க்கை முறை பற்றியும் தெரியாது. அகமோ புறமோ அறியும் முன்னரே உள்ளுணர்வினால் அவன் அவளை காதலிக்கத் தொடங்குகிறான். கவிதைகளை ரசிப்பவன், நேசிப்பவன் வேறெப்படி இருக்க முடியும்.

அவனுக்கு ஏற்படும் முதல் கலைதல், அவள் தோழியின் மூலமாக அவளின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்ளும் இடத்தில் தான். அக்கால குழு நடனமாடும் மங்கையரின் வாழ்க்கை முறையைப் பற்றி அவனுக்குத் தெரியாமல் இருந்தது என்றில்லை. ஆனால் பட்டவர்த்தனமான சொற்களில் அது சொல்லப்படும் போது, அவளால் அது பலகீனமான புன்னகையோடு கடந்து செல்லப்படும் போது அவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான். ‘ஏன் இப்படி’ என்று அங்கலாய்க்கிறான். பின் தன் காதலுக்கான முகமாக அவளை சுருக்கிக் கொண்டு மேற்செல்ல முடிவு செய்கிறான். ஹம்பிக்குக் கிளம்பும் போது கூட அவளிடம் அவன் சொல்லிக் கொள்வதில்லை. தன்னுடைய மற்றொரு கனவு வெளியான ஹம்பியைப் பற்றிய எண்ணங்களே அவனை முழுமையாக ஆக்கிரமித்திருக்கின்றன.

பின் மீண்டும் அவனே தேடிச் சென்று அவளைச் சந்திக்கிறான். அவளைக் கடந்து செல்லுதல் அவனுக்கு அத்தனை சுலபமல்ல. நள்ளிரவில் அவனிடம் அடைக்கலம் கோரி அவள் வரும் போது, அவன் காதல் உச்சத்தை அடைகிறது. அவளைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறான்.

முதன்முதலில் தன்னை போகப் பொருளாகப் பார்க்காத, தன் நீள விழிகளையும், குவிந்த உதடுகளையும் ரசிக்கும் ஆண்மகனை அவள் பார்க்கிறாள். இத்தனை நாட்களில் முதன்முறையாக அவளும் காதல் கொள்கிறாள். தன் தலை முடியைப் பற்றிச் சொல்கையில் அவள் மீண்டும் தன் வாழ்க்கை முறை பற்றிச் சொல்ல, அவன் மறுமுறை அதிர்ச்சியடைகிறான். அந்த அதிர்ச்சியே அவளை எச்சில் என்று சொல்லி அவமானப் படுத்தத் தூண்டுகிறது.

அவனொரு நுட்பமான ஊசலாட்டத்தில் உள்ளான். தனக்கு மிகப் பிடித்தவளின் புற வாழ்க்கை அவனுக்கு முற்றிலும் பிடிக்காத வகையில் உள்ளது. அவளின் அதுவரையிலான வாழ்க்கையை அவனால் முற்றிலும் புறந்தள்ள முடியவில்லை. அவனுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரைகள் எச்சரிக்கைகள் அனைத்தும் இது போன்ற ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் அவனைக் ‘காப்பதற்காக’த்தான். இது போன்ற ஒரு புறவாழ்க்கை கொண்டவளை அருவருக்கத்தான் சொல்லித் தந்திருக்கிறது அவனுக்கு அது வரை கையளிக்கப்பட்ட விழுமியங்கள்.

அவளை அருவருப்பது, அவனை குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்கிறது. அவளிடம் மன்னிப்பு கோர வேண்டும் என நினைத்தாலும் அவனால் முடிவதில்லை. எப்போதைக்குமாக அவளை இழந்து விட்டான் என அவனுக்குத் தெரிகிறது. ஆயினும், என்ன ஆனாலும் அவனால் அவளைக் காப்பாற்றாமலிருக்க முடியாது. காப்பாற்றுபவனே ஆண் என்பது அவனுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு விழுமியம்.

அவளைப் பத்திரமாக பேருந்தில் ஏற்றிவிடப் போகும் போது, அவளின் அகவுலகை அவன் அறிந்து கொள்கிறான. அவள் ரசனைகளை, அவள் வாசிப்பை அறிந்து கொண்டதும், அவன் காதல் மேலும் தீவிரம் கொள்கிறது. முனிப்பள்ளி வரை செல்லும் அப்பயணத்தை அவர்களின் வாழ்க்கைப்பயணமாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள். குறைந்த அவகாசத்தில் தம்பதியருக்கான அனைத்துத் தருணங்களையும் வாழ்ந்து பார்க்க முயற்சி செய்கிறார்கள். ஆயினும் ராஜமந்திரியில் அவள் கண்களை விட்டு அகலும் போது கூட அவனால் தன் காதலைச் சொல்ல முடியவில்லை. அவள் திரும்பியும் பாராமல் சென்றது அவனுக்கு மேலும் அதிர்ச்சி தருகிறது.

சொல்ல நினைத்தை சொல்லாமல், நினைத்துக் கூட பார்க்காததை சொல்லி அவளை அவமானப் படுத்தியதே, அவனை பைத்தியமாக்குகிறது. தலையை ஆட்டிக் கொண்டும் தனக்குத் தானே பேசிக் கொண்டும் கண்ணீர் விட்டுக் கொண்டும் அவன் மீண்டும் மீண்டும் சரி செய்ய நினைப்பது இத் தருணங்களையே.

இதிலிருந்து மீளவே அவனுக்கு ஓராண்டு காலமும், ஜானகியும் தேவைப் பட்டிருக்கிறார்கள். ராமராவுக்கு ஏற்ற ஜானகி தேவி. பொறுமையையும் தியாகத்தையும் மட்டுமே செலாவணியாகக் கொண்ட கூட்டம் அக்காலப் பெண்கள் கூட்டம். காலங் காலமாக தொடரும் மற்றொரு விழுமியத்தின் மூர்த்தம் அவள்.

யோசித்துப் பார்த்தால் ராமராவின், ஸ்ரீபாலாவின் துயருக்கு மிகப்பெரிய காரணம். அப்போது நடைமுறையிலிருந்த கலாச்சார விழுமிய அமைப்பே என்று சொல்லலாம். இப்போதும் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லையென்பதால், கதை இவ்விஷயத்திலும் நிகழ்காலத் தொடர்பு கொள்கிறது.

ஸ்ரீபாலாவின் பார்வையிலிருந்து பார்த்தால் அவள் தன் மீது சுமத்தப்பட்ட அவ்வாழ்க்கை முறைக்கு முற்றிலும் தன்னை கையளித்து விட்டாள். தன் ஊர்காரர்கள், சாதிக்காரர்கள், அம்மா உள்பட அனைவரும் செய்யும் வேலை தான் இது. முனிப்பள்ளிக்கு சென்று சேர்ந்த ஒரு வாரத்திலேயே அவள் மீண்டும் தன் அன்னையாலேயே இதே வாழ்க்கை முறைக்கு மற்றொரு முறை அனுப்பப் படுகிறாள். அதை அவளும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்கிறாள். அவள் எதிர்பார்ப்பதெல்லாம் அடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று தான். இத்தனைக்கும் தனக்கு மிகப் பிடிக்காததை யாராவது செய்யும் போது, அவன் மண்டையை உடைத்து விடுமளவு உடல் வலுவும், அவன் மண்டையை உடைத்ததை நினைத்து துளியும் வருந்தாத அளவு நெஞ்சுரமும் கொண்டவள் தான் அவள்.

நடைமுறையில் இவ்வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட அவள் தான், தன் கனவுலகை புத்தகங்களால் நிறைத்திருக்கிறாள். தனக்காக மட்டுமன்றி குடும்பத்தில் அடி உதை வாங்கும், அவமானப்படும் பெண்களுக்காகவும் கல்வியை அவள் கனவு காண்கிறாள்.

ராமாராவின் பார்வையிலிருப்பது காமம் அல்ல, காதலென்று தோழி சொன்னவுடன் தான், அவள் மனதில் முதலதிர்வு எழுகிறது. தன்னை ரசிக்கும் ஒரு ஆண்மகனை காதலிக்கிறாள். ஆனால் அவனும் தன்னை எச்சில் என்று சொல்லி ஏளனப்படுத்தியதும் அதிலிருந்தும் அவள் முற்றிலுமாக தன்னை விலக்கிக் கொள்கிறாள். அவன் தன் பொறுப்பை ஏற்றுக் கொண்டான் என்றதும், தூங்கி வழிந்தவள், அவன் அருவருக்கிறான் என்று தெரிந்ததும் தூக்கத்தை நிறுத்திக் கொள்கிறாள். அவளே சொல்வது போல அவன் எப்போதும் தன்னை நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தான் அவன் முன்னால் அவள் ஆடையின்றிக் குளிக்கிறாள். ராமராவுக்கு அவள் அளிக்கும் ஒரு விதமான தண்டனை தான் அது.

பின்னர் அந்த சைக்கிள் நடையில் அவரிருவரும் ஒருவர் மற்றவரின் அகத்தை அறிந்து கொள்கின்றனர். அவனுக்கு மனைவியாகவே அவள் அந்தப் பயணத்தில் வாழ்ந்து பார்த்துக் கொள்கிறாள். அவளுடைய பெரும்பாலான இரவுகள் மற்றவருக்கானது. இப்பயணத்தின் இரவுகள் அவளுக்கானது. வாழ்க்கை முழுவதும் துணை நிற்கப்போகும் நினைவுகளை அளிக்கப் போவது. அவ்வினிய நினைவுகள் செறிவு குன்றாமலிருக்கவும், சேர்ந்து வாழ ஆரம்பித்தால் ஏதோவொரு தருணத்தில் மீண்டும் அவமானப்பட நேரும் என்பதாலுமே அவள் திரும்பியும் பாராமல் அவனிடமிருந்து பிரிகிறாள். முன்பாவது அவன் அவளை அவமானப்படுத்தினால் தாங்கிக் கொள்ள முடியும், தங்கள் அகங்களை பகிர்ந்து கொண்டபின் அவனிடம் ஒரு நொடியும் அவளால் தாழ்ந்து போக முடியாது.

ஒருவரின் அகத்தை மட்டுமே பொருட்படுத்தி காதல் கொள்ளும் ஒரு கலாச்சாரத்தில் அவளும் அவனுடன் ஒரு இனிய வாழ்வை வாழ்ந்திருக்கக்கூடும்.

அவளுக்கு அவனால் தன் எல்லைகளைத் தாண்ட முடியாதென்பது தெரியும். மீண்டும் சந்திக்கும் போது கூட முதல் கேள்வியாக அவன் மக்களைப் பற்றியே கேட்கிறாள். அவன் திருமணம் செய்யாமல் வாழ்ந்திருக்க மாட்டான் என்பதில் சிறிதளவும் அவளுக்கு சந்தேகமில்லை.

அவன் வாயால் அவளுக்கான அவன் உணர்வுகள் இங்கனம் தான் இருந்தன என்பதை சொல்லாகப் பெற்றுக் கொண்டு மீண்டும் அவன் வாழ்க்கையிலிருந்து அவள் பிரிகிறாள். இம்முறை அவனுடைய சொற்கள் அவளின் காதலுக்கான பரிசு. அதனாலேயே அதை அதிர்ஷ்டம் என்கிறாள்.

மிக மிக நுட்பமான ஆடல் நிறைந்த கதையிது.

கண்ணெதிரே கற்கோபுரத்தைப் போன்ற திடமான காதலிருக்க, துளை வழி தெரியும் கோபுரத்தின் தலை கீழ் பிம்பத்தையே பார்க்கும் மனிதர்களைப் போல பிம்பத்துக்குக் கட்டுப்பட்ட ராமராவின் காதல் கதையிது என்றும் இதை வாசிக்கலாம்.

கருப்பு-வெள்ளை தரும் கனவுத் தன்மை, அதன் பூடகம், நிறங்களிலிருக்கும் வெட்ட வெளிச்சம், பட்டப் பகலை ஃபில்டர் போட்டு இரவாக்குவது, சினிமா என்னும் நிழலாட்டம், என்.டி.ஆருக்கும், பானுமதிக்கும் இருந்த உணர்வுகள் பேயாய் நிரந்தரமாய் சினிமாவில் தங்கியது விஜயநகரம் ஹம்பியில் தங்கியதைப் போல, ராமராவ் தைத்த ஆடையை நிரந்தரமாய் அணிந்திருக்கும் அச்சினிமாவின் ஸ்ரீபாலா, கண்ணுக்குத் தெரியாத அவர்களின் கலந்துபோன முகில்களை தாங்கி நிற்கும் வானம் எனத் திரும்பிய பக்கமெல்லாம் கவித்துவம் பொங்கும் படைப்பிது. ‘நிழல்கள் மனிதர்கள் பின்னாலேயே அலைந்து அவர்களை நகலெடுக்கக் கற்றுக் கொண்டு விட்டன’-நல்ல வரி.

விரும்பும் வகையிலெல்லாம் விரிந்து கொடுக்கும் அடுக்குகளைக் கொண்ட இது போன்ற எத்தனை கதைகள் தமிழிலக்கியத்தில் இருந்து விட முடியும்.